நட்சத்திரா 29 -1

விறுவிறுவென்று வீட்டினுள் சென்ற வேகத்தில் கணவனை எழுப்பினாள், ஜாக்குலின். என்ன ஏதென்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாது, ஓவென்று அழுதுகொண்டே, பயணப்பைகளை இழுத்து வந்து வரவேற்பறையில் போட்டாள். பெரிய மகளை அழைத்த விதத்துக்கு, அவளோ, வெருண்டடித்துக்கொண்டு ஓடிவந்தாள். பிள்ளைகள் மூவரும் பின்னால் ஓடி வந்தார்கள்.

“என்ன ஜாக்குலின்  இதெல்லாம்? ஏதாவது பிரச்சினையா?” எதுவும் விளங்காது கேட்டான், டேவிட்.

“ என்னோட வாறது எண்டா வெளிக்கிடுங்க அம்மா. இனி இந்த வீட்டு வாசல்படியில என்ர கால் படாது.” என்றவள், மீண்டும் என்ன ஏதென்று பதறிய கணவனிடமும் சீறி விழுந்தாள்.

“அவன் என்னை அடிச்சிட்டான்.” என்றதும் திடுக்கிட்டுவிட்டான் டேவிட். 

“ஆர்…டேமியனா?” என்றவனால், சுத்தமாக நம்ப முடியவில்லை. கரடுமுரடான மனிதன்தான். ஆனால், கையோங்கும் அளவுக்கு எல்லாம் போகவே மாட்டான். அதுவும் அநியாயத்துக்குத்  தாய் சகோதரர்களில் அன்பானவன் ஆச்சே! 

“என்ன நம்பேலாமல் இருக்கா? இஞ்ச பாருங்க,  என்ர கன்னத்த.” அவள் முடிக்கவில்லை, “நீங்க என்ன செய்தீங்க?”விழிகள் இடுங்கக் கேட்டான், டேவிட்.

“ நானும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன் ஜாக்குலின் , கலியாணத்துக்கு எண்டு இஞ்ச வந்தீங்களா அல்லது வேற நோக்கத்தோட வந்தீங்களா? விடியக் கலியாணத்த வச்சிட்டு இதெல்லாம் என்ன?  படிப்பறிவில்லாத மனுசர் கூட இப்பிடியான நேரங்களில இங்கிதமா நடக்கப்பாப்பீனம். நீங்க என்ன எண்டா, முகத்தையும் நீட்டி வச்சுக்கொண்டு பாக்க நல்லாவா இருக்கு? பிள்ளைகள் உள்ள வீடு எண்டதும் மறந்திட்டு என்ன?” மனைவியோடு சேர்த்து, கிறிஸ்டினாவையும் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தபடி சொன்னான்.

“உங்களுக்கு நான்தானே மனிசி, அவனில்லையே?” எகத்தாளமாகக் கேட்ட மனைவியைக் கோபமாகப் பார்த்தான், டேவிட். அவன் வாய் திறக்க முதல் முந்திக்கொண்டார், கிறிஸ்டினா.

“பிள்ள, தயவு செய்து பேசாமல் இரு பாப்பம். இதுக்குதான் நான் இஞ்ச வரேல்ல எண்டனான். அவன் மாறிட்டான். முழுசா மாத்திப் போட்டாளவையள். செய்வினை ஏதும் செய்திட்டாளவை போல! எளிய சனங்கள்! அந்தப்  பியங்காவ காதலிச்ச நேரம் கூட எனக்குப் பின்னால திரிஞ்சி கெஞ்சிக் கொஞ்சி நான் ஓமெண்ட பிறகுதான் கட்டினவன். இப்பப்  பார்!”அழுதார், கிறிஸ்டினா.

“மாமி…”என்று, கதைக்க வெளிக்கிட்ட மருமகனுக்கு இடம் கொடாது தொடர்ந்தார்.

“முதல் இஞ்ச இருந்து போயிருவம். இவ்வளவுக்கும் பிறகு இந்த வீட்டில இருக்கவோ, அந்த நாயளிட முகத்தப் பாக்கவோ எனக்கு எண்டா விருப்பம் இல்ல. நீங்க வரேல்ல எண்டா  நிண்டு என்னவும் செய்யுங்க!”   தன்னறைக்குள் புகுந்துகொண்டார். கனடாவிலிருந்து கொண்டு வந்த பை அப்படியே இருந்தது. அதோடு சேர்த்து இன்னுமொன்றையும் விடுவிடுவென்று நிறைத்தார்.

‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரிய விரட்டின கணக்கில , என்னையே வெளிய போக வச்சிட்டாள்களே! என்ர  கண்ணீர் நல்லா வாழ விடுமா?’ மனம் அலற, அழுதபடியேதான் அத்தியாவசியமானதுகளை எல்லாம் எடுத்து வைத்தார்.

