டேமியன் கதைப்பது, நடந்துகொள்வது நெருங்கிய நட்பென்ற ரீதியில் என்றே இருக்கட்டும். அவை, இவள் மனத்தை வேறுவகையில் பாதிக்கிறதே! என்ன ஏதென்று குழம்ப வைக்கிறதே! தவித்துப்போய் நின்றாள், கல்யாணி.
மனத்தை ஒருநிலைப்படுத்திச் சிந்திக்க முயன்றாள். அதில் கூட முழு வெற்றி கிடைக்கவில்லை. எது எப்படி இருந்தாலும், எச்சந்தர்ப்பத்திலும் கிறிஸ்டினா குடும்பத்தோடு விலகலை அவள் விரும்பவில்லை. அவர் அந்தளவுக்கு முக்கியமானவர்.
இலங்கையில் அதுவும் பெரும்பாலும் யாழ்ப்பாணம், வன்னியென்று வளர்ந்து வாழ்ந்த மிகச் சாதாரண குடும்பத்தவருக்கு, வெளிநாடு என்பது இலகுவான விடயமா? தெரியாத தேசம் மட்டுமா? மொழியும் வேறாச்சே! தாயும் மகளும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மனம் நிறைந்த பதற்றத்தோடுதான் ‘மிலான்’ வந்திருந்தார்கள். அந்நேரம், இன்முகத்தோடு நெடுநாள்ப் பழகிய நட்பாக, உற்ற உறவாக அடைக்கலம் தந்த குடும்பம் கிறிஸ்டினாவுடையது. உரிய பணம் செலுத்தியே அங்கு வசித்தாலும் கிடைக்கும் பாதுகாப்புணர்வுக்கு அவ்வீட்டு வாடகைப்பணம் எந்த மட்டுக்கு?
இன்று, மிலானில் இத்தனை நிம்மதியாக அவர்கள் வாழ்கிறார்கள் என்றால், தங்கியிருக்கும் இடமும் சுமதியின் வேலையும் முக்கிய காரணமாகும். தாயின் நிம்மதியும் மகிழ்வுமே தன் வாழ்வு என்று எண்ணுபவளுக்கு, சுமதி, அந்த வேலையில் எந்தளவுக்கு ஒன்றிவிட்டார் என்று தெரியுமே! அவர், இன்று இந்தளவு நிமிர்வாக நடமாட, முகத்தில் சற்றேனும் மலர்வோடு இருக்க முக்கியமான காரணமே ‘சிலோன் டேஸ்ட்’ சூழலே!
இல்லையோ, இவள் வேலை எடுத்து வந்து, அதன் பிறகு அவரை அழைக்கும் வரை எத்தனை ஆண்டுகள் சென்றிருக்குமோ! அதுவரை, இலங்கையில் தினம் தினம் வதைபட்டபடி வீட்டுக்குள் முடங்கியே தன் வாழ்வைக் கழித்திருப்பார்.
இந்த ஒன்றே, டேமியனை விட்டு விலகி நிற்பது என்ற தீர்மானத்துக்கு அவளை வர வைத்திருந்தது.
சுற்றுலா சென்று வந்த மறுநாளே, அதைச் செயற்படுத்தினாள்.
கிறிஸ்டினா வருவதற்கு மேலும் ஒரு மாதம் செல்லுமாம். அதுவரை, பிள்ளைகள் தொடர்பான தன் பொறுப்புகளில் இருந்து விலக முடியாது. டேமியன் பார்வையில் படாது நடமாடலாம். நடமாட வேண்டும்!
அடுத்துருண்ட நாட்கள் ஒவ்வொன்றும் அவதானமாக டேமியனைத் தவிர்த்தாள். அது பார்த்தால் அவனும் ஒத்துழைத்தானோ! ஐந்தாறு நாட்கள் கடந்த பின்னரே, அவளுள் இந்தச் சந்தேகம் எழுந்தது. இவள் பார்வையில் படாது நடந்துகொள்கிறானோ என்ற சந்தேகம் வந்துவிட, ஏன் என்ற கேள்வி எழாது இருக்குமா?
அதை இதை என்று யோசிக்க வைத்தது. தன்னால், அவன் பாதிக்கப்படுகிறானோ என்ற எண்ணம் எழுவதை எவ்வளவு முயன்றும் தவிர்க்க முடியாதிருந்தது. அவன் செய்கைகளுக்கு அதுதான் காரணம் என்றும் முடிவெடுக்க முனைந்தது உள்ளம்.
வழமைபோலவே வேலையும் வீடுமாகப் பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தாலும் மனத்தின் மொத்தக் கவனத்தையும் ஏதோ ஒருவகையில் டேமியன் பிடித்துக்கொண்டான். அதை உணரக் கூட முடியாது நடமாடினாள், கல்யாணி.
