மீராவும் ஜோரிக்கும் குழந்தைகளோடு ஆரவாரமாக வந்திறங்கினார்கள். சிலரைப் பார்த்தாலே நமக்குள் புத்துணர்வு சுரக்க ஆரம்பித்துவிடும். அந்த வகையைச் சேர்ந்த அழகிய அக்குடும்பத்தின் வருகை, அதுவரை டேமியன் வீட்டில் நிலவிய இறுக்கத்தைத் தளர்த்துவதாக இருந்தது.
“நாளைக்குக் கலியாணம் எண்ட ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருக்கிறீங்க?” என்றுகொண்டுதான் மீரா உள்ளே நுழைந்தாள்.
“அதான் நீங்க வந்திட்டிங்களே, தொடங்கி வையுங்கவன் தங்கச்சி.” என்றான்,டேமியன்.
“பின்ன என்னத்துக்கு வந்தனாங்கள்.” என்றவள் பார்வை, வரவேற்பறையில் இருந்த பியங்காவின் புகைப்படத்தில் படிந்து சிக்கித் திணறிவிட்டுவிட்டே விலகியது.
பியங்கா நல்லதொரு மனைவி மட்டுமல்ல தோழியும் கூட. இதோ, இக்கணம் அவளில்லை என்றதை, டேமியன் வாழ்வில் இன்னொரு பெண் என்றதை எல்லாம் கிரகிக்க மீராவுக்கு மிக மிகச் சிரமமாக இருந்தது. கலங்கிவிட்ட விழிகளை எப்படி மறைப்பதென்று தெரியவில்லை. கணவன் கையிலிருந்த மகனை வாங்கிக் கொஞ்சி அவன் தோள்களிலேயே தன் விழிநீரைத் துடைத்து ஒருவாறு தன்னைச் சுதாகரித்தாள்.
அவளையே பார்த்து நின்ற டேமியனுக்குத் துல்லியமாக அவள் மனநிலை புரிந்தது. விழிகள் நிறைந்து போயின. தன் பாட்டில் நகர்ந்த அவன் கரம் அருகில் நின்ற கல்யாணியின் கரத்தை இறுகப் பிடித்துக்கொண்டது. பியங்காவின் இழப்பின் வலி வேதனைக்குக் கல்யாணியின் அருகண்மையும் தொடுகையும் ஒத்தடமாக இருந்தது.
இறுக்கம் கவ்வ முனைந்த சூழலை இனிமையாக மாற்றியதும் மீராதான். நனைந்த விழிகளோடு கல்யாணியை அணுகினாலும் இதழ்களில் முறுவலோடு மனமார்ந்த அன்போடுதான் அறிமுகம் செய்துகொண்டாள். சற்றே குறைவாகக் கதைக்கும் சுபாவம் கொண்ட கல்யாணியால் அமைதியாக இருக்க முடியாத வகையில், நெடுநாள்ப் பழகிய கணக்கில் கதைக்க ஆரம்பித்துவிட்டாள், மீரா.
ஜோரிக்கைச் சுமதிக்குத் தெரியும். சில தடவைகள் சிலோன் டேஸ்டில் சந்தித்திருக்கிறார். அதுவே, எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு வந்து இன்முகமாக வரவேற்றார்.
பிள்ளைகள் மூவரும் வர அவர்களோடு கதைத்துவிட்டு, “அது சரி, எங்க கிறிஸ்டினா அன்ரி?” என்று கேட்டாள், மீரா.
கல்யாணியின் முகம் சுருங்கிற்று. சட்டென்று அவ்விடத்தில் அந்நியமாக உணர்ந்தாள். மின்னல் சென்று மறையும் கணம்தான், எதை எதையெல்லாமோ நினைத்துக் கலங்கிவிட்டாள். அவளதும் தாயினதும் வாழ்க்கை எல்லோர் முன்னாலும் கடை பரப்பப்படுமோ , எதற்கு அது என்றெல்லாம் சென்றது சிந்தனை.
தாயைப் பார்த்தாள். மகள் மனநிலையைப் புரிந்துகொண்ட சுமதி விழிகளை மூடித்திறந்தார். டேமியன் இந்தளவுக்கு உறுதியாக, உறுதுணையாக நிற்கையில் தாமும் துணையாக நிற்க வேண்டும் என்பதே அவர் எண்ணமாக இருந்தது.
