தன்னில் வந்து மோதி அணைந்தவளை, வளைத்துக்கொள்ள உயர்ந்த கைகளோடு சுமதியைப் பார்த்த டேமியன் கண்களால் கண்ணீர் வழிந்தோடியது.
அரை நிமிடமும் இராது,இருவரையும் இமைக்காது பார்த்து நின்றவர், தனது விழிகளைத் துடைத்துக்கொண்டார். இதுதான் உங்கள் அறை என்று டேமியன் காட்டிய இடம் நோக்கி நகர்ந்தவர் மனம் நிர்மலமாக இருந்தது. சூரைக்காற்றடித்த அமைதியங்கே நிலவியது.
சமாளிக்கலாம் , அவரால் முடியாதா? அவர் மகள் நிறைவாக வாழ்வாள் என்பது வேறு மேலதிகமான பலம் கொடுத்தது. என்ன பாடுபட்டாகிலும் சமாதானம் செய்து கிறிஸ்டினாவை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடவேண்டும் என்றெண்ணியவர், டேமியனோடு எப்படிக் கதைக்கலாம் என்ற யோசனையோடே அங்கு கிடந்த கதிரைக்குள் தன்னை அடக்கிக்கொண்டார்.
வெளியே, “என்னை விட்டுப் போறன் எண்டு சொல்லுறது உனக்கு அவ்வளவு சுகமாய்ப் போயிற்று என்னடி?” என்று கேட்டுக்கொண்டே, கல்யாணியை இறுக்கமாகத் தன்னுள் அடக்கிக்கொண்ட டேமியன் முகம், அவள் தோள் வளைவுக்குள் உரிமையோடு தஞ்சம் அடைந்தது.
கசிந்த விழி நீரால் அவன் நெஞ்சில் ஈரமுணர்ந்தான், டேமியன். அதேநேரம், தோளில் கண்ணீரின் வெம்மையை உணர்ந்தாள், கல்யாணி.
நெஞ்சடைத்தது. “நான் …நான் நீங்க சொன்ன போல எல்லாம் நினைக்கேல்ல டேமியன். சத்தியமா! ஏன் அப்பிடி என்னப் பாத்துச் சொன்னனீங்க?” விக்கி விக்கி அழுதவள், அவன் உயிர்துடிப்பைக் கேட்டு நிதானத்துக்கு வர முயன்றாள்.
“அது கோவத்துல சொன்னது. அம்மா அப்பிடிச் சொல்லேக்க எப்பிடி இருந்தது தெரியுமா? ப்ச் விடு! இனி வாழ்க்கையில ஒரு நாள் என்னை விட்டுபோட்டுப் போறன் எண்ட வார்த்தை வரக்கூடாது. நினைக்கவே கூடாது.”அவள் முகத்தை நிமிர்த்திக் கண்ணீரைத் துடைத்துவிட்டவன் விழிகள் கசிந்தவண்ணமிருந்தன. தாய் சொன்ன, ‘மலடன்’ என்ற வார்த்தை காதுகளில் ஒலித்துக்கொண்டும்.
எந்தத் திட மனமுள்ளவரையும் ஒற்றைச் சொல்லால் அடித்து வீழ்த்தி விடலாம். சில சொற்களின் குணமும் கனமும் அத்தகையது. அதை உணராது, சுலபமாக நாக்கை வளைத்துத் துப்பிவிட்டுக் கடந்து சென்றிருப்போம். யாரை நோக்கி வீசப்பட்டதோ, அவர், அதன் கனம் தாங்காது படும் வேதனை பற்றி அவ்வளவாக யோசிப்பதும் இல்லை.
அக்கணம், அவன் அனுபவித்த வேதனைக்கு, கல்யாணி, ஒத்தடம் கொடுக்கும் மருந்தானாள்.
எப்போதும் பன்மையில் மரியாதை கொடுத்துக் கதைப்பவன் அதையெல்லாம் சுத்தமாக மறந்திருந்தான்.
