Skip to content
அழகிய மிலான் நகரின் மேற்கிலுள்ள பாஜியோவில் (Baggio)…
இளவேனிற்காலம் ஆரம்பித்திருந்தது. புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுதில், காதலனின் ரகசியத் தீண்டலில் பட்டும் படாது வெளிப்பட்டுவிடும் வெட்கச் சிவப்புப் போல் கீழ் வானமெங்கும் மென்சிவப்புப் படர்ந்திருந்தது. சுற்றிலும் கொட்டிக்கிடக்கும் கொள்ளை அழகில் ஈர்க்கப்படாது இயற்கையோடு இயற்கையாகக் கலந்து நகர்ந்து கொண்டிருந்தான், டேமியன்.
பறவைகள் இன்னிசை, இதமாக வருடும் மென் காற்று, பசிய சுற்றம் என்று, எதுவுமே அவன் கருத்தில் தாக்கம் உண்டுபண்ணவில்லை. கடமை வீரனாகத் தேகம் கால்களோடு ஒத்துழைக்க நிதானமாக ஓடிக்கொண்டிருந்தான், அவன். உடல் அசைவுக்கு நேர் மாறாக சிந்தையில் எந்தவிதமான அலட்டலும் இல்லை. இறுக்கமாக இருந்ததோ!
எது எப்படியோ, மனத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வித்தை நன்கு தெரிந்தவன், அவன். வாழ்க்கைக் கற்பிதங்கள் அப்படி! நாற்பது வயதுதான். உழைப்பும் பயிற்சியும் உடலைத் திண்ணென்று வைத்திருந்தது. தோற்றம் வாலிபனாகக் காட்டியது. மனத்திலோ, தனக்கே தனக்காக வாழ்ந்து முடித்துவிட்ட உணர்வு. இப்போது, அவன் சிறு செய்கையும் பிள்ளைகள் மூவருக்கும் தாய்க்கும் மட்டுமே!
ஒன்றரை மணிநேர ஓட்டம், இறுகிய அவன் தேகத்தில் வியர்வையை நன்றாகவே வழிய விட்டிருந்தது. வீடிருக்கும் பாதையால் திரும்பி மிக வேகமாக ஓடினான்.
ஒவ்வொரு நாளின் தொடக்கமும் ஓட்டத்தோடு தொடங்குவதென்பது, அவனது பதின்ம வயதுகளில் தகப்பனோடு தொடங்கிய பழக்கம்.
அவருக்குப்பின், நண்பியாக ஆறு ஆண்டுகளும் பின்னர் மனைவியாக ஒன்பது ஆண்டுகளும் அவனோடு சேர்ந்து ஓடியிருக்கிறாள்,பியங்கா. அவளுக்கும் இவன் வயதுதான். சற்றுமே சளைக்க மாட்டாள். சரிக்குச் சமனாகப் போட்டிபோட்டு ஓடுவாள். ஓட்டம் மட்டுமா? எல்லாவற்றிலும் அவனுக்கு நிகரானவள். இந்தப் பூவுலகில் அவனை மிகவுமே கொடுத்து வைத்தவனாக ஒவ்வொரு கணமும் உணர வைத்தவள், அவன் அன்பு மனைவி. பிரிவில், அதுவும் நிரந்தரப் பிரிவில் மட்டும் அவனைவிட்டு முந்திச் சென்றுவிட்டாள். அதன் பிறகான இந்த ஐந்தாண்டுகள் தனிக்கட்டையாகத்தான் எல்லாமே.
வீட்டின் முன்னால் வந்து நிதானித்து நின்றான், டேமியன். முழங்காலில் கரமிரண்டையும் முட்டுக் கொடுத்து ஆழ்ந்து மூச்செடுத்து விட்டவன் நிமிர்ந்தான். கண் முன்னால், பார்ப்போரை மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் நிமிர்ந்து நின்றது, அவன் மாளிகை!
அவனும் பியங்காவுமாகக் காதலித்துக்கொண்டு இருக்கையில் இந்த வீட்டை வாங்கியிருந்தார்கள். ஒரு ஒரு சிறு சிறு இடமும் தம் இருவருக்கும் பிடித்த வகையில் பார்த்து பார்த்து வடிவமைத்தார்கள்.
கீழேயும் மேலேயுமாக ஆறு படுக்கையறைகள் கொண்ட பிரமாண்டமான வீடுதான். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வரையல்லோ கற்பனை பண்ணியிருந்தார்கள்.
கண்கள், கலங்குகிறோமே என்று கெஞ்சலாகக் கேட்டுப்பார்த்தன. உணர்வுகளை ஆளத் தெரிந்தவன் என்ற இறுமாப்பிருந்தாலும் இப்படித்தான், ஒரு சில சமயங்களில் தோற்றுப் போய்விடுவான்.
விழிகளை அழுந்த மூடினான். கண்ணீருக்கே அதட்டல் போட்டான். அருகில், செல்லமாக இடித்துச் சீண்டிக்கொண்டு அவன் பியங்கா நிற்கும் உணர்வு!
அவனுள் அதுவரையிருந்த அமைதி தொலைந்திட்டு. ஆர்ப்பரிக்கும் ஆழிப் பேரலையாகப் பேரிரைச்சலோடு கொந்தளித்த உணர்வுகளின் பிடியில் அகப்பட்டுக்கொண்டான், டேமியன்.
