நித்திலப் பேரொளி-19

அதிகாலை ஐந்தரை மணி, மெல்லிருள் போர்த்திய வானம் ஆதவன் வருகைக்கான ஆயத்தங்கள் செய்தபடி இருந்தது.

இளையவர்கள் இருக்கும் தளத்தில் இருந்த உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தான் ஆதேஷ்.

அந்தக் கூடத்தின் கதவு மெல்லத் திறக்கப்பட, நித்திலா மெதுவாகத் தலையை எட்டி உள்ளே பார்த்தாள்.

“குட் மார்னிங் நிலா” என்றான் குளித்து உலர்ந்தும் உலராத கூந்தலைத் தளரப் பின்னி அழகிய சில்க் காட்டன் புடவையில் புதிதாய்ப் பூத்த மலர் போலிருந்த மனைவியைக் கண்டு முகம் கனியப் புன்னகைத்து.

“மார்னிங்” என்றவள் உள்ளே வந்து ஓட்டக் கருவியின் அருகில் நின்றாள்.

“ம்ம், நித்திலம் பளிச்சுன்னு இருக்கு, அதிகாலை நீராடல் ஆசையோ நிலாக்கு?” மூச்சு இறைக்க ஓடிக் கொண்டே கேட்டான்.

“ஆமா, பழக்கம் தான். நான் கீழே போகவா? எல்லாரும் எழுந்திருச்சிருப்பாங்களா… நான் சமையலறைக்குப் போகலாமா?” இவள் தயங்கிக் கொண்டு கேட்டு அனுமதி வேண்டி நிற்க,

அவளையே ஆழ்ந்து ஒரு நிமிடம் பார்த்தவன், ஓடிக் கொண்டிருந்ததை மெதுவாக நிறுத்தினான்.

மெஷினிலிருந்து இறங்கி இவள் அருகே வந்தவன், “இந்தச் சிப்பிக்குள்ள முத்து வசிக்கிறதுக்கு ஏதாவது வரையறை இல்ல கட்டளை இருக்கா நிலா?” என்றான் மனைவியின் தாடையை ஒரு விரலால் தொட்டு நிமிர்த்தி.

“இது உன் வீடு நிலா. உனக்கு எப்படிப் பிடிச்சிருக்கோ அப்படி இரு. இந்த வீட்டோட மூத்த மருமகள் நீ, பொறுப்பு அதிகம் டி தேனே. போ, மகளிர் கூட்டம் சமையலறையில் தான் முற்றுகையிட்டிருக்கும். முக்கியமா கோப்பெருந்தேவி கோலோச்சும் இடம் அங்கதான்” என்றான் சிரித்துக் கொண்டு. இவளிடமும் ஒரு புன்னகை.

“நிலா, இன்னும் அரைமணி நேரத்தில் பிரகதியைப் பார்க்கப் போறேன், வரயா?”

சரியென தலையசைத்தவள் உதடுகளில் ஒரு அழகான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

படிகள் இறங்கி இவள் கீழே வந்து கொண்டிருக்க, எதிரே விக்ரமன் தனது நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு மேலேறிக் கொண்டிருந்தார்.

இவள் மனதில் ஒரு படபடப்பு. இவருக்கு அவள் வருகையில் பிடித்தமில்லை என்பது நித்திலா நன்கறிந்த ஒன்றே. ஏதாவது சொல்லி விடுவாரோ என இவள் தயங்கிக் கொண்டு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டாள்.

முகத்தில் எந்தவித உணர்வுகளும் இல்லாமல் அவளைக் கடந்து மேலேறினார் விக்ரமன்.

இவள் பதற்றத்தில் ஒரு காலை படியில் வைக்காமல் தவறவிட, சற்று தடுமாறி “அப்பா” என்று விட்டு நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள அடுத்த படியில் மடங்கி அமர்ந்தாள்.

சட்டென திரும்பிய விக்ரமன் விரைந்து கீழிறங்கி வந்தார்.

