நட்சத்திரா 10 – 2

பிள்ளைகள் மூவரும் ஒருபுறம் என்றால் டேமியன் முறைத்து முறைத்தே கல்யாணியிடமிருந்து, “ சரி சரி வாறம், போதுமா?” என்று சொல்ல வைத்திருந்தான்.

எங்கெங்கு போகப்போறோம் என்று ஆரவாரித்தபடி பிள்ளைகள் கேட்டார்கள். மிலானில் உள்ள சுற்றுலாப்பயணிகள் நாடும் முக்கிய வடிவான இடங்களைக் குறிப்பிட்டுச் சொன்னான், டேமியன். 

“அதுக்குத்தான் நாங்க போய்ட்டமே” என்றார்கள்.

“அது மூண்டு வருசங்களுக்கு முதல் தானே? நானும் உங்களோட வரேல்லையே! இப்ப எல்லாரும் போகலாம். உங்கட கல்யாணி அன்ரியும்  சுமதிம்மாவும் அங்க எல்லாம் போனதில்லை.பிறகு ஒண்டு ஒண்டா இத்தாலி முழுசும் சுத்திப்பாக்கலாம்.” என்று சொன்னவன், “ஒரு நாள்தானே, விடியவே வெளிக்கிடுவம் என்ன கல்யாணி.” என்றிருந்தான். 

அப்போதைக்கு பெரிதாக ஆர்வமில்லாதவள் போல்  தலையாட்டிவிட்டுச் சென்றவளுள், பிறகு பிறகு யோசிக்கையில் குதூகலம் தானாக ஊறிட்டு. இப்படியெல்லாம், குடும்பமாகச் சேர்ந்து நேரம் செலவிடுவது பற்றித் தாயும் மகளும் எண்ணியதே இல்லையே! 

சுமதியும் அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தார்.

“தங்கட குடும்பம் போலவே எங்களையும் நடத்துறார் டேமியன் தம்பி. அருமையான பெடி!” என்று தாய் சொன்னத்திற்கு கல்யாணியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. 

அதற்கென்று அவள் அதை மறுக்கவும் இல்லை. சிறு முறுவலோடு கடந்தவளைத் தொடர்ந்தது, சுமதியின் பார்வை. 

 

மறுநாள் மத்தியானம் ஒரு மணியோடு கல்யாணிக்கு வேலை முடிந்திருந்தது. வழமையாக அப்படியே சிலோன் டேஸ்ட் செல்பவள், நாளைய பயணத்திற்கு ஆயத்தங்கள் செய்கிறேன் என்றுவிட்டு வீடு வந்திருந்தாள்.

பிள்ளைகளுக்குப் பிடித்த சிற்றுண்டிகள்(ஸ்நாக்ஸ்), குளிர்பானங்கள், தண்ணீர் என்று சின்னதாக  ஒரு ஷொப்பிங் செய்துவிட்டே வந்தவள், ‘நான் எல்லாம் வாங்கிட்டன் டேமியன்’ என்று, குறுஞ்செய்தி அனுப்பிவைத்தாள். 

சட்டென்று உண்டான முறுவலோடு அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்திருந்தான், டேமியன்.

அன்று, பாடசாலையிலிருந்து பிள்ளைகளையும் அவள்தான் அழைத்து வந்தாள். இப்போதெல்லாம் ஒரு மணிக்கு வேலையால்  வந்தால்  அவர்களை அழைக்கச் செல்வது வழக்கமாகியிருந்தது.

வீட்டினுள் நுழைந்த வேகத்தில் சென்று, தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவர்கள்,  முதல்நாள் கல்யாணியோடு சேர்ந்து செய்த பிரௌனியை ஒரு கை பார்த்துவிட்டு கல்யாணியிடம் ஓடி வந்திருந்தார்கள்.

அச்சிறு வீட்டினுள் நிறைந்த குதூகலத்தோடு மறுநாளைய பயணம் பற்றிய பேச்சுத்தான் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் டேமியனோடு கடந்த சில வருடங்களாக வெளியே சென்ற நினைவு அவர்களுக்கு இல்லை. அதுவே, அந்த ஒரு முழு நாளைப் பரபரப்பாக எதிர்பார்த்தார்கள்.

மாற்றுடை ஒவ்வொன்று எடுத்து வையுங்கள் என்று இவள் சொல்ல, மூவருமே முதுகுப்பை கொண்டு வருவதாகவும் அதில் வைப்பதாகவும் சொன்னார்கள்.

“ஒரு டிவைஸ் கையில எடுக்கிறேல்ல!” பொய் மிரட்டல் விட்டாள்,இவள்.

 

“ஓ கனி அன்ரி! அப்பம்மா எண்டா எடுத்துக்கொண்டு வாங்க எண்டு நினைவுபடுத்துவா. நீங்க என்ன இப்பிடிச் சொல்லுறீங்க!” மூவரும் ஒன்றாகச் சிணுங்கினார்கள்.

“வேனுக்க இருக்கேக்க மட்டும் தான் பாவிப்பன், டேப் கொண்டு வாறன்.ப்ளீஸ் கனி அன்ரி!” ஜெரிக்சன் கெஞ்சினான்.

 “நான் ஃபோன் கொண்டு வருவன்  அன்ரி!” பெரியவள் பபிதா முடிவாகச் சொன்னாள். 

