நட்சத்திரா 22 – 2

உடலை நிமிர்த்தி அமர்ந்தவரின் தலை விண்ணென்று  வலித்தது. ஒற்றைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்றவர் மெதுவாகக்  கதவைத் திறந்தார்.

“சுமதிம்மா!” அவரைப் பார்த்த டேமியனில் பதற்றம்.

 “என்ன இப்பிடி நிக்கிறீங்க? உடம்புக்கு ஏதும் சுகமில்லையா உங்களுக்கு?”அவர் கரத்தைப் பற்றியபடி உள்ளிட்டான். 

அவன் குரலில் இருந்த கரிசனையும் அரவணைப்பான பாவனையும் சுமதியை வெகுவாகவே பாதித்தது.  வெடித்து வந்த விம்மலை அடக்க முதல் தள்ளாடித் தடுமாறிவிட்டார்.

“ஒண்ணும் இல்ல தம்பி, கொஞ்சம் களைப்பா இருந்தது. அதான் இப்பிடியே சரிஞ்சிட்டன்.”  என்றவர் சொன்னதை அவன் நம்புவானா என்ன. 

நிலத்தில் கிடந்த கைப்பையையும் காலையில்  வேலைக்கு வந்த உடுப்புமாக நின்றவரையும் பார்த்தவன், “சரி வாங்க, முதல் இதில இருங்க, கதைக்கோணும்.”  என்றபடி உள்ளே நகர்ந்து, அங்கிருந்த இருக்கையில் அவரை இருத்தியவன், சற்றும் யோசியாது, முழந்தாளிட்டு அவர் முன்னால் அமர்ந்துவிட்டான்.

“தம்பி…என்ன இது? ஐயோ எழும்புங்கோ!”பதறிப்போய் எழுந்துவிட்டார், சுமதி.

“ப்ச்! நீங்க இருங்கோ எண்டுறன்!” மீண்டும் அமர்த்தியவன் பார்வை கலங்கியது. தன் விழிகளின் கசிவை மறைக்கும் முயற்சியெல்லாம் எடுக்கவில்லை, அவன்.

 அவனைப் பார்த்த சுமதியின் நெஞ்சு உலர்ந்து போயிற்று. அன்பும் பரிவும் காட்டுகிறான். இருந்தாலும் எதுவோ சொல்ல எத்தனிக்கிறான் என்று தெரிகிறதே! அவனும் வெளியே போ என்று சொல்லப் போகிறானோ என்ற எண்ணம் வந்துவிட்டிருந்தது.  கண்கள் சரவசரவென்று வழிய கை கூப்பினார், சுமதி.

“சுமதிம்மா என்னதிது என்னட்டப் போய்?”பட்டென்று அவர் கரங்களைப் பற்றி இறங்கியவன், வார்த்தைகள் வராது தடுமாறினான். அவன் குடும்பத்தில் ஒருத்தனால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டவர். அறுபது வயதாகியும் செய்யாத பிழைக்காக பழியேற்று வாழவேண்டியுள்ளது. உடலாலும் மனத்தாலும் எவ்வளவு வேதனைகள் அனுபவித்திருப்பார், அனுபவிக்கிறார். அவரின் முன்னால் மிகவும் தாழ்ந்துவிட்ட உணர்வில், வழிந்த கண்ணீரைத்  துடைத்துக்கொண்டு முறுவலிக்க முயன்றான், டேமியன்.

 என்ன கதைப்பது எப்படி வினையாற்றுவது என்று விளங்காது அவனையே பார்த்திருந்தார், சுமதி. 

“சுமதிம்மா , அது வந்து அம்மா …” என்று ஆரம்பித்து விட்டான்.

 தொடரவிடாது பதற்றமாக இடையிட்டார், சுமதி.

“தம்பி…நீங்களும் என்ர மகளும் விரும்புறது வார்த்தைகளால சொல்லித்தான் தெரியோணும் எண்டு இல்ல. கல்யாணிய நீங்க கலியாணம் செய்ய நான்தான் இடைஞ்சல் எண்டா…சத்தியமாச் சொல்லுறன் தம்பி, கண்காணா இடம் போய்ச் செத்துப் போயிறுரன். என்ர பிள்ள மகிழ்ச்சியா வாழ்ந்தா அதுவே எனக்குப் போதும் ஐயா! பிழையான முடிவுக்கு வந்திராதீங்க, புண்ணியமாப் போகும் தம்பி!” என்றவர் வாய் பொத்தி வெடித்து அழுதுவிட்டார்.

“சுமதிம்மா!” எழுந்து அவரருகில் அமர்ந்து தன் தோளில் சாய்த்துத் தட்டிக்கொடுத்தவன், “என்ன வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க நீங்க. முதல், நான் என்ன சொல்ல வந்தன் எண்டும் கேக்காம . ம்ம்ம்… இனியொருக்கா இப்பிடி மட்டும் கதைச்சீங்க, எனக்குக்  கெட்ட கோபம் வரும் சொல்லிட்டன்.”அதட்டினான்.

பரிதாபமாகப் பார்த்தார், சுமதி. வார்த்தைகளே வரவில்லை, கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. 

“இண்டு காலம உங்களிட்ட என்ன சொன்னனான். உங்களுக்கு எண்டு மகளோட மகனும் இருக்கிறான் எண்டு சொன்னனான் எல்லா? பிறகு என்ன? தீபா அன்ரி இண்டைக்கு எல்லாம் சொன்னதும் நல்லதுதான் சுமதிம்மா. ஆர் ஆர் எப்படி எண்டு தெரிய முடிஞ்சிது. அதை விடுங்க.”என்று அவன் சொல்ல, என்னவென்று நினைப்பது? 

