நித்திலப் பேரொளி-10

ஆழ்ந்த நிசப்தத்தை அள்ளிக் கட்டிக் கொண்டது அந்த அறை.  ஊசி விழுந்தால் கூட கேட்கும் பேரமைதி.  இருவரது இரு வேறுபட்ட தீவிரமான உணர்ச்சிப் பிரவாகத்தை தன்னில் வரித்துக் கொண்டு விழுந்து கிடந்தது அந்த அமைதி.

நித்திலா மறுப்பாள் என எதிர்பார்த்துத் தான் இருந்தான் ஆதேஷ், ஆனால்  திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லும்போது அவள் கண்களில் வந்து போன வலியும், திரண்டிருந்த கண்ணீரும் அவள் சொல்ல விரும்பாத அல்லது சொல்ல முடியாத ஏதோவொரு விஷயத்தை உள்ளே அடக்கி இருப்பதாக நினைத்தான்.

” நித்திலா, உங்களுக்கு மறுக்க எல்லா அதிகாரமும் இருக்கு.  ஆனா, திருமணமே வேண்டாம்ன்னு சொல்ற அளவு என்ன உங்க வாழ்க்கையில் நடந்ததுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?  சாரி, உங்க பர்சனல் ஸ்பேஸில் நுழையிறதா நினைக்காதீங்க.  வேற யாரையாவது…நீங்க விரும்பி அது நடக்காமல் போயிருக்கா?”  படபடக்கும் மனதை மறைத்துக் கொண்டு தயங்கிக் கொண்டு  கேட்டான்.

“ஹும்…யாரையும் விரும்பக் கூடிய சூழ்நிலையில் நான் இல்லை சார்” மறுப்பாக விரக்தியோடு  தலையசைத்தாள்

“வெளியில் சொல்ல முடியாத காரணங்கள் கூட இருக்கலாம் சார்,  சாரி என்னால் இதுக்கு மேல…வேணாம் சார் முடியாது” அவளில் திரண்டிருந்த கண்ணீர் வழிந்து விட, பதறிவிட்டான் இவன்

“ஹேய்…நித்திலா காம் டவுன் மா.  நான் ஒரு ஸ்டுப்பிட், ப்ளீஸ் அழாதீங்க. சாரி ரியலி சாரிம்மா” என்றவன் அவளின் அருகில் ஒரு தண்ணீர் குவளையை வைத்தான்.  மனது என்னவோ போல் ஆகிவிட்டது ஆதேஷுக்கு.

கன்றிச் சிவந்து போன முகத்தைத் துடைத்துக் கொண்டவள் நீரை எடுத்து மெதுவாக அருந்தினாள்.

“நான் போகலாமா சார்?” மெல்லிய குரலில் நித்திலா கேட்க இவன் சரியென தலையாட்டினான்.

விறுவிறுவென எழுந்து போய்விட்டாள் எதிலிருந்தோ தப்பித்து ஓடும் புள்ளிமான் போல,  அவன் முகம் யோசனையை தன்னில் வடித்துக் கொண்டது.

தனது ஓய்வறைக்கு வந்த நித்திலா குமுறிக் குமுறி அழுதாள், விட்டால் இன்றே தன் கண்ணீர் சுரப்பிகளை கரைத்து விடுபவள் போல் அத்தனை அழுகை.

—————————–

அமைதியாக தெளிந்த நீரோடையாக இருக்கும் குளத்தில் கல் எறிந்தது போல் ஆனது நித்திலாவின் மனது.

மகாபாரத வாசுதேவனிடம் சங்கு, சக்கரம், வில், வாள் மற்றும் கதை ஆகிய ஐந்து பொருட்கள் இருக்கும்.  குருஷேத்திரத்திற்கு முன்பு  தருமனும், துரியோதனனும் தனித்தனியே சந்தித்து எங்களுக்கு நீங்கள் உதவியாக இருக்க வேண்டும் எனக் கேட்டனர்.  அதற்கு வாசுதேவன், துரியோதனா, நான் ஏற்கனவே பாண்டவர்களுக்கு உதவுவதாக வாக்குக் கொடுத்துவிட்டேனே, என்ன செய்வது என்று கேட்க, சரி கிருஷ்ணா நீ ஆயுதம் எதுவும் ஏந்தி எங்களுக்கு எதிராக போர் புரிய மாட்டாய் என வாக்குக் கொடு என்று கேட்க, இறைவனும் கொடுத்தார்.

