திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு – 22

அத்தியாயம் 22

ஒரு அழகான சுபநாளில் சுபமுகூர்த்தத்தில் திருமதி ஜீவனிதா நிரஞ்சன் ஆகியிருந்தாள் ஜீவனிதா. இடைப்பட்ட இந்த மூன்று மாதங்களும் இனிமையான கனவுகளுடனும், பல எதிர்பார்ப்புகளுடனும் இனிய படபடப்புடனும் கடந்து போனது.

இதோ, திருமணம் அதன் சடங்குகள் என்று அனைத்தும் முடிந்திருக்க பொழுதும் இரவை எட்டியிருந்தது. பெரியவர்கள் முதலிரவுக்காக வேலைகளை ஆரம்பிக்கவும், இந்த நாளை நாங்க எங்களுக்கு பிடித்த மாதிரியே கொண்டாடிக் கொள்கிறோம் என்று நிரஞ்சன் நல்லவிதமாக சொல்லிவிட்டான்.

அவனுக்கு ஏனோ, அலங்கரித்த கட்டில், பலகாரங்களோடு அவன் காத்திருக்க பால் செம்புடன் இதற்குத்தான் போகிறேன் என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லிக்கொண்டு அவள் தன்னறைக்குள் வருவதில் நாட்டமில்லை.

அவர்களின் நேசம் ஒருவரின்மேல் மற்றவருக்கு தானாய் வந்தது. தாம்பத்யம் கூட இயல்பாய் இனிமையாய் அதன்பாட்டுக்கு ஆரம்பிக்கட்டும் என்றே ஆசைப்பட்டான்.

ஜீவனியின் விருப்பமும் அதுவாக இருந்ததில், பெரியவர்களும் அவனின் விருப்பத்தை மதித்து விட்டுக்கொடுத்தார்கள். வாழப் போகிறவர்கள் அவர்கள். முதல் நாளை.. முதல் இரவை அவர்களுக்கு பிடித்த மாதிரியே கொண்டாடட்டும் என்று தேவையானவைகளை மட்டும் சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட, ஜீவனி நிரஞ்சனின் வரவை எதிர்பார்த்து, அவனது அறையில் அவனும் அவளுமாக நின்ற ஃபோட்டோவை பார்த்தபடி நின்றிருந்தாள்.

அந்த ஃபோட்டோ, அன்று கப்பலில் அவன் வயிற்றை கட்டிக்கொண்டு தோளில் அவள் சாய்ந்திருக்க, அவளின் தோளைச் சுற்றி ஒரு கை போட்டிருந்த நிரஞ்சன் எடுத்த செல்ஃபி!

பின்னணியில் கடலும் கப்பலும். அன்றைய நாளின் இனிமையும் வியப்பும் அடங்காத படபடப்புடன் அவள் இருக்க, வெண்பற்கள் பளீரிட என்னுடையவள் என்கிற உரிமையோடு அவளை அணைத்தபடி அவன் இருந்தான். அவன் விழிகளில் அவளை மொத்தமாக வீழ்த்திப்போடும் எல்லையில்லா நேசம் வழிந்தது. அந்த நேசத்தோடு, இவள் என்னவள், என் மதிப்பிற்குறியவள், என் பாதி என்று எந்த இடத்திலும் அவன் காட்டத் தவறியதே இல்லை.

இன்றும், மாலையில் நடந்த ரிஷப்ஷனுக்கு காலியின் ‘எம்பி’ முதல் பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அவர்களை எல்லாம் பார்த்து மிரண்டுதான் போனாள் ஜீவனிதா. அவளின் உலகம் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, ரதன் என்று மிக மிகச் சின்னது. அதில் எங்கே அவள் இப்படியானவர்களை சந்திக்க?

அவர்களை பார்த்துவிட்டு அவள் மிரண்டு விழிக்கையில், அவளின் தோளை சுற்றி ஆதரவாக கையைப் போட்டு, “இவள் என்னுடைய மனைவி!” என்று கம்பீரமாக ‘எம்பி’க்கு அறிமுகப் படுத்தி வைத்தான் நிரஞ்சன்.

இவளுக்குத்தான் மணமேடையில் நிற்கிறோம். அங்கே மண்டபத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் இவர்களையே பார்த்திருக்க, காலி ‘எம்பி’யின் முன்னால் தோளில் கையை போடுகிறானே என்று கூச்சமாகப் போயிற்று.

இவள் நெளிய, “என்ன?” என்றான் சிரிப்போடு அவள் புறமாகக் குனிந்து.

‘கடவுளே..!’ என்றிருந்தது அவளுக்கு. தோளில் ஒரு கை. இதில் காதோரமாக குனிந்து கேட்டால் கன்னத்தில் முத்தமிடுவது போலிருக்காதா!

