நட்சத்திரா 36 – 2

“இப்ப எங்க போறா?” முணுமுணுத்தபடி வேகமாக வந்து பார்த்தால் தோட்ட வீட்டுப் பக்கமாக விரைந்துகொண்டிருந்தாள். அவள் உள்ளே நுழையும் வரை நின்றவன், தொப்பென்று படியிலேயே அமர்ந்துவிட்டான்.

தோட்ட வீட்டையே பார்த்திருந்தவன் கைப்பேசி அருட்டவும் எடுத்துப் பார்த்தான். ஜாக்குலின்தான்.

கிறிஸ்டினா சொல்லிவிட்டார் என்று விளங்கியது. அழைப்பை ஏற்காது விட எண்ணி இருந்தவனை ஜாக்குலின் விடுவாளா? மீண்டும் மீண்டும் அழைத்து ஏற்க வைத்திருந்தாள்.

அங்கிருந்து அவள் கத்த, இங்கிருந்து இவன் சீற என்று சில நிமிடங்கள் வெம்மையோடு கடந்திருந்தன.

“இஞ்ச பார் அக்கா, நடந்தது என்ன எண்டு தெரியாமல் அலட்டாத சரியோ! அம்மாவ எங்கயும் போகச் சொல்லி நான் சொல்லேல்ல. ஆனா, அவவுக்கு உன்னோட இருக்கிறதுதான் விருப்பம் எண்டாத் தாராளமா அனுப்பி வைக்கிறன். நானும் ஒரு மனுசன்தான் சரியா? நீங்க நினைக்கிறபடி எல்லாம் ஆடுற பொம்ம இல்ல, நினைவில வச்சிரு! இப்ப வைக்கிறியா, எனக்கு நிறைய வேலைகள் கிடக்கு!”

பதிலை எதிர்பாராதே அழைப்பைத் துண்டித்துவிட்டான். அப்படியே கைப்பேசியை உடைக்கும் அளவுக்கு ஆத்திரம் எழுந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவனை தன்னறைக்குள் இருந்த யன்னலால் பார்த்திருந்தார், சுமதி.
மகள் கோபப்பட்டது, கிறிஸ்டினா கோபப்பட்டது என்று, டேமியன் பந்தாடப்படுகிறான்.

“எல்லாம் என்னால. ஆருக்குமே நிம்மதி இல்ல. இந்த உயிர் இருந்து என்னத்துக்கு? இதுக்கும் பிறகு என்ன தேவைக்கு நான் நடமாடோனும். வாழ வேண்டிய எத்தின பேர் செத்துப்போகினம். என்ர உயிர் போகாமல் இருந்து இன்னும் இன்னும் வதைப்பட நிக்குதே!”வாய்விட்டேச் சொல்லிக்கொண்டு பரிதாபமாக அழுதார், சுமதி.

ஒரு கணம் கூட தன்னுயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருள் எட்டிப் பார்த்ததில்லை. சீரழிஞ்சு போய், கிழிந்த நாராகிப்போய் நோயோடு வைத்தியசாலையில் கிடந்த நேரம், மகளைக் கண்டுவிட வேண்டும் என்ற பேராசை, அப்படிக் குறுக்கு வழியில் தப்பிச் செல்லும் யோசனையைத் தந்திருக்கவில்லை. என்று மகளைச் சந்தித்தாரோ, அதுவும் கல்யாணி தன் வாழ்க்கையைத் தாயைச் சுற்றி அமைத்துக்கொண்டதைப் பார்த்தாரோ, அதன்பின், அவர் வாழ்வில் அவருக்கு உரிமை இல்லை. அது மகளுக்கானது என்று தீர்மானித்துவிட்டார், சுமதி.

அவர் அழுகை பட்டென்று நின்றது. காரணம், விசுக்கென்று எழுந்த டேமியன் விறுவிறுவென்று நடந்து மறைந்திருந்தான். எங்குப் போகிறான். சுமதி அறையைவிட்டு ஓடி வந்தார்.

எட்டித்தான் பார்த்தார். தோட்ட வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தான்.

நிம்மதியானதொரு பெருமூச்சு வெளியேற அறைக்குத் திரும்பினார்.
மருமகனில் அவருக்கு மலையளவுக்கு நம்பிக்கையுண்டு. அதிலும் இத்தனை ஆண்டுகளாக சூர்யா என்றதைத் தாண்டிச் சிந்திக்காது இருந்த மகளை, தன்பால் இழுத்துத் திருமணம் செய்துகொண்டவனின் ஆளுமையும் உறுதியும் முக்கியமாக அன்பையும் நம்புகிறார் அவர்.
தோட்ட வீட்டுக் கதவைத் திறக்கப் பார்த்தான், டேமியன். உட்புறம் தாளிட்டிருந்தாள்.