இப்படியே இரு கிழமைகள் கடந்திருந்தது. குழம்பி குழம்பி ஓய்ந்து போனாள். அதுவே , அவனுடன் நேரடியாகவே கதைத்தால் என்ன என்ற நிலைக்குக் கொண்டுவந்திருந்தது. நான் என்ன செய்துவிட்டேன் என்று, எனக்கு ஒளிஞ்சு ஓடுறீர் என்று கேட்க வேண்டும் போலிருந்தது. அதைத்தானே அவளும் விரும்பினால் என்றுவிட்டு அமைதியாக இருக்க முடியவில்லை.
அன்றைய விடியலிலும் அப்படித்தான், சற்றுமுன்தான் சுமதி வேலைக்குச் சென்றிருந்தார். கல்யாணியும் அவரோடு எழுந்துவிட்டாள். தாய்க்குத் தேநீர் ஊற்றிக் கொடுத்தவளை, “தூங்கலாமேம்மா!”என்றார், சுமதி.
“தூக்கம் வரேல்லமா.” அசட்டையாகச் சொன்ன மகளை, அவர், ஒரு சாதியாகப் பார்த்துக்கொண்டுதான் தயாராகி இருந்தார்.
அவளும் காலைக்கடன்களை முடித்து, தாயை வழியனுப்பிவிட்டு வந்தவள் சோர்வோடு கதிரைக்குள் குறண்டி அமர்ந்துவிட்டாள். மிகவும் பழக்கப்பட்ட வீட்டின் அமைதி, அறிமுகமே இல்லாத விடயம் போல் மனத்துள் எதுவோ செய்தது. விழிகளை இறுக மூடிக்கொண்டு சிறிது நேரம் இருந்து பார்த்தாள். தேவையே இல்லாது ‘லேக் கோமா’ நினைவுகள் வந்தது போயின.
கொட்டிக் கிடந்த இயற்கையழகை மறக்க முடியுமா என்ன? ஆனால், அதுவா நினைவில் உலாப் போனது? மலை முகடுகளோடு சேர்ந்த ஏரி பின்னால் பரந்து கிடக்க, அருகே நெருங்கி புகைப்படத்துக்கு நின்றானே! அதுவும் அவள் அதிர்ந்து பார்த்ததிற்குப் பதில் போல் ஒரு பார்வை பார்த்தானே!
நெஞ்சம் சில்லிட்ட உணர்வில் மூச்சிழுக்க மறந்து அமர்ந்திருந்தாள், கல்யாணி.
அக்கணம் தொடந்து நினைவில் நின்று, அவளைச் சுற்றிச் சுழற்றியது.
வாட்ஸ்சப்பில் எல்லாப் புகைப்படங்களையும் டேமியன் அனுப்பியிருந்தான். ஒரு முறை பார்த்தாள்தான். மறுமுறை பார்க்கும் துணிவு வரேன் என்று ஆடம் பிடிக்கிறதே!
“உப்பூபூபூ ”ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டபடி விழிகளைத் திறந்தவள் பார்வை கைப்பேசிக்குச் சென்றது. அதே வேகத்தில் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டாள்.
“விசரா எருமை உனக்கு?” மெதுவாகச் சொன்னது, வீட்டின் அமைதியில் சத்தமாகவே கேட்டிட்டு.
தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். செய்தியில் விட்டவளால் அதில் கவனம் செலுத்தவும் முடியவில்லை. கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு முழங்கால்களிடையே நாடியை முட்டுக்கொடுத்தபடி அமர்ந்திருந்துகொண்டாள்.
அவள் நினைவுகளில் உரசி ஒருவழி பண்ணுபவன், வெளியே நின்று பார்த்துக்கொண்டு நிற்பதை அறியாதே அமர்ந்திருந்தாள், கல்யாணி.
டேமியனோ, அந்த அதிகாலைப் பொழுதில் தழுவிய மென்தென்றலின் இதம் அதிகரித்தாற் போலுணர்ந்தான். உதடுகளில் மென்னகை வந்து அமர்ந்துகொண்டது. அடுத்தடுத்து என்று, தானாக அழுத்தம் கொடுத்து, அவளை, எதிர்மறையாக வெடிக்க வைக்க விரும்பாதுதான் ஒதுங்கியிருக்க முடிவெடுத்தான். அது, எவ்வளவு சரியானது என்று, கடந்த சில நாட்களில் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறான்.
அவளுக்குத்தான் அவன் கண் மறைவில். ஆனால், அவன் கவனம் எந்நேரமும் அவளில் இருந்தபடிதான் இருக்கிறது. அவள் யோசிக்கிறாள், அதுவும் தன்னைப்பற்றி, தன் ஒதுக்கம் பற்றி. அதுவே நல்லதொரு தொடக்கம் என்று எண்ணினான், அவன்.
