நட்சத்திரா 17 – 2

 

ப்ச்! அதை ஒதுக்க முயன்றபடி மகளை நினைத்தார். கல்யாணம் நல்லபடி நடந்து இருவரும்  நீண்ட நாட்கள் மகிழ்வோடு  வாழ வேண்டும் என்றெண்ணியவர் முகத்தில் அவ்வளவு கனிவு.

மறுபுறமாக, கிறிஸ்டினாவுமே,மகன் மனத்தைப் போலவே கல்யாணி மனத்தையும் விளங்கி விட்டிருந்தார். அவர்களாகச் சொல்வார்கள் என்று எத்தனைக்குக் காத்திருப்பது என்ற எண்ணத்தில் பொறுமை வேறு தேய்ந்து போய்க்கொண்டிருந்தது. 

இது எல்லாம் டேமியன் கவனத்தில் பதியாதில்லை. திறப்பு விழா முடியவிட்டு, கல்யாணியோடு கதைத்துவிட்டு இருபகுதிப் பெரியவர்களிடமும் தெரிவிக்கலாம் என்றிருந்தான். காத்திராது திருமணம் செய்துவிட வேண்டும் என்றது அவன் உள்ளம்.

கல்யாணியோ,  அவனோடு தன் கடந்த காலம் பற்றிக்  கதைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். டேமியன் நிச்சயம் புரிந்து கொள்வான் என்ற பெரும் நம்பிக்கையோடு! ‘இல்லை எண்டால்?’ என்ற கேள்வி, இந்நாட்களில் ஏனோ மனத்தில் வரவேயில்லை. அவள் கடந்த கால நேசமும்தான். 

மனம் முழுவதும் தனக்கே தனக்கென்று மொத்தகமாக ஆக்கிரமித்திருந்தவன் நினைவு எப்படி ஒதுங்கிப் போனது! இதுவரை, கருமேகங்களுள் ஒளிந்து அடங்கிவிட்டாலும் வெளிவரத் துடிக்கும் சூர்யாவின் நினைவுகள், இப்போதோ, மேற்கின் மீழாச் சரிவில் தலைகுப்புற விழுந்து அப்படியே தொலைந்தே போனதாக்கும். 

அவள் வாழ்வில் வந்த சூரியன், வாழ்வே அவன்தான் என்று இருந்தவளாச்சே! இப்போதும் சில்லு சில்லாகச் சிதறிய நினைவுகள் இல்லையென்று சொல்லமாட்டாள். அவற்றில் முதன்மையாகப் பெரிதாகத் தெரிவது என்னவோ, தான்  கடைசியாகக் கண்ட அவன் மகிழ்வு, அவன் மனைவி பிள்ளைகளுடனான கனிவும் காதலும் மட்டுமே! 

சூர்யாவை, அவனுடனான தன் நேசத்தை,  இத்தனை எளிதாகக் கடக்க முடியும் என்று அவள் நினைத்தே இருக்கவில்லை. எல்லாம் எஞ்சிய வாழ்வு முழுமைக்கும் ‘நான் உன் துணை’ என்று உணர்த்தியவன் கைங்கரியம்!

அன்று உணவகத் திறப்புவிழா! இந்நினைவுகளோடு தன் துணையென்று குறித்தவனைத் தேடின, அவள் விழிகள்!

மிகவும் சாதாரணமாகத்தான் வெளிக்கிட்டிருந்தான். அணிந்திருந்த கறுப்பு ‘சினோ டைட் ஜீன்ஸ்’ இன்னுமே அவனை உயரமாகக் காட்டியது. அதே நிறத்தில் கொட்டன் சேர்ட். முழங்கை வரை மடித்துவிட்டிருந்தான். கறுப்பிலேயே ஸ்போட்ஸ் சப்பாத்து. ஜெல்லில் அடங்கி நின்ற கருஞ்சுருள் சிகை. நாற்பதை எட்டப்போகிறவன் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். முப்பதின் ஆரம்பம் என்பார்கள். உடற்பயிற்சியில் உரமேறிய தேகமும் இயல்பிலேயே உள்ள சுறுசுறுப்பும் அவனோடு ஒட்டி நிற்கும் நிமிர்வும் இறுக்கமும் கூட , அவனை, அத்தனை பேருள்ளும் தனியாகக் காட்டியது.

ஒருநாளுமின்றி மிகவும்  துணிவோடு அவனையே விழிகளால் தொடர்ந்தவண்ணம் இருந்தாள், கல்யாணி. 

திறப்பு நாளுக்கென்று அவன் நண்பர்கள் என்று ஒரு குழாமே வந்திருந்தார்கள். அதில் வந்திருந்த சில பெண்களின் பார்வை வேறு, இவளுக்கு மனத்துள் அதிர்வை உண்டு பண்ணியது. போதாக்குறைக்கு பியங்காவின் அம்மா அப்பா உட்பட, உறவு என்று சில இத்தாலி நாட்டினர் வந்திருந்தார்கள். அதிலொருத்தி, அவனோடு அதிக உரிமை எடுத்துக் கதைப்பதும் சிரிப்பதுமாக வேறு திரிந்தாள். கிறிஸ்டினாவையும் கட்டிப்பிடித்துக் கொஞ்சிக் கதைத்தாள். பிள்ளைகள் மூவருமே அவளோடு ஒட்டி நின்று உரையாடிக் கலகலக்க,  இவளுக்கு உடலில் சக்தியில்லை என்ற நிலை. 

