அத்தியாயம் 18
“என்னப்பா நிண்டுட்டிங்க. உள்ளுக்கு வாங்க..” என்று பற்றியிருந்த அவரின் கரத்தை இழுத்தாள் அந்த மகள்.
அவரின் கூர்மையான பார்வையை உள்வாங்கியபடி அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த நிரஞ்சனிடம், “நிரஞ்சன், இவர்தான் என்ர அப்பா. அப்பா, இவர் நிரஞ்சன்.” என்று அறிமுகம் வேறு செய்து வைத்தாள் அவள்.
அவரின் எண்ணவோட்டங்களை ஊகிக்க முடிந்தாலும், எதையும் காட்டிக்கொள்ளாது புன்னகைத்து, “வாங்க அங்கிள்!” என்று முறையாக வரவேற்று அமர வைத்தான் அவன்.
ரதனை வரவேற்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. அவனே வந்திருந்தான். சற்றுமுன்னர் தான் நடப்பவற்றை அவனும் அறிந்திருந்தான். எனவே தமக்கையை கேலி செய்ய தனக்கு ஏதாவது கிடைக்குமா என்று அவளை கவனித்துக்கொண்டிருந்தான்.
நிரஞ்சனின் வீட்டுக்கு வந்திருக்கிறோமே, அப்பா பார்த்துவிட்டாரே, என்ன நினைப்பாரோ என்கிற சங்கடமோ அல்லது தன் செயலை மறைக்கும் எண்ணமோ தடுமாற்றமோ அவளிடம் தென்படவே இல்லை.
எந்தக் கேள்விகளும் கேட்கப்படாமல் எந்தப் பதில்களும் சொல்லப்படாமல் மகளின் மனம் தெள்ளத் தெளிவாய் தெரிந்து போயிற்று தவநேசனுக்கு.
மனதில் சின்னதாய் வருத்தம் வந்துபோனது, எல்லாவற்றிற்கும் தன்னிடம் வந்து நிற்கும் அவள் ஒருவார்த்தை இதைப்பற்றிக் கதைக்கவில்லையே என்று. அதற்காக பெண்ணின் விருப்பத்திற்கு எதிரானவர் அல்ல அவர்.
ஆனால், பணக்கார இடம்.. எப்படி இருக்குமோ.. பெடியன் எப்படியானவனோ.. நமக்கு இதெல்லாம் சரியா வருமா.. என்கிற கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. இதில் இந்தப் பெண்வேறு காலம் காலமாக இங்கேதான் வாழ்ந்தவள் போன்று நடக்கிறாளே என்கிற பயம் வேறு மனதை கவ்விப் பிடித்திருந்தது.
மறுக்கும் நிலை வந்தால் அவள் தங்கமாட்டாளே!
நிரஞ்சனை திரும்பிப் பார்த்தார். அவரது விழிகள் அவனை கேள்வி கேட்டன. அது விளங்கினாலும், தளராது அவர் பார்வையை எதிர்கொண்டான்.
“இப்போதான் வந்தாள் அங்கிள். நான்தான் கூப்பிட்டேன், நீங்க இங்க வருவீங்களா இல்ல நான் யாழ்ப்பாணம் வந்து முறைப்படி கேட்கவா என்று கேட்க.” என்றான் அவளை விட்டுக்கொடுக்க விரும்பாமல்.
“அது அப்பா..” என்று அவள் ஆரம்பிக்க, “உன்ர அப்பா முதன் முதலா நம் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவருக்கு ஏதாவது குடுப்பம் எண்டில்ல(என்றல்லாமல்). இங்க இருந்து கதை அளந்துகொண்டு இருக்கிற?” என்றான் நிரஞ்சன் கேலிபோல்.
அவனைப் பார்த்தாள் ஜீவனிதா. அவன் கண்களில் தெறித்த சிரிப்பு அவள் முகத்திலும் தொற்றிக்கொண்டது.