“அப்ப நானும் அன்ரி, என்ர டேப் கொண்டு வரவா?” சின்னவள்  ஓடிவந்து கல்யாணியின் காலை கட்டிக்கொண்டு கேட்டாள்.

“ நோ வே! அப்பிடியெண்டா நான் உங்களோட வரேல்லப்பா. நீங்க உங்கட பப்பாவோட(Papà/Dad ) போயிட்டு வாங்க. அவர் கார் ஓடட்டும், நீங்க டிவைஸில கேம் விளையாடுங்க.” அவள் முறுக்கிக்கொள்ள, மூவருமாகச் சென்று வளைத்துப் பிடித்துக்கொண்டார்கள். அப்போதும் முணுமுணுப்போடுதான் டிவைஸ் இல்லாத பயணத்திற்குத்   தலையாட்டி இருந்தார்கள்.

நேரம் போனதே தெரியவில்லை. ஐந்து மணிக்கு மூவருக்குமே நீச்சல் வகுப்பு உண்டு. டேமியனே அழைத்துச் செல்வான். நாலரை போல் வீடு வந்தவன் பிள்ளைகளைக் காணவில்லை என்றதும் தோட்ட வீட்டை எட்டிப்பார்த்தான். அங்கிருந்து சிரிப்புச் சத்தம் கலந்துகட்டி வந்துகொண்டிருந்தது. முறுவலோடு நடந்தான்.

“அஞ்சுக்கு ஸ்விமிங் வகுப்பு இருக்கல்லோ பிள்ளைகள்?” என்றபடி உள்ளிட்டவனைக் கண்டு, மூவரும் துள்ளி இறங்கினார்கள்.

 “ஓ நோ! மறந்தே போனம்.” என்றபடி கடிகாரத்தைப் பார்த்தார்கள். மறுநிமிடம், தயாராகி வருவதாகச் சொல்லிவிட்டு ஓடினார்கள்.

“என்ன ஒரே பிசி, சமையல் நடக்குதா என்ன?” என்றபடி குசினிக்குள் எட்டிப்பார்த்தான், டேமியன்.

“இல்ல, இது நாளைக்குக் கொஞ்சமா ஆட்டிறைச்சியும் மஞ்சள்  சோறும் செய்வம் எண்டு நினைச்சன். எங்கள் மூண்டு பேருக்கும்.” என்றவளைத்  தன்னை மறந்து  சிலகணங்கள் மேலதிகமாகவே பார்த்து நின்றான், டேமியன்.

“உங்களுக்கு …நீங்க …சாப்பிடுவீங்க எல்லா? விருப்பம் தானே?” 

“சாப்பிடுவன் கல்யாணி. ஆனா விடிய வெள்ளன எழும்பிச்  செய்துகொண்டு நிக்கப் போறீங்களா?  பிறகு ஆறுதலா  சமைச்சுத் தாங்கவன், நாளைக்கு எல்லாரும் வெளில சாப்பிடலாம்.” என்றான் அவன்.

“இதெல்லாம் ஒரு வேலையே இல்ல. உங்களுக்கு டப்பென்று  கோப்பி போட்டுத் தரவோ?” தன்பாட்டில் அவள் கேட்டது கூட  அவனைத் தடுமாற வைத்திட்டு. இப்படியான சிறு சிறு அவனுக்கேயான கவனிப்புகள் அவன் தனிமையைப் பூதாகரமாகக் காட்டுகிறதே! தோழமையுடனான துணையின் அருகண்மைக்காக அவன் மனம் ஏங்க முற்பட்டது. சுனிமலுக்கு நடந்தது தெரிந்தேவா என்றதும் அவன் மனம்தான். 

விருப்பை, ஆசையை, ஏன் தேவையைக் கூட அடக்கத் தெரியாதவன் எல்லாம் என்ன பெரிதாகச்  சாதித்துவிடப்போகிறான் என்ற எண்ணம் கொண்டவன் அவன். அடக்கிக்கொண்டான். 

 நேரத்தைப் பார்த்தபடி , “அப்ப தள்ளுங்க நான் வெட்டித் தாறன், நீங்க கோப்பி போடுங்க.” என்றபடி உள்ளே வர, “இல்ல இல்ல, அது நான் பிறகு வெட்டுறன்…கைய வையாதீங்க…தள்ளுங்க.” என்றவள், பரபரவென்று  கரத்தைக் கழுவிவிட்டு அவனுக்கு கோப்பி போட, “அரைக் கப் போதும் கல்யாணி” என்று வாங்கியவன், நிலைப்படியோடு சாய்ந்து நின்றவாறே அருந்தி முடிக்கவும் பிள்ளைகள் வரவும் சரியாக இருந்தது.

“போயிட்டு வந்திருறம்” என்று, அவனும் பிள்ளைகளும் விடைபெற்றுச் செல்ல, சிறு தலையாட்டலில் விடைகொடுத்தவள், வேலையில் கவனமாகிவிட்டாள். ஆனால், டேமியன் மனமோ கல்லெறிபட்ட குளம் போலாகியிருந்தது. சின்ன சின்ன அதிர்வுகள்தான், இருந்தபோதும் அதைத் துல்லியமாக உணர்ந்தபடியேதான் சென்றுகொண்டிருந்தான், அவன்.

 

error: Alert: Content selection is disabled!!