“எங்களுக்கு மட்டும் இங்க என்ன வேல கிடக்கு? வெளிக்கிடுங்க டேவிட். எங்கயாவது ஹோட்டலில நீண்டுபோட்டு கனடா போயிருவம். என்ன செலவு எண்டாலும் பரவாயில்லை. அதுக்கான அலுவலப் பாருங்க.” கணவனிடம் சொன்னாள், ஜாக்குலின். 

முடிவெடுத்துவிட்டு நிற்பவர்களோடு என்ன கதைப்பது? தடுமாறி நின்ற டேவிட்,  டேமியனுக்கு அழைத்தான். அவன் எடுக்கவில்லை. இரண்டு மூன்று தடவைகள் முயன்றும் எடுபடவில்லை என்றதும் பெருமூச்சோடு மனைவியைப்  பார்த்தான்.

“இண்டைக்கு என்னையும் அம்மாவையும் இப்பிடி நடத்தினதுக்கு நல்லா அனுபவிப்பான் இருந்து பாருங்க. அவேயளுக்கு முன்னுக்கு வச்சு அடிச்சுப் போட்டான்! பச்சக் குழந்தையையும் தூக்கிக்கொண்டு அவன்ர கலியாணத்துக்கு வந்த என்னச்  செருப்பால அடிக்கோணும்.” அழுதுகொண்டே, தன் பயணப்பைகளையும் இழுத்துக்கொண்டு சென்று முன்வாயிலில் வைத்தாள், ஜாக்குலின்.

“பச்! ஜாக்குலின் சொல்லுறதக் கேளுங்க, டேமியன் இப்ப எங்க? நான் கதைக்கிறன்பா. சும்மா சும்மா சின்ன பிரச்சினைகளப் பெரிசாக்க வேணாம் பா.”என்ற கணவனைச் சீறலாகப் பார்த்தாள்.

“கோவப்பட்டு என்ன வரப்போகுது ஜாக்குலின்?  மாமிட வாயால, கல்யாணி அருமையான பிள்ள எண்டு எத்தின தடவைகள் சொல்லி நானே கேட்டிருக்கிறன். சுமதிம்மாவ எவ்வளவு நல்லமாதிரிச் சொல்லி இருக்கிறா. இதே  கல்யாணிய டேமியனுக்குச் செய்தா என்ன எண்ட எண்ணம் கூட இருந்தது தானே? ஓமா  இல்லையா? இப்ப என்ன திடீரெண்டு இந்தளவுக்கு வெறுப்பா, அரியண்டமா எல்லாம் கதைக்கிறா? உண்மையாப்பா,  எனக்கு விளங்கேல்ல. உமக்கு என்ன எண்டு தெரியுமா? அப்பிடி நியாயமான காரணம் எண்டு இருந்தால் சரிதான். இல்லையோ, இதெல்லாம் வீணான சீன் சொல்லிப்போட்டன். தடித்த வார்த்தைகள விடுறது நல்ல சுகமான வேலை. பிறகு திரும்பிப் பெறேலாது எண்டதும் உங்கட நினைவில இருக்கட்டும்.”தன்மையோடு கண்டிப்பையும் கலந்து சொன்னான்.

ஜாக்குலினுள்ளும் அந்தக் கேள்வியுண்டு. கேட்கும் ஒவ்வொருமுறையும் வேறு கதைக்குச் சென்றுவிடுவார் கிறிஸ்டினா. ஆனால், இப்போ அதெல்லாம் தெரிந்தும் ஒரு பிரயோசனமும் இல்லை. அந்தளவுக்கு, இவளுக்கு அந்த இரு பெண்களையும் பிடிக்கவே இல்லை. தம்பியைக் கலியாணம் செய்து தம் சொந்தமாக என்ற எண்ணமே கசந்தது. வேண்டவே வேண்டாம்!

“டேவிட், இஞ்ச உள்ள பிரச்சின போதாது எண்டு  நானும் நீங்களும் சண்டை பிடிக்கோணுமா? எனக்கு அதுக்குத் தெம்பில்லையப்பா. அவன் எப்பிடி என்னை அடிக்கலாம் சொல்லுங்க? நெஞ்செல்லாம் எரியுது. அதப் போய்க் கேக்காட்டியும் பரவாயில்ல, அவனுக்காகக் கதைக்க வேணாம். அவன்  ஆர்? என்ர சொந்தம் எண்டுதானே இஞ்ச வந்தனீங்க? அது இனி ஆயுளுக்கும் இல்ல எண்டு ஆயிற்று. பிறகு என்ன? மான ரோசம் கெட்ட மனிசரா நாங்க? ஊபருக்கு சொல்லிட்டு ஹோட்டலும் பாருங்க பிளீஸ் !” மூச்செடுக்காது சொல்லிவிட்டுப் பரபரவென்று பிள்ளைக்கு பம்பஸ் மாற்றினாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!