“அவளுக்கு தான் விழுங்கவே நேரம் காணாது. இதுல உபசரிப்பா? அப்படியெண்டா என்னெண்டு தெரியுமா உனக்கு?” என்று நிரஞ்சனிடம் ஆரம்பித்து ஜீவனியிடம் முடித்தான் ரதன்.
“போடா டேய்!” என்றுவிட்டு அவள் எழுந்துசெல்ல, போகும் மகளை உள்ளூர வியப்போடு பார்த்திருந்தார் தவநேசன். மனதளவில் அவனோடும் அந்த வீட்டோடும் அவள் ஒன்றிவிட்டது நன்றாகத் தெரிந்தது. ஆனால் இந்த பெடியன்..
நிரஞ்சனை ஆராய்ந்தன அவர் விழிகள்.
அவனோ இயல்பாக இருந்தான். எந்த அலட்டல்களும் இல்லாமல், “நீயும் போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணு ரதன்.” என்று அவனையும் அனுப்பி வைத்துவிட்டு, “சொல்லுங்க அங்கிள்.” என்றான் அவரிடம்.
“இப்ப கொஞ்சத்துக்கு முதல்தான் வந்தோம். முந்தி(முன்னர்) எப்பவோ உங்கள பாத்திருக்கிறன், பிறகு பாக்கேல்ல எண்டு சொல்லவும் ரதன் கையோட இழுத்துக்கொண்டு வந்திட்டான்.” என்றார் அவர்.
பிறகு பார்வையில் கூர்மையோடு, “ஜீவிய எப்படி பழக்கம்?” என்று விசாரித்தார். நெடுநேரமாய் மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வி அது!
நேற்று இன்று பழகிக்கொண்டவர்கள் போலில்லையே அவர்களின் செயல்பாடுகள்.
“பழக்கம்… அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. அவளின்ர பன்னிரண்டு வயதில சின்னப்பெண்ணாக பாத்தவள திரும்ப இப்பதான் நேர்ல பாத்தனான். ஆனா, அவளின்ர குரலை எப்பவும் கேட்டிருக்கிறன்.” என்றான்.
அவர் புருவங்களை சுருக்கவும், “ரதன்” என்றான் அவன்.
அவர் விளங்கிக்கொண்டதற்கு அடையாளமாக தலையசைக்க, “அவன் இங்க வருவான். உங்கட மகள் அவனுக்கு எடுப்பாள்.. அவள் கதைக்கிறத கேக்கக் கேக்கத்தான் அவளை எனக்கு பிடிச்சது. அது அன்பா எப்ப மாறினது எண்டு எனக்கே தெரியாது அங்கிள்.” என்று சொல்லிப் புன்னகைத்தான். அப்படியே தன் மனதை, பாட்டி சொன்னதை, தன் காத்திருப்பை என்று அனைத்தையும் சொன்னான்.
“இவ்வளவு நாளும் அவளுக்காக காத்திருந்தன். இப்ப உங்கட சம்மத்துக்காக காத்திருக்கிறன். அதுக்குக் காரணம், எனக்கு நீங்க எல்லாருமே வேணும்! அதாலதான் அவளிட்ட கூட சொல்லாம உங்களிட்ட கேட்டனான்.”
ஆழ்ந்த குரலில் அவரின் கண்களையே பார்த்துப் பேசியவனின் பேச்சில் அவர் அசந்துதான் போனார். தன் மகளுக்காக ஒருவன் இத்தனை வருடங்களாகக் காத்திருந்திருக்கிறானே. அதுவும், எந்த வகையிலும் அவளை தொந்தரவு செய்யாமலும், அவர்களுக்கு இடைஞ்சலை தராமலும் இருந்திருக்கிறான்.
காதல் என்று சொல்லிக்கொண்டு பெண் பிள்ளைகள் பின்னால் சுற்றுவதும், மறுத்தால் என்னென்னவோ செய்வதும் என்று இன்றைய ஒருசில தலைமுறையினருக்கு மத்தியில் செல்வம் செல்வாக்கு என்று எல்லாமும் இருந்தும் அவனுடைய காத்திருப்பு அவரை அசைத்துத்தான் பார்த்தது.