கன்னங்கள் அதன் பாட்டுக்கு சிவக்க, “எல்லாரும் பாக்கிறாங்க..” என்று முணுமுணுத்தாள்.

“பாக்கோணும் எண்டுதானே அழைப்பு அனுப்பிக் கூப்பிட்டதே. பிறகு பாக்கிறாங்க எண்டா?(என்றால்?)” நகைத்துக்கொண்டே கேட்டான்.

‘டேய்! நீயாடா இது?’ வாயை திறந்து கேட்க முடியாமல் அவள் பார்க்க, அவனோ அவளின் தவிப்புகள் அத்தனையையும் மிச்சம் விடாமல் ரசித்துக்கொண்டிருந்தான்.

‘இவ்வளவு நாளும் நல்லபிள்ளை மாதிரி இருந்துட்டு என்ன ஆட்டம் ஆடுறான் இண்டைக்கு. ’ மனம் ஆசையோடு சீராட்டிக்கொண்டது அவனை.

இந்தத் துள்ளலுக்கும் உற்சாகத்துக்கும் காரணம், அவளின் கழுத்தில் அவன் பூட்டிவிட்ட மங்கள நாண்!

நெஞ்சம் கனிய குனிந்து மார்பில் தொங்கிய தாலியை பார்த்தாள். இனி நான் அவனுடைய திருமதி. அவனுடைய சொத்து. அந்த எண்ணமே நெஞ்சுக்குள் இனிமையாய் இறங்க, மனம் காதலில் கனிய தானும் நெருங்கி நின்று அவனைப் பார்த்து நேசம் பொங்கப் புன்னகைத்தாள்.

நிரஞ்சனின் முகம் இன்னுமே மலர்ந்து போயிற்று!

இப்போது வெட்கமோ கூச்சமோ வரவில்லை. அவனுடைய பாதி நான்தான்! அவன் துணையாக, அவன் கைவளைவில் நிற்கும் உரிமை எனக்கு மட்டும்தான்! உள்ளம் உரத்துச் சொல்ல, கொடியில் படரும் கொம்பென அவனோடு இணைந்து நின்று மேடைக்கு வந்தவர்களை இன்முகத்துடன் கைகுவித்து வரவேற்றாள்.

அந்த நிமிர்வை தந்தது அவனது காதல். அந்தக் காதலின் சக்தியை நினைக்கையிலேயே இப்போதும் தேகமெல்லாம் சிலிர்த்தது அவளுக்கு. அவள் வாயாடி! துரு துரு என்று எதையாவது எப்போதும் செய்துவிட்டு அடுத்தவர்களை திக்குமுக்காட வைப்பவள். அப்படியானவளை அவர்களுக்கான தனிமையில் அவன் செய்யும் சேட்டைகளும் சீண்டல்களும் வெட்கித் தடுமாற வைத்துவிடும். அதே வேளை, ஒரு தோளணைப்பு நிமிர்ந்து நிற்கும் திடத்தையும் தந்துவிடுகிறது. எப்படி?

“இவ்வளவு நேரமும் நிண்டுகொண்டே இருந்தியா?” அன்றைய நாளின் இனிய நினைவுகளில் திளைத்திருந்தவளிடம் இயல்பாக கேட்டுக்கொண்டே அறைக்குள் வந்தான் நிரஞ்சன்.

கண்களில் ஆவல் மின்ன திரும்பி அவனைப் பார்த்தாள்.

‘குளித்திருக்கிறான்…’ பளபளத்த கேசமும் முகத்தில் தெரிந்த புத்துணர்ச்சியும் சொன்னது. அவனது ஆஃப்டர் சேவின் வாசம் வேறு அவனுக்கு முதல் அவளை எட்டி மனதை மயக்கியது.

“இண்டைக்கு முழுக்க நிண்டது போதாதா? வா.. வந்து இரு.” என்று அவளை அழைத்துச் சென்று சோபாவில் அமர்த்தி தானும் அமர்ந்துகொண்டான்.

அவன் அமர்ந்ததுமே அவனைக் கட்டிக்கொண்டு, ஆப்டர் சேவ் வாசம் வந்துகொண்டிருந்த கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்து எடுத்தாள்.

“என்ர ஜீவனிக்கு வெட்கம் எல்லாம் வராதா?” அவள் இதழ்களின் இனிமையை அனுபவித்துக்கொண்டே கேட்டான்.

“ஏன் வரோணும்?”