ஆனால் வாசுதேவன் தன் சங்கையே ஆயுதமாகப் பயன்படுத்துவான் என துரியோதனன் அறியாமல் போனான்.  போரில் தனது எஜமானனின் வெற்றியை அறிவிக்க சங்கு ஊதும் உரிமை தேரோட்டும் சாரதிக்குத் தான் உண்டு.  அர்ஜுனனுக்குச் சாரதியாகப் போன கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம்  சங்கை எடுத்து ஒவ்வொரு முறை ஊதும் போதும் ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் மாண்டனர் என புராணம் கூறுகிறது.

இதற்கு சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் என்று உவமை கூறுவார்கள் நம் முன்னோர்கள்.  நித்திலாவின் மனது ஆதேஷ் தன் காதலைச் சொல்லும் வரை அமைதியாக இருந்தது, அதன் பிறகு ஊதிக் கெடுத்த கதையானது.  அதன் பலன் பெண் முகத்தில் பொலிவிழந்து உலவிக் கொண்டிருந்தாள்.  அவளது முகவாட்டம் ஆதேஷையும் வாட்டியது என்பதும் உண்மை.  அவள் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதில் தன்னை வருத்திக் கொண்டிருக்க, வட்டத்தை பிளந்து அதில் உள்நுழைந்து அவள் துயரத்தைப் போகவியலாது இவனும் மறுகினான்.

ஆங்கிலத்தில் ருமினேஷன் அல்லது அசைபோடுதல் என்பது ஒருவரின் எதிர்மறை எண்ணங்கள், கடந்தகாலத்தில் நடந்து போன தவறுகள் அல்லது மன உளைச்சல் தரும் உணர்வுகளை மீண்டும் மீண்டும் செயலற்ற முறையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் பழக்கத்தைக் குறிக்கும் ஒரு உளவியல் சொல் ஆகும்.

இந்த அசைபோடுதல் என்னும் நம் பழக்கம் நடந்து போனவைகளை கடந்து வர முடியாமல் திரும்பத் திரும்ப அதிலேயே உழன்று கொண்டு இருப்பதால் நம் மனதை ஆரோக்கியமற்றதாக அது மாற்றும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.  இந்த வகையான மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்களது சிந்தனை பெரும்பாலும் எதிர்மறையாகவே யோசிக்கும், மேலும் எதிர்காலத்தின் மீது பிடிப்பற்று இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது.

நித்திலா இத்தகைய தீவிரமான மன உளைச்சலில் சிக்கி தன்னை மட்டுமல்ல தன் தாயையும் வருத்தினாள்.  வாழ்வில் நடந்த எல்லா விஷயங்களையும் கடந்து அதிலிருந்து வெளி வர முடியுமா என்றால் அது நடந்த நிகழ்வுகளையும், நிகழ்வுகளைச் சந்தித்த நபர்களையும் பொறுத்தே அமையும்.  நம்மால் இத்தகைய தீவிர மன உளைச்சலில் இருந்து வெளி வர முடியாது போனால், மனநல மருத்துவத்தை நாடுவது சாலச் சிறந்தது.

ஆதேஷ் நித்திலாவிடம் கேட்டு இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.  மதியம் இவன் வந்து உணவு அருந்தும் நேரத்தில் வந்து உணவு உண்பதைக் கூட நித்திலா தவிர்த்தாள்.  காலையில் ஆதேஷ் குடிலுக்கு வரும் பொழுது நேருக்கு நேர் பார்த்து காலை வணக்கம் சொல்வதோடு சரி, தேவைக்கு மேல் ஒரு வார்த்தை அவளிடமிருந்து வருவதில்லை என்றானது.

ஆனால், தன்னுடைய வாழ்க்கைக்கு இது மட்டும் போதும் என அவள் வகுத்துக் கொண்ட மனதின் கட்டுப்பாட்டிலிருந்து அவளே அறியாது வெளி வரத் துவங்கினாள்.  ஆதேஷின் கண்ணியம் நிறைந்த செயல்பாடுகள் அவளை அசைத்துப் பார்த்தது.  சிறிது சிறிதாக அவன் பால் ஒரு ஈர்ப்பை உணர்ந்தவள், தன்னால் அவனது காதலை ஏற்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம் என்னும் கழிவிரக்கத்தில் வந்து நின்றாள்.

ஆதேஷ் இவளைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அன்றைய நாளுக்குப் பிறகு நித்திலாவைத் தொந்தரவு செய்யவில்லை.  ஏதோ மிகுந்த துயரத்தில் இருக்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டவன் சில நாட்கள் ஒதுங்கி இருக்க முடிவு செய்தான்.

அன்று முன்மாலையில் சேரமான் குடும்பத்தின் இளைஞர் படை குடிலை முற்றுகை இட்டிருந்தது.  அவர்கள் வருவதற்கும் நித்திலா மாலை நேர சிற்றுண்டி படையலை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது.

