நட்சத்திரா 23 – 1

தான் கல்யாணியைத் திருமணம் செய்யப்போவதைப்  பிள்ளைகளிடம் சொன்னான், டேமியன். கிறிஸ்டினா பார்த்தும் பாராத பாவனையில் அங்குமிங்குமாகப் போய் வந்துகொண்டிருந்தார். பிள்ளைகள் மூவரும்  எதிர்மறையாக ஏதாவது சொல்லிச்சரி, இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வராதா என்ற நப்பாசை, அவருக்கு.

அதுபார்த்தால், அவன் சொன்னதும் விழிகளை விரித்தவர்கள் வேகமாகத் தம்முள் பார்த்துக்கொண்டார்கள். அப்போதே அவர்கள் முகம் மலர்ந்துவிட்டதை டேமியன்  கண்டுகொண்டான். அவனுக்கு முதல், அவனுடைய  கல்யாணியைப் பிள்ளைகளுக்குப் பிடிக்குமே! கடந்து சென்ற தாயை அர்த்தச் சிரிப்போடு பார்த்தான். அதேநேரம் சின்னவர்கள் மூவரும்  ஒரே குரலாகக் கூவியபடி துள்ளியிருந்தார்கள். இவனைக் கட்டிப்பிடித்து மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“அப்ப இனிமேல் கனி அன்ரி எங்களோட இந்த வீட்டில இருப்பாவோ?” சின்னவள் பெரும் ஆவலோடு கேட்டாள்.

டேமியன் தலை ஆமென்று ஆடியது. 

மீண்டும் மூவரும்  குதூகலித்தார்கள். “கனி அன்ரிட்ட போயிட்டு வாறம்.” என்று, ஓட்டமெடுத்தார்கள்.

கிறிஸ்டினாவினுள் ஏற்கனவே இருந்த கோபம் எல்லை கடந்துவிட்டிருந்தது. தன் வீட்டில் தானே தனியாக, அனாதையாக நிற்கும் உணர்வு.

 “திட்டம் போட்டு எல்லாரையும் வளைச்சுப்  பிடிச்சிட்டாளவே! எல்லாம் என்ர பிழை. நம்பித்தானே அதுகள விட்டுப்போட்டுக் கனடாக்குப் போனன். வரக்கிட வீட்டுக்குள்ள வர வழி செய்திட்டாள்!”  மகனோடு தர்க்கம் புரிந்து தோற்ற கோபமும் சேர, கல்யாணியில்தான் சினமும் வெறுப்பும் அதிகரித்திட்டு. 

மனித மனங்களைக் கைப்பாவையாக ஆட்டுவிக்கும் அதிதீவிரமான காரணிகள் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே  என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகிப்போனார், கிறிஸ்டினா. அவருள், எங்கோவொரு மூலையில் ஒட்டி ஒளிந்துகிடந்த எதிர்மறைக் குணங்களைத்  தூண்டிவிடுவதாக அமைந்து போனது சுமதியின் கடந்த காலம்! அவர் செல்ல மகன் வேறு, அவர் வேண்டாம் என்பதை அடையத் துடிக்கிறான். எந்த விதத்திலும் மனத்தைச் சமாதானம் செய்ய அவரால் முடியவில்லை.  

இனிமேலும் மகன் சொல்லும் எந்தக் கதையையும் காதில் வாங்குவதில்லை என்ற உக்கிரத்தோடு, அறைக்குள் நுழைந்துகொண்டார், கிறிஸ்டினா. அதே வேகத்தில் அலுமாரி மீதிருந்த  பயணப்பெட்டியைத் இழுத்துக் கீழே போட்டார். அச்சத்தம் கேட்டும் டேமியன் வந்து பார்க்கவில்லை. இவர் எதிர்பார்த்தார். அறைக் கதவையே பார்த்துக்கொண்டும் நின்றிருந்தார். மீண்டும் தூக்கிப் பொத்தென்று போட்டார். அப்போதும் அவன் சிலமனே  இல்லை. அழுதுகொண்டேதான்  அலுமாரியில் இருந்த உடைகள், அவசியமான பொருட்கள் என்று இழுத்துப் பெட்டிக்குள் போட்டு அடைந்தார்.