“இரவு நேரம்.. எங்களுக்கு இண்டைக்கு முதலிரவு வேற..” என்று கட்டிலைக் காட்டி அவன் இழுக்க,

“அதுக்கு ஏன் வெட்கம் வரோணும். எனக்கு சந்தோசமாத்தான் இருக்கு. நான் இனி உங்கட ஜீவனி. உங்களிட்ட இருந்து யாராலையும் என்ன பிரிக்க முடியாது. உங்களோட கதைக்கிறதுக்கும் உங்கள பாக்கிறதுக்கும் யாரிட்டையும் அனுமதி கேக்க தேவையே இல்ல.. காலம் முழுக்க உங்களோடையே இருக்கப் போறன். பகலோ இரவோ என்ர நிரஞ்சன் என்னோடையே இருப்பார். எனக்கு இப்பதான் நிம்மதியாவும் சந்தோசமாவும் இருக்கு.” கடலளவு காதலை கண்களில் தேக்கி அவள் சொன்னபோது, நிரஞ்சன் பேச்சற்றுப் போனான்.

தான் உணர்ந்ததை போலவே அவளும் அந்தப் பிரிவில் உணர்ந்திருக்கிறாள் என்பதை சுகமாக கண்களை மூடி ஒருகணம் அனுபவித்தான்.

அவன் மனதை கொடுத்தது விளையாட்டுப் பெண்ணான ஜீவனியிடம். அந்த ஜீவனியின் அன்புக்காக, அவளின் ஒற்றைப் பார்வைக்காக மிகவுமே ஏங்கி இருக்கிறான். அவள் தன் கை சேருவாளா என்பதே பெரும் கேள்வியாக இருந்தது. இன்றோ, கை சேர்ந்ததும் அல்லாமல் கரை காணமுடியாத காதலையும் அவள் காட்டியபோது செயலற்று, பேச்சற்று திக்குமுக்காடித்தான் போனான்.

“உண்மைதான்டா.. என்னைவிட்டு போக உன்ன விடவே மாட்டேன்!” கரகரத்த குரலில் சொன்னவன் அவளை அணைத்து, நெற்றியில் இதழ் பதித்து அப்படியே அவள் தலைமீது தன் முகத்தை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.

இந்த மூன்று மாதம் அவளை இங்கே விட்டால் சரியாக வராது என்று யாழ்ப்பாணத்துக்கே கூட்டிப் போயிருந்தனர் அவளின் பெற்றோர். இந்த சின்னப் பிரிவு மனதளவில் அவர்களை இன்னுமே நெருக்கிப் பிணைக்கும் என்று எண்ணினார் புஷ்பராணி. அது முழு வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்!

அவள் இங்கேயே இருக்கட்டும் என்று அவனாலும் சொல்ல முடியாதே! மனமேயில்லாமல், போகவே மாட்டேன் என்று அடம் பிடித்தவளை கெஞ்சிக் கூத்தாடி, தினமும் உன்னோடு போனில் கதைக்கிறேன், இடையில் எதையாவது சாக்காக வைத்து பார்க்க வருகிறேன் என்று என்னென்னவோ சொல்லித்தான் அனுப்பி வைத்தான்.

ஆனால், ஒரேயொரு முறை தவிர மற்றும்படி அவர்கள் சந்திக்காமல் பார்த்துக்கொண்டார் அவளின் அன்னை. அந்த ஒருமுறை கூட அவளுக்கான சேலைத்தேர்வின் போது, அவரது கண்பார்வையில் தான்!

அன்று ஒரு மாதத்துக்குப் பிறகு அவனைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆவலில் பிரத்யேகமாக கவனமெடுத்து சாரி அணிந்து அழகாக வந்திருந்தாள். அவளைக் கண்ட நிரஞ்சனால் அவளிடமிருந்து பார்வையை விலக்கவே முடியவில்லை. கல்யாணக் களையில் பொலிவாக மின்னிய பூமுகமும், அவனைக் கண்டதும் மலர்ந்துவிட்ட விழிகளுமாக நின்றவளைக் கண்டு மயங்கிப்போனான். கண்களில் ரசனையோடு, “அப்படியே மனசை பறிக்கிறடா.” என்றான் கிசுகிசுப்பாக.

தேகமே சிலிர்த்தாலும், அத்தனை நாட்களாக அவனைக் காணாமல் இருந்த ஏக்கத்தில் அவள் அவனையே பார்க்க, தன் வருங்கால மாமியாரை திரும்பிப் பார்த்துவிட்டு, அவள் விரல்களை பற்றி அழுத்திகொடுத்துவிட்டு அவளோடு சேர்ந்து சேலைத் தேர்வில் இறங்கினான்.

அந்த வேலை முடிந்ததுமே, அவன் விடைபெற ஏமாற்றத்தில் வாடிப்போனாள் ஜீவனி.

தனிமை கிடைக்கும் ஆசையாக இரண்டொரு வார்த்தை அவனோடு கதைக்கலாம் என்று அவள் நினைத்திருக்க அவனோ போகிறேன் என்கிறானே என்று அவள் பார்க்க, ‘போன் பண்றன்’ என்று சைகையில் காட்டிவிட்டு விடைபெற்றான்.