இங்கு பிரபலமாகிவிட்ட சிறுதானிய உணவுவகை பற்றி  ஏற்கனவே அறிந்திருந்ததால்,  நித்திலாவைக் கண்டவுடன் நயனா, பிருத்வி மற்றும் ஜான்வி மூவரும் வந்து ஆர்வமாக சூழ்ந்து கொண்டனர்.

“ஹலோ, மிஸ்.மில்லட், நான் பிருத்வி, ஆதேஷ் அண்ணாவோட தம்பி.  எப்டி இருக்கீங்க?” மிக இயல்பாக பிருத்வி  தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள

“ஹாய் பிருத்வி, பைன். நீங்க?” நித்திலா புன்னகைத்தாள்

“நலம் நலம், இது என் அத்தை மகள் மதனா மந்திரிகுமாரி மலையேறு மகாநாச்சியார்” சிரிக்காது மதனாவை அறிமுகப்படுத்த

“இவ்வ்ளோ பெரிய பேரா?” அரச குடும்பங்களில் நீளமான பெயர்கள் சாத்தியம் என்பதால் நித்திலா நம்பிவிட்டாள்.

“உன்னை கொல்லப் போறேன் டா இடியட், அதெல்லாம் இல்லை நித்திலா, நான் மதனா..மதனா மட்டும் தான் என் பேருக்கு தலையும் இல்லை வாலுமில்லை” நயனா பிருத்வியை முறைத்துக் கொண்டே பேச

“ஹாஹாஹா…. பட் அந்த மலையேறுதல் நல்லா இருக்கு” சிரித்தாள் பெண்

“அடடே நீங்க அப்ப நம்ம ஆளு” என்றவன் நித்திலாவுக்கு ஹை பை கொடுக்க சிரித்துக் கொண்டே அவளும் செய்தாள்

“நித்திக்கா நான் ஜான்வி தி கிரேட்”

“ஆமாம் இந்த பிருத்வி தி கிரெட்டோட இரட்டை”

“டேய், நான் தான் முதலில் சொன்னேன், நான் தான் கிரேட், அம்மா வயிற்றிலிருந்து இப்போ வரை இவன் கூட ஒரே தொல்லை. யூ நோ நித்திக்கா, அம்மா வயிற்றில் இருக்கும் போது கை காலை வச்சிட்டு சும்மாவே இருக்கமாட்டான்.  எப்ப பார்த்தாலும் என்னை இடிச்சு தள்ளிட்டு ஒரே அக்கப்போர் இவன் கூட. அப்பப்பா நான் பட்ட கஷ்டமிருக்கே சொல்லி மாளாது” ஜான்வி அலுத்துக் கொள்ள

“ஏதே..இது என்ன வடிவேல் டயலாக்கை வாய்ஸ் மாத்தி சொல்ற மாதிரி இருக்கு”

“ஹாஹாஹா…” இவர்களின் அலப்பறையில் அத்தனை சிரிப்பு நித்திலாவுக்கு

“ஆரம்பிச்சிட்டீங்களாடா” கேட்டுக் கொண்டே அங்கு லிங்காவோடு ஆதேஷ் வந்தான்

அவனைக் கண்டதும் கப் என வாயை மூடிக் கொண்ட நித்திலா தன் வேலையில் கவனமானாள்

“ஹேய் அத்தான்..” நயனா வழக்கம் போல் சென்று ஆதேஷின் முட்டிக் கைக்கு மேலே தன் கை கொண்டு பிணைத்து  நின்றாள்.

“சரி எல்லாரும் என்ன சாப்பிடுறீங்க, இன்னைக்கு குதிரைவாலி ஸ்பெஷல். குதிரைவாலி கஞ்சி, குதிரைவாலி பாசிப்பருப்பு தோசை, குழிப்பணியாரம், காய்கறி சேர்த்த கிச்சடி அண்ட் லட்டு” என ஆதேஷ் குதிரைவாலியில் இன்றைய உணவு வகைகளை அடுக்கினான்

“வாவ்…இவ்ளோ செய்ய முடியுமா இதில்?” ஆச்சரியமாக ஜான்வி கேட்க

“ம்ம்ம்..குதிரைவாலியில் காய்கறி போட்டு பிரியாணி கூட செய்யலாம்” புன்னகைத்தாள் நித்திலா

“நித்திக்கா எனக்கு குழிப்பணியாரம்” ஜான்வி சொல்ல

அவரவர்க்கு வேண்டியதை சொன்னார்கள்.  ஆதேஷ் மட்டும் அமைதியாக நிற்க

ஒரு நிமிடம் தயங்கியவள் அவனுக்குப் பிரியமான அவன் விரும்பி உண்ணக் கூடிய குதிரைவாலி கிச்சடியை ஒரு தட்டில் வைத்துத் தந்தாள் நித்திலா

மனதில் சிரித்துக் கொண்டவன் மௌனமாக உண்ணலானான்.