“கல்யாணி கதவைத் திறவுங்க!” கடுமையான குரலில்தான் சொல்லிவிட்டுக் காத்திருந்தான். சத்தமே இல்லை. பட் பட்டென்று தட்டினான்.
உள்ளே அமர்ந்திருந்தவளோ, விம்மலும் கண்ணீருமாக அசையாயிருந்தாள்.
“கல்யாணி இப்ப திறக்கேல்லையோ ,யோசிக்க மாட்டன் கதவை உடைச்சிருவன்!” டேமியன் குரலில் இருந்த உறுமல் மட்டுமின்றி,தோள்ப்பட்டையால் இடித்த ஒரு இடியும் அவளை விருட்டென்று எழுந்தோட வைத்தது.

“இப்ப உங்களுக்கு என்ன வேணும்? ஆங்! என்ன வேணும் எண்டு கேக்கிறன்? இவ்வளவு கேடு கெட்ட மனுசரா இருந்துகொண்டு உங்கட அம்மாவும் அக்காவும் என்ர அம்மாவ எவ்வளவு இழிவாப் பார்த்தவே, கதைச்சவே? செய்க்!” வெறுப்பாகப் பார்த்தாள்.

காலையில் வேலைக்குச் செல்லும் போதுகூட அவன் அருகண்மையில் உருகிக் குழைந்து நின்றவள் இவளா? கொண்ட நேசத்தை அழிப்பது அவ்வளவு சுகமா என்ன? டேமியனுக்கு அவள் தோரணை, கதை பேச்சு, பார்வை என்று ஒன்று ஒன்றும் பெரும் வலி கொடுத்தது.

“ உங்களோட வீண் கதை கதைக்க எனக்கு விருப்பம் இல்ல. அந்தளவுக்கு ரோசம் மானம் இல்லாமல் ஆரும் இங்க இல்ல. தயவு செய்து என்னைத் தனியா இருக்க விடுங்க. இது உங்கட இடம், கெதியா என்ர அம்மாவோட வெளில போயிறுரன். உங்கட அம்மாவக் கவலைப்படவேணாம் எண்டு சொல்லுங்க. இனி உங்கட வாழ்க்கையில இந்தக் கல்யாணி இருக்க மாட்டாள்.”முகம் இரத்தமாகச் சிவந்திருக்க, வெறுப்போடு வார்த்தைகளைக் கடித்துப் துப்பினாள்,கல்யாணி.

டேமியன் பொறுமை பறந்திருந்தது. அவளை உள்ளே தள்ளிக்கொண்டே உள்ளிட்டுவிட்டான். மறுநொடியே கதவை அறைந்து சாத்தியும் இருந்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்றது அதிர்ந்து நின்ற தோற்றம்.
அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்தவன் கண்கள் கலங்கிப் போயின.

“என்ன எல்லாம் கதைக்கிற நீ!” கண்ணிமைப்பொழுதில் இழுத்துத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான். அதிலிருந்த முரட்டுத்தனம் கல்யாணி அறவே அறியாதது. அவன் கோபத்தைக் காட்டியது.

“என்னைத் தூக்கி எறியிறது உனக்கு அந்தளவுக்குச் சுகமா இருக்கா கல்யாணி? எங்கயோ ஆரோ செய்த கேடுகெட்ட விசயத்தோட உன்ர புருசனத் தொடர்புபடுத்திட்ட என்ன?” கோபத்தோடு கேட்க ஆரம்பித்தவன் குரல் தழுதழுத்தது. திமிறி விடுபடப் பார்த்தவள் தோளில் முகம் பதித்தவன் கண்ணீர் அவள் தோளைச் சுட்டுட்டு.

அத்தனை திமிறலும் அக்கணம் அடங்கிப் போக பெருங் குரலெடுத்து அழுதாள், கல்யாணி. அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் அந்த அழுகை ஒலி அடங்கிடப் பார்த்தது.

வருடக்கணக்கில் தேங்கிக் கிடந்த வலிகள் ஒன்று ஒன்றும், ஆறா வேதனையும் மெல்ல மெல்ல வடிந்து சென்றதோ என்று அவளே உணரும் வகையில் இருந்தது, கட்டுப்பாடின்றிய அவள் அழுகை!

நிமிடங்கள் போக போக அழுகை தேய்ந்து விம்மல்களாகியிருக்க, இதயம் மிக மிக இலேசானது. விழிகளின் கசிவுதான் நின்றபாடில்லை. அவன் நெஞ்சிலே தேய்த்துத்துடைத்தாள்.

அவள் அழுகையில் கலங்கிவிட்டவன் உதடுகளில் மென் முறுவல்! அவளை இன்னும் இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான், டேமியன்.
அவள் உணர்ந்த அவன் இதயத்துடிப்பு அவளுக்காகவென்று, தான் இருப்பதைத் துல்லியமாக உணர்த்தியது. ஜோசப் என்ற கயவன் வருகையில், இரும்பென இறுகத் தொடங்கிவிட்டிருந்த அவளை, உருகிக் குழைய வைக்கும் தகிப்பாகிப் போனான், அவள் கணவன்.

