நட்சத்திரா 33 – 1

எங்கோ தூரத்தில், விடாது பறவைகளின் கீச்சிடல் கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கருத்திலெடாது உறக்கத்தின் பிடியில் இழுபட்ட கல்யாணி, வாகனமொன்றின் சத்தமும் சேரவே சற்றே அருண்டாள்.

அப்போதும் இமைக்குடைகளுக்கு அவ்வளவு பிடிவாதம். பிரியோம் என்று அடம்பிடித்தன. புரண்டு போர்த்திக்கொண்டு தூங்கிவிடு என்று, எப்போதாவதுதான் அவளுக்குத் தோன்றும். இன்றும் அப்படியே மனம் சொல்ல, புரண்டு படுக்க முனைந்தவள் தட்டென்று மோதினாள். அருகில் தலையணை கூட வச்சிருக்க மாட்டாளே! திடுக்கிட்டுப் போனாள். 

உறக்கம் போன இடம் தெரியவில்லை. இமைகள் இரண்டும் பட்டென்று பிரிந்தன. யன்னலில் தொங்கிய திரைச்சீலையைக் கடந்து அதிகாலை வெளிச்சம் மிக லேசாகத்தான் உள்நுழைந்திருந்தது. விசுக்கென்று எழுந்தமர்ந்தவளுக்கு  உண்மை புலப்படச்  சிறுபொழுதானது.

 அப்போதும் கூட, ‘இது ஒண்டும் கனவு இல்லையே!’ மனம் வியக்க, நீட்டி நிமிர்ந்து சிலைபோன்று தூங்கிக்கொண்டிருந்தவன் நெஞ்சில் கை வைக்கப் போனாள்.

“அதுக்குள்ள எழும்பியாச்சா? அஞ்சு மணி கூட ஆகியிராது கல்யாணி. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவம் வாங்க.” என்று, அவளை இழுத்துத் தன் கைவளைக்குள் அடக்கிக்கொண்ட டேமியன் உறக்கத்தைத் தொடர்ந்தான்.

இவளுக்கோ,  முழுதாக உறக்கம் விலகிவிட்டிருந்தது. அவள் இதழ்களில் முறுவல்  கீற்றாக உதித்திருந்தது. கழுத்தில் கிடந்த தாலிக்கொடி அவன் தேகம் பட்டு நெரிந்து இவள் கழுத்தை அழுத்தியது. மெல்லத் தலையை உயர்த்தி, எடுத்துப் பின்னால் விட்டுவிட்டு அவன் தோளில் தலை வைத்தவள் பார்வை அவன் முகத்தை விட்டு அங்கிங்கு அரங்கவில்லை.

 முதல், கல்யாணம் நடந்தது இப்போதும் கூட கனவோ என்றுதான் இருந்தது. அவள் உணர்ந்து கொண்டிருக்கும் அவன் தேகத்தின் கதகதப்பு ‘கனவல்ல பெண்ணே’ என்று குறும்பாகக்  கண்சிமிட்டியது.

முதல் நாளிரவு, விருந்தினர் சென்று முடியவே  நடுச்சாமம் ஆகிவிட்டிருந்தது. ஜோரிக் குடும்பம் இன்றுதான் வெளிக்கிடவுள்ளார்கள். பிள்ளைகள் சற்று நேரத்துக்கே உறங்கிட, ஜோரிக் குடும்பம், ஜாக்குலின் குடும்பம் கிறிஸ்டினா, சுமதி என்று ஒவ்வொருவராக உறங்கச் சென்றுவிட்டார்கள். 

இவர்களிருவரும் கோப்பிக் கோப்பைகளோடு பின்புறம் அமர்ந்திருந்தார்கள். அவனது தோளில் தலை சாய்ந்திருந்த கல்யாணிக்கு ஒன்றுமே கதைக்கத் தோன்றவில்லை. அவனுக்கும் அப்படித்தான்.

