நட்சத்திரா 25 – 1

உணவு உண்டபின் கல்யாணியும் டேமியனுமாக மேசையை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

 “நானும்…”  என்று உதவிக்கு வந்தாள், பெரியவள். நாங்கள் செய்கிறோம் என்று, கல்யாணி சொன்னதற்கு அழகாக முறுவலித்துவிட்டு, மேசையைத் துடைத்து நிலத்தைக் கூட்டி உதவினாள். 

ஜெரிக்சனும், சாப்பிட்டாச்சு, என் வேலை முடிந்திட்டு என்று அமைதியாகப் போகவில்லை. “ நான் ஏதாவது செய்யோணுமா கனி அன்ரி?” என்று, பெரியவனாகக் கேட்டுவிட்டு, மேசையில் இருந்த பாத்திரங்களைக் குசினி மேடையில் எடுத்துவைக்க உதவினான்.

மூவருமே சிறு பிள்ளைகள். இருந்தாலும் அவர்களின் இந்த முதிர்வே கல்யாணியை வெகுவாகக் கவர்ந்தது. இன்னொருபுறம், உற்றவர் அற்ற நிலையின் வெளிப்பாடா இது என்றும் அவள் எண்ணாமல் இல்லை. தன் பால்யத்தில் பெற்றவரோடு வாழும் பாக்கியம் இழந்தவளாச்சே! அந்நாட்களின் நினைவுகள்தான் வந்தது. பொதுவாகவே,  இங்குப் பிள்ளைகள் எல்லாவற்றிலும் சுதந்திரமாகச் செயல்படும்படிதானே வளர்க்கப்படுகிறார்கள். அதுவும் பியங்கா இத்தாலிப் பெண். அவள் கவனிப்பில் வளர்ந்தவர்களாச்சே!

“இன்னும் கொஞ்ச நாளில எங்கட சின்னவவும் உதவிக்கு வந்திருவா.ஆனா…அவா நேர சமைக்க வந்திருவா என்ன?” என்று, சிறுமியின் முதுகில் ஒரு தட்டுத் தட்டி அப்படியே தூக்கிக் கொஞ்சிவிட்டு இறக்கி விட்டான், டேமியன். நொந்து விட்டாற்போல் நெளிந்தபடி நகர்ந்துவந்து கல்யாணியைச்  சலுகையாகக் கட்டிப்பிடித்தாள், அவள்.

சிறுமியின் உயரத்துக்குக்  குனிந்து கொஞ்சினாள்,கல்யாணி. “எங்கட பிள்ளையோட என்ன சேட்டை வேண்டிக்கிடக்கு?” என்றபடி,அவளைத் தூக்கிக்கொண்டு டேமியனருகில் சென்று நின்றாள். சிறுமியின்  கரத்தை மென்மையாகப் பற்றிப் பிடித்தவள், அவள்  கரம் கொண்டே டேமியனின் கன்னத்தில் பட்டுப் பட்டென்று தட்டுப் போட்டாள்.

“அடிக்க அவ்வளவு விருப்பம் எண்டா உங்கட கையால  அடிச்சுப் பாக்கிறது. அத விட்டுப்போட்டு இதெல்லாம் என்ன வேல எண்டுறன்? இந்த நரம்பிட கை எப்பிடி நோகும் தெரியுமா?” கல்யாணியின் விழிகளையே பார்த்துக்கொண்டு சீண்டலாகச் சொன்னவன், சிறுமிக்குக் கிச்சுக் கிச்சுக் காட்டினான். அவளோ, வெடிச்சிரிப்போடு வளைந்து நெளிந்து இறங்கி ஓடிவிட்டாள்.

டேமியன் பார்த்த பார்வைக்கு, “சொறி… தவறி …இல்ல பகிடிக்கு டேமியன்.” திக்கித் திணறிக்கொண்டே கல்யாணி  நகர, வாய்விட்டே நகைத்தான், அவன். 

“இந்தளவுக்குப் பயப்பட நான் என்ன செய்திரப் போறன்? ம்ம்…” என்றவன் மனமோ, நிறைந்து ததும்பியது. அவளை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்துவிட்டுச் சிரித்தபடியே குளிர்சாதனப்பெட்டியைத் திறந்தான்.

கடகடவென்று பாத்திரங்களை ஒரு அலம்பு அலம்பிவிட்டுக் கழுவும் இயந்திரத்தில் அடுக்கிக்கொண்டிருந்த கல்யாணியின் உள்ளம், தன்னை நினைத்தே வியந்து நின்றது. ‘என்ன எல்லாம் செய்யிறன் நான். காலம் காலமா  ஒண்டு மண்டாப் பழகின கணக்கில எல்லா நடக்கிறன்!’

இளக்கம் மறந்து இரும்பாகிப் போயிருந்த நெஞ்சம்,  இன்று, இத்தனைக்கு இளகிக் கனிந்து நிற்கிறது என்றால் டேமியன் மட்டுமே காரணம். அவனின் ஒவ்வொரு சிறு சிறு செய்கைகளும் அவளை, அவனோடும் அந்தக் குடும்பத்தோடும் இயல்பாக்குவதாகவே இருக்கிறது. 

பார்த்து பார்த்துச் செய்கிறானோ, தன்னால் வருகிறதோ தெரியவில்லை. எது எப்படியோ, அந்தக் கணங்களை அவள் ஆத்மார்த்தமாக  இரசிக்கிறாள்.  இப்படி எண்ணியவளுக்குச் சற்றுமுன் சாப்பிடும் பொழுது நடந்தவை நினைவிலாடியது.