அவள்தான் எதற்குமே கொடுத்து வைக்காதவளே! டேமியன் அவளுக்கில்லை என்று ஆகிவிடுவானோ என்ற எண்ணம் எப்படியென்றில்லாது குதித்துவந்து விழுந்திட்டு. அக்கணம்தான்,  தனக்கு, அவனை எந்தளவுக்குப் பிடித்திருக்கு என்பதே அவளுக்குப் புரிந்தது. 

அதுவரை, சுற்றிலும் இருந்த அவசரத்தோடும் ஆரவாரத்தோடும் ஓடிக்கொண்டிருந்தவளால் இயங்க முடியவில்லை.  விழிகளோ,அங்கிங்கு அசையோம் என்று அவனையே தொடர நின்றிருந்தாள், கல்யாணி. 

என்ன தோன்றியதோ, சட்டென்று திரும்பி இவளைப்  பார்த்தான், டேமியன்.

ஒற்றைப் புருவம் ‘என்ன’என்பதாக ஏறியிறங்கியது. இவளால் பதிலெதுவுமே சொல்லவியலவில்லை. தலையைக் கூட அப்படி இப்படி அசைக்கத் தோன்றாது நின்றவளைப்  பார்த்துக்கொண்டு வேகநடையில் நெருங்கினான், டேமியன்.

“என்ன ஃபிரெண்ட், சிலையா நிண்டு கொண்டு இருக்கிறீங்க? இதா எனக்கு உதவுற வடிவு?” சீண்டினான். அவளால் தான் ரசிக்க முடியவில்லை.

ஆழமாகத் தன்னுள் இறங்கிய அவள் பார்வையில் இப்போது தடுமாறிப் போனது, டேமியன் தான். மனத்துள் குழம்புகிறாள் என்று நன்றாகவே விளங்கியும் விட்டது.

கொஞ்சமும் யோசியாது இரு கரங்களாலும் அவள் தோள்களைப் பற்றி அப்படியே உட்புறமாகத் திருப்பி விட்டான். 

“உள்ள வாங்கோ ஃப்ரெண்ட்!” என்றபடி கையைப் பற்றிக்கொண்டு சமையல் பகுதிக்குள் நுழைந்தவன்,  “ஏன் ஒரு மாதிரி நிக்கிறீங்க? களைப்பா இருக்கா? ஏதாவது குடிக்கப் போறீங்களா?” என்றவன், “இண்டைக்கு மட்டும் உங்கள நீங்களே பாத்துக்கொள்ளுங்க கல்யாணி, ப்ளீஸ்! அதோட உங்கட ரெஸ்ட்டோரண்ட் இது. அதையும் நீங்கதான் பாத்துக்கொள்ளோணும்.” என்று சொல்லியிருந்தான் . 

அவனுக்கு அப்படிச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. பியங்காவின் சொந்தங்களோடு அவன் நிற்கையில் இவளில் வந்த தடுமாற்றத்தை அவன் உணர்ந்துவிட்டிருந்தான்.

விழிகளில் நீர்ப்படலத்தோடு அவனையே பார்த்து நின்றவளுக்கு, ஒருதடவை அவனைக் கட்டிப் பிடிக்க வேண்டும் போலிருந்தது. உள்ளத்தின் தவிப்பெல்லாம் சேர்ந்து திரண்டுவந்து தொண்டைக்குழிக்குள் நிற்க, ‘உங்கட ரெஸ்டாரண்ட்’ என்றானே,அது, அவளை மகிழ்வில் குளிப்பாட்டிவிட்டிருந்தது. 

“டோய் என்னதிது?ஆராவது ஏதும் சொன்னவையா என்ன?” என்றவன், அவள் மனம் விரும்பியதைச் சற்றேனும் நிறைவேற்றியிருந்தான். தோளோடு அணைத்தவன், “ நீங்க உசாரா நிக்கிறதுதான் இந்த டேமியனுக்கு பூஸ்ட் ம்ம்”  கண்சிமிட்டினான். அவளையுமறியாது இதழ்களில் முறுவல் வந்துவிட்டிருந்தது.

அங்கிருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு, ஆப்பிள் ஜூஸ் கிளாசில் நிரப்பி கையில் கொடுத்தவன், “ டேமியன்”  என்றுகொண்டு தலைமை செஃப் வரவில்லையோ, முழந்தாளிட்டு நின்று, ‘திருமணம் செய்து கொள்கிறாயா பெண்ணே’ என்று கேட்டுவிடும் நிலைக்கு வந்திருந்தான்.  அவளுக்கும் அது புரிந்ததில் இதயம் தடதடவென்று அடிக்க அசையாது அமர்ந்திருந்தாள். முகத்தில் இருந்த குழப்பம் மட்டும் காணாமல் போய்விட்டிருந்தது. .

“ஜூச குடிச்சிட்டு வாறீங்க , மிச்சம் எல்லாம் ரெஸ்ட்டோரண்ட்ட   பூட்டிப்போட்டுக் கதைப்பம் சரியா?” அவள் தலையில் ஆதரவாகத் தட்டிவிட்டு நகர்ந்தவன், வேலை செய்வதில் மும்மரமாக இருந்தாலும் எல்லோர் பார்வையும் தம்மில் என்று உணர்ந்து முறுவலோடுதான் நகர்ந்தான்.

அந்தளவுக்கு, அங்கு நின்றவர்கள்,அழகிய காதல் படம் பார்த்த கணக்கில், இரகசிய மொழியில் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.

error: Alert: Content selection is disabled!!