“அத்தான் எனக்கு ஒரு வாய் தாங்க நானும் டேஸ்ட் பண்ணனும்” என நயனா கேட்க

அதேஷ் எடுத்த அதே நேரத்தில் லிங்காவும் தன் தட்டிலிருந்து கையில் ஒரு கவளம் எடுக்க, நயனா தனது பிரத்யேக இங்கி பிங்கி போட்டு  இறுதியில் ஆதேஷிடம் வாங்கிக் கொள்ள

லிங்கா முறைத்தான் என்றால் நித்திலா இருவரையும் ஒரு வருத்தம் தோய்ந்த விழிகளோடு ஏறிட்டாள்

இதை இரு ஜோடிக் கண்கள் கவனித்து விட்டது. ஒன்று நயனா மற்றொன்று ஆதேஷ்.

மன்னன் நித்திலாவை ஆழ்ந்து பார்க்க, அவனை நிமிர்ந்து ஒரு நிமிட நேரத்திற்கும் குறைவாக பார்த்தவள் தலையை குனிந்து வேலை செய்வது போல் பாவனை செய்தாள் பெண்.  இந்த பொசசிவ்நஸ் யாரை விட்டது இந்த உலகில்.

தன் கீழுதட்டைக் கடித்து வந்த சிரிப்பை அடக்கினான் கள்ளன்.

“ஹலோ… என்னதிது தஞ்சையே இங்க வந்து தாண்டவமாடுது” என கூட்டத்தைப் பார்த்து கேட்டுக் கொண்டே சலீம் வர

“சலீம் பாய், வாங்க ஒரு கால் குறையுது” ஜான்வி சிரிக்க

“கை தானே குறையனும், இல்ல சாப்பிட வாய் குறையனும், எதுக்கு கால் குறையனும்?” நயனா தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டாள்

“ம்ம்ம்ம்… நான் தாண்டவம்ன்னு சொன்னேன் தானே, அது தான் ஜான்விக்கு  கால் குறையுதாம். அம்மா என்னை கலாய்க்கிறாங்களாம்” சலீம் சிரிக்க

பிறகு அந்த இடத்தில் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டது.

அனைவரும் நின்றபடியே கதை அளந்து கொண்டு உணவு உண்டனர்.

நித்திலா முழுமையாக கலந்து கொள்ள முடியாமல் நாயனாவும் ஆதேஷும் சிரித்துக் கொண்டு வாரிக் கொண்டிருப்பதையே பார்த்து வருந்தினாள், அவளது முக மாறுதல்களைக் கவனித்துக் கொண்டே இருந்த ஆதேஷ், ‘சரி சொல்ல மாட்டா, ஆனா இந்த பொறாமை மட்டும் படுவாளாம் இடியட்’ மனதில் செல்லமாகத் திட்டிக் கொண்டான்

வெகு நேரம் நின்றதால் கால் வலிக்கிறது என்று சொல்லி நயனா நகர அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் உணவுக் கூட்டத்தின் உள்ளே சென்றனர் ஆதேஷ் தவிர.

தான் உண்ட தட்டை அருகில் இருந்த குப்பையில் போட்டவன் கைகளைக் கழுவிக் கொண்டு நித்திலா அருகில் அவளின் பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் துணியில் துடைத்தான்.

கைகள் இரண்டையும் தன் கால்சராயில் நுழைத்துக் கொண்டவன், “நயனா பிறந்தப்ப எனக்கு ஐந்து வயது. நான் தான் பாட்டியுடன் சேர்ந்து முதன்முதலில் தூக்கினேன்.  அவ என் கண்ணுக்கு எப்பவும் குழந்தை தான். அவளுக்கும் நான்.. அப்பா… அம்மா… அண்ணா…இப்டி என்ன வேண்டுமானாலும் நினைச்சுக்கோ,  வேற ஒண்ணுமில்ல நிலா.  இன்னும் கொஞ்ச நாளில் லிங்காவோட சகதர்மினி ஆகிடுவா. அப்போ கூட எங்க உறவு இப்படித்தான் இருக்கும்.  நிலா எனக்கு ஸ்பெஷல்…நிலா மட்டும் தான் ஸ்பெஷல்…புரியுதா நான் சொல்றது…ம்ம்ம்?” அவளையே ஆழ்ந்து பார்த்து கேட்டவன் சிறு புன்னகையோடு நான் உன்னைக் கண்டுகொண்டேன் பெண்ணே என சொல்லாமல் சொல்லி நகர்ந்தான்

பெண் மூச்சு விட மறந்து சிலையானது.

error: Alert: Content selection is disabled!!