சூர்யா தெய்வமாக நினைத்தவள், இவன் நினைப்பைத் தாண்டிவர எத்தனை காலம் ஆயிற்று! அது தெரியாது தன்னைத்தானே வதைத்து, அவனை நம்பி வாழ்பவளையும் அல்லவா அல்லாட வைக்கிறான்,இவன். தன் மனைவி தடுத்தபின்னும் கதைக்க வந்திருக்கிறான் டேமியன். அது சரிதான் என்றது சூர்யா கதைத்த விதம். கல்யாணி தன்னை ஏமாற்றினாள், அவளை அவள் நேசத்தை நம்பி இன்றளவும் ஏமாந்திருக்கிறேன் என்பது சூர்யாவுக்கு பெரிய அடியாக விழுந்திருக்க, அதை நினைத்து நினைத்தே தன்னைத்தானே தண்டித்தாலும் தண்டிப்பான் போலிருந்தது, அவன் கோபமும் கதை பேச்சும் உடல்மொழியும்.
கவி வேறு விம்மி அழுதாள்.
“உதயா ப்ளீஸ்!” மீண்டும் கைப்பேசியை நீட்டினான்,டேமியன்.
“சூர்யா, அவர் என்ன சொல்ல வாறார் எண்டு கேக்கச் சொல்லுது என்ர மனம்.” விழிகளைத் துடைத்துக்கொண்டு வந்து கைப்பேசியை வாங்கினாள், உதயா.
மீண்டும் மீண்டும் வாசித்தாள். முகத்தில் உணர்வுக் குவியல்.
அது, சற்றுமுன் கல்யாணி அனுப்பிய செய்தி என்பதையும் மீண்டும் மீண்டும் சரி பார்த்தாள் .
அதிர்ந்த விழிகளை டேமியன் முகத்தில் பதித்தாள். “அண்ணா, இது இது …” என்றுகொண்டே சூர்யாவை அணுகியிருந்தாள்.
“இஞ்சேப்பா, கோவப்படாம இதில இருக்கிறத ஒருக்காப் பாருங்க…ப்ளீஸ் சூர்யா!” வற்புறுத்தி வாசிக்க வைத்தாள். அப்போதும் மனைவியின் கட்டாயத்தில் வேண்டா வெறுப்போடு கைப்பேசியைப் பறித்துப் பார்த்த சூர்யா, சரேலென்று டேமியனைப் பார்த்தான். பின் மனைவியைப் பார்த்தான்.
“என்னடி… இது? “ அவன் குரல் நடுக்கத்தோடு வந்திருந்தது.
“சொன்னனே சூர்யா. கல்யாணிட வாழ்க்கையில நடந்த எதுவும் உங்களுக்குத் தெரியாது. அது உங்கட பிழை இல்ல. அவவே தெரிய விடேல்ல.” என்று நெருங்கிய டேமியன், சூர்யாவின் கரத்தைப் பற்றி அங்கிருந்த இருக்கையில் அமர வைத்துத் தானும் அமர்ந்துகொண்டான்.
சூர்யாவிற்கோ, சிந்திக்கும் திறன் அற்றுப் போயிற்று. அவன் மனத்துள் கொழுந்துவிட்டெரிந்த கோபம் கூட எங்கு போனதென்று தெரியவில்லை. அங்கு குழப்பம் மட்டுமே மிஞ்சி நின்றது. தொய்ந்து போய்த்தான் அமர்ந்தான், அவன் .
“சுமதிம்மா, அதான் அப்போத அங்க இருந்து கல்யாணியோட போனாவே, அவாதான் கல்யாணிட சொந்த அம்மா.” என்றான் டேமியன்.
“இல்ல இது பொய்! பச்சைப் பொய்! இத, இஞ்ச நாங்க நம்போணுமா? அவவிட அம்மா அப்பா தம்பி எல்லாரும் சண்டை நேரம் செத்திட்டினம் தெரியுமா? உங்களுக்கும் பொய் சொல்லி நல்லா வண்டில் விட்டிருக்கிறா!” என்றாள் கவி.
“சொல்லுறதக் கேக்கவே மாட்ட என்ன நீ? வெளில போய் நில்லு கவி!” என்ற உதயா, “நீங்க சொல்லுங்க அண்ணா. அவா இறந்தது எண்டு சொல்லி, அங்க ஒரு அன்ரி வீட்டில இருந்தவா கல்யாணி.”
“ ஓம் ,அப்பிடித்தான் எல்லாரும் நினைச்சிருந்தது. ஆனா …” என்று தொடங்கி, சுமதி சிறை சென்றதை மட்டும் சொன்னான்.
“சிறைக்குள்ள கன வருசங்கள் இருந்து சரியான வருத்தம் வந்துதான் வெளில வந்திருக்கிறா. மனமும் குழம்பிப் போய் இருந்து, சுகமாகவே சில வருசங்கள் சென்றிருக்கு. அதுக்குப் பிறகுதான் மகளத் தேடி இருக்கிறா. சூர்யா இந்தியா போயிருந்த நேரம் தான் தாயும் மகளும் முதல் முதல் சந்திச்சது. பிறகு… கல்யாணி… தாய்தான் முக்கியம் எண்டு அவவோட இருந்திட்டா.” என்றான், குரல் அடைக்க.
“சுமதிம்மா கல்யாணியிட வேதனையில சிறு துளி இப்ப நான் சொன்னது.” என்றான் தொடர்ந்து.
