நட்சத்திரா 15 – 2

 

அதுவும் களைப்பும் சேர, படுத்ததும் உறங்கிப் போயிருந்தார்.

தலைக்கு மேல் போயிட்டு, சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று, விட்டேற்றியாக இருக்க முயன்றாலும் கல்யாணியால் முடியவில்லை. 

என்னதான் முயன்றாலும்  அறிமுகமானதில் இருந்து நடந்து கொண்ட விதம், சின்ன சின்ன செய்கைகள்,  கதை பேச்சு பார்வை என்று, டேமியன்தான் அவள் நினைவில்.

இதெல்லாம் எப்படி நினைவில் வைத்திருந்தேன் என்று, அவளையே வியக்க வைத்தவண்ணம் அவள்  நினைவை ஆக்கிரமித்திருந்தான், டேமியன்.

ஆழ்ந்த உறக்கம் அண்டவே இல்லை. உருண்டு பிரண்டுகொண்டிருந்தவள் தாய் வேலைக்குச் செல்ல எழ, தானும் எழுந்து கொண்டாள்.

கோடையின் உபயம், விடிகாலையே வெளிறத் தொடங்கியிருந்தது. அண்மைய மாதங்களாகப் பழகிய பழக்கம் ஓடிவிட்டு வந்தால் என்ன என்று நினைத்தாள். அப்போதும் அப்பழக்கத்தை அறிமுகம் செய்தவன்தான் நினைவில் வந்தான். நினைவுகளின் தொந்தரவு அவளுக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதானே. அதோடு போராடுவதோடு அவள் வாழ்வு முடிய போகிறது. கசப்புணர்வு மிகையாகவே எழுந்தது. உதறிவிட்டு வெளிவர முயன்றாள். அதுவே, விறுவிறுவென்று ஜொக்கிங் உடைக்கு மாற வைத்திருந்தது.

வீட்டைப் பூட்டிவிட்டு நிமிர்ந்தவள்,  டேமியன் ஜொக்கிங் உடையில் வெளிவருவதைக் கண்டுவிட்டு நின்றுவிட்டாள்.

அவனோ, முறுவலோடு காலை வணக்கம் சொன்னான். இயல்பான உடல்மொழியோடு நின்றான். பதில் வணக்கம் சொல்லாது வீட்டுக்குள் புகுந்து கொள்வதா?

 ஏற்கனவே கதைத்து வைத்த பாவனையில் சேர்ந்தே ஓடத்  தொடங்கினார்கள்.

இருவருக்குமே மற்றவரோடு கதைக்க வேண்டும் போலிருந்தது. மிகவுமே தயக்கமாகவும்  இருந்தது. 

முதல் நாள், தான் நடந்துகொண்ட விதத்தில், ஒட்டும் வேணாம் உறவும் வேணாம் என்று முறித்துக்கொள்வாளோ என்ற எண்ணம் டேமியன் நெஞ்சைத் தடதடக்கச் செய்தபடியிருந்தது.  காட்டிக்கொள்ளவில்லை, அவ்வளவுதான். அவள் புறம் திரும்பாது நேரே பார்த்து ஓடிக்கொண்டிருந்தான்.

கல்யாணியாலும் அது முடியாதிருந்தது. இரவு முழுதும் அவன் நினைவுகளோடு இருந்தது ஒருவகையிலான  குற்றவுணர்வில் தள்ளிவிட்டிருந்தது. 

அது மட்டுமா? ‘இந்தக் கல்யாணி விசயத்தில இனி எப்பவும் இவன் மாறமாட்டான்.’ என்றானே! அதைச் சொன்னபோது அவன் பார்த்த விதமும் குரலில் இருந்த உறுதியும் நெருக்கமும் அவளுக்கு வாய்ப்பூட்டுப் போட்டிருந்தது.  அவனாகக் கதைத்தால் கதைப்பம் என்ற முடிவில் ஓடிக்கொண்டிருந்தாள்.

எவ்வளவுக்கு நடிப்பதாம். இருவருமாகத் தம்மை மறந்து  கலகலவென்று கதைத்துச் சிரித்தபடி, இந்த வழியால் ஓடிய நாள்களின் நினைவுகள் அவர்கள் வாய்ப்பூட்டை, தயக்கத்தை உடைத்தெறியும் முயற்சியில்  குதித்துவிட்டிருந்தன.

