விறுவிறுவென்று வெளியேறிய டேமியன் சென்று நின்ற இடம், அவர்கள் தோட்ட வீடு.
வெளியில் அவ்வளவு புழுக்கம். வெக்கையும் அமுக்கமுமாக மழை கொட்டப்போவதைக் கட்டியம் கூறி நிற்க, அவன் மனத்திலோ, பெரும் சூரைக்காற்றோடு அடைமழை கொட்டிக்கொண்டிருந்தது.
அவன் பியங்காவைக் காதலிக்கிறான் என்றதும் முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பியவர், அவன் மாமா ஜோசப்தான். இலங்கையிலிருந்து, மனைவியோடு மிலானுக்கே வந்துவிட்டிருந்தார்.
அவர் குடும்பத்தின் பாரம்பரியம், மானம் மரியாதை என்று மூச்செடுக்காது அடுக்கியிருந்தார். அதையெல்லாம் நீ கெடுப்பியோ என்று நின்றார். அவரின் ஒரே தமக்கை கிறிஸ்டினா. மிகவும் பாசத்துக்குரியவர்தான். என்றாலும் “நீங்க பெத்த ரெண்டு மகன்களாலும் எங்கட பரம்பரை மானமே போகுது அக்கா!” என்று கத்திவிட்டிருந்தார். கிறிஸ்டினாவை நாள்க்கணக்கில் அழ வைத்துமிருந்தார்.
அதையெல்லாம் இப்போது நினைத்துப்பார்த்த டேமியன், அவர் கழுத்தை நெரித்து முறித்துவிட வேண்டும் எனறளவில் ஆவேசத்தில் ஆடிப்போனான்.
இத்தனைக்கும் ஜோசப்புக்கு, அருமையான மனைவி இருக்கிறார். பல்கலைக்கழகப் பேராசியர் வேறு. இரு மகள்கள். மருத்துவர், வக்கீல் என்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். திருமணம் முடித்து ஆளுக்கு இரு இரு மகள்கள் வேறு இருக்கிறார்கள்.
அந்தக் கயவனின் கைக்குள்ளே மனைவி, மகள்கள் பேரப்பிள்ளைகள் என்று ஏழு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுள் ஒரு பெண் பித்தன், மிக மிக நல்லவன், வல்லவன் வேடத்தில்.
வெறுப்பை விழுங்கியபடி, மெல்லக் கதவில் தட்டியவன், “சுமதிம்மா!” என்று அழைத்தான்.
கிறிஸ்டினாவோடு கதைத்துவிட்டு வேரோடி நின்ற சுமதி எப்படி வீட்டுக்குள் நுழைந்தாரோ அவரறியார். கதவைக் கூட மிகவும் மெதுவாகவேதான் சாத்தியிருந்தார். மறுநொடி, அப்படியே கதவில் அணைந்துகொண்டே தேய்ந்து தொய்ந்து நிலத்தில் அமர்ந்து விட்டார்.
அதுவரை, வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்திருந்த சக்தியனைத்தும் வடிந்து போய்விட்ட உணர்வு. நெஞ்சு உலர்ந்து, நா வறண்டு அரை மயக்க நிலைக்குச் சென்றிருந்தார்.
நிமிடங்கள் கரைந்து மணிகளைத் தாண்டிய போதும் அவரில் அசைவில்லை. அழவும் இல்லை, அதிரவும் இல்லை.
மங்கலான பார்வை மட்டும் வெறித்தபடி, நெடுநேரமாக எதிரேயிருந்த சுவரில் நிலைகுத்தி நின்றது. அங்கே, அவரும் மகளுமாக வருத்தம், வேதனை, வலி மறந்த முறுவலோடு இருந்தார்கள். பார்த்துக்கொண்டேயிருந்தார், சுமதி.
மீண்டும் மீண்டும் கிறிஸ்டினாவின் வார்த்தைகள் ஒன்று ஒன்றும் செவிப்பறையில் மோதி மோதி அவர் இதயத்தை அதிர வைத்தபடி இருந்தது.
மகளுக்கு என்று ஒரு குடும்ப வாழ்வு அமையப்போகிறது, அது, அவளுக்கு மிகவும் பிடித்திருக்கு என்றதில் மகிழ்வில் திளைத்துக் கிடந்த உள்ளம், சுளீர் சுளீரென்று அடிவாங்கிச் சுருண்டு கிடந்தது. அடுத்து என்ன?
