நட்சத்திரா 2 -2

 

அவர்களின் அன்புக் கதகதப்பில் வாழ்ந்து முடித்துவிடலாம் என்று இவர் இருக்க, அவளோ, பதினைந்து வருடங்களில் மொத்தமாக வாழ்ந்து முடித்துவிட்டேன் என்று சென்றுவிட்டிருந்தாள்.

வழிந்த கண்ணீரை அப்படியே கன்னமிரண்டாலும் தேய்த்துத் துடைத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார், கிறிஸ்டினா.

பிள்ளைகள் மூவரும் எழுந்துவிட்டார்கள் என்று, மேல் வீட்டில் வந்த சிரிப்பொலியில் உணர முடிந்தது. இடையிடை டேமியன் குரலும் சேர்ந்து வந்தது. 

கனடாவிலிருந்து அவரின்  தமக்கை மகள் அழைத்தாள். “எத்தினை மணி இப்ப? இன்னுமா தூங்கேல்ல பிள்ள?” என்றபடிதான் அழைப்பை ஏற்றார், கிறிஸ்டினா. 

“ஒன் சைட் வேர்க் பெரியம்மா. இந்தியாவில இப்ப வேர்க்கிங் ஹவர்.” என்றவளோ, “டேமியனோட கதைச்சீங்களா? அந்தப்  பொம்பள வீட்டில கேட்டவே, என்ன சொல்லட்டும்?” என்றாள்.

அவர் எங்கு கதைத்தார். இன்னொரு கலியாணம் என்ற வார்த்தையே அவர் வாயால் வரப் பயப்படுவது இனஞ்சனத்துக்குத் தெரியுமா என்ன? 

அவர் மகன் டேமியனோ, இன்னமும் அருவமாக  இங்கு பிரியங்கா சுற்றுவது போலவே தான் நடந்து கொள்கிறான். வெளியில் சொன்னால் மனவியாதியோ என்று வேறு கேட்டுவிடுவார்கள். சொந்தத் தமையனே அப்படிச் சொல்லவில்லையா?  நன்றி கெட்ட நாய் அவன். 

எங்கோ தொடங்கி மூத்த மகனை ஏசிக்கொண்டே, “இண்டு கதைச்சிட்டுச்  சொல்லுறன் மா.” என்றுவிட்டு  வைத்தவர்,  பிள்ளைகளுக்கான காலையுணவுக்கு  ஆயத்தம் செய்யத் தொடங்கினார்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் வெளியே செல்ல ஆயத்தமாகி வந்தான், டேமியன். கூடவே கலகலத்தபடி பிள்ளைகள் மூவரும் வந்தார்கள். 

பெரியவள் மேரி ஜூடித் பபிதா, பத்து வயது. துள்ளலும் துடியாட்டமும் இருந்தாலும் பியங்கா கொடுத்த பயிற்சி எதிலும் ஒரு நிதானம், உண்மையில் வயதுக்கும் மீறியே இருக்கும். 

அடுத்தவன் ஜெரிக்சன் . அப்படியே உரித்தெடுத்து டேமியனின் தமையன் தோற்றம். குணத்தில் ஜோசப். சுற்றி வளைப்பான் ஏன், வருங்கால டேமியன் என்று எப்போதும் சொல்வாள், பியங்கா. 

அடுத்தவள் குட்டி தேவதை. மேரி சிசிலியா. கிறிஸ்டினாவின் சாயல் என்று சொல்லலாம் . அந்த வீட்டின் மொத்த உயிர்ப்பும் அந்த எழுவயதுச் சிறுமி கையில்தான் இப்போது. இப்போது கூட, கரையாத கல்லு டேமியனின் முதுகில் தொங்கிக்கொண்டுதான் வந்திருந்தாள்.

அவளை உணவு மேசை அருகில் இறக்கிவிட்டுவிட்டு, “அம்மா உங்களுக்கும் கஃபே போடவா?”என்றபடி சமையலறைக்குள் நுழைந்தான், டேமியன்.

“நான் கொஞ்ச முதல்தான்  குடிச்சனான் டேமி.”என்ற பெரியவர், பேரப்பிள்ளைகளின் காலையுணவைக் கவனித்தார்.

மூத்தவள் சீரியலும் பாலும் தான். எடுத்து மேசையில் வைத்தால் தேவையான அளவில் கலந்து உண்பாள். 

பேரனுக்கு ஒவ்வொரு நாளும் ஒன்று வேண்டும். அநேகம் கடைகளில் வாங்குவதுதான். நேற்று அவனுக்குப் பிடித்த crostata (jam tart) செய்திருந்தார்.