“உனக்கு விருப்பமான அமைதியான மகிழ்ச்சியான குடும்பத்த நான் அமைச்சுத் தருவன் கல்யாணி. நீ நம்போனும். எங்களோட எப்பவும் சுமதிம்மா இருப்பா!” என்றவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டவள், வெடித்துக் கிளம்பிய விம்மலை அவன் நெஞ்சிலே அழுத்தி அடக்கிக்கொண்டாள் . உவகைப் பெருக்கில் வெளிவந்த விம்மல் அவள் சொல் கேட்டு இதமாய் அடங்கிக்கொண்டது.
அறைக்குள்ளிருந்து அவள் தாய் எதைப் பற்றி எண்ணினாரோ, அதுவே, கல்யாணி இதழ்களால் வார்த்தைகளாக உதிர்ந்தன.
“கிறிஸ்டினா அன்ரியையும் ஜாக்குலின் அக்கா ஆட்களையும் கூட்டிக்கொண்டு வாங்க டேமியன். அவே இப்பிடி வெளில நிக்கேக்க, நாம கலியாணம் செய்யிறது சரியில்ல. ப்ளீஸ்!”என்று சொல்லி முடிய, அவளை நிதானமாக விலத்தி நிறுத்தித் தீர்க்கமாகப் பார்த்தான், டேமியன்.
அதுவரை அவனில் இருந்த தழுதழுப்பும் இளக்கமும் மறைந்திருந்தது.
“நான் அவேயப் போகச் சொல்லேல்ல கல்யாணி. போனவே எண்டைக்காவது வந்துதானே ஆகோணும் . என்ன உதறிட்டுப் போறது எந்தளவுக்கு அவேக்குச் சுகமா இருக்குது எண்டு நானும் பாக்கிறன்.” என்றவனுக்கு, அவர்களில் அவ்வளவு கோபம்.
“இல்ல டேமியன், ப்ளீஸ்! நான் சொல்லுறதக் கேளுங்க.”இவள் சொல்ல, பதில் சொல்வதுபோல் அவன் கைப்பேசி அருட்டியது.
அவளை விலக விடாதே கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன் முகத்தில் முறுவல் தவழ்ந்தது. கல்யாணியின் பார்வை அவன் முகத்தில் நிலைத்து நின்றது. சட்டென்று பல வயதுகள் பின்னால் சென்ற உணர்வு அவளுக்கு. அக்கணம் தன்னைச் சுற்றி நடந்த பிரச்சனைகள் கூட பின்னால் சென்றுவிட்ட மாதிரித்தான் இருந்தது. ஒருநாளும் செய்யாத வேலையாக, சற்று முன்னர் உன்னைவிட்டுப் போகிறேன் என்றவள் அவனை இரசிக்க வெளிக்கிட்டிருந்தாள்.
அதை அவனும் உணர்ந்தான். பார்க்கவில்லை. காயமுணர்ந்த மனம் இதமாகத் தொடங்கியிருக்க, “ஜோரிக்!”என்றபடி அழைப்பை ஏற்றான்.
“என்ன கலியாண மாப்பிள்ள, அலுவலா நிக்கிறீங்களோ!” எப்போதும் போல் ஆளுமைமிக்க ஜோரிக் குரல் ஒலித்தது.
இவன், “ இல்ல இல்ல…” என்றபடி, தன்னோடு அணைந்து நின்றவளைப் பார்த்தான்.
மறுநொடியே, “ அலுவலாத்தான் நிக்கிறன். பரவாயில்ல சொல்லுங்க ஜோரிக். வந்து கொண்டு இருக்கிறீங்களோ? மீரா பிள்ளைகளும் வருகினம் தானே?”என்றான்.