“நடக்கும்போது கவனம் பாதையில் இருக்கணும். புதுசா வந்த பெண்ணைத் தனியா அனுப்பிட்டு மகாராஜா என்ன செய்றார்” எனக் கேட்டுக் கொண்டு அருகில் வந்தார்.

அவர் இவள் அருகில் வருவதற்குள் படக்கென எழுந்துவிட்டவள் ஒன்றும் பேசாது கைகளைப் பிசைந்து கொண்டு முகத்தில் ஒரு பயம் வந்து ஒட்டிக்கொள்ள, ஓர் அசௌகரியத்தோடு அமைதியாக நின்றாள்.

இவளது உடல்மொழியைப் படித்துவிட்டவர் என்ன நினைத்தாரோ, “பார்த்துப் போம்மா” என்று விட்டு மேலேறிச் சென்றுவிட்டார்.

விட்டால் போதுமென விடுவிடுவென இறங்கி இவள் வந்து ஒரு பெரிய ஹால் போன்ற அமைப்புக்குள் வர, “வாம்மா… இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் தானே” எனக் கேட்டுக் கொண்டு வசந்தா வர,

“இல்ல… இது பழக்கம்தான் எனக்கு” என்று புன்னகைக்க,

“எல்லோரையும் முறை சொல்லிக் கூப்பிடும்மா நித்தி, அத்தைன்னு சொல்லு” என்றார் வசந்தா இவளின் தாடையை உயர்த்தி.  திருமணம் முடிவாகிப் பல முறை நித்திலாவின் முறைகள் சொல்லிச் சொல்லாது பொதுவான பேச்சை கவனித்துக் கொண்டிருந்தவர், அதை இப்போது ஒரு குறிப்போடு மென்மையாகச் சுட்டிக் காட்டினார்.

“சாரி அத்தை. திடீர்னு வரல, இனி கூப்பிடுறேன்” என்றாள் இளையவள்.

“வா…” என அழைத்துக் கொண்டு போக,

அந்த விரிந்து பறந்து நீண்டு கிடந்த சமையலறை அதிகாலையிலேயே கலைகட்டிக் கொண்டிருந்தது.

நடுவே ஒரு மேசை போடப்பட்டிருக்க, சுற்றி இருக்கைகள் இருந்தன. அதில் ஒன்றில் இந்தச் சாம்ராஜ்யத்தின் ராணி நான்தான் என்று கூறாமல் கூறுவது போல் கோப்பெருந்தேவி அமர்ந்து கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

வசந்தாவும் நித்திலாவும் உள்ளே வர, “வாம்மா, என்ன குடிக்கற? வள்ளி, மருமகப் பொண்ணுக்கு குடிக்கக் குடு” என்று வேலை செய்யும் பெண்மணியைப் பணித்தார் பாட்டி.

அங்கு கிடந்த ஒரு நாற்காலியில் இவளைத் தன் அருகில் அமர்த்திக்கொண்டார்.

அந்த மேசையைச் சுற்றி வசுந்தரா, சங்கமித்ரா என மூத்த தலைமுறை கூடியிருக்க, அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை புரிந்தவள் தனக்குத் தரப்பட்ட காபியை வாங்கிப் பருகலானாள்.

“நித்தி, நீ நல்லா சமைப்பியாமே? உன் புருஷனுக்கு ஏக பெருமை அதில். ஒரு நாள் எங்களுக்கு சமைச்சுத் தா” சங்கமித்ரா கேட்க,

“நல்லா சமைப்பானான்னு நீங்க சாப்பிட்டுத்தான் சொல்லணும், பட் கண்டிப்பா சமைக்கிறேன் அத்தை” என்றாள் புன்சிரிப்போடு.

இப்படி இலகுவாகத் தங்கள் பேச்சில் இழுத்துக் கொண்டார்கள் பெண்கள்.

பெண்மணிகள் பேச்சு குடும்பம் பற்றியதாகவே இருக்க, இவளுக்கும் பிறரைப் புரிந்துகொள்ள இது ஏதுவாக இருந்தது.