அதில் ஒரு துண்டை எடுத்து அவன் முன்னால் வைக்க, “யம் யம்” கரங்களைத் தேய்த்துக்கொண்டே உண்ண ஆயத்தம் ஆகினான். அவன் தலையில் வருடிவிட்டு, மிதமான சூட்டில் இருந்த பாலை அருகில் வைத்தார், கிறிஸ்டினா.

சின்னவள் சிசிலியா, சாப்பிடக் கள்ளி. அவளுக்கு என்ன உணவு பிடிக்கும் என்று ஒருவருக்குமே  தெரியாது. தெரிந்து கொள்ள முயன்று தோல்வி மட்டுமே கிட்டியிருக்கிறது. நாலைந்து வகைகள் பரப்பி விட்டால் எல்லாவற்றிலும் ஒரு ஒரு கடி. இதென்ன பழக்கம் என்று டேமியன் ஏசுவான். பியங்கா, அவளுக்கு இரண்டு வயதாக முன்னரே இறந்துவிட்டாள். இல்லையோ, அவளுக்கு இந்தப் பழக்கம் வந்தே இராது என்று புலம்புவார் கிறிஸ்டினா. உண்மையும் தான்.

இப்போ, சிறுமியின் வயிறு நிரம்பினால் போதும் என்ற மனநிலைதான், அவருக்கு. 

சிறு சொக்கோ க்ரோசன்ட் (Croissant), மெல்லிய துண்டு crostata இன்னும் சில பிஸ்கட்டுகள் என்று வைத்தவர், சற்றே பெரிய கப்பில் முட்ட முட்ட பால் கொண்டுவந்து வைத்தார்.

மூத்தவர்களின் பால் கோப்பைகளையும் தன்னதையும்  பார்த்துவிட்டு, எப்போதும் போல் சண்டைக்கு கிளம்பினாள், சிசிலியா. கிறிஸ்டினா அசைந்து கொடுக்கவில்லை. முகத்தை நீட்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார். அது வேலை செய்தது. சிறுமியின் மனத்தில் அவர்பால் வெளிக்காட்டாத பயம் இருக்கிறதே! முகம் சிணுங்கிக்கொண்டு இருந்தாலும் பால் மெல்ல மெல்ல உள்ளே சென்றது.

நிலவரத்தைக் கவனித்துக்கொண்டே க்ரோசன்ட் ஒன்றை உள்ளே தள்ளி கஃபே குடித்த டேமியன், “நேரமாகிற்று, வேலையாக்கள் வந்திருப்பினம், வரப்போறன் அம்மா.” என்றவன், பிள்ளைகளிடம் திரும்பினான்.

“பின்னேரம் பிக்கப் பண்ண வருவன். மூண்டு பேரும் ஒண்டாச் சேர்ந்து  நிக்கோணும்.” என்றுவிட்டு  விடைபெற்று நகர்ந்தான். 

அவன் முன் வாயிலைத் திறக்கக்  கை வைக்கவும்  வாயிலில் மெல்லிய தட்டுகள் விழவும் சரியாக இருந்தது.

கதவைத் திறந்தான், கல்யாணிதான். 

அவர்கள் இங்கு வந்த மூன்று வருடங்களில் பத்து வார்த்தைகள் கதைத்திரான்.இன்று, அவனையும் அறியாதுதான்  பார்த்தான். முதல் நாள், தாயும் தீபா அன்ரியும் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு இவளைப்பற்றியும் இவள் அன்னை பற்றியும் கதைத்தவற்றை எல்லாம் முழுமையாகக் கேட்டிருந்தானே! 

அவள் கதை தெரிந்ததாலோ என்னவோ, பார்வை அவள் முகத்தில் நிலைத்து நின்றது.

கல்யாணியோ, யோசித்து மெலிதாக முறுவலித்தாள். அவன் முகத்தில் முறுவல் இல்லை. சிறு தலையாட்டலோடு உள்ளே செல்ல ஒதுங்கி வழிவிட்டவன், “பிள்ளைகளக் கூட்டிக்கொண்டு போய் விடுறதுக்கு தேங்க்யூ!” என்றிருந்தான்.

அவன் கதைப்பான் என்று நினைக்கவில்லை என்றது, அவள் தடுமாற்றம். கண்டுகொள்ளாது, சிறு தலையாட்டலோடு வெளியேறினான், அவன். 

“கனிஇஇஇஇ!” என்ற கூவலோடு பிள்ளைகள் மூவரும் எழுந்து வருவது தெரிந்தது.

“என்னடாம்மா  முகமெல்லாம் வீங்கிக் கிடக்கு?” என்றபடி வந்த கிறிஸ்டினாவின் பார்வையில் கனிவும் கரிசனையும்.

error: Alert: Content selection is disabled!!