நட்சத்திரா – 6

கோடைக்காலம் ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி கனடா சென்றிருந்தார்,கிறிஸ்டினா. அவர் மகளுக்குக் குழந்தை பிறக்க இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்கள் அங்குதான்.

முதல் பிள்ளை பிறந்த நேரம் கண்ணில் கட்ராக்ட் அறுவைச்சிகிச்சை செய்திருந்தார். அதோடு, இங்கும் சிசிலியா குழந்தை. அதுவே செல்ல இயலவில்லை. இம்முறை,  பிள்ளைகள் மூவருமே  வளர்ந்திருந்தார்கள். தத்தம் வேலைகளைத் தாமே செய்துகொள்வார்கள். அதையும் விட, டேமியன் பொறுப்பாகக் கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கையும் வந்திருந்தது.

மனைவியின் இழப்புக்கு மருந்திட வேலை வேலை என்று, அதுவொன்றே குறியென இறுகித் திரிந்தவன் ஆச்சே! இப்போது பழையபடி மாறிக்கொண்டிருக்கிறான். நிதானமும் சற்று இளக்கமும் தெரிகிறது. கூடுதலாக நான்கு வார்த்தைகள் நின்று நிதானித்துக் கதைக்கிறான். இடையிடையேனும் பிள்ளைகளோடு சேர்ந்தமர்ந்து உணவு உண்ணத் தொடங்கியிருக்கிறான். மலர்வை  மறந்திருந்த அவன் உதடுகளில் விரியும் சிறு முறுவலில் பெற்ற தாயாய்  மனம் குளிர்ந்து போகிறார், கிறிஸ்டினா. 

இறப்பும் பிறப்பும் இயற்கை. வெளிப்படையான உண்மையும் கூட. அதில், விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்,  பிறப்பைக் கொண்டாடித் தீர்த்து விடுகிறோம். அப்படி, இறப்பை  இலகுவில்  ஏற்க முடிவதில்லை. அதுவும் அன்பு கொண்டவர்களால், உற்றவர்களால்  சகித்துக்கொள்ளவே  முடிவதில்லை. இதில், அகாலமான இறப்பு ஏற்படுத்தும் தாக்கம் வீரியமானதுதான்.  இருந்தாலும் சகித்து, அதைக்கடந்து வரவே வேண்டும். இது எஞ்சிய வாழ்வுக்குக் கட்டாயமாகிறது. அதிலும் எம்மில் தங்கிச் சில உயிர்கள் வாழ்கிறார்கள் என்றால், மிகவும் அத்தியாவசியமும் ஆகிறது. 

டேமியன் அதை நன்கு உணர்ந்திருந்தான். நாளாந்தம் சிறிதேனும் குழந்தைகள் மூவருக்குமாக நேரம் ஒதுக்கும் வழக்கைத் தொடரத் தொடங்கியிருந்தான்.

 கூடுதல் உதவியாகச் சுமதியும் கல்யாணியும் இருக்கிறார்களே! கிறிஸ்டினா நிம்மதியாகப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

பாடசாலைகளில் கோடை விடுமுறைக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. அப்பப்போ, பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றுவிட உதவி தேவையென்றால் கிறிஸ்டினாதான் கல்யாணியிடம் கேட்பார். இப்போது அது டேமியன் வேலையாகி இருந்தது. 

அது மட்டுமின்றி, காலையில் வீட்டில் நிற்கும் அநேக நேரங்களில் பிள்ளைகளைத் தேடிச் சென்றுவிடுவாள் கல்யாணி. அவர்கள் பாடசாலைக்குத்  தயாராகுவதைப் பார்த்துக்கொள்வாள். காலையுணவை ஆயத்தப்படுத்தியும் வைப்பாள். 

அப்படியான நேரங்களில், உணவகம் செல்லத் தயாராகி வரும் டேமியன்,  அவளுக்கும் தனக்குமாகக் கோப்பி கலந்தெடுப்பான். வெண்ணெய் வாசமடிக்கும் க்ரோசன்ட்  வேறு வெதுவெது சூட்டில் தயாராகிவிடும்.

ஆரம்பத்தில், “நான் இப்பதான் குடிச்சனான், வேணாம் டேமியன்.” என்று, மறுத்தாள்தான். அந்த மறுப்பைச் சிறு முறுவலோடு எதிர்கொண்டிருந்தான், அவன். 

“இப்ப அதுக்கென்ன? பரவாயில்ல, என்னோட சேர்ந்து  ஒரு கப் குடியுங்கவன்.” என்றும் இருந்தான்.