எப்போதும் கல்யாணிக்காக மிதமான வேகத்தில் பார்த்து பார்த்து ஓடுவான் டேமியன். இன்று, அவளே சற்று  வேகமாக ஓடிக்கொண்டிருக்க அவன் ஓட்டத்திலும் வேகம். விடியலில் கலவையான பறவைகளின் மெல்லொலியோடு நான்கு சப்பாத்துக் கால்களின் ஒலியும் கலந்து கேட்டுக் கொண்டிருந்தது.

அவர்கள் ஓடும் பூங்கா, கோடையின் வரவில் இலைகுலைகள் நிறைந்து சோலையாக இருந்தது. அதனுள் நுழைகையில் அவளையும் மீறியே கடைக்கண்ணால் அவனைப் பார்த்துவிட்டாள். வீட்டில் இருக்கையில் தனிமையில் சுருண்டு துவண்டு அதையிதை எண்ணித் துடிப்பவள் இவளா என்றளவில் மனத்தில் ஒருவிதமான இதம் பரவியது. 

அவள் வாழ்விலும் ஒரு துணையா?  சாம்பலாகிப் போன நேசத்தின் வாசத்தோடு, உயிர் மூச்சு நின்றுவிடும் என்றிருக்க, இக்கணம், சின்னதாக ஒரு மலர், மொட்டுவிட்டுத்  தலைகாட்டியதை உணர்ந்தவள் இதயம் அதிர்ந்து போயிற்று.

மறுநொடியே ஓட்டம் நின்றிருந்தது. டேமியனை நேருக்கு நேராகப் பார்க்கவே முடியவில்லை. இடுப்பில் கைகளை ஊன்றிக்கொண்டு, பெரிய மூச்சுகளை வெளியேற்றியபடி சுற்றிலும் அண்ணாந்து பார்த்துச் சமாளிக்கப் பார்த்தாள்.

சற்றுமுன், வீட்டிலிருந்து வெளியில் வந்தவளை எதிர்கொள்கையில், அவள் விழிகளும் இமைகளும் வீங்கிக் கிடந்ததைக் கவனித்துவிட்டு அமைதியாக வந்தவனுக்கு, இப்போது அவள் தடுமாற்றம் தெளிவாகவே தெரிந்தது.

மனத்துள் சட்டென்று புகுந்துகொண்ட மகிழ்வை, ஆழ்ந்து இழுத்து அனுபவித்தவன் பார்வை அவளில் தான்.

சுற்றி வந்த அவள் பார்வை, அவனை உரசிவிட்டுச் சரேலென்று நகரப் பார்த்தது. அவனோ, அவளையே முறுவலோடு பார்த்து நிற்கிறானே!

“என்ன?” வெடுக்கென்று கேட்டிருந்தாள், கல்யாணி. அதில் எக்கச்சக்க வெருட்டல் இருந்தது. அவள் விழிகள் சிந்திய முறைப்பில் நெருக்கம் உணர்ந்தான், அவன்.

தெரிந்துதான் இப்படிக் கேட்கிறாயா பெண்ணே

 அந்த ‘என்ன’ என்ற ஒற்றைச் சொல் 

உன்னுள் நிகழும் மாற்றங்களை

 சொல்லிவிட்டது தெரியுமா உனக்கு

 தவிப்போடு விலகி சுற்றத்தில்

 அலைபாயும் உன் பார்வை 

என்னால் நீ சலனப்படுகிறாய் என்கிறது. 

அதுவே இப்போது போதும் பிள்ளாய்

 கவியாகிப் போனவன், மனத்துள்தான் சொல்லிக்கொண்டான்.

வெளிப்பார்வையிலோ , “ஒண்ணும் இல்லையே!” கையிரண்டையும் விரித்தபடி முறுவலித்தான். அவன் நீள விழிகளும் மனத்தை வெளிக்காட்டிவிடாதிருக்க படாதபாடு பட்டபடி, சுருங்கி, முறுவலோடு கைகோர்த்திருந்தன.   அதுபாட்டில் தோள்கள் வேறு ஏறியிறங்கியிருக்க, கல்யாணியின் பார்வை பட்டென்று அவனைவிட்டு அகன்றிருந்தது. 

அவன் முறுவல், பார்வை, தோரணை என்று எல்லாம் சேர்ந்து அவளைத் தம்முள் இழுக்கும் உணர்வில் திணறிப் போனாள், அவள். எட்ட நின்றுகொண்டே அவளைக் கிட்ட கிட்ட அவனோடு நெருக்கமாக  இழுத்துக்கொண்டு நின்றான், அவன்.