இரு கிழமைகள்தான், என்னவோ மாதக்கணக்கில் அவளோடு கதைக்காதவொரு உணர்வு! அதுவே, இன்றைய விடியலில் அவள் வீட்டு வாயிலுக்கு இழுத்து வந்திருந்தது. சற்று நேரம் அப்படியே யன்னல் ஊடாக அவளைப் பார்த்து நின்றவன் நிதானமாக நகர்ந்து கதவைத் தட்டினான்.
அச்சத்தத்தில் விலுக்கென்று திரும்பியிருந்தாள், கல்யாணி. சற்றும் தாமதிக்கவில்லை, விரைந்து வந்து கதவைத் திறந்திருந்தாள்.
ஓடுவதற்குத் தயாராகி நின்றான், டேமியன். கறுப்பு நிற ஜொக்கிங் ஷோர்ட்ஸ். அதே நிறத்தில் ஆர்ம் கட் ஸ்போட்ஸ் வெயர். இத்தனை நாட்கள் பழகும் போது தெரியவில்லை, அந்தளவுக்குத் திடகாத்திரமான தோற்றத்தில் நின்றவனுக்கு மீசையே தனியழகை, கம்பீரத்தைக் கொடுத்தது.
திக்கென்று இருந்தது ,அவளுக்கு. ‘செய்க்! என்ன அலுவல் பாக்கிற கல்யாணி. சரியான வெக்கம் கெட்ட பொம்பளையா இருப்ப போல இருக்கே!’ அவள் மனத்தின் சாடலில் மிகவுமே குன்றிப் போனாள். அதை, நிமிடத்தில் மறக்கச் செய்திருந்தான், டேமியன்.
“Buongiorno கல்யாணி!”(Good Morning)என்றவன் உதடுகளுக்குப் போட்டியாக விழிகளில் நகைப்பு. அதோடு ஒட்டிக்கிடந்த கனிவான பார்வை, இவள் நெஞ்சாழம் வரை ஊடுருவியது. அவள் விழிகள் தாமதமின்றி கலங்கிப் போயின. சுதாகரித்து நிமிர்வாகவே எதிர்கொள்ளத்தான் முயன்றாள். முயற்சி பயனளிக்கவில்லை.
அவள் கலக்கத்தை, தடுமாற்றத்தைத் துல்லியமாக அவதானித்தவன் மனம் ‘ தள்ளி நில்லாதே டேமியன்’ என்றது. கண்ணிமைப்பொழுதில் இழுத்து, இறுக அணைத்துகொள்ள ஆவல் கொண்டான், அவன். தன் விருப்பைச் சொல்லிட விரும்பினான். நினைப்பதைச் செய்துவிடுவோமோ என்ற கிலி பிடித்துக்கொண்டது. பளார் என்று, அறைந்துவிட மாட்டாளா டேமியன்? நக்கலாகக் கேள்வியெழுப்பிய மனசாட்சியைக் காலின் கீழிட்டு நசுக்கத்தான் விரும்பினான்.
ப்ச்! பார்வை மட்டும் அவள் முகம் விட்டு விலகவில்லை. இடுப்பில் கையிரண்டையும் ஊன்றிக்கொண்டவனுக்கு, மிகவுமே பயமாக இருந்தது. அவள் வாய் மறுப்பை உதிர்க்கும். அதுவும் ஏனோ நிச்சயமாகத் தெரிந்ததில் அதை எதிர்கொள்ளும் திராணிதான் வரவில்லை.
எதிர்த்து வாதாடி மல்லுக்கட்டித் தன்னை விளங்க வைத்துவிடுவான். அதிலும் நிச்சயமாக இருந்தான்தான். என்ன என்றாலும் அது தரப்போகும் வலியும் வேதனையும் தேவைதானா? அதுவும் கல்யாணிக்குச் சிறு துன்பமும் தன்னால் வருவதை அவனால் அனுமதிக்க முடியாது. அதுவே, இன்னமும் சற்றுப் பழகியபின் சொல்லிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வர வைத்திட்டு. இப்போது, பழையமாதிரித் தேடி வந்ததும் அந்த முடிவில்தான்.
ஏற்கனவே பியங்காவைச் சலிப்பேயில்லாது வருடக்கணக்கில் காதலித்து மணந்தவன். அவள் மறையும் வரை, தினமும் ரசிப்போடும் ததும்பி வழியும் நேசத்தோடும் வாழ்ந்தவன். இப்போதும் அவள் நினைவுகள் மனத்தில் நீங்காது உண்டு. அவள் பிரிவு, ஒவ்வொரு அணுவையும் வதைத்துக்கொண்டிருக்கிறது. இருந்தும் இக்கணம் கல்யாணியையும் காதலிக்கிறானே!