நித்திலப் பேரொளி-15

கருவறைக்குள் உள்ள  பிரம்மாண்ட பிருஹத்-லிங்கத்தை கண்கொட்டாது பார்த்து நின்றான் ஆதேஷ்.

‘பெருவுடையாராகத் தானே இருந்தாய், எப்போ பிரகதீஸ்வரன் ஆனாய்?  இப்போ எனக்கு பிரகதி ஆயிட்ட’ மௌனமாக சிரித்துக் கொண்டவன் சன்னதியை விட்டு வெளியே வந்தான்.

சுற்றுப் பிரகாரத்தை வலம் வந்தவன், அதன் சுவர்களைக் கைகளால் வருடினான், அதிலுள்ள தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட எண்ணற்ற கல்வெட்டுகளைக் கண்டு பிரமித்தவன், ‘அப்பா…என் முப்பாட்டா அருள்மொழி வர்மா, எவ்ளோ எழுதி வச்சுருக்கிற,  உன்னோட நிர்வாகம், பொருளாதாரம், சமூக அமைப்பு மற்றும் மத நடைமுறைகள் பற்றிய மதிப்புமிக்க வரலாற்றுத் தகவல்களை அழகா எழுதிட்டுப் போயிட்ட, ஹ்ம்…இதைப் படிச்சு புரிஞ்சிக்கக் கூட எங்களால் இப்போ முடியல’ பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.

மேலை நாடுகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் வரலாறுகள் அழகாகவும் மிகவும் ஆழமாகவும் குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.  நமது முன்னோர்கள் யார், நமது வேர்கள் எங்கிருந்து வந்தது என்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.  அப்படித்  தெரிந்துகொண்டால் மட்டுமே நம் நாட்டின் மீதும், நம் மொழியில் மீதும் கர்வமும், நிமிர்வும் இருக்கும்.

நம் முப்பாட்டன்கள் சோழ, சேர, பாண்டியர் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இரண்டு பக்கத்தில் மட்டும் கற்பிக்கும் நம் கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.  இரண்டு பக்கங்களில் அடங்கிப் போகும் அளவுக்கு மட்டுமா அவர்கள் வாழ்ந்தார்கள்?!

‘ஹம்ம்ம்….பெருவுடையானே…பல்லாயிரம் வருஷம் நீ நிலைச்சு நிற்கணும், உன்னை என் சந்ததி பார்த்து பெருமைப்படணும்.  நிற்பாய்….பார்த்துப் பார்த்து என்ன தொழில்நுட்பம் கொண்டு கட்டினானோ என் முப்பாட்டன், எப்போ உன் வீட்டுக்கு வந்தாலும் பிரமிக்கத்தான் வைக்கிற’ நினைத்துக்கொண்ட ஆதேஷ் நடையை எட்டிப் போட்டான்.

தனது வாகனத்தை நித்திலாவின் வீட்டின் முன் வந்து நிறுத்த, பெண் கூடத்திலேயே அமர்ந்திருந்தாள்.

இவனைக் கண்டதும் முகம் பிரகாசமாக எழுந்து வந்தவள், “உங்க பிரகதியைப் பார்த்தாச்சா?” புன்முறுவல் இவளில்

ஆமாம் என ஆதேஷ் புன்னகைத்துத் தலையசைக்க

“எப்டி வீடு தெரிஞ்சது? நான் அட்ரஸ் அனுப்பலையே?” நித்திலா இவனை நிமிர்ந்து பார்க்க

“ஹாஹாஹா…. பட்சி சொல்லுச்சு நிலா” சிரிப்பு இவனுக்கு

“திருடன்…” என்று புன்னகைத்தவள் “வாங்க” என்று முன்னே நடந்தாள்

தலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்தான் மன்னன்.

“வாங்க தம்பி, வாங்க” ஹாலுக்குள் நுழைய நித்திலாவின் அன்னை தேவகி வந்துவிட்டார்.  ஆதேஷ் வருவது பற்றி மட்டும் நித்திலா சொல்லி இருக்க, யோசனையோடு மகளைப் பார்த்தவர், எதுவும் தொழில் தொடர்பாக இருக்கும் என ஊகித்துக்கொண்டார்.