ஒரு பத்து நிமிடம் தான், ஆறுதலாக  எதிரெதிரே அமர்ந்திருந்து பொதுவான அளவளாவலுடன் சூடான கோப்பியை  உறிஞ்சியபடி,வெதுவெது க்ரோசன்டை  உண்பதை  வெகுவாகவே ரசித்தாள், கல்யாணி. 

வருடக்கணக்கில் முட்டு முட்டென்று தன்னுள் தானே அடங்கிச் சுருங்கிக்கிடந்தவள், அவள். சூர்யாவுடனான பழக்கத்திற்குப்பின், நட்பென்று கூட தேவையற்று எவருடனும் பழக்கம் வைத்துக்கொள்ள முனையவில்லை. அது, டேமியன் விடயத்தில் உடைபட்டிருந்தது. 

தானும் தாயும் என்று தம் உலகைச் சுருக்கியிருந்தாள். அப்படி, சின்னஞ்சிறு கூட்டில்  வாழ்ந்தவளை, அவளையும் அறியாதே வெளியில் இழுத்துவிட்டிருந்தான், டேமியன். 

அவனும் திட்டமிட்டு என்றென்றெல்லாம் செய்த வேலையில்லை. அவளுடனான கதை பேச்சுகள் இலகுவாக அமைந்திருந்தது. அதிலும் இருவரின் மனத்திலும் இருந்த வலியும் வேதனையும் சிறு இதத்தையும் பெரிதாக இரசித்ததில் அங்கொரு அழகிய பிணைப்பு மலர்ந்துவிட்டிருந்தது.

ஆரம்பத்தில் இயல்பாகத் தொடங்கிய அச்சில நிமிடங்கள் புத்துணர்வு தருவதை உணர்ந்துகொண்டான்,டேமியன். அதுவே, சந்தர்ப்பம் வாய்க்கையில் எல்லாம் அதைத் தவறவிடாதிருக்க விரும்பினான்.

இப்படியிருக்கையில், பெரிய மகள் பபிதாவின் பத்தாவது பிறந்தநாள் வந்தது. பியங்காவின் இழப்பின் பின் பிள்ளைகளின் பிறந்தநாள் என்று இல்லை, எவ்விதமான விசேசமான கொண்டாட்டங்களும் அந்த வீட்டில் நடந்ததில்லை. சிறு விடயம் என்றாலும் மிகவும் ரசிப்போடு ஒழுங்கு செய்து உறவு, நட்புகள் என்று அழைத்துக் கலகலப்பவள் நினைவு அதற்கு  அனுமதிக்கவில்லை. 

 வகுப்பில், சக பிள்ளைகளின் பத்தாவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குச் சென்று வந்தாள், பபிதா. அப்போதும் தன் பிறந்தநாளையும்  செய்ய வேண்டும் என்று டேமியனிடம் கேட்கவில்லை. 

அந்தப் பொறுப்புணர்ச்சிக்கு, சின்ன வயதாக இருந்தாலும் நடப்பறிந்து நடந்து கொள்ளும் பாங்கிற்கு  மதிப்பளிக்க விரும்பினான், டேமியன். வீட்டில் வைத்தே சேர்ப்ரைசாக கொண்டாட எண்ணினான். கல்யாணியோடு கதைத்தான். கை கொடுக்க நான் தயார் என்றுவிட்டாள், அவள்.  

கிறிஸ்டினாவிடம் சொன்னான். மனைவியின் இழப்பில் அமிழ்ந்து கிடந்திருந்து  மீண்டு வருகிறான் என்ற மகிழ்வு, அவருக்கு. இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்று ஒன்று ஒன்றையும் சொன்னார்.

அதன்படி, பிறந்தநாளுக்கு மறுநாள் சனிக்கிழமை மாலை  ‘பார்பிகியூ பார்ட்டி’ ஒழுங்கு செய்தார்கள். அவர்கள் வீட்டின் பின்புறத்தில் தான்.

கிட்டதட்ட பன்னிரண்டு பிள்ளைகள். அதைவிட இவர்களின் நெருங்கிய நட்புகளில் ஏழெட்டுக் குடும்பங்கள் என்று முப்பது பேருக்கும் மேலே வருவார்கள் என எதிர்பார்த்தார்கள். இரு குடும்பங்கள் மற்றும்  சுமதி, கல்யாணி தவிர மிகுதிப்பேர் இத்தாலி நாட்டினர்தான். 

முதல் நாளிரவு, சிலோன் டேஸ்ட்டில்  வைத்து இறைச்சி மற்றும் தேவையான உணவுகளைப்  பதப்படுத்தி வைக்கவிருந்தான், டேமியன்.

