நட்சத்திரா 4-1

‘சிலோன் டேஸ்ட் ரெஸ்ட்டோரண்ட்’ மாலை 3 தொடக்கம் இரவு 11 வரை திறந்திருக்கும். அதன் உணவின் தரமும் சுவையும் எட்ட இருந்து கூட உணவுப் பிரியர்களை இழுத்துக்கொண்டிருந்தன.

‘டேக் அவே’ கேட்கவே வேண்டாம். அதுவும் கொரோனாவிற்குப்  பின் அதிகரித்திருக்கிறது. கிட்டத்தட்ட பத்துப் பெடி பெட்டைகள்,அந்த உணவக மேலங்கி  அணிந்து அந்தச் சுற்றத்தில் சுற்றித்திரிவார்கள்.

சுமதி, அதன் காலையுணவுப் பகுதியில் மட்டுமே காலையும் மாலையும் வேலை செய்கிறார். அங்கு வேலை செய்யும் மற்றவர்கள் உணவகத்தின் பிரதான பகுதியிலும் இங்குமாக  மாறி மாறி வேலை செய்து கொள்வார்கள்.

அதன்படி, அன்று, திலினிக்கு பிரதான பிரிவில் வேலை இருந்தது. சுமதி மகளோடு வீடு சென்றிருக்க, அருகில் இருந்த உறவினர் வீடு சென்றுவிட்டு, கடைகளுக்கும் சென்றுவிட்டு  மதியம் ஒரு மணிவாக்கில் உணவகத்திற்குத்  திரும்பியிருந்தாள்.

‘முதல் வேலையா ஒரு கஃபே குடிச்சிட்டு, பிறகு  ஆயத்தங்களில இறங்குவம்’ என்று நினைத்தவாறே, கோப்பி இயந்திரம் நுரைக்கத் தள்ளிய கறுப்புக் கோப்பியோடு  பாதையைப் பார்க்கும் வண்ணம் அமர்ந்து கொண்டாள், திலினி. வாகனங்களும் மனிதர்களும் அவசர கதியில் போய்வந்து கொண்டிருப்பதை அட்டணக்கால் போட்டபடி, தொண்டைக்குழியால் இதமாக இறங்கிய கோப்பியோடு பார்ப்பது சொர்க்கத்தின் சுகமாக இருந்தது, அவளுக்கு.

அதிகாலையே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிய உடலாயிற்றே! தளர்ந்து போயிருந்தாள். மெல்ல மெல்ல உறிஞ்சி உள்ளே நழுவியிறங்கிய கோப்பியால்   புத்துணர்வை நிறைத்துக்கொண்டிருந்தவள் அரைவாசி கோப்பியைக்கூட முடிந்திருக்கவில்லை, கலைத்தது கைப்பேசி.

“கல்யாணியா!” உதடுகள் முணுமுணுத்த கணமே அழைப்பை ஏற்றிருந்தாள். மிகவும் அத்தியாவசியம் தவிர அழைக்க மாட்டாளே!  

“ஹலோ கல்யாணி” என்று, இவள் சொல்ல முதலே நலிந்து வந்து மோதியது, அவளின், “ஹலோ திலினி”

“ பிரச்சின ஒண்டும் இல்லயே கல்யாணி?” என்றபடி இவள் எழவும் டேமியன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

அவள் சொன்ன செய்தியில் திகைத்துப் போனவள், “ வாட்! எங்க? எப்ப இப்பயா?  கல்யாணி உனக்கு ஒண்டும் இல்லயே!” சொன்ன செய்தி, அவள் குரலோடு இணைந்து அந்தளவுக்குப் பதற வைத்திருந்தது.

என்னவென்று சைகையால் வினவியபடி அருகண்மையில் வந்து நின்றான், டேமியன்.

‘பொறு’ என்று கைகாட்டிவிட்டு, அவளிடமிருந்து விபரங்களைக் கேட்டவள், “ஒண்டும் பயப்படாத கல்யாணி, நான் இந்தா வாறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், பதற்றத்தோடு டேமியனைப் பார்த்தாள் . அவர்கள் கதைத்ததை வைத்தே விபத்து என்று அவனுக்கு விளங்கியிருந்தது. 

என்ன ஏதென்று விபரம் கேட்டவன், “நீங்க  இஞ்ச  பாருங்க  திலினி, நான் போய்ப் பாக்கிறன். கல்யாணிட நம்பர் எனக்கு வாட்ஸ் அப்ல அனுப்பி விடுங்க !” என்றுவிட்டு,  அவளைக் கதைக்கவிடாது வெளியேறினான், டேமியன்.

அவளுக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது. டேமியனுக்கு இங்கு அநேகரைத் தெரியும். எதுவென்றாலும் இலகுவில் கையாண்டு விடுவான். 