எதையும் காட்டிக்கொள்ளாமல், “இங்க நடக்கிறத பாத்தா அப்படி தெரியேல்லையே.” என்றார். அந்தளவுக்கு காலம் காலமாகப் பழகிய அன்னியோன்யம் அவர்களுக்குள் இருந்தது.
அந்தக் கேள்வியை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக அவன் புன்னகைத்தான். “உண்மைதான் அங்கிள்! என்னவோ ஜென்ம ஜென்மமா அவளோட வாழ்ந்தமாதிரி இருக்கு. அவளுக்கும் அப்படித்தான். ஆனா, நேற்றுத்தான்.. அதுவும் மாலைதான் நாங்க ரெண்டுபேரும் முதன் முதலா இதைப்பற்றி கதைத்ததே. அதுக்கு முதலே கோயில்ல வச்சு சிவா அங்கிளிட்ட கேட்டுட்டன்.” என்றான் நிரஞ்சன்.
‘கேக்கிற கேள்விக்கெல்லாம் பணிவாத்தான் பதில் சொல்றான். சிவா சொன்னமாதிரி நல்ல பிள்ளைதான்..’ அவரின் மனம் அவனை கண்காணித்து கணக்குப் போட்டுக்கொண்டே இருந்தது.
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டு, “நாங்க சம்மதிக்காட்டி?” என்று அவனையே பார்த்துக் கேட்டார்.
“நிச்சயமா சம்மதிப்பீங்க அங்கிள்.” வாடாத புன்னகையோடு உறுதியாகச் சொன்னான் அவன்.
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?” மறைக்கப் பார்த்தும் முடியாத வியப்பிருந்தது அவரிடம்.
“நீங்க மறுக்கிற இடத்தில நான் இல்ல அங்கிள்.” நிமிர்ந்து சொன்னான்.
ஒருகணம் அவரே அசந்துபோனார். ‘பணத்திமிர் பேசுகிறதோ?’ கூர்மையாக அவனைப் பார்த்தார்.
கர்வம் என்பது சிறிதுமில்லை. ஒழுக்கமும் நேர்மையும் இருக்கிறவர்களிடம் மட்டுமே இருக்கும் நிமிர்வது!
“நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!” என்றான் அவனும்.
“அம்மம்மாவும் என்னை அப்படி வளர்க்கேல்ல. என்னட்ட பணமிருக்கு, என்னால எதுவும் செய்யமுடியும் எண்டு நான் நினைச்சிருந்தா இண்டைக்கு உங்களின்ர சம்மதம் கேட்டு காத்திருக்க வேண்டியதே இல்லை. என்ர விருப்பம் தான் முக்கியம் எண்டு எதுவும் செய்திருப்பன். அது இல்ல நான். என் தேவையும் அது இல்ல. ஜீவனியோட சேர்ந்து அவளின்ர குடும்பம் முழுக்க எனக்கு சொந்தமா வேணும். அவள் ‘என்ர அம்மா வீடு’ ‘சித்தி வீடு’ எண்டு எல்லா இடமும் போய்வந்து சந்தோசமா இருக்கோணும். அதுக்கு நீங்க எல்லாருமே எனக்கு வேணும்!” என்று அவன் தன் மனதை தெளிவாகச் சொன்னபோது, முதன் முதலாக அவர் முகத்தில் தெளிவான புன்னகை ஒன்று உதயமாயிற்று.
தன் அச்சங்கள் அர்த்தமற்றவை என்று தெரிந்துவிட்டதில் மனம் அமைதியானது. அவருக்கு வேண்டியதும் அதுதானே. ஒரேயொரு மகள். காலமெல்லாம் சொந்தங்களோடும் சுற்றங்களோடும் சந்தோசமாய் வாழவேண்டும்! அதையேதான் அவனும் சொன்னான்.
அதைவிட அனுபவம் மிக்க மனிதர் அவர். அவரால் எடைபோட முடியாதா யார் எப்படி என்று!