அவளையே பார்த்து நின்றவன், உதட்டில் உரசி நின்ற முறுவலை அடக்கிக்கொண்டே இரண்டு எட்டு எடுத்து வைத்து அருகில் வந்து நின்றான்.

 “இப்ப என்னத்துக்கு இவ்வளவு வேகமா ஓடுறீங்க கல்யாணி? அதாலதான் நானும் வேகமா ஓடினனான்.” என்றவனைப் பாராது, அப்போதுதான் முதன் முதலில் பார்க்கும் வகையில் மரம் செடிகளைப் பார்த்தாள், அவள்.

இதைவிடவும் நெருங்கி நின்று வேலை பார்த்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் எதுவுமே தோன்றியதில்லை. உணர்ந்ததில்லை. இப்போதோ, அவனில் இருந்து வந்த வாசனைத் திரவிய மென் நறுமணம் இவள் நாசியை நிறைத்து தவிப்பில் தள்ளி விட்டிட்டு. 

 இப்படி ஒருவனிடம் தான் தளர்ந்து போய் நிற்பதும் அதை மறைக்கப் படாதபாடுபடவேண்டியிருக்கும் என்பதும் கனவில் கூட நினைத்திராதவளுக்கு, விழிகள் கூட கலங்கிவிட்டிந்தன. சூர்யா ஒருவனால் மட்டுமே சலனப்படுத்த முடியும் என்ற இறுமாப்பில் இருந்த அவள் உணர்வுகள், மெல்ல மெல்ல, டேமியன் என்பவனின் அருகண்மையில் பெட்டிப் பாம்பாக அடங்கிப்போயின. 

“நானே வந்து கதவத் தட்ட இருந்தன், நீங்களே வந்திட்டிங்க.” சாதாரணமாகவே தொடங்கினான்.

“இல்லாட்டி… என்ன விட்டுட்டுத் தனியப் போக இருந்தனீங்களோ?” அடக்கப்பட்ட நகைப்போடு கேட்டவன்,  பிடிபட்ட உணர்வோடு அவளைத் தவிக்க வைத்தான். அவனைப் பார்க்கவும் இல்லை, பதில் சொல்லவும் இல்லை மீண்டும் ஓடத் தொடங்கியிருந்தாள், கல்யாணி.

“சோ… விட்டுட்டு ஓடுறதிலயே குறியா இருக்கிறீங்க! ம்ம்ம் … இந்த டேமியனிட கண் எப்பவும் கல்யாணியில இருக்கும். சேர்ந்து ஓட, கலைச்சுக்கொண்டு வந்து எண்டாலும் பிடிச்சிருவான். மிஸ் பண்ணிர மாட்டான் கல்யாணி!” என்று அவன் சொன்னது, நெஞ்சைப் பிடித்திழுத்தாலும் காதே கேளாதவள் போல் வேகமெடுத்தாள். 

“ம்ம்ம்… இதுகள் மட்டும் காதில விழாது!” சேர்ந்து ஓடியவன் தெளிவாகவே முணுமுணுத்தான்.

அதன்பிறகு, அவன் ஒன்றும் அமைதியாக வரவில்லை. புது உணவகம் பற்றிச் சொன்னான். அந்தப் பகுதிக்கு ஒரு தடவை எல்லோரும் போகலாம் என்றும்தான். இவள் ம்ம் கொட்டியதோடு நிறுத்திக்கொண்டாள். ஒவ்வொருமுறையும் அவள் முகம் பார்ப்பதும் கதைப்பதுமாக வீடு வந்த டேமியனுக்கு, அன்றைய பொழுது அவ்வளவு ரம்மியமாக ஆரம்பித்திருந்தது. 

“ வாறன்…” சத்தமே வராது சொல்லிவிட்டு, தங்கள் வீட்டுப் பகுதியால் திரும்பியவள், “கல்யாணி” என்ற அழைப்பில் நின்றாள். என்னவென்று அவள் திரும்பவும், “ஏழு ஏழரை போலப்  போவம் என்ன ? ரெடியாகிற்று வீட்ட வாங்கவன்.” என்று, முறுவலோடு சொல்லிவிட்டுச் சென்றான்.

error: Alert: Content selection is disabled!!