“சரி, இதான் உண்மை எண்டா, தாயோட யாழ்ப்பாணத்துக்கு எல்லா வந்திருக்கோணும். செத்தாச்சு எண்டு நாடகம் ஏன்?” கவியால் கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. அதுவும் சூர்யாவும் உதயாவும் அமைதியாக இருப்பதைப் பார்க்கவும் முடியவில்லை. குமுறலாகக் கேட்டாள்.
“அதானே, ஏன் வரேல்ல?” உதயாதான்.
“ சிறைக்க போய் வந்தவவ, தங்கட வீட்டில தங்க வைக்கேலாது, தொடர்பே வேணாம் எண்டு, கல்யாணிய வச்சுப் பார்த்த அன்ரியே சொன்னவாவாம். அத, கல்யாணி கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல. இண்டளவும் அவே, இவையோட கதை பேச்சு இல்ல. அந்த நேரம், அவாவே அப்பிடிச் சொன்னா, சூர்யா வீட்டில என்ன சொல்லுவினம் எண்ட கேள்வி கல்யாணிக்கு வந்திருக்கு. கடைசிவரை தன்னை ஏற்காயினம் எண்டு முடிவுக்கு வந்து, தாய் மட்டும் தான் தனக்கு எண்டு,அந்த நேரம் வேற வழி தெரியாமல், விபத்தில செத்தது எண்டு சொல்லி ஒதுங்கி இருக்கிறா. அதானே ஒழிய, வேற விசயம் எதுக்காகவும் அவா ஒதுங்கி வரேல்ல சூர்யா.” என்றான், கமறிய குரலில்.
“தாயும் மகளுமா மிலான் வந்து நாலு நாலரை வருசங்கள் தான் இருக்கும். அதுவரைக்கும் கொழும்பில தான் இருந்தவே. கல்யாணி படிச்சு முடிச்சு நேர்சா அங்கதான் வேலையும் பாத்தவா .” என்றும் சொல்ல, அங்கிருந்த மூவருமே அதிர்ந்தார்கள்.
“அக்கா சொறி, திரும்ப திரும்ப கதைக்கிறன் எண்டு ஏசாதீங்க. இவர் என்ன புருடா கதை கதைக்கிறார்? மூண்டு நாலு வருசத்துக்கு முதல் இஞ்ச வந்து, இந்தப் பெரிய பிள்ளைகள் இருக்குமா அக்கா. இல்லாட்டி இவரும் கொழும்பில இருந்தாரா என்ன?” என்று கவி கேட்டதே, சூர்யா உதயாவினுள்ளும்.
“அவையள் என்ர பிள்ளைகள். எங்களுக்குக் கலியாணம் நடந்து இண்டுதான் ஒரு வருசம்.” என்ற டேமியனுக்கு, கவி மீது பயங்கரமான கோபம். உறுத்து விழித்தான்.
“என்ன அண்ணா சொல்லுறீங்க?” உதயாதான்.
“உண்மைதான் மா. மிலான் வந்ததில இருந்து எங்கட தோட்ட வீட்டிலதான் இருந்தவே. அதிலதான் அவாவத் தெரியும்” என்றவன், பியங்கா பற்றிச் சுருக்கமாகச் சொன்னான்.
“கல்யாணியும் நானும் விரும்பித்தான் கலியாணம் செய்தனாங்கள். இத எல்லாம் இப்ப உங்களிட்டச் சொல்லுறது கூட, அவா ஏமாத்திட்டா எண்டு கோபப்பட்டு உங்கட நாட்கள வீணாக்கக் கூடாது எண்டுதான்.” சூர்யாவின் பார்வையைத் தாங்கிச் சொன்னவன், “இதான் விதி போல சூர்யா. இந்தக் கணம், கல்யாணி குடும்பத்தோட எவ்வளவு நிறைவா மகிழ்ச்சியா இருக்கிறா. நீங்களும் அப்பிடித்தான். வேற என்ன வேணும் சொல்லுங்க.” என்று அவன் எழ, விசுக்கென்று எழுந்த சூர்யா டேமியனை இறுகக் கட்டிப்பிடித்திருந்தான். அவன் உடல் அழுகையில் குலுங்கியது .
“தாங்க்ஸ்” திரும்ப திரும்பச் சொன்னான். எதற்கு என்று டேமியன் வினவவில்லை. “எப்பவும் நீங்க இப்பிடியே இருக்கோணும்.” என்றான், சூர்யா. அதுவரையும் உள்ளே இருந்த அழுத்தம் வடிய நிம்மதியாக உணர்ந்தான், டேமியன்.
“இனி இஞ்ச இருந்து போக மாட்டிங்களே? தயவு செய்து அப்பிடி ஏதும் செய்யாதீங்க. மூண்டு நாளும் நிண்டுட்டுப் போகோணும்.உங்களுக்கு பிரச்சினை இல்ல எண்டா எங்கட வீட்டுக்கும் வந்திட்டுப் போகோணும்.” என்றவனை மரியாதையாகப் பார்த்தான், சூர்யா.
“மனம் நிறைஞ்சு இருக்கு டேமியன். என்னை மன்னிச்சிரச் சொல்லி உங்கட கல்யாணிட்டச் சொல்லி விடுங்கோ! பாப்பம், இன்னொரு முறை இந்தப்பக்கம் வந்தால் கட்டாயம் வீட்டுக்கு வாறம்.” என்று சொல்ல, கணவனையே பார்த்து நின்ற உதயா, கசிந்த விழிகளைத் துடைத்துக்கொண்டே முறுவலித்தாள்.
“மூண்டு நாளும் இஞ்ச தான் அண்ணா இருப்பம்.” என்று சொல்லியே டேமியனுக்கு விடை கொடுத்தாள்.