ஜீவனிக்கு தன்னுயிரே தள்ளிப்போவது போலிருக்க, இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டு அவன் கையை பற்றிக்கொண்டு அவனோடேயே போய்விடமாட்டோமா என்றிருந்தது.

சொன்னது போலவே போன் பண்ணியவனிடம், “இதுக்கு நீங்க என்ன பாக்க வரமாலேயே இருந்திருக்கலாம்..” என்று சிணுங்கி, அன்றும் அவனது நினைப்பைத்தான் வெளிப்படுத்தினாள்.

அதற்கு முன்னும் பின்னுமான நாட்கள் பெரும் சோதனையாகத்தான் இருந்தது இருவருக்கும். இனிமையான கனவுகளும் கற்பனைகளும் அந்த நாட்களை பசுமையாக மாற்றிபோட்டாலும், அதே கனவுகளும் கற்பனைகளுமே சோதனையையும் கொடுத்துப் போயிற்று! தினமும் போனில் கதைத்தாலும், அது யானைப்பசிக்கு சோளப்பொறியை போட்டது போலத்தான் ஆயிற்று!

மனதோடு காதல் இருக்கும்வரை அதை சுமப்பது கூட சுகம்தான். பரிமாறிக்கொண்ட பிறகு.. அவளும் நம்மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்று தெரிந்த பிறகு.. அதுவும் ஜீவனியை போன்று காதலோ கோபமோ எதையும் தங்கு தடையில்லாமல் காட்டும் ஒருத்தியை விட்டுத் தள்ளி நிற்பது பெரும் பாடுதான்.

அந்த சோதனையான நாட்களை எல்லாம் கடந்து இருவரும் கரம் பற்றியபோது மோகத்துக்கு பதிலாய் இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று எண்ணி எண்ணி நிம்மதியும் சந்தோசமும் தான் அடைந்தான் அவனும்.

அந்த சந்தோசத்தோடு எப்போதும்போல அவள் தோளைச் சுற்றி கையை போட்டு, “இன்னும் ஏன் சாரியோடயே இருக்கிறாய்?” என்று கேட்டான்.

“உங்களுக்குத்தான் நான் சாரி கட்டினா பிடிக்குமே..”

“யார் இத சொன்னது?” வியப்போடு கேட்டான்.

“யார் சொல்லோணும்? இந்தக் கண்ணும் அது பாக்கிற பார்வையும் போதாதா?” அவன் கண்ணை தொட்டுக்காட்டிச் சொல்ல, அந்த கரத்தை பற்றி அவளின் விரல்களோடு தன் விரல்களை பிணைத்துக்கொண்டே அவளை பார்த்தான்.

அந்தப் பார்வை.. அதில் தெரிந்த வீச்சில் இவள் நெஞ்சுக்குள் மெல்லிய தடதடப்பு ஆரம்பமாக, முகத்தை அவன் மார்புக்குள் புதைக்கொண்டாள்.

“ஜீவனி..” முதுகை வருடிக்கொடுத்த விரல்களின் அழுத்தம் கூடிப்போக, காதருகில் கிசுகிசுத்தான்.

“ம்ம்..” அவளுக்கு சத்தம் வெளியே வருவேனா என்றது.

“சாரிய மாத்திக்கொண்டு வா தோட்டத்துக்கு போயிட்டு வருவம்.”

“இல்ல.. அது..”

முதலிரவுக்கு சாரி கட்டு என்றுதான் அவளின் அம்மா சொல்லியிருந்தார். அதை எப்படி அவனிடம் சொல்வது என்று தெரியாமல் அவள் தடுமாற, அவளின் தயக்கம் எதற்கென்று அவனும் விளங்கிக்கொண்டான்.

மார்பில் கிடந்தவளை நிமிர்த்தி, “இன்றைய நாளுக்கு தேவை நானும் நீயுமே தவிர இந்த சாரியில்ல..” என்றான் வேண்டுமென்றே.

குப்பென்று சிவந்துபோனாள் ஜீவனி. அவனுக்கு காட்டாமல் முகத்தை மறைக்க அவள் போராட, அதை தடுத்து அவள் படும் பாட்டை அவன் ரசித்துச் சிரிக்க, அவனிடமிருந்து தன்னை பறித்துக்கொண்டு உள்ளே ஓடியே போனாள்.

படபடப்பு அடங்கவே கொஞ்ச நேரம் பிடித்தது.

“கள்ளன்! தனிய நான் மாட்டினா போதும். இவன்ர அடாவடிய அடக்கவே முடியாது.” என்று சலித்தபடி, சேலையை கலைந்துவிட்டு முழங்கால் வரையிலான ஒரு கறுப்பு லெகிங்ஸ் அணிந்து. கையில்லாத இலகுவான மேல் சட்டை ஒன்றையும் மாட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

error: Alert: Content selection is disabled!!