கல்யாணிக்கும் வைத்தியசாலையில் ஐந்து மணியோடு வேலை முடிந்துவிட்டது. தாயிடம்தான் வந்திருந்தாள். சிலமணி நேரம் தாயோடு சேர்ந்து வேலை செய்துவிட்டு இருவருமாக வீடு செல்வதாக ஏற்பாடு. 

சுறுசுறுப்பாக இருந்த சிலோன் டேஸ்ட்டின் சமையலறையில், பார்பிகியூக்கு   buffalo beef, மற்றும் இறைச்சி வகைகளைப்    பதப்படுத்திக்கொண்டிருந்தான், டேமியன். என்ன நடக்குது என்று வந்து பார்த்தாள்,கல்யாணி. Salmon,Sword fish இரண்டையும் தான் பதப்படுத்தி வைப்பதாகப் பொறுப்பெடுத்துக்கொண்டாள்.

சோளன் பிஞ்சுகள் (பேபி கோன்), குடைமிளகாய் போன்ற மற்றைய மரக்கறிகளைக் காலையில் செய்து கொள்ளலாம் என்று, தமக்குள் கதைத்தபடி இருவரும் வேலை செய்வதை பார்த்த, அங்கு வேலை செய்பவர்களுக்கும் தம் பழைய டேமியன் திரும்பிய உணர்வு.

டேமியனுக்கு கரட் கேக் நல்ல விருப்பம் என்றிருந்தார் கிறிஸ்டினா.அதோடு, பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த  சொக்லட் பிரவுணியோடு சேர்த்துச் சிற்றுண்டிகள் எல்லாமே கல்யாணி பொறுப்பு. அதுவும் சிறிலங்கன் வகைகள்தான். தானே வீட்டில் தயாரிப்பதாகச் சொல்லியிருந்தாள்.

அநேக ஆயத்தங்கள் முதல் நாளில் இருந்தே தொடங்கிவிட்டாள்.

“இண்டைக்கு எனக்கு அங்க அம்மாவேட செக்சனில பெரிசா வேலை இல்ல டேமியன்.  நான் இஞ்ச வச்சு உங்களுக்கு இடைஞ்சல் இல்லாம கரட் கேக் செய்யவோ?” விழிகளைச்  சுருக்கியபடி அவள் கேட்ட விதத்துக்கு முறைத்தான், அவன். 

“இல்ல, வீட்டில செய்தாலும் எங்கட ஓவன் சின்னன், உங்கட வீட்டுக்குத்தான் வரோணும். அதைவிட இஞ்ச …” அவன் ஏதாவது நினைத்துக்கொண்டாலும் என்று சொன்னவள், “நான் இந்த ஹவர்ஸுக்கு சம்பளம் எல்லாம் கேக்க மாட்டன். அதோட, கேக் சாமான்கள் எல்லாமே வாங்கிக்கொண்டு வந்திட்டன்.” வலு தீவிரமாக விளக்கம் கொடுத்தாள். 

மறுநொடியே,  அவள் தோளில் படீரென்று தட்டு ஒன்று  போட்டான்,அவன். 

எதிர்பாராது விழுந்த அடியில் திகைத்துப் போனாள், கல்யாணி. ஒருமாதிரியும் ஆகிற்று. அங்குமிங்குமாக விழிகளைச் சுழற்றியவள் டேமியனை முறைத்தாள்.

சுற்றி வேலையாக நின்றவர்கள் பார்வையிலும் வியப்புதான். இப்படித்தான் அவன். கலகலவென்று இருப்பான். இந்தச் சில வருடங்களாக, அதுவும் மனைவியின் இழப்பின் பின் ஆளே மாறிப்போயிருந்தானே! 

டேமியனோ, தன்னையுமறியாதுதான் தட்டியிருந்தான். அவளின்  முறைப்பு உறைத்த பின்னரே என்ன செய்தான் என்று விளங்கியது.

“ஓ …சொறி கல்யாணி… சொறி! உண்மையாவே பகிடிக்கு. இதெல்லாம் கேட்டுக்கொண்டு நிக்கிறீரே எண்டுதான்.” சமாதானமாகச் சொன்னான்.

அவன் முகத்தில் நிலவிய அந்தரமான உணர்வுகள் அவளுள் சிரிப்பைத்தான் உண்டு பண்ணின. சில நாட்களுக்கு முன்னர் வரை இவனைப் பற்றி என்ன எண்ணியிருந்தாள்? ஏதோ, சிங்கம் புலி என்ற கணக்கில் கர்ண கொடூரமாகவல்லவா நினைத்து வைத்திருந்தாள்.

“இல்லப்பா, நீங்க செய்யப்போறது எல்லாம் எங்கட வீட்டுக்குதானே? பிறகு வந்து சாமான்கள் எல்லாம் வாங்கிட்டன், அது இது எண்டு கொண்டு…போங்கோ, போய்ச் செய்யுங்க.” என்றான்.