எல்லா உணர்வுகளையும் அப்படியே முழுங்கி ஏப்பம் விட்டபடி, இயல்பாகத் திரிவது என்பது, மிக மிகக் கொடூரமாக மரித்துவிட்டு உயிர்ப்பதற்குச் சமம்! நீண்டதொரு பெருமூச்சு, கரமுரடான பாதையைக் கடந்து சீறலாக வெளிவந்தது.
“பச்!” நாடியிலிருந்து தொடங்கி முகத்தோடு சேர்த்து மிக மிக அழுத்தமாக நகர்ந்த கரங்கள் இரண்டும் பிடரிவரை சென்றுவிட்டுத் தொய்ந்தன.
ஆன்மாக்களுக்கு அழிவில்லையே! “Mi manchi tesoro!”(மிஸ் யூ ஹனி)” முணுமுணுத்தபடி, கேட்டைத் திறந்து விறுவிறுவென்று நடந்தான்.
வீட்டின் முன்னால் சற்றே பெரிய தோட்டம் தான். எங்கு திரும்பினாலும் அவன் மனைவிதான் தெரிவாள். சுற்றிலும் தலையசைக்கும் அத்தனை மரக்கன்றுகளும் பூக்கன்றுகளும் குரோட்டன்களும் அவள் தொடுகை பட்டதே!
பரிதாபத்தை அறவே வெறுப்பவன், வீட்டினுள் உள்ளிடுகையில் வலு இயல்பாகியிருந்தான்.
நேரத்தைப் பார்த்தபடி மாடியேற முனைந்தவன், “கனி கூட்டிக்கொண்டு போய் விடுறன் எண்டவா டேமியன்.” என்ற, அன்னையின் குரலில் நின்று திரும்பிப் பார்த்துச் சரியென்று தலையசைப்பைக் கொடுத்துவிட்டே நகர்ந்து மறைந்தான்.
மகன் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்து நின்றார், கிறிஸ்டினா. அவர் விழிகளில் கசிவு.
அவர் ஆசை ஆசையாகப் பெற்றுச் சீராட்டி வளர்த்த மகன். பிள்ளைகள் மூவரிலும் இவனை அவருக்கு மிகவுமே பிடிக்கும். கடைக்குட்டி என்று இல்லை, தன் அன்புக் கணவரின் பிரதி அவன். அது ஒன்றே பிடித்துப் போகக் காரணம் ஆயிற்று.
சிறு வயதிலிருந்தே ஓய்ந்திரான். வயதிற்கு மீறிய சுறுசுறுப்பு. மூத்த மகன் உல்லாசி. இந்த வயதில் அனுபவியாது எப்போது என்று சொல்லி, கிறிஸ்டினாவும் கணவர் ஜோசப்பும் தம்மைத் தேற்றிக்கொள்ளும் வகையில்தான் அவன் நடவடிக்கைகள் இருக்கும். அடுத்த மகள், தான் தன் பாடு என்று, படிப்பு விளையாட்டு என்று இருப்பவள். இலங்கையில் இருந்து எண்பதில் இத்தாலி வந்த கையோடு பிறந்தவள். அவளை விடவும் ஏழு வயது பெரியவன் உல்லாசியாக இருந்தாலும் இவளால் பெற்றோருக்கு எக்கவலையும் இல்லை. இன்றுவரை. கணவன், மகள் என்று கனடாவில் வசிக்கிறாள்.
மூத்த மகன், தொடர்ந்து கொடுத்த காயங்கள் எல்லாவற்றுக்கும் மருந்தாக இருந்தான், கடைக்குட்டி டேமியன். இடைநிலைப் பாடசாலையில் படிக்கும் போதே தந்தைக்கு உணவகத்தில் வலது கை அவன்தான். அதுவே, அவர் திடுமென்று மாரடைப்பில் இறக்க, இருபது வயதில் இருந்தவனால் உணவகத்தையும் மொத்தக் குடும்பத்தையும் தாங்கிக்கொள்ள முடிந்தது.
அன்றிலிருந்து ஏறுமுகம் தான். ஜோசப் மட்டும் இருந்திருக்க அவ்வளவு மகிழ்ந்திருப்பார். அவனுக்கு என்று வந்தவளும் அவனுக்குப் போட்டியாக, அவனோடு தோள் கொடுத்து நின்றாள். கடுமையாக உழைத்தாள்.
பியங்கா! டேமியன் வாழ்வில் வசந்தம் மட்டுமே இருக்க வேண்டும் என்று, கர்த்தரால் அனுப்பப்பட்டவள் என்றுதான் கிறிஸ்டினா எண்ணிக்கொள்வார்.
நண்பி என்றுதான் டேமியன் அறிமுகம் செய்து வைத்திருந்தான். சில வருடங்களில் காதலி என்றபோதுதான், அவள், இத்தாலி நாட்டவள் என்பது கிறிஸ்டினாவின் கருத்தில் பதிந்தது. உடனே சமாதானம் ஆகவில்லை. மகனும் சம்மதம் கேட்கவில்லையே! ஒன்றுமே செய்யவியலா நிலையில் சகித்துப் போகத்தான் எண்ணினார்.
ஆனால், அவள், அவரை வாரிச் சுருட்டிக்கொண்டாள். சுள்ளென்ற கண்டிப்பில் நான் உன் மகனின் காதலி, மனைவி என்றாள் என்றால், அன்பு காட்டுவதில் அரவணைப்பதில் அவருக்கு என்று சிறுபொழுதை ஒதுக்குவதில் என்று, பெற்றெடுத்த மகளாகவும் உற்ற தோழியாகவும் தெரிந்தாள். மருமகள், மகனின் காதலி என்றதையே மறக்கச் செய்திருந்தாள்.
error: Alert: Content selection is disabled!!