தன் கைகளில் இருந்த மீராவின் மகனை மகளிடம் கொடுத்தார்.
தாய் கோபித்துக்கொண்டு போய்விட்டார் என்றதை டேமியானால் சொல்ல இயலவில்லை. அதுவே பகிடியாக, “இவேட கதையெல்லாம் உங்களுக்குத் தெரியாதே கல்யாணி. ஒரே அதிரடியான ஆட்டம் அது.” என்று கடிக்க, “இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லக் கூடாது!” என்று, அவன் முதுகில் அடித்தான், ஜோரிக் .
“எது இல்லாதது? என்னட்ட வாங்கினதே இல்ல என்ன?” என்று மீரா இடையிட்டாள்.
“அத இல்ல எண்டு எப்பிடிச் சொல்லுவன்?”ஒரு சாதியாகச் சொல்லிக்கொண்டவன், தன் பாட்டில் கன்னத்தைத்தான் தடவினான். பக்கென்று சிரித்துவிட்டாள், மீரா.
“அந்தப் பயம் இருக்கோணும்.” மிரட்டினாள்.
“ உண்மையாவே வாங்கினீரா மச்சான்? இவ்வளவு நாளா சொல்லவே இல்ல!” டேமியன் வம்பிழுத்தான்.
“பின்ன? பிறந்தநாளும் அதுவுமா, கொண்டு வந்த சாப்பாடு கேக் எண்டு எல்லாத்தையும் என்ர முகத்தில அடிச்ச ஆள் இவா! அமைதி எண்டு நினைச்சிராதீங்க. நெதர்லாந்தில இருந்து அவுஸ்திரேலியா போய்ச் சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்றவன், ஒற்றைக் கையில் மகளைக் தூக்கிக்கொண்டு, மனைவியை அணைத்துக்கொண்டான்.
இந்தக் கதை கதைக்கையில் எல்லாம், அன்று தீவிரவாதிகள் பிடிக்குள் இருந்த கஃபேயில் மீராவும் அம்பிட்டதுதான் அவன் நினைவில் வந்துவிடும். அவள், தன் கை வளைக்குள் இருந்தாலுமே அந்நினைவில் அவன் நெஞ்சு சில்லிட்டுப் போகும்.
மீராவின் ஆட்காட்டி விரல் உயர்ந்து காட்டிய பத்திரத்தை, விழிகள் சுருங்க வாங்கிக் கொண்டவன் பார்வை, அவள் முகத்தில் தரித்து நிற்க, கல்யாணியைப் பார்த்த டேமியன் முகத்தில் நமுட்டுச் சிரிப்பு.
“எங்கட கலியாணத்துக்குத் தானே வந்தீங்க?” சீண்டலாகக் கேட்டு வைத்தான். நகைப்போடு விலகிக்கொண்டவர்கள், மீண்டும் கிறிஸ்டினாவையே கேட்டார்கள்.
வந்தவர்களுக்குத் தேநீர் தயாரிக்கவென்று சென்ற தாயோடு கல்யாணியும் செல்ல, வீட்டில் நடந்த பிரச்சனையைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டான், டேமியன்.
“இதென்ன சின்னப்பிள்ளத்தனம், இந்தளவுக்குக் கொதிக்க என்ன இருக்கு?”அதிருப்தியோடு தொடங்கிய மீராவைப் பார்வையால் அடக்கிய ஜோரிக், “சரி, அன்ரி எங்க தங்கியிருக்கிறா எண்டு சொல்லுங்க . போய்த் தூக்கிக்கொண்டு வந்திரலாம்.”என்று கிளம்பினான்.
“நானும் வாறன், என்ன சேட்டை எண்டு கேட்டிரலாம்.” என்று புறப்பட்டாள், மீரா.
டேமியன் முதலில் சம்மதிக்கவில்லை. தாயில், சகோதரியில் அந்தளவுக்குக் கோபம்.
“நான் போகச் சொல்லேல்ல. அப்பிடி ஒருக்காலும் சொல்லவும் மாட்டன். அம்மா இல்லாத வீடு எண்டு ஒருநாளும் நினைச்சே பாத்ததில்ல தெரியுமா?” என்றவன் விழிகள் கலங்கிப் போயின.