“கேக் எண்டில்ல, உங்களுக்கு என்ன வேணும் எண்டாலும் என்னட்டக் கேக்காமலே இஞ்ச நீங்க செய்யலாம். ஆரும் என்ன ஏதெதெண்டு கேக்கப் போறதில்ல.” அன்போடு சொல்லிவிட்டு நகர,அவளுள் திகைப்பு முகிழ்ந்தது. தாய் ஆட்கள் நிற்கும்  பிரிவிற்குள் நுழைந்துவிட்டாள், கல்யாணி.

கேட்டுக் கேள்வி இல்லாமல் சூர்யாதான் நினைவில் வந்தான். அன்பையும் பரிவையும் நேசத்தையும் கலந்து கட்டி உணர்த்தியவனாச்சே! கண்கள் கலங்க வைத்தான். கூடவே, உதயாவும் நினைவில் வந்ததில் அந்த நினைப்புக்குத் தடா போட விரும்பினாள், கல்யாணி. 

சூரியன் ஒளிர்கையில் போட்டிபோட்டுக்கொண்டு, ஏன், சேர்ந்து கைகோர்த்தபடி ஒளிரும் பாக்கியம் நட்சத்திரங்களுக்குக் கிடைப்பதேயில்லை. அதற்கென்று, அவை, தம் இருப்பைத் தொலைப்பதில்லை, சூரிய வெளிச்சத்தில் தம்மையே தொலைத்துவிடுகின்றன. 

அந்த விண்மீன்கள் நிலைதான் அவளுக்குமோ! சூர்யாவோடு கைகோர்த்து, வாழ்வு முழுமைக்கும் செல்லும் கொடுப்பினையைத் தானே மறுத்துவிட்டாள். இருந்தாலும் இத்தனை வருடங்கள் கடந்தும் அவன் நேசத்தில் தான் தினம் தினம், கணத்துக்குக் கணம் தொலைந்து கொண்டிருக்கிறாள். அந்த நேசத்தின் வாசம் புத்தம் புதிதாக அவளுள் இருக்கிறதே! 

‘இது பச்சைத் துரோகம் சொல்லிப்போட்டன். இன்னொரு பெண்ணின் கணவன் அவன்.’ என்று, மனம் எவ்வளவோ இடித்துரைத்தாலும் அவளே விரும்பினாலும் அந்த நினைவுகளைத் தொலைத்துக்கட்ட முடியவே இல்லை.  அவள் விருப்பங்கள் எதுதான் நடந்திருக்கு.

விடாது தொடர்ந்து தொல்லை செய்தான், சூர்யா. இடையிடை மூக்கை உறிஞ்சிக்கொண்டே கேக் தயாரித்த மகளைப் பெருமூச்சோடு பார்த்தபடி தன் வேலையில் சுழன்றார், சுமதி.

 அருமையான மனிதன் சூர்யா, தன்னால் அல்லவா அவனுடனான உறவை முறித்தாள். அவரால் என்றைக்குமே சீரணிக்க முடியாத வலி அது. மகள் ஒற்றையாக நிற்க நிற்க அத்தனை  குற்றவுணர்வில் துடித்துக்கொண்டிருக்கிறார். அவர் நெஞ்சம் செல்லரித்துப் போவது  வெளிப்பார்வைக்குத் தெரியாதே! மகளின் நல்வாழ்வு ஒன்றுதான் அவருக்கு மீட்சியே!

அவளை, சூர்யாவின் நினைவுகளிலிருந்து வெளியில் கொண்டுவந்து இன்னொரு வாழ்விற்குள் ஈடுபடுத்தும் வழி அவருக்குத் தெரியவில்லையே! கையாலாகாத அன்னை என்ற உணர்வின் கொடுமை அவரை வாட்டி எடுத்தபடியிருந்தது. 

உங்களுக்கு நான் எனக்கு நீங்களே போதும் அம்மா என்பாள், கல்யாணி. அவருக்கு அது போதாது என்று எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டார். மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் என்ற உறவுகளுக்காக அவருள்ளம் ஏங்குகிறதே. மகள்தான் கேட்கிறாள் இல்லையே!

வோஸ் ரூம் சென்று, கலங்கிச் சிவந்துவிட்ட முகத்தை அழுந்தக் கழுவிட்டு வந்தார், சுமதி.

 “என்னம்மா, ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றபடி எதிர்ப்பட்டான், டேமியன்.

அவனிடம் அதையிதைச் சொல்லிச் சமாளித்துவிட்டு வந்தாலும் அவன் பார்வை அவர் முதுகைத் துளைத்தது. 

error: Alert: Content selection is disabled!!