குளித்து தயாராகி வெள்ளை வேஷ்டி, ஆகாய நிற முழுக்கை சட்டை அணிந்து கம்பீரமாக சமையல் அறைக்குள் நுழைந்தான் ஆதேஷ்.

வசுந்தராவின் அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டவன், “குட் மார்னிங் வசு, என்ன காலையிலேயே அந்த அப்பாவி வாயில்லா பூச்சி அருள்மொழியைப் பற்றி புரணி பேசுறயா” என்றான் அத்தையின் கன்னம் பிடித்துக் கிள்ளி.

அவன் கையைத் தட்டி விட்டவர், “முரட்டுப் பய, இங்க பாரும்மா நித்தி, உன் புருஷன்ட்ட சொல்லி வையி. வர வர கொழுப்பு கூடிட்டு போகுது. என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டால் கூட பொறுத்துப்பேன். என் புருஷனை ஒரு வார்த்தை சொன்னா பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை” என்றார் நித்திலாவைப் பார்த்து.

“பின் விளைவா? ஏன் கோபம் ஜாஸ்தியாகி அருள்மொழி காதைக் கடிச்சுட போறயா?” இவன் நக்கல் பேச.

“ஹாஹாஹா…” அத்தனை மலர்ந்த சிரிப்பு நித்திலாவில், அதைக் கண்டு ஆதேஷும் சிரிக்க.

“இல்ல என்ன நினைக்கிறீங்க, என்ன நினைக்கறீங்கன்னு கேட்கிறேன். புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்துகிட்டு ஜோடி போட்டு சிரிக்கிறீங்க” பொருமிக் கொண்டு வந்தார் அத்தை.

வசுந்தராவின் சிறுபிள்ளை போன்ற அலட்டலிலும், சிறியவர்களின் சிரிப்புச் சத்தத்திலும் அக்கூடம் ஆனந்தித்தது.

“விடு விடு வசு, நமக்குள்ள இதெல்லாம் பெரிய விஷயமா சொல்லு” என அவர் கன்னம் தொட்டுக் கொஞ்சிக் கொண்டவன், தனக்கு தரப்பட்ட பானத்தை அருந்திவிட்டு,

“கிளம்பலாமா நிலா” என்றான் மனைவியைப் பார்த்து.

“ம்ம்” என்றவள் எழுந்து கொள்ள.

“கிளம்பிட்டான், அப்டி என்னதான் இருக்கோ அந்த பெருவுடையார்கிட்ட” என வசுந்தரா அலுத்துக் கொள்ள.

“அருள்மொழியைக் கல்யாணம் பண்ணி இருந்தும், அந்த அருள்மொழி கட்டிய கோயிலில் என்ன இருக்குன்னு கேட்கிற” மருமகன் வம்பு வளர்க்க.

“வாயில் போடுவேன் போக்கிரி, போயிடு அந்த பக்கம்” அத்தை சிலிர்த்துக் கொண்டாள்.

அத்தை மருமகனின் இந்த வம்பும் அன்பும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அத்தனை மகிழ்வாக இருந்தது நித்திலாவிற்கு.

“பெரியவனே, கோவில் போயிட்டு, மருமக பொண்ணை தேவகியைப் பார்க்க கூட்டிட்டுப் போ, பாவம் மனுஷி தனியா கிடக்கா” என்றார் பாட்டி.

அந்த ஒரு சொல் நித்திலாவின் மனதில் அன்புப் பிரவாகத்தை நிறைய ஊற்றி நிறைத்தது.

தனது வாகனத்தை நிறுத்திய ஆதேஷ், மனைவியை அழைத்துக் கொண்டு கோவிலின் கோட்டையை நெருங்கினான்.

“நிலா, இந்தக் கோட்டை யார் கட்டினதுன்னு தெரியுமா?” என மனைவியிடம் வினவ.

தெரியாது என உதட்டைப் பிதுக்கினாள் பெண்.