கன்னமிரண்டும் சூடாக, உதடுகள் தன்னாலே விரிந்து மலர்ந்தன. இதுவெல்லாம் கனவோ என்றும் இருக்கு. இப்படியெல்லாம் தன் வாழ்விலும் நடக்கும் என்று ஒருக்காலும் எண்ணியதில்லை. ‘ஒன்றையும் நீ தொலைத்துவிடவில்லை’ என்று, மனம் கூச்சல்  இடுவது அவளுக்குத்  துல்லியமாகக் கேட்டது. 

சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் திடுமென்று அவள் மணிக்கட்டில் பற்றி இருந்தான், டேமியன். உண்மையாகவே திடுக்கிட்டுவிட்டாள். தாமதியாது பிள்ளைகளைத்தான் பார்த்தாள். அவர்களுக்கு முன்னால் வைத்து இப்படி இவன் சீண்டுவதை  ஏற்க முடியவிலை. முதலில்,  எப்படி வினையாற்றுவது என்றே தெரியவில்லையே! தடுமாறினாலும் முகச் சிவப்பும் விழிகளின் மினுக்கமும்  அவனுக்குப் போதுமே.

அவள் கையிலிருந்த முள்ளுக்கரண்டியில் குத்துப்பட்டு நின்ற சிக்கன் துண்டும் ரோஸ்ட் செய்த உருளைக்கிழங்கும் கேலும், வலு  நிதானமாக அவன் வாய் நோக்கி நகர்ந்தன. பொறுமையாக வாய்க்குள் எடுத்துக்கொண்டவன் பிள்ளைகளைப் பார்த்து விழிகள் சுருங்க, “எப்படி?” என்றானா?

“எனக்குக்  கனி அன்ரி” என்று, இருந்த கதிரையில் ஏறி நின்று கல்யாணி முகத்தடிக்கு வந்தாள் , சின்னவள்.

இவள் தீத்த , வாய்க்குள் அதக்கிக்கொண்டே “யம் யம்” என்று, உடன்பிறப்புகளைப் பார்த்து விழிகள் சுருங்கச் சிரித்தாள். அதில் சீண்டல் ஒளிந்து கிடந்தது, அப்படியே டேமியன் போலவே! 

மற்ற இருவரும் எழுந்தோடி வந்து ஆவென்றார்கள். கல்யாணி தீத்திவிட்டு,  தன் தட்டைப் பார்க்க, அவள் வாயருகில் வந்து நின்றது , முள்ளுக்கரண்டி. அதில் தொத்தி நின்ற சிறு கோழித்துண்டும் உருளைக்கிழங்கும் கேலும் அவள் உதடுகளை உரசி நின்றன. 

“டேமியன் என்ன நீங்க?” தன்னுள் நிகழும் தடுமாற்றத்தை மறைக்க முயன்றபடி முறைத்தாள், அவள். அவன் பார்வை அசையவில்லை. உதடுகளில் தாராளமான முறுவல். அவன் எந்தளவு மகிழ்வாக இருக்கிறான், இந்தக் கணத்தை இரசிக்கிறான் என்று, அவன் முகத்தின் பொழிவே காட்டிக் கொண்டிருந்தது. மந்திரத்தால் கட்டுண்டவள் போல் பார்வையை விலக்காதே, கையில் இருந்த முள்ளுக்கரண்டியை வைத்துவிட்டு, இருகரத்தாலும் அவன் கரத்தைப் பற்றிப்  பிடித்து வாய்க்குள் வாங்கிக்கொண்டாள், கல்யாணி. 

அவள் முகத்தில் படர்ந்த செம்மையை ரசிப்போடு பார்த்தபடி இருந்தவனை, “பப்பா எனக்கு  …” என்று வந்த சின்னவள், தன்  பக்கம் இழுத்தாள். சிரித்துக்கொண்டே தீத்திவிட வாங்கிக்கொண்டு ஓடினாள். பெடியன் விடுவானா?  இறங்கி வந்து ஒரு வாய் வாங்கிவிட்டு கட்டிப்பிடித்துக் கொஞ்சிவிட்டுச் சென்றான். 

இப்படியே, எப்படி அங்கிருந்த உணவுகளை உண்டு முடித்தார்களோ தெரியாது. அதிலும் கல்யாணிக்குத் துண்டாக நினைவில்லை. எங்கோ மிதந்துகொண்டு இருக்கும் உணர்வோடுதான் சாப்பிட்டிருந்தாள். இதை, இத்தனை நாள் அனுபவிக்காது போய்விட்டாள் என்ற கவலை வேறு. முக்கால் மணிநேரம்தான் இருக்கும், இவளை, அந்த நால்வரும் அவர்கள் குடும்பத்திலொருத்தியாக கதகதப்போடும் வாய்க்கு ருசியான உணவோடும்  உள்ளிழுத்துக்கொண்டிருந்தார்கள்.

அதையெண்ணுகையில், இப்போதும் அவள் முகம் சூடாகியது. பின்னால் டேமியன் எதுவோ செய்கிறான் என்று தெரிந்தும் திரும்பவில்லை. அவனும் பேச்சுக் கொடுக்கவில்லை. அப்பிள், பியர்ஸ், வாழைப்பழம் என்பவற்றைத் துண்டுகளாக்கி நட்ஸ் தூவி  ஐந்து கிண்ணங்களில் எடுத்து வைத்தான். எத்தனைக்கு அப்படியே நிற்பது? மெல்லத் திரும்பினாள். கரமிரண்டையும் கட்டிக்கொண்டு நின்று அவளையேதான்  பார்த்துக்கொண்டு நின்றான், அவன். சீண்டலாகச் சிரித்தான்.

error: Alert: Content selection is disabled!!