“வணக்கம்மா” என்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

“உட்காருங்கம்மா…” என அருகிலிருந்த நாற்காலியைக் காட்ட, தேவகி தயங்கிக்கொண்டு அமர்ந்தார்

நித்திலா ஒரு குவளையில் குடிப்பதற்குத் தர எடுத்துக் கொண்டவன், “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.  எனக்கு நித்திலாவைப் பிடிச்சிருக்கு.  கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறேன்.  என் வீட்டில் எல்லாருக்கும் இதில் சம்மதம்.  என் குடும்பம் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க.  என் பாட்டி நாளைக்கு உங்களுக்குக் கூப்பிடுவாங்க.  ஆனா அதுக்கு முதல் உங்களுக்கு இதில் மகிழ்ச்சியான்னு எனக்குத் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன்.  அது தான் நானே வந்து பேசிடலாம்ன்னு வந்திருக்கேன்” ரத்தினச் சுருக்கமாக நிமிர்வோடு சம்மதம் வேண்டினான்.

என்ன நடக்கிறது எனப் புரியாது மகளைப் பார்க்க, பெண்ணின் தலை தரையை நோக்கியது.

மகளது உடல்மொழியில் அவளுக்கும் இதில் விருப்பம் இருப்பது தெரிய, “தம்பி….நீங்க பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவங்க.  நாங்க ரொம்பவும் சாதாரணமானவங்க தம்பி.  இதெல்லாம் சரியா வராதுங்க”

“எங்க குடும்பத்திற்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் தான்னு சொன்னேன்மா.  அதனால் அது பற்றி நீங்க பயப்பட வேண்டாம்”

“இல்ல தம்பி…உங்களுக்கு….நான் எப்படி சொல்ல…தம்பி நித்திக்கு…” சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துவிட, கண்ணீர் பெருகியது தாய்க்கு. பெண் கேட்டு வந்து நிற்பவனிடம், தன் மகள் வன்கொடுமைக்கு ஆளானவள், அதனால் அவளுக்கு மனநலனில் பிரச்சனைகள் இருந்தது என்று ஒரு தாயால் எப்படிச் சொல்ல இயலும்.

அவரது நிலையைப் பார்த்து ஆதேஷுக்கு மனம் வலித்தது, “நித்திலா எல்லாம் சொல்லிட்டாம்மா. எனக்கு அதனால் பிரச்சனை ஒன்றும் இல்லை. இது என்னைத் தவிர யாருக்கும் தெரியப் போவதில்லை”

“தெரியுமா? தெரிஞ்சு எப்படி தம்பி… வேண்டாம்ய்யா, உங்களுக்கு உங்களுக்கு ரொம்ப உயர்ந்த மனசு.  நீங்க நல்லா இருக்கணும்ய்யா.  வேண்டாம். வேண்டாம்” என மறுப்பாக கண்ணீர் வழிய தலையாட்டி மறுத்தார்.

“ஏன் நிலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்க மாட்டனா?  நம்புங்கம்மா, அவளை நான் நல்லா பார்த்துப்பேன்.  அவளும் என்னைக் கண் கலங்காமல் பார்த்துப்பா…என்ன நிலா சரியா?” நித்திலாவைப் பார்த்து இவன் கேட்க, இவளும் புன்னகைத்தாள்.

அவர்களின் அன்னியோன்யம் கண்டு, முக்கியமாக மகளின் மாற்றம் கண்டு தேவகிக்கு மனம் நிறைந்துபோனது.

சடாரென ஆதேஷ் காலில் விழுந்த அன்னை, “ஐயா, அந்தப் பெருவுடையான்தான்ய்யா நீங்க. எம் பிள்ளை பார்க்கக் கூடாத அசிங்கமெல்லாம் பார்த்து, படக்கூடாத கஷ்டமெல்லாம் பட்டு, அவ வாழ்க்கை அஸ்தமிச்சுப் போச்சுன்னு நான் கவலைப்படாத நிமிஷம் இல்லையே. என்ன கொடுமை அனுபவிச்சாளோ எம் பிள்ளைன்னு நினைச்சு நினைச்சு நொந்து கிடந்தேன்ய்யா. என் பிள்ளை நினைவில்லாம… உண்ண உடுக்கக்கூடத் தெரியாத மரமாகிட்டான்ய்யா அந்தப் பாவி. நான் நிம்மதியாத் தூங்கி பத்து வருஷம் ஆச்சு சாமி. சாமி மாதிரி வந்து கேட்கிறீகளே, நான் என்ன சொல்லய்யா… நான் என்ன சொல்ல” எனக் கதறிவிட்டார்.

பதறியவன் குனிந்து அவரைத் தூக்கி நாற்காலியில் அமர வைத்து ஒரு கையைப் பிடித்துக்கொண்டான். அவனின் மனமும் மிகவும் கலங்கிப்போயிருந்தது. அந்தத் தாயின் கண்ணீரை எதைக்கொண்டு துடைக்க இயலும் என நினைத்தவன் அமைதியாகிவிட்டான்.