“டொக்டர் தீபா என்னப்பற்றிச் சொன்னதுகள,  உண்மையாவே, நானோ இல்ல கல்யாணியோ நிச்சயம் உங்களிட்டச்  சொல்லி இருப்பம் தம்பி. சத்தியமாத்தான் சொல்லுறன். மறைச்சு எதுவும் செய்ய நினைக்கேல்ல. அப்பிடி எதுவும் நினைச்சுப் பிழையான முடிவுக்கு வந்திராதீங்க!” மீண்டும் கண்ணீர் உகுத்தினார்.

“சுமதிம்மா, உங்களுக்கு இந்தப் பயமே வேணாம் சரியா. உங்கட மகள் இங்க இருக்கிறாள்! எப்பவும் இருப்பாள்!” என, தன் நெஞ்சைத் தட்டிக் காட்டியவன் கசிந்த விழிகளைத் துடைத்துவிட்டு அவரை நேராகப் பார்த்தான்.

“வீட்ட விட்டும் வேலையை விட்டும் போகச் சொல்லி அம்மா கதைச்ச எல்லாத்துக்கும் …எல்லாத்துக்குமே… அவா கதைச்ச ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் மன்னிப்புக்கேட்டுக் கொள்ளுறன் சுமதிம்மா! இந்த மகனுக்காக அதப்  பெரிசா எடுக்காதீங்க என்ன? இனிமேல் அம்மா அப்பிடிக் கதைக்க மாட்டா!” வருந்தி மன்னிப்பை வேண்டியவன் இறுதியில் உறுதியாகச் சொல்லியிருந்தான்.

திகைப்போடு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார், சுமதி.

“என்ன நம்பேல்லையா நீங்க? ஆர் என்ன சொல்லட்டும் எங்களுக்குக் கெதியா கலியாணம் நடக்கும். இண்டைக்கு உங்கட மகள் வரவிட்டு உங்களுக்கு முன்னுக்கு வச்சே  கேக்கிறன். கலியாணம் நாளைக்கே எண்டாலும் எனக்கு ஓம்தான்.” மென்முறுவல் பூத்தவன், இதுவரை, இருக்கிறானோ என்று சுமதி சந்தேகித்த இறைவனாகத் தெரிந்தான்.

மகிழ்வில் விம்மினார், சுமதி.

“இனிமேல், என்ன எண்டாலும் எப்பவும் போல ‘வந்து பார்!’ எண்டு, நிமிர்ந்து நிக்கோணும் நீங்க. எங்கட கலியாணத்த முன்னுக்கு நிண்டு நல்ல வடிவா நடத்தி வைக்கோணும். பிள்ளைகள் பெற்றுத் தருவம் சுமதிம்மா. அவேயல, கல்யாணி போல, எதையும் ஒரு கை பாக்கலாம் எண்ட மாதிரித் தைரியமா வளத்து விடவும் வேணும். முக்கியமா ‘சிலோன் டேஸ்ட்’ உங்கள விட்டுட்டு இயங்குமா என்ன? இப்பிடி எவ்வளவு இருக்கு!  அம்மா ஏதோ சொன்னா அதையெல்லாம்  பெரிசு பண்ணுறதா சொல்லுங்க. போய் ஃப்ரெஷ் ஆகிற்று வாங்க  முதல்.” என்று சொல்லிக்கொண்டு எழுந்தவன் கவனம், அப்போதுதான் வாயிலுக்குச் சென்றது.

கதவு நிலையோடு சாய்ந்து நின்றிருந்தாள், கல்யாணி. விழிகள்   கண்ணீரைச் சொரிந்தபடியிருந்தன. இவன் பார்த்தும்தான் தாமதம் பாய்ந்து வந்தவள் அவனில் மோதி, பின் இறுக கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவன் நெஞ்சில் முகம் புதைத்து விம்மியவள் அழுகை ஒலி அந்தச் சிறு கூடத்தை நிறைத்திட்டு.

கல்யாணியின் மனம் முழுதும் நிம்மதியும் மகிழ்வும் மட்டுமே! தாய் பற்றி, தன் கடந்த காலம் பற்றி அவனுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அவனிடம் மனம் விட்டுக் கதைத்துச் சொல்லிவிட வேண்டும் என்று உறுதியாக எண்ணியிருந்தாள். அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தவிப்பும் தத்தளிப்பும் சேர்ந்தேதான் இருந்தது. இப்போது அதையெல்லாம் போக்கிவிட்டுவிட்டானே! அவன் தாயின் எதிர்ப்பு விளங்கினாலும் அது அவளுக்குப் பெரிதாகவே படவில்லை. 

மனம் நிறைந்து ததும்பியது. அதுவே, அழுகையை இன்னும் இன்னும் அதிகரித்திட்டு. அவன் அணைப்போ, ஆறுதலோ, தாயின் அன்பு வார்த்தைகளோ அவள் அழுகைக்கு அணைபோட முடியாது தவித்துப் போயின.

தன்னுள் அடங்கி நின்றவளைக் கரங்களால் வளைத்துத் தன்னுள் அடக்கிக்கொண்டவனுக்குத் தன்னை நினைத்தே ஆச்சரியம்தான். தன் வாழ்வில், இன்னொரு பெண் இருக்க முடியும் என்று கனவிலும் நினைத்திராதிருந்தவன், இக்கணத்தை, அது கொடுத்த நிம்மதியை, அணுவணுவாக ரசித்து மகிழ்ந்தான். 

error: Alert: Content selection is disabled!!