தாடையைத் தடவிக் கொண்டவன், “அதுக்கு முதலில் தஞ்சையோட வரலாறு தெரியணும். விஜயாலய சோழன் முத்தரையர்களை வீழ்த்தி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். சோழர்கள் கிட்டத்தட்ட நானூறு வருஷங்கள் ஆண்டார்கள். அது பிறகு 13 ஆம் நூற்றாண்டில் சோழர்களை வீழ்த்தி பாண்டியர்கள் வந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர்கள் ஆண்டார்கள். 17 ஆம் நூற்றாண்டில் மராட்டியர்கள் ஆண்டார்கள். அப்படி நாயக்கர்கள் ஆளும்போது செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டதுதான் இந்த அகழியும் அதைச் சுற்றிய இந்த கோட்டையும். இந்த கோட்டை நுழைவு வாயில் இருக்கே, இதை மராட்டிய மன்னர்கள் கட்டினார்கள்” என்றவன் இவளது கையைக் கோர்த்துக் கொண்டு முன்னே நடந்தான்.

முதல் வாசலான கேரளாந்தகன் திருவாசலைக் (கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனை போரில் தோற்கடித்ததால் ராஜராஜன் சோழன் இப்பெயர் பெற்றார்) கடந்து இரண்டாவது திருவாசலான ராஜராஜன் திருவாசலுக்கு வந்தார்கள்.

அங்கிருந்த நந்தி மண்டபத்தைப் பார்த்ததும் நித்திலாவை அங்கு அழைத்துக் கொண்டு போனான். “நிலா, இந்த நந்தி பனிரெண்டு அடியில் இருக்கு. ஏன் தெரியுமா?” என்றான் மனைவியைப் பார்த்து.

“ஆங்… தமிழ் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு இருக்கிறதால இல்லையா?” என்றாள் பெண்.

“அப்படி ஒரு நம்பிக்கை இருக்கு. ஏன்னா, சிவலிங்க பீடம் பதினெட்டு, நம்ம மெய் எழுத்துக்களைக் குறிக்கும். கர்ப்பகிரகத்தை காத்து நிற்கக் கூடிய இந்த விமானம் இருநூற்று பதினாறு அடி, அதாவது உயிர்மெய் எழுத்தை சொல்லுது. சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் இருநூற்று நாற்பத்தி ஏழு அடி. ஸோ, தமிழ் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை” என்றவன் நந்தி தேவனின் பீடத்தில் ஏறினான்.

“இந்த நந்தியாரைக் கட்டினது நாயக்க மன்னர்கள். ஒரே கல்லால் எவ்ளோ அழகா செதுக்கியிருக்காங்க, இல்ல?” என்றவன், அங்குள்ள மேற்கூரை ஓவியங்களைக் காட்டினான்.

“என்ன ஒரு அற்புதமா தீட்டியிருக்காங்க” என சிலாகித்தாள் நித்திலா.

“சோழப் பாட்டனும் இதோ குட்டியா ஒரு நந்தி கட்டியிருக்கார் பாரு” என்று அருகில் இருந்த மற்றொரு நந்தியைக் காட்டியவன், பிறகு அவளை அழைத்துக் கொண்டு முகமண்டபம் வழியாக தன் பிரகதீஸ்வரரைத் தரிசிக்கச் சென்றான்.

“வாங்கோ வாங்கோ, என்ன ராணியையும் அழைச்சுண்டு வந்தாச்சா?” எதிர்ப்பட்ட ஐயர் இவர்களைக் கண்டு சிரித்து விட்டுப் போக.

சன்னதியில் சென்று நின்று கொண்டார்கள். ஓதுவார் தனது தேன் மதுரக் குரலில்,

“நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்நிமலர்நீ றணிதிரு மேனி” என மூன்றாம் திருமறைப் பாடலை மெய்யுருகி பாடிக் கொண்டிருந்தார்.

நித்திலா கண்கள் மூடி நின்று கொண்டