நட்சத்திரா 9 – 2 

அவள் அமைதியாகத்தான்  அமர்ந்திருக்கிறாள். இருந்தாலும் அந்த அருகண்மை தருகிற இதம் இருக்கே! நசுங்கிக் கிடந்த இவன் உள்ளத்துக்கு நிறையவே ஆறுதல் தந்து ஒத்தடம் கொடுக்கிறது. இதை, இவ்வளவு நேரத்திற்குப்பின், இப்போதுதான் அவனால் உணர்ந்துகொள்ளவே முடிந்தது. 

கல்யாணியை ஆழ்ந்து பார்த்தான். அவள் பார்வை இருளுள் எதையோ துளாவிக்கொண்டிருந்தது. அவள் மட்டில் தான் உணர்ந்த எதையுமே, அவள் உணர்ந்துகொள்ளவில்லை என்று புரிந்தது, அவனுக்கு.

ஏக்கம், எதிர்பார்ப்பு, பிரிவின் வலி என்று எல்லாம் கலந்து கட்டி நெடிய மூச்சாக விடுபட்டது. எழுந்துகொண்டான். 

பிள்ளைகள் யார் என்று கேட்டாள், பதில் சொல்லவில்லை. இப்போ எழுகிறான். கல்யாணி தானும் எழ முயன்றாள்.

 “ கோப்பி வேணுமா கல்யாணி.  நான் எடுத்துக்கொண்டு வரப்போறன், உங்களுக்கும் கொண்டுவாறன் என்ன?” என்றுகொண்டே, அவள் கைக்குள் பொத்துப்பட்டுக் கிடந்த கோப்பையை விடுவித்துக்கொண்டு உள்ளே நடந்தான், அவன்.

ஐந்து நிமிடங்களில் இருவருக்குமே சுட சுடக் கோப்பியோடு வந்தான்.

“பிள்ளைகள் மூண்டு பேரும் என்ர அண்ணனிட.” அவள் கேள்விக்கான பதிலைச் சொன்னவன், முகம் பாறை போலிருந்தது. 

அதிர்வில், அவன் நீட்டிய  கோப்பியை வாங்கிக்கொள்ளும் நினைவற்றுப் பார்த்திருந்தாள், கல்யாணி.

தன் கதிரைக்கருகில் ஒரு கோப்பையை வைத்துவிட்டு, “நம்பேலாமல் இருக்கா கல்யாணி?” என்றவன், “கோப்பியக் குடிங்க!” அவள் கரத்தைப் பிடித்துக் கோப்பையைக்  கொடுத்துவிட்டு அமர்ந்தவன், கோப்பியை உறிஞ்சிக்கொண்டே கதைத்தான்.

“ஜெரோம் …அவன்தான் என்ர அண்ணா. இலங்கைக்கு போயிட்டு வரேக்க, பாத்து லவ் பண்ணித்தான் கலியாணம் செய்து அவவ இஞ்ச கூப்பிட்டான். அடுத்தடுத்து மூத்த பிள்ளைகள் ரெண்டு பேரும் பிறக்கும் வரை எல்லாம் நல்லாத்தான் போனது. பிறகு, அவாவுக்கு இஞ்ச பிடிக்கேல்ல. இலண்டன் போகக் கேட்டு ஒரே பிரச்சின.” என்றவனுக்கு, அதற்குமேல் சொல்லப் பிடிக்கவில்லை போலும். முகம் கோபத்தில் இறுகிக்கிடக்க, கோப்பியைக்  குடித்துக்கொண்டிருந்தான். 

“என்ன சொல்லுறது கல்யாணி, இப்ப ரெண்டு பேரும் ரெண்டு பக்கமா இலண்டன், அவுஸ்திரேலியா எண்டு போய்ட்டினம். தனியாவும் இல்லத் தெரியுமா? இடைக்க, இவே மூண்டு பேரும் வேண்டாத பிள்ளைகளாகிட்டினம்.  தங்கட மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தடையாம்.  உதறியாச்சு. பிறந்ததில இருந்து இஞ்ச அம்மாவோட இருந்தவேதானே…அப்பிடியே இருந்திட்டினம். பிறகு, நானும் பியங்காவும் முறையாத்  தத்து எடுத்தனாங்க.” என்றவனுக்கு, அதற்கு  மேலும் அந்த இருவர் பற்றிக் கதைக்க விருப்பம் இல்லை.  

“பச்! விடுங்க டேமியன். நான் ஒரு கணம் கூட அவே உங்கட பிள்ளைகள் இல்ல எண்டு நினைக்கேல்ல. அதிலும் சின்னவளிண்ட சாயல்  அப்பிடியே உங்கட தான்.” ஆதரவாகக் கதைத்தாள், கல்யாணி. அதுதான் அவனுக்கும் தேவையாக இருந்தது.

“ஜெரியிலும் எங்கட சாயல் தான். பபிதா..பச். நானும் ஜெரோமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான், உருவத்தில் மட்டும்.” கசப்பான முறுவலோடு சொல்லிக்கொண்டான்.

“ஓ”என்றவள், “ கல்யாணி” என்று வந்த தாயின் குரலில் கலைந்தாள். அப்போதுதான் சுற்றம் உணர்ந்தாள். கீழ் வானின் சிவப்பைப் பார்த்துவிட்டு, “ விடியப்போகுது கல்யாணி!”  என்றான், டேமியன்.

வேலைக்குச் செல்லவென்று எழுந்த சுமதி,  மகளைக் காணவில்லையே என்றுதான் வந்து பார்த்தார்.  அங்கோ, அவள் இவ்வளவு நேரமாக டேமியனோடு கதைத்துக் கொண்டிருந்தாளா? சுமதிக்கு, நம்பமுடியாத அளவுக்கு பெரும் வியப்பாக இருந்தது.  

“போயிட்டு வாறன் டேமியன்.” என்று ஓடி வந்தவளை ஆராய்ச்சியாகப் பார்த்தவர், “தூங்கவே இல்லயாம்மா?” என்றதற்கு மேல் எதைக் கேட்பது என்று தெரியாது தடுமாறினார்.

“கதைச்சுக்கொண்டு இருந்திட்டம் மா. இண்டைக்கு லீவு தானே. நான் உங்களக்  கூட்டிக்கொண்டு வர வருவன் சரியா. தூங்கப் போறன்.” என்றுவிட்டு, கதை வளர்க்காது செல்பவளைப் பார்த்து நின்றார், சுமதி. 

அதுவரை பார்த்து நின்றுவிட்டு உள்ளே சென்றான் , டேமியன். இதுநாள் வரை இருந்த மன அழுத்தம் மிகவுமே குறைவானது போலிருந்தது, அவனுக்கு. உறக்கம் என்ற உணர்வேயில்லாது ஜொக்கிங் உடைக்கு மாறியவன் பாதையில் இறங்கி நிதானமாக ஓடத் தொடங்கினான்.

error: Alert: Content selection is disabled!!