இங்கிருந்து போவதா என்று எண்ணுகையில் டேமியன் நினைவில் வந்தான். அன்று காலை அவன் நடந்துகொண்ட விதமும்தான். நானும் உன் மகன் என்றானே! தன் தாய் இந்த விடயமாகக் கதைக்கப்போகிறார் என்று அவனுக்குத் தெரிந்திருக்கு. என்னைப் பற்றியும் எல்லாமே தெரிந்திருக்கு.
வேறு யார் மூலம், தீபா சொல்லியிருக்கிறார். ஒரு காலத்தில், அவர் வாழ்வின் சிதைந்த பக்கங்கள் பற்றி நினைக்கவே தேவையில்லை என்றதும் கெட்ட கனவு அது என்றதும் தீபாவேதான். நாங்களும் அந்தக் கதை ஒருபோதும் எடுக்க மாட்டோம் என்று, இவரிடம் உருப்போட்டுச் சொல்லி சொல்லியே அவரைத் தேற்றி நடமாட விட்டவர் அவர். இன்று என்ன செய்திருக்கிறார்?
சுமதியால் நம்பவே முடியவில்லை. கல்யாணி அதிசயத்திலும் அதிசயமாக மனம் மாறி இருக்கிறாள். மிகவும் மகிழ்ச்சியாகத் திருமணத்திற்குத் தயாராகியிருக்கிறாள். இதைக் கேட்டதும் தீபா அதிகம் மகிழ்வார் என்றல்லவா நினைத்திருந்தார். இன்றிரவு, மகளோடு மனம் விட்டுக் கதைத்துவிட்டு முதலில் அவருக்குத்தான் அழைக்கவும் இருந்தார்.
வேதனை, வலியோடு பெரும் அவமானமாகவும் இருந்தது. அதுவும் அன்று ஒரு ஒரு கயவனும் அவரைச் சக்கையாகக் கசக்கிப் பிழிந்தெறிகையில் ஏற்பட்ட ரண வலி இப்போதும் வந்து அறைந்து தாக்கியது.
வறண்டு விட்டதாக எண்ணிய விழிகள் விடாது கசிந்தன. கசிந்துகொண்டேயிருந்தன. கனத்த இமைகளை மூடிகொண்டவர் அப்படியே மணித்தியாலக்கணக்கில் அமர்ந்திருந்தார்.
முதல் நாள், புது உணவகத் திறப்பு விழாவிற்குச் செல்ல முதல், இங்கு, காலை வேலையை முடித்துவிட்டு அப்படியே புறப்பட்டிருந்தார். அங்கும் சென்று அமைதியாக இருக்கவில்லை. திரும்பி வந்தும் ‘சிலோன் டேஸ்ட்’ போய்விட்டே வந்திருந்ததில் நல்ல களைப்பு. இருந்தும் இன்று அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்துவிட்டார். சிலோன் டேஸ்ட்டிலும் சற்றுமே ஒய்வின்றிய வேலை. அவரையும் அறியாதே சரிந்து உறங்கிவிட்டிருந்தார், சுமதி.
“சுமதிம்மா!” என்ற குரல் எங்கோ கேட்டது. டேமியன் குரல்தான். அவனோடு கதைத்தால் என்ன என்ற எண்ணம் ஒரு தடவை மனத்துள் வந்து போனது.
கிறிஸ்டினா கதைத்தது மகளுக்குத் தெரிந்தால் மறுநிமிடமே இங்கிருந்து வெளிக்கிட்டு விடுவாள். டேமியனை விட்டும்தான். அவள் அந்தளவு ரோசக்காரி! அதைவிட, அம்மா என்றால் எதையும் தூக்கி எறிந்துவிடத் துணிந்தும் விடுவாள். ஒரு தடவை எவ்வளவு அருமையான வாழ்வை, நேசித்தவனைத் தூசாக உதறியவள். இம்முறையும் இழப்பதா? தான் இப்போது என்ன செய்ய வேண்டும். அவரின் உயிர் துடித்தது. அவலமாகப் பரிதாபகரமாக அந்தரித்தார், சுமதி.
கதவில் பட்டு பட்டென்று தட்டு விழுந்தது.
“சுமதிம்மா!”அழைப்பின் தொனி அதிகரித்தது. மீண்டும் மீண்டும் அழைத்தான், டேமியன். அழைப்புமணி வேறு விடாது ஒலித்தது. சற்றே பொறுத்து, அருகில் கிடந்த அவர் கைப்பைக்குள் இருந்த கைப்பேசி சத்தம் போட்டது.
உடலை மெல்ல அசைத்தார், சுமதி. விழிகளைத் திறந்தவருக்குச் சில நிமிடங்கள் கடந்த பின்னரே, தான் வாயிலடியில் உறங்கிப் போனது விளங்கியது.