“அண்டைக்கு எல்லாக் கதையும் சொன்ன நேரம்தான் தீபா அன்ரி இதையும் சொன்னவா. அத உங்களிட்டச் சொல்லியிருக்க…”என்றுவிட்டுச் சிலகணங்கள் நிதானித்தான்.

“இஞ்ச என்ர முகத்த ஒருக்காப் பாருங்கவன்.” என்று அவள் முகத்தைப்பற்றி நிமிர்த்தினான்.
ஈரத்தில் நனைந்திருந்த அவள் விழிகளையே ஊடுருவிக்கொண்டிருந்தது, இவன் பார்வை.

“இனி அழோணும் அடிதான் வாங்குவீங்க!” வெருட்டல் போட்டான்.

“சொல்லியிருந்தா, இப்பிடி என்னோட நிக்கிற தருணம் வந்திருக்குமா சொல்லுங்க. அடுத்த நிமிசம் என்ர பார்வையில இருந்து மறைஞ்சு போயிருப்பீங்க தானே? அது நல்லாவே தெரிஞ்ச பிறகும் எப்பிடிச் சொல்லுவன் ம்ம்?”விழிகள் கலங்க கேட்டவனை, இறுக அணைத்துக்கொண்டாள், கல்யாணி.
ஒருகணம் என்றாலும் அந்தக் கயவன் ஜோசப்போடு கணவனைச் சேர்த்து நினைத்துவிட்டாளே!

“சுமதிம்மாட முகம் பாக்கிற நேரமெல்லாம் எனக்கு எப்படிக் குற்றவுணர்வா இருக்கிறது தெரியுமா கல்யாணி? உண்மையா மனத்தால கூனிக்குறுகிப் போறனான். எண்டோ ஒருநாள் அந்தாள் எங்களோட சம்பந்தப்பட்டவர் எண்டு தெரியத்தான் போகுது எண்டு தெரியும். ஆனா, என்னால அது வெளிவரும் எண்டு நினைக்கேல்ல. என்னையும் மீறித்தான் சொல்லிப்போட்டன். அப்படியிருக்க, நீங்க என்னோடயே கோவிக்கிறீங்க.”என்றவன், “நடந்த எதையும் மாத்துற சக்தி எனக்கு இல்ல. ஆனா, சுமதிம்மாவ அவரிட மகனா இருந்து பாத்துக்கொள்ளுவன். உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையா?”என்றவனுக்கு, இல்லை என்று எப்படிச் சொல்லவியலும்.
“சொறி!” என்றபடி, மீண்டும் அவன் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

“அடிதான் விழும். ஆருக்கு வேணும் இந்த சொறி? முதல் என்னத்துக்கு? உங்களிட இடத்தில வேற ஆரும் இருந்திருந்தா இந்தளவுக்குத் திடமா ஒவ்வொண்டையும் எதிர்கொண்டு இருப்பினமோ தெரியா கல்யாணி. உங்கள் ரெண்டுபேரையும் பார்த்து நான் எப்பவும் வியக்கிறனான். அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. உங்கட கோவத்த நான் பிழையா எல்லாம் நினக்கேல்ல.” என்றவன், தன் அன்புச் செய்கைகளால் அவளை உருக்கினான்.
முகத்தை நிமிர்த்தி அவள் முகமெங்கும் ஒட்டிக் கிடந்த தலைமயிர்களை மெல்ல இதமாக ஒதுக்கி விட்டவன் பார்வை மட்டும் அங்கிங்கு அசையவில்லை.

“இனிமேல் பட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னை, இந்த வீட்ட, பிள்ளைகள எல்லாம் பிரிச்சுப் பாக்கிறது இல்ல சொல்லிட்டன்.” அதட்டலாகச் சொன்னவன், கணவனாக நடந்து, அவள் மனத்திலிருந்த ஜோசப் என்ற கயவனை மறக்கடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தான்.

மீண்டும் அறைக்குள் நுழைந்த சுமதிக்கு மனம் கேட்கவில்லை. விறுவிறுவென்று தோட்ட வீட்டுக்கு வந்தவர் காதை உள்ளே கொடுத்துக்கொண்டு கதவோரமாக நின்றுவிட்டார். உள்ளே நடந்த பேச்சுவார்த்தைகள் துல்லியமாக அவர் செவிகளில் மோதின. மகளும் மருமகனும் பிரச்சினைகளைத் தாண்டித் தம் பிரத்தியேக உலகினுள் நுழைவதை உணர்ந்தவர், அதுவரையும் தள்ளாடி நின்ற உடலை நிமிர்த்தி, நிதானமாகத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

மகள் சரியாகிருவாள், மருமகன் சரியாக்கிவிடுவான். அவர்கள் வாழ்வில் எக்குழப்பமும் இல்லை என்றது கொடுத்த ஆறுதலும் நிம்மதியும் அவருக்கு ஏற்பட்ட அத்தனை வலிகள், வேதனைகள், இழப்புகள், அவமானங்கள் என்று, ஒன்று ஒன்றுக்கும் ஒத்தடம் கொடுப்பதாக இருந்தது.

error: Alert: Content selection is disabled!!