நாட்கள் எதற்காகவும் தாமதிக்காது உருண்டோடின. பொழுதுக்கென்னவாம்? அதுபாட்டில் புலர்ந்தது, குறித்த நேரத்தில் சாய்ந்தது. யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அதன் அழகே, மனித மனங்களின் தன்மைக்கேற்ப அல்லவா வர்ணிக்கப்படுகிறது. வாழ்த்துகளோ தூற்றல்களோ ஒருமனதாய் ஏற்றும் விடும். தன் ஓட்டத்தில், சாவி கொடுத்த பொம்மைகள் போல் எல்லோரையும் இழுத்துச் செல்லும் இறுமாப்பு, வேறெதையும் சிந்திக்க விடுவதில்லைப் போலும்!
டேமியனும் கல்யாணியும் இழுப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள்.
இருவரும் வீட்டில் சந்தித்துக் கொள்வது அரிதாகிற்று. திட்டமிட்டு என்று இல்லை. கோடையின் வரவு டேமியனை முடுக்கிவிட்டிருந்தது. அவன் பெரும்பாலான பொழுதுகள் ‘சிலோன் டேஸ்ட்’ அதன் முன்னேற்றம் என்றானது.
உல்லாசப்பயணிகள் வருகை ஆரம்பித்திருக்க அவர்கள் B&B வேறு எந்நேரமும் ஆட்கள் நடமாட்டத்தோடு இருந்தது.
கடந்த ஐந்து வருடங்கள் மந்த நிலையில், ஏனோ தானோவென்று பொழுதின் பிடியில் இழுபட்ட டேமியன், இப்போது அப்படியில்லையே! அதுவே, சிலோன் டேஸ்டின் அடுத்த கட்ட நகர்வில் கவனம் கொள்ளவும் வைத்திட்டு.
‘ரோம்’, ‘மிலான்’ என்பவற்றுக்கு அடுத்ததாக, இத்தாலியின் மூன்றாவது பெரிய நகரான நாப்பில்சின் (Naples ) தென் கிழக்குத் துறைமுக ஊரான ‘salerno’ வில் லீசுக்கு உணவகம் ஒன்று இருப்பது தெரியவந்தது. பிடித்துக்கொண்டான். பிறகென்ன? அங்கும் ‘சிலோன் டேஸ்ட்’ உதயமாக இருந்தது.
அங்கிருந்து நாற்பது நிமிட ஃபெர்ரி பயணத்தில் உல்லாசப் பயணிகளின் சொர்க்கமான Amalfi Coast பகுதியைத் தொட்டுவிடலாம்.
அங்கு படையெடுக்கும் உல்லாசப்பயணிகள் மத்தியில் ‘சிலோன் டேஸ்ட்’டுக்கு என்று, ஒரு இடம் பிடிக்கும் வகையில், தேவையானவற்றைப் பார்த்து பார்த்து ஒழுங்குபடுத்தினான், டேமியன்.
கல்யாணியோ, நாள்கள் உருள உருள, ஒரே வரியில் சொல்வதென்றால் மனத்தோடு இழுப்பட்டுச் சென்றுகொண்டிருந்தாள். டேமியனுக்குத் தினமும் அவளோடு ஒரு சில நிமிடங்கள் சரி கதைக்கும் ஆவல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டான். அவள் மனத்துக்கு இவன் வழங்கும் காலம் இது! அவனை உணரட்டும், நினைக்கட்டும். அது அப்படியே, அவனுக்கு அழைத்துக் கதைக்கும் அளவுக்குச் சென்றால் மகிழ்ந்துபோக மாட்டானா என்ன?
இப்படியே நினைத்துக்கொண்டிரு! இலவு காத்த கிளி போல் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று, மனம் பரிகாசம் செய்தது. அப்படி என்ன நம்பிக்கை? அவளோ, முதல் காதலே வாழ்வுக்கும் என்றுகொண்டு இருக்கையில் இதெல்லாம் என்ன டேமியன்? வெட்டொன்று துண்டு இரண்டு என்று கதைத்துவிடு என்று, ஒருபுற மனம் இடித்துரைத்துக்கொண்டே இருந்தாலும் அவன் முனையாதிருந்தான்.
அவளை விரும்புகிறான். மாற்றுக் கருத்தேயில்லை. அவள் உணர்வுகளைக் காயப்படுத்தி அதன் மேல் தன் நேசத்தை எழுப்ப அவனால் இயலவே இயலாது. அவன் நேசத்தை அவளும் உணர்ந்திருக்கிறாள் என்பது இவனுக்கு நிச்சயம். மதித்து, தன்னிடம் வருவாள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டாலும் மனத்தில் எழும் தவிப்புக்கு எந்தவிதத்திலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. அதுவே, தொழிலில் மொத்தக் கவனத்தையும் குவிக்க முயன்றான்.
அன்றைக்குப்பின் அவனோடு சேர்ந்து ஓடும் சந்தர்ப்பம் கல்யாணிக்குக் கிடைக்கவில்லை. தான் தனியாகச் செல்லத் தொடங்கியிருந்தாள். இருவரும் செல்லும் அதே வழிதான். அதுவே ,கடைசியாக அவர்கள் சென்ற தினத்தை, கதைத்தவற்றை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
களைப்பில்லாவிட்டாலும் அன்று அமர்ந்த மர வாங்கிலில் அமராது வர முடிவதில்லை. அந்நேரம், தலையிலிருந்து முகத்தை மரக்கொப்பின் இளம் தளிர் வருடும் உணர்வு அவளைத் திகைத்துப் போக வைத்திட்டு. விழிகள் கலங்க அமர்ந்திருப்பாள்.