கல்யாணியோடு கலகலத்துவிட்டு, மலர்வோடு வீடு வந்த சின்னவர்களால் தம் அப்பம்மாவின் கோபத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை.  மகிழ்ச்சியை முழுமையாக  அனுபவிக்க இயலாத நிலையில் , “அப்பம்மா கனடாக்கா போகப்போறீங்க ? திரும்பவுமா? போக வேணாம் ப்ளீஸ்!” என்று, பின்னால் திரிந்தார்கள்.

அவர்களோடும் தன் கோபத்தைக் காட்டினார், பெரியவர். பிள்ளைகளைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டுப் பார்வையாளனாக நின்றான், டேமியன்.

“உன்ர மூப்புக்கு நீ கல்யாணம் செய். ஆர் எவர் எண்டு இல்லாமல் தகுதியில்லாத கண்டதுகளையும் செய்திட்டு நல்லா அனுபவி! அதுகள எல்லாம் பாத்துக்கொண்டு நான் இனி இஞ்ச இருக்க மாட்டன். உனக்கு நான்…இந்த அம்மா வேணாம் எண்டு முடிவெடுத்திட்ட. பிறகு இங்க ஒட்டிக்கொண்டு கிடக்க நான் ஒண்டுக்கும்  வக்கில்லாதவள் இல்ல.” என்றுமில்லாத கோபத்தோடு மகனிடம் சொன்னவர்தான், அதன்பின் அவன் முகத்தையும் பார்க்கவில்லை.

டேமியன் கடைசிப்பிள்ளை மட்டுமல்ல, கணவர் இறந்தபின் முழுக் குடும்பத்தையும் நலுங்காது, நலிந்துவிடாது பார்ப்பவன். சொந்தபந்தம், சுற்றஞ் சூழல் அயலட்டை என்று, எல்லோரும்  விருப்பத்தோடு பார்க்கும் வகையில் வழிநடத்துபவன். அவனைவிட்டு அவர் வாழ்வில் வேறு எதையும் இதுவரை யோசித்தது இல்லை.

 மூத்த மகன், என்னதான் பொறுப்பில்லாது தனது விருப்பின்படி வாழ்ந்தாலும் அவர் அதைப்பற்றி யோசிப்பதை விட்டிருந்தார். பிரயோசனம் இல்லை என்று. இருந்தும் பெற்றவராச்சே! அப்பப்போ மகனோடு கதைக்க வேண்டும், ஒரு தடவை வீட்டுக்கு வந்திட்டுப் போங்கைய்யா என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு.  டேமியன் அதை விரும்பவே போவதில்லை என்ற ஒரு காரணமே அதைச் செய்ய விடவில்லை. 

 நான் பெற்ற தாய், அவனுக்காகப்  பார்க்கவில்லையா? அவன் சொல்வதைக் கேட்கவில்லையா? இப்போது கல்யாணி வேண்டாம் என்று அவன் நன்மைக்காகச் சொல்கிறேன் என்று விளங்காது நிற்கிறானே!

‘நேற்று வந்த கழிசடைகளுக்காக என்னையே உதறுவானா அவன்?’ கிறிஸ்டினாவால் தாங்கவே முடியவில்லை. 

 என்றோ ஒருநாள் சுமதி பற்றி விசயங்கள் கசியலாம். அப்போ, ஒவ்வொருவருக்கும் விளக்கம் கொடுப்பானா? அதை யாரும் விளங்கிக்கொள்வார்களா என்ன என்று, அவர் கொதித்துக்கொண்டு நிற்கையில் வலு அமைதியாகத் தாயை எதிர்கொண்டான், டேமியன். 