விபத்து நடந்த நாற்சந்திக்கு வர, கால் மணித்தியாலம் பிடித்தது. அங்கோ, விபத்து நிகழ்ந்த அறிகுறி எதுவுமே இல்லை. கல்யாணிக்கு அழைத்தான். 

தாய் வேலை செய்யும் இடம், அந்தரம் அவசரத்திற்கு இருக்கட்டுமே என்றுதான் டேமியனின் அலைபேசி எண்ணைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள், கல்யாணி. இப்போது அவன் அழைப்பு வர, எதிர்பாராத திகைப்பு. சில கணங்களில் தன்னை மீட்டிருந்தவள் அழைப்பை ஏற்றாள்.

தான் வைத்தியசாலையில் இருப்பதாகவும் காரை அவர்கள் ஏற்றிச் சென்றுவிட்டார்கள் என்றும் சொன்னவள் குரலில் பயம் கலந்திருந்தது. 

 “உங்களுக்கு ஒண்ணும் இல்லையே!” மீண்டும் கேட்ட டேமியன், கதைத்தபடியே  பத்து நிமிடத் தூரத்தில் உள்ள வைத்தியசாலைக்கே காரை விட்டான். அவள், ஒன்றும் இல்லை என்றுதான் சொன்னாள். நேரடியாகவே பார்த்துவிட்டால் தான் நிம்மதியாக இருக்கும் என்றது, அவன் மனம்.

‘சிவப்பு  விழுந்த பின்னும் காரை ஓட்டி இருக்கிறாவே!’ கடைசி நொடியில் உணர்ந்து சுதாகரித்ததால் மறுபுறம் வந்த காரில் அடிபடுவது மயிரிழையில் தப்பியிருக்கிறது. விளைவு, அருகிலிருந்த மின் கம்பத்தோடு மோதியிருக்கிறாள்.

இன்று காலையில் அவனைக்  கடந்து சென்றவள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தாள். முகமும் கண் மடல்களும் வீங்கியிருந்ததும்  சிரிப்போமா விடுவோமா என்ற தயக்கத்தோடு சிறு முறுவலோடு சென்றதும் தான். 

முதல் நாள் நெடுந்தூரம்  பயணம் செய்து வந்தவள் ஆச்சே! இப்படி உடனே வேலைக்குப் போகவா வேண்டும் என்ற சிடுசிடுப்போடு வைத்தியசாலைக்குள் உள்ளிட்டான், டேமியன். அவள் பணிபுரியும் வைத்தியசாலைதான். 

விபத்து …அது  யார், எவர், இன்னார் என்று பார்க்குமா என்ன ? 

பள்ளி ஆசிரையான அவன் மனைவி பியங்கா, பனிச்சறுக்குக்குக்  பிள்ளைகளோடு சென்றிந்தாள் . அங்கு, திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் மூன்று மாணவர்களோடு சேர்ந்து அவளும் உயிரற்ற சடலங்களாகத்தான் மீட்கப்பட்டிருந்தார்கள்.

 ‘ விபத்து’ என்றதும் அவனுள் வந்த பதற்றத்தின் காரணமே அதுதான். அதோடு, கல்யாணியின் கதை தெரிந்ததில் இருந்தே அவளிலும் சுமதியிலும் இனம்புரியாதவொரு பரிவு. 

இத்தனை நாட்களும் அவர்கள் பற்றி நினைக்கவோ யோசிக்கவோ ஒரு சில நிமிடங்களைக் கூட அவன் செலவிட்டதில்லை. இப்போதோ, அவர்களின் வலிமிக்க, இழப்புகள் கொண்ட கடந்த காலம், அதை, அவர்கள் வெற்றிகண்டு  இப்படி வாழ்வது என்று அவனை வியக்க வைக்கிறது. அன்போடு பார்க்க வைக்கிறது. 

மனைவியின் இழப்பினுள் அமிழ்ந்து கிடப்பவனுக்கு,சுமதி சந்தித்த இழப்புகள், அதிலிருந்து மீண்டு அவர் நடமாடுவது எல்லாம் வழிகாட்டலாய், ‘வாழும் நாள் வரை, வாழ்க்கைக்கே சவால் விடு’ என்பதாக இருக்கிறது.

காலைத் தடவிக்கொண்டிருந்துவிட்டு நிமிர்ந்து திரும்பிய கல்யாணி, அந்தக் கொரிடோர் எல்லையில், வேக நடையில் வருபவனை அடையாளம் கண்டுவிட்டாள்.

 “டேமியன்!” உதடுகள் ஆச்சரியத்தில்  முணுமுணுத்தன. அவன் அழைத்து விசாரித்தது, விபத்து நடந்த இடம் வந்தது என்றதே அதிசயமும் ஆச்சரியமும்தான். அப்படியிருக்க, நேரில் வந்தால்? திகைப்பு அகலாது பார்த்திருந்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!