அவர் வாயால் மலடன் என்றது நெஞ்சைச் சுருக் சுருக்கென்று குத்திக் கிழித்துக்கொண்டிருக்கிறதே!
“வீணாப் பிரச்சின பண்ணிற்று, எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு என்ன வருத்திப்போட்டுப் போனவே. விருப்பம் எண்டா, நான் தேவையெண்டாத் தாங்களா வரட்டும் ஜோரிக்.”இறுக்கமாகச் சொல்லியிருந்தான்.
இந்தக் கதை ஆரம்பித்ததில் இருந்து அவனையே கவனித்துக்கொண்டிருந்த கல்யாணியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
சுமதியும் அவள் கருத்தை ஒத்தேயிருக்க, அவர்களை அழைத்து வரும்படி மீண்டும் டேமியனிடம் கேட்டிருந்தாள்.
“இல்ல, என்னிலும் அம்மாவிலும் உள்ள வெறுப்பும் கோவமும் இன்னும் கூடட்டும் எண்டு நினைச்சீங்க எண்டா, விடுங்கோ டேமியன். உங்கட விருப்பத்தின்படி செய்யுங்கோ!” என்று சொல்லிவிட்டுச் சென்றவளையே பார்த்து நின்றவன் தோளில் தட்டினான், ஜோரிக்.
“யோசிச்சுப் பார், பிறகு கல்யாணி சிஸ்டர் சொல்லுறதுதான் நடக்கும். உன்ர அம்மா தானே டேமியன். வா, போய்க் கூட்டிக்கொண்டு வருவம்.” என்றவன், டேமியன் விழிகள் கலங்கி நிற்க ஆதரவாக கட்டிப்பிடித்துக்கொண்டான்.
“உனக்கே தெரியும், என்ர வாழ்க்கையிலயும் பிறகு, மீராவ விரும்பின பிறகும் எவ்வளவு துன்பப்பட்டிருக்கிறன் எண்டு. மீராட அம்மா எவ்வளவு கேவலமாப் பாத்தவா, ஒண்ணுமே செய்யேலாமல் மீரா பிடிவாதமா நிக்கவும் தான் கலியாணம் செய்து தந்தவே எண்டு உனக்கு நல்லாவே தெரியும். ஆனா, இப்ப அப்பிடி இல்ல டேமியன். மீராக்கு அம்மா போல எனக்கும் அவா அம்மாதான். மகன் போலத்தான் பாத்துக்கொள்ளுறவா.” என்றவன், “என்ன ரெண்டு பேரும் இதில நிண்டு குசுகுசுக்கிறீங்க?”என்றபடி, மீரா சமையலறைக்குள் சென்று மறைந்தபின் தொடர்ந்தான்.
“ என்ன சொல்லுறன் எண்டு விளங்குதா? கல்யாணி சிஸ்டர கிறிஸ்டி அன்ரிக்கு பிடிக்கும். சும்மா கனக்க யோசியாத! உள்ள கோவத்தக் கூட்டுற வேல பாக்காமல் தணிஞ்சு போனாலும் பரவாயில்ல டேமியன். உன்ர அம்மாதானே , கூட்டிக்கொண்டு வந்திருவம். நிறைய பேர் இல்லாட்டியும் நாளைக்கு வாறவே அன்ரி எங்க எண்டு கேப்பினம் எல்லா? என்ன சொல்லுவ? அவே கல்யாணியையும் சுமதி அன்ரியையும் தான் பிழையாக் கதைப்பினம் டேமியன்.” என்று கரைத்துத்தான் சம்மதிக்க வைத்தான்.
“எந்த ஹோட்டலில் நிக்கினமோ!” கோபத்தில் பற்களை அரைத்தபடிதான் டேவிட்டுக்கு அழைத்தான், டேமியன்.
தாமதியாது அழைப்பை ஏற்ற டேவிட்டோ இவன் சொன்னதைக் கேட்டுவிட்டு, “நீங்க வர முதல் மாமி அங்க வந்திருவா போலக்கிடக்கு டேமியன். உங்கட அக்கா இங்க அந்தக் கதையோடதான் இருக்கிறா.” எண்டவன், “பொறுங்க வெளில வந்து கதைக்கிறன்.” என்றபடி ஹோட்டல் அறையைவிட்டு வெளியில் வந்தான்.