“சரி சரி, அலுவலப் பாருங்க. எல்லாரும் தான் வாறம். உங்கட வீட்டில தங்கலாம் தானே? கலியாணம் எண்டு விசிட்டர்ஸ் வந்து நிக்கினமோ தெரியாது, அதான். வெளில தங்கிறது எண்டாலும் எனக்குப் பிரச்சினை இல்ல டேமியன்.” என்றான்.
“இது என்ன கதை , எத்தினை பேர் வீட்டில இருந்தாலும் என்ர பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு இடமில்லாமலா? வாங்கோ ஜோரிக்.” என்றவன் , “வீட்டில ஒருத்தரும் இல்ல யோசியாமல் வாங்கோ!” என்றான் .
“ அரைமணித்தியாலத்தில வந்திருவம் அண்ணா. அன்ரியும் ஜாக்குலின் அக்கா குடும்பமும் கனடாவில் இருந்து வந்திட்டினமோ?” இடையிட்ட குரல் மீராதான்.
“ஹாய் மா” என்றவன், “ ம்ம்ம் வந்திட்டினம்…” என்றபோது சுருதி குறைந்திருந்தது.
“சரி அண்ணா, சந்திப்பம்.”அழைப்புத் துண்டிக்கப்பட, நீண்ட பெருமூச்சு வெளியேறியது. கல்யாணியோடு அமர்ந்தவன் சற்று நேரம் எதுவுமே கதைக்கவில்லை.
“ஆர், உங்கட ஃபிரெண்டோ? எங்க இருந்து வருகினம்?” அந்த அமைதியை உடைத்தாள், கல்யாணி.
“ம்ம்ம் ஃபிரெண்ட் தான். நெதர்லாந்தில இருக்கினம். ஜோரிக்கும் ரெஸ்டோரண்ட் வச்சிருக்கிறார். 2019 ல அவே கலியாணம் செய்த புதுசில இங்கச் சுத்திப் பாக்க வந்தவே. அந்த நேரம் எங்கட பி அண்ட் பி இல ஒரு கிழமை தங்கி இருந்தவே. அப்போ பழக்கம் . அம்மாவைத் தெரியும்தானே, கூப்பிட்டு வீட்டுச் சாப்பாடு எண்டு குடுத்துக் குடுத்தே நல்ல சிநேதமாகிட்டினம். மூணு வயதும் ஒரு வயதும் என்று நினைக்கிறன், ஆம்பிளை ஒண்டு பொம்பளை ஒண்டு என்று பிள்ளைகள் இருக்கினம்.” என்று, அவர்கள் பற்றிச் சொன்னான்.
வெளிப்பார்வைக்குச் சாதாரணமாகக் கதைத்தாலும் அவன் மனத்துள் பெரும் கலவரம். இப்போ, ஜோரிக் வந்து கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?
சிந்தனையோடு இருந்தவன் முகத்தைத் தன்புறம் திருப்பினாள், கல்யாணி.
“ப்ளீஸ் டேமியன், மாட்டன் எண்டு பிடிவாதம் பிடிக்காமல் போய் கிறிஸ்டி அன்ரி ஆக்களக் கூட்டிட்டு வாங்கோ! ஜாக்குலின் அக்காவை அடிச்சது எல்லாம் உங்கட பிழைதானே? என்னதான் எண்டாலும் வாயால கதைச்சா ஒழுங்கான பதில் சொல்லிப்போட்டு நிப்பாட்ட வேணும். கை ஓங்குறது என்ன பழக்கம்? ம்ம்ம்ம்.” காதைப் பிடித்து முறுக்கினாள்.
“நாளைக்கு, ஒரு உறுத்தலும் கவலையும் இல்லாத நாளா இருக்கோணும் டேமியன். எங்கட கலியாண நாள்…வாழ்நாள் முழுதும் நினைச்சுப் பாக்கிற நாள் எல்லா? ப்ளீஸ் !”கலங்கிய விழிகளை, அவன் தோள் வளைக்குள் மறைந்துகொண்டு கெஞ்சினாள். பதில் சொல்லவில்லை, அவன் .