மனமோ, எதையுமே சிந்திக்கப் பயந்து சுருண்டிட்டு. இன்று நாளை என்று, அதைக் கடந்து வந்து விடலாம் என்றுதான் நினைத்தாள். அதுவோ, மறைவதற்குப் பதில், டேமியன் அறிமுகமான நாளிலிருந்து, இருவருக்கும் இடையிலான சிறு சிறு சந்தர்ப்பங்களையும் நினைவில் கொண்டுவந்து கொண்டேயிருந்தது.
அதற்கு எல்லாம் விரும்பாதவளாக இருப்பின் என்ன செய்ய வேண்டும்? டேமியன் பார்வையிலிருந்தே மறைந்து போக வேண்டும் அல்லவா? இங்கு நடந்தது தலைகீழாக இருந்தது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிலோன் டேஸ்ட்டுக்கு சென்றாள். எப்போதாவதுதான் டேமியன் பிரசன்னம் இருந்தது. அதுவும் தூர. எந்நேரமும் ஏதோவொரு வேலையோடு இருந்தான். சுற்றி இரண்டு பேர்.
‘பெரிய பிசினெஸ் மேன்!’ என்று, அறியாதவர் தெரியாதவர் போல எல்லா நடந்துகொள்கிறார் என்ற விசனம் அவள் மனத்தில் வந்திருந்தது.
அதிலும் சுமதி சொல்லித்தான் அவன் புதிதாக ஒரு உணவகம் திறக்கவுள்ளதே தெரிய வந்தது. அவ்வளவு கோபம் கொண்டாள்.
அண்மைய நாட்களாக மிக நெருக்கமானவர்களாக உணர்த்திய உணர்வெல்லாம் பொய் என்றவகையில் ஒரு இடைவெளி அவர்களுள் விழுந்துவிட்டிருப்பது தெரிந்தது. அதை ஏற்படுத்த நினைத்தவள், முடிவெடுத்தவள் என்னவோ கல்யாணிதான் . ஆனால், ஏற்படுத்தியது டேமியன். ஏனென்று தெரிய வேண்டாமா என்ன?
எத்தனையோ தடவைகள் கைப்பேசியை எடுப்பதும் அவன் வாட்ஸ்சப்பை பார்ப்பதுமாக இருந்தாள்.
“ஃப்ரெண்டாம் பெரிய ஃப்ரெண்ட். இப்பிடித்தான் நல்லது கெட்டதுகள் ஒண்ணும் சொல்லாமல் பழகுவீனமோ!” முணுமுணுத்தவளுக்கு, ‘ஃப்ரெண்ட்’ என்று சொல்லும் ஒவ்வொருமுறையும் அவன் பார்வை சொல்வது நினைவிலாடியது. அதுவரையிலும் எவராலும் ஆட்டிப் பார்க்க இயலாதிருந்த அவள் மனம் அசைந்தது. கண்கள் கலங்க, கைப்பேசியிலிருக்கும் பச்சை நிற அலைபேசி வடிவத்தைத் தொடச் செல்லும் விரல், கிட்ட அண்மித்துவிட்டுத் திரும்பியது. இதுவே பல தடவைகள் ஆயிற்று!
அவன், தன் மகிழ்வான தருணங்களையும் முன்னேற்றங்களையும் உன்னிடம் சொல்லவில்லை. உன்னைத் தவிர்ப்பது போலவே நடந்து கொள்கிறான். பிறகு நீயேன் வழிஞ்சுகொண்டு போகிறாய்? மனத்துள் சுரந்த கோபம் இப்படித்தான் எண்ண வைத்திட்டு.
‘இனிமேல் பட்டுக் கதைச்சுக்கொண்டு வரட்டும். பேசாமல் வேற வீடு பார், விலகிச் சென்றுவிடு கல்யாணி.’ திடுமென்று இப்படிச் சொன்னது உள்ளம். அதுதான் சரியென்றான் மனதோரமாக நெரிந்துகொண்டு நின்று எட்டிப் பார்த்த சூர்யா.
எதற்குமே, எந்த உறவுக்குமே லாயக்கற்றவள் நான்! அப்பட்டமான உண்மை இது. தாய் என்ற ஒரு உறவு உண்டே! அதற்கு முன் எந்த உறவு வேண்டும் சொல்லு? மனத்தை அடக்கிக்கொண்டு, கசிந்த விழிகளைத் துடைத்துவிட்டு அன்றாட வேலைகளில் மூழ்கினாள்,கல்யாணி.
இப்படியிருக்கையில், கிறிஸ்டினா கனடாவிலிருந்து வந்திருந்தார். டேமியன் அவரை அழைத்து வந்து விட்டுவிட்டு வெளியே வருகையில், வைத்தியசாலையிலிருந்து உள்ளே நுழைந்துகொண்டிருந்தாள், கல்யாணி .
இருவரும் முன் வாயிலடியில் எதிரெதிரில் சந்தித்துக்கொண்டார்கள்.