திட்டமிட்டபடி, ஆனால், மிக மிக நிறைவாக விருந்துபசாரம் நடந்தேறி இருந்தது. தாலி கட்டியது, கேக் வெட்டியது, ஒரு ஒருவரும் வந்து வாழ்த்தியது என்று, அன்றைய நிகழ்வுகள் ஒன்று ஒன்றையும் இருவர் உள்ளங்களும் மீட்டுப் பார்த்தபடி இருந்தன.

“இப்பிடியே இருக்கிற பிளானா என்ன?”அவள் விலாவில் இடித்தான் டேமியன்.பதில் சொல்லாதவள் தலைமட்டும் அவன் தோளில் இன்னுமே அழுத்தமாகப்  பதிந்தது.

“ ஒருமணி தாண்டிட்டு. தூங்குவமா?” என்றவன் கரம் அவளைச் சுற்றிக்கொண்டது.

“ம்ம்…” என்றவள் அசையவில்லை. கடைசிவரை ஒரு முறுவலைக் கூடத் தராத கிறிஸ்டியும் ஜாக்குலினும் அவள் மனத்தை வெகுவாகவே பாதித்தார்கள். அதிலும் கிறிஸ்டினா தங்களைப் பார்க்கும் பார்வையைக் கண்டவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அந்தளவுக்கு, அரியண்டம், ஏளனம்,  உதாசீனம்  என்று தாய், மகள் இருவரையும் பார்வையாலேயே துவம்சம் செய்துகொண்டுதான் நடனமாடினார், கிறிஸ்டி. 

அவர் நடவடிக்கை, இனி, இங்கு உங்கள் வாழ்க்கை இப்படித்தான் என்று எச்சரிப்பது போலிருந்தது. கல்யாணிக்கு அது விளங்கினாலும் விளங்காத பாவனையில் தான் இன்று முழுவதும் நடமாடினாள்.  இதோ, அன்பையும் கரிசனையையும் பார்த்துப் பாராது அள்ளித் தருகிறவனுக்காகப் ‘பொறுத்துப் போயிரு கல்யாணி’ என்கிறது உள்ளம். 

சுமதியோ, “அவேட கோவத்தில நியாயம் இருக்குப் பிள்ளை. விடு, காலம் எல்லாத்தையும் மாத்தும்.” ஒரு தடவை மகளிடம் சொன்னவர் மிகவும் இயல்பாகவே நடனமாடினார். இவளே ஆச்சரியமாகப் பார்த்தாளே!

“என்ன நீங்க தூங்குறீங்களா?” அவள் உச்சியில் அழுத்தமாக கொஞ்சிக்கொண்டே கேட்டான், டேமியன். 

“ம்ம்” என்றவள், அப்போதும் தலை தூக்கவில்லை. “இது சரிவராது.” என்றவன் குரலில் சிரிப்பு!

“வெக்கம் ஒண்டும் இல்லையே கல்யாணி?” என்றானா, விசுக்கென்று விலகி முறைத்தாள், அவள்.

 விழிகளில் கண்ணீரா என்ன? அவள் நாடியைப் பற்றியவன், “அழுகுறீங்களா என்ன?” என்றான், யோசனையோடு.

“இல்ல…உண்மையா இல்ல. அது மகிழ்ச்சில.” என்றபடி, அவன் முதுகோடு வளைத்து அணைத்துக்கொண்டவள்  தலை, மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டது.

அக்கணம், என்ன இக்கட்டு வந்தாலும் அவனோடு நிறைவாக, நிறைய நாட்கள் வாழ வேண்டும் என்ற பேராவல் அவளுள் எழுந்தது. 

கலங்கிவிட்ட கண்களைச்  சிமிட்டிக்கொண்டே வானைப் பார்த்தாள். கருமைப் போர்வையில் மின்னும் நவரத்தினங்களாக நட்சத்திரங்கள். வான்மகள் அவ்வளவு வடிவாக இருந்தாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!