தேற்ற முடியாத அளவு தேவகியின் துக்கம் இருந்தது. மெல்ல மெல்லத் தன்னை சமன் செய்துகொண்டவர், “வீட்டுக்குச் சொல்லாமல் செய்து நாளைக்குத் தெரிய வந்தால், நாங்க ஏமாற்றிக் கட்டிட்டதா ஒரு சொல் வரும்ய்யா. வேண்டாம். நீங்க கேட்டதே மனசு நிறைஞ்சு போச்சு தம்பி. மன்னிச்சுக்கோங்க” தேவகிக்கு உண்மையை மறைத்து ஒரு திருமணத்தை நடத்தி விட விருப்பமில்லை.

அவரை ஆழ்ந்து பார்த்தவன், “என் வாழ்க்கைக்கு அவள் மட்டும்தான். உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். அதுவும் போக…” என்று சில தகவல்களைப் பகிர்ந்தான்.

அதைக் கேட்ட நித்திலாவுக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டன; இவனது நற்குணங்கள் எங்கிருந்து வந்தன என்று இப்போது நன்கு உணர்ந்துகொண்டாள்.

பேசி முடித்துவிட்டு எழுந்தவன், “அம்மா, நான் குடிலுக்குத்தான் போறேன், நிலாவைக் கூட்டிட்டுப் போகலாமா?” என அனுமதி வேண்டினான்.

பெரியவர்கள் பேசும் வரை வேண்டாம் எனச் சொல்ல வாய் எடுத்தவர், மகளின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தில் சரியென்று தலையாட்டினார்.

இருவரும் குடிலுக்கு வந்துகொண்டிருந்தனர். ஆதேஷ் ஏதோ சிந்தையின் வலையில் சிக்குண்டவனாய்க் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

அவனது முகத்தைப் பார்ப்பதும் பிறகு சாலையைப் பார்ப்பதுமாக நித்திலா இருக்க, கவனித்துவிட்டவன், “என்ன நிலா, ஷூட் இட் அவுட்” என்றான் இவள் புறம் திரும்பி.

“அது வந்து… உங்க கை காயம் சரியாயிடுச்சா?” என்றாள், கட்டு அவிழ்க்கப்பட்டு பிளாஸ்டர் போடப்பட்டிருந்த ஆதேஷின் கையைப் பார்த்துத் தயங்கிக்கொண்டு.

“அப்பா… எவ்வளவு சீக்கிரம் கேட்டுட்டா என் நிலா” இவன் புன்னகைக்க,

“இல்ல… அன்னைக்கே பார்த்துட்டேன், பட் கேட்க ஒரு தயக்கம். என்னாச்சு?” என்றவளைத் திரும்பி ஆழ்ந்து பார்த்தவன்,

“ம்ம்… சேரனிடம் கையில் ஏன் காயம்னு கேட்டால், அது வீரத்திற்கு இழுக்கு இல்லையா?” அத்தனை நக்கல் இவனில்.

“ஆமா, மன்னர் போருக்குப் போய் விழுப்புண் வாங்கிட்டு வந்தார் பாருங்க” பெண் நொடிக்க,

“ஹாஹாஹா… போர்தான், ஆனா வாய்ப்போர், அதில் வந்த வீரப்புண்”

“ஷ்ஷு… உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது” பெண் அலுத்தாள்.

“சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது மன நிம்மதி தரும் நிலா” என்றான் ஆழ்ந்த குரலில்.

நடந்த நிகழ்வைச் சொல்லி தன் நித்திலத்தை வருத்த இவனுக்கு விருப்பமில்லை. நாளை விக்ரமன் நிலாவைப் புரிந்துகொள்ளலாம், ஏன் தேவையின்றி இதைப் பகிர வேண்டுமென அமைதி காத்தான்.

“ஏதோ யோசனையா இருக்கீங்க… என்னாச்சு?” மெல்லிய குரலில் நித்திலா கேட்க,

ஊப் என உதடுகள் குவித்து ஊதிக்கொண்டவன், “நிலா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். பட் நீ எப்படி எடுப்பனு தெரியல” என இடைவெளி விட்டான்.