அதேநேரம், ஹோட்டல் அறைக்குள் கண்ணீரோடு அமர்ந்திருந்தார், கிறிஸ்டினா.
“கோவத்தில வந்திட்டம் அம்மா. இப்ப யோசிச்சா வந்திருக்கக் கூடாதெண்டு படுது. என்ன நினைக்கிறீங்க? அந்தச் சனங்களுக்கு முன்னால வச்சு என்ன அடிச்சு அவமரியாதை செய்தவன். நான் வந்ததுதான் சரி. ஆனா நீங்க வந்தது அந்த ரெண்டுக்கும் வாசியாப் போயிரும். இனி அது அவேட வீடு ஆகிரும் அம்மா. அதுக்கு ஒரு நாளும் இடம் குடுக்கக் கூடாது.” என்றவளைக் கண்ணீரோடு பார்த்தார், கிறிஸ்டி.
“ கலியாணம் இனி நடக்கத்தான் போகுது. விடுங்க. ஆரையோ கட்டுறதுக்கு இது தெரிஞ்ச சனம் எல்லா? நாலு அதட்டல் போட்டாத் தாயும் மகளும் கப்சிப் ஆகிருவினம்.” என்ற ஜாக்குலின், “அதுக்கு, அங்க உங்கட பிடி இருக்கோணும். அதோட, அண்ணாட பிள்ளைகள் மூணு பேரும் இருக்கினம். என்னதான் எண்டாலும் அவே எங்கட குடும்பத்துப் பிள்ளைகள். கடைசில அவேயல வெளில விட்டிருங்கள் அம்மா.”
தன் மனத்தின் எரிச்சலோடு, கல்யாணி சுமதியிலுள்ள கோபத்தையும் சேர்த்துக் கதைத்தாள், ஜாக்குலின். அவளால் தன் மனத்தைச் சமாதானம் செய்யவே முடியவில்லை. டேமியன் அறைந்த அந்த நொடியை மறக்கவும் முடியவில்லை.
கிறிஸ்டினாவுக்குமே மகள் கதைப்பதில் உள்ள உண்மை விளங்கியது. அந்த மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற பயமும் சேர்ந்துகொண்டது. அந்தளவுக்கு, நம்ப முடியாதளவுக்கு அல்லவா அவர் மகன் நடந்து கொள்கிறான். அப்படி என்னதான் இருக்கு அந்தக் கல்யாணியில்? கோபம் கோபமாக வந்தது.
“கிழவியக் கலியாணம் செய்து இன்னொரு கேடுகெட்ட கிழவியையும் வச்சுப் பராமரிக்க இந்த ஆட்டம் போடுறான் இவன். என்னையே தூக்கி எறிஞ்சிட்டான். மான ரோசம் பாராமல் அங்க நான் இருக்கோணும் எண்டுறியோ நீ?” அழுதார்.
“வேற என்ன வழி அம்மா? நீங்க இப்பவே வெளிக்கிடுங்க, டேவிட் கூட்டிக்கொண்டுபோய் விடுவார். அப்பதான் அந்த ரெண்டுக்கும் ஒரு பயம் இருக்கும் அம்மா.” என்று ஜாக்குலின் தாயைச் சமாதானம் செய்து கிளப்ப முனைய, “அவே வந்தாச் சந்தோசம்தான் டேமியன். ஆனா நீயே போய்க் கூப்பிட்டா கொந்தளிக்கிற கோபம் கூடக் குறைஞ்சிரும். வா போயிட்டு வந்திருவம்.”என்ற, ஜோரிக் சோடியோடு டேமியன் செல்ல, பின்புறத்தைச் சோடனை செய்யவென்று டேமியன் நண்பர்கள் கலகலப்போடு உள்ளிட்டார்கள்.
எல்லோருக்குமே இரவுணவு சிலோன் டேஸ்ட்டிலிருந்து வந்திருந்தது.
கலகலப்பாக உண்டுவிட்டு, வேலையைத் தொடங்கினார்கள்.