“அக்காட்ட போறதுதான் உங்கட விருப்பம் எண்டா  நான் சொல்ல என்ன இருக்கு அம்மா. உங்கட வசதிப்படி செய்யுங்கோ! ஏதாவது தேவையெண்டா எப்பவும் உங்கட இந்த மகனிட்ட  நீங்க கேக்கலாம்.” என்றுவிட்டு, மறுகிழமையே கல்யாணம் நடத்த ஒழுங்குகளைச்  செய்யத் தொடங்கிவிட்டான்.  

கிறிஸ்டினாவுக்கு வெறுத்துப் போயிற்று. நிறைய வருடங்களுக்குப் பிறகு, தனியாகவே எல்லாம் செய்தார். மறுநாளே கனடா செல்ல விமானச் சீட்டு எடுத்தார். மகளுக்கு அழைத்தார்.

 “கனடா வாறன். இனி உன்னோடதான் இருக்கப்போறன். உனக்கும் நான் தேவையில்ல எண்டு வெளில விட்டிர  மாட்டியே? அப்பிடி ஏதும் எண்டா  இப்பவே சொல்லிரு , இங்கயே ஹோம்  ஒன்றில  போயிருந்திருறன்.” என்று அவர் அழவும் அவளோ குழம்பிப் போனாள்.

என்ன ஏதென்று கேட்காது இருப்பாளா? எதையென்று சொல்வார். 

சுமதியின் கடந்தகாலத்தைப்  போட்டுடைத்துவிட்டிருப்பார். ‘இடத்தக் குடுத்தால் மடத்தப் பிடிப்பது’ என்பது இதுதானோ என்று, அந்தளவுக்கு அவர்களில் வெறுப்பும் கோபமும் வந்துவிட்டிருந்தது. ஆனால், சுமதியின் கடந்த காலம் பற்றி வாய் திறக்கப் போய்,  தன் சகோதரன் பற்றி வெளியில் வந்துவிட்டால். 

என்றோ ஒருநாள், சகோதரனின் மனைவி பிள்ளைகளுக்கும் தெரிந்துவிட்டால் அவன் வாழ்வே நாசமாகிவிடும். சகோதரனில் பெரும் வெறுப்பும் அருவருப்பும்  வந்திருந்தாலும் சமூகத்தில் அவனுக்குள்ள பெயர் புகழுக்கு இழுக்கு வர விடமாட்டார், அவர்.

இதை எல்லாம் எண்ணியவர், “எங்கட சின்ன வீட்டில இருக்குதுகளே …அதுகளுக்குப் பாவம் பாத்ததுக்கு என்ர குடும்பத்தில மண்ணள்ளிப் போட்டுட்டுதுகள். கல்யாணியும் தாயும் இவன மயக்கிப் போட்டுட்டுதுகள்.”அழுகையோடு சொன்னார்.

“ஏற்கனவே ஒருத்தனக்  காதலிச்ச மனிசி. முப்பத்தைஞ்சு தாண்டினது. பகிடி என்ன எண்டா நேற்றுவரை அவனிட…அதான் அந்தக் காதலிச்சவன்  நினைப்பில இருந்தவள்.  இண்டைக்கு அப்பிடியே மனம் மாறிட்டாளாம். தன்னப் பார்த்து எண்டு நினைக்கிறான் நான் பெத்த விசரன். அவன்ட்ட இருக்கிற காசு பணம் வசதி வாய்ப்புகள் ஆரைத்தான் ஆசைப்பட விடாது. சொன்னா இவனுக்கு விளங்குதில்லை பிள்ள. அழியப்போறான் உன்ர  தம்பி! ஓட்டாண்டியா நிக்கப் போறான் சொல்லிப்போட்டன். இத நான் சொன்னா, இருக்கிறது எண்டா இரு, இல்லையோ, வெளில போ எண்டு சொல்லிட்டான்.” என்று அவர் அழ,  மகள் கொதித்துப் போனாள்.

error: Alert: Content selection is disabled!!