“நிலா, நான் எம்பிஏ பெங்களூரில் இருக்கும் ஐ.ஐ.எம்-ல்தான் படிச்சேன். நான் பர்ஸ்ட் இயர் படிக்கும்போது சுஜிதான்னு ஒரு மலையாளப் பெண் படிச்சா. ம்ம்… முதல்ல ஒரு நல்ல பிரண்டாதான் இருந்தோம். பட் கொஞ்ச மாதத்திற்குப் பிறகு அவள் ப்ரொபோஸ் பண்ணினா, எனக்கும் பிடிச்சிருந்தது. மறுக்க பெருசா ரீசன் இல்ல. அந்த ரிலேஷன்ஷிப் ஒரு ஆறு மாதம் தொடர்ந்தது. ஆனா ரெண்டு பேருக்கும் ஒத்து வரல. நான் எவ்வளவுக்கு எவ்வளவு தன்மையானவனோ, அதே நேரத்தில் என் கொள்கையில் ரொம்பப் பிடிவாதமானவனும் கூட. அவளைக் குறைவா சொல்றேன்னு நினைக்காத. எனக்கு அவள் மட்டும்தான் முக்கியமா இருக்கணும், அவளைத் தாண்டி என் சிந்தனை இருக்கக் கூடாது, மத்தவங்ககிட்ட பேசக்கூடாது… இப்படி ஆரம்பிச்ச பிரச்சனை என் குடும்பத்தில் உள்ளவங்க கூடப் பேசுறதுக்கும் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சா, ஒரு கட்டத்தில் மூச்சு முட்டிப்போச்சு. வாழ்க்கை முழுவதற்கும் நினைச்ச ஒரு விஷயத்தை நானே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். அவளுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் என் மேல உள்ள அன்பு சுமையா இருந்திருக்கலாம். நான் வேண்டாம்னு சொன்னதும் அவளும் விலகிப் போயிட்டா. நிலா, என் வாழ்க்கையில் நடந்த எதுவும் உனக்குத் தெரியாமல் இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். புரிஞ்சுக்கிறயா?” முகம் தீவிரத்தைத் தத்தெடுத்திருந்தது ஆதேஷுக்கு.

இவளிடம் பதில் இல்லை, மௌனமாக அமர்ந்திருந்தாள்.

“நிலா… என்ன அமைதியா இருக்க? பேசமாட்டியா?” வண்டியை ஓரமாக நிறுத்தியவன் இவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.

“ஓய்… என்னாச்சு? பிடிக்கலையா நான் சொன்னது?” இவள் முகத்தின் அருகில் குனிந்து பார்த்துக் கேட்க, பெண்ணின் கண்களில் கண்ணீர்.

“ஹேய்… நிலா, ஏன் அழற?” இவனுக்கு மனதில் பயப்பந்து ஒன்று உருண்டது.

“ஏன் அந்தப் பொண்ணுக்கு சரின்னு சொன்னீங்க, எனக்காகக் காத்துட்டு இருந்திருக்கலாம் இல்ல” அவனது முந்தைய காதலைக் கேட்டதும் நித்திலாவின் மனதில் ஏதோ ஒருசொல்லொண்ணா அழுத்தம், அதை மறைத்து ஆதேஷிடம் வம்புக்குக் கேட்டாள்

“ஹாஹாஹா..அது சரி.  இப்டி ஒருத்தி மக்காச்சோளப் புட்டு கொடுத்து என்னை மயக்குவான்னு நான் என்ன கனவா கண்டேன்?  என்ன டி கேள்வி இது? ” அத்தனை சிரிப்பு இவனுக்கு

அவனது முகத்தில் பொங்கும் ஆனந்தம் கண்டவள், “உங்க முதல் காதல் நானா இருந்திருக்கலாம்” என்றாள் மெல்லிய குரலில்

சட்டென இவன் சிரிப்பு நின்றது, “நிலா நீ நினைக்கிற மாதிரி இது அமர காதல் எல்லாம் இல்லை. இன்பேக்ட் நாங்க நிறைய சண்டை தான் போட்டோம்.  உன் ஆள் ரொம்ப நல்லவன் எல்லாம் இல்லை, என் கோபத்தை நீ விக்ரமனிடம் தான் கேட்கணும்” சீண்டினான் இவளை

“அது யாரு விக்ரமன்?” நித்திலா புரியாது பார்க்க

“ம்ம் மாமனார் பேரு தெரியாம மாமன் மகனை கரெக்ட் பண்ணிட்டு இருக்க நீ” புன்னகை இவன் உதடுகளில்

“அச்சோ..ரொம்ப வம்பு உங்களுக்கு, ஒரு நிமிஷம்…மாமா தான் வேதாளமா?” நித்திலா முறைக்க

“ஹாஹாஹா…” பதில் சொல்லாது சிரித்தான் இவன்.

error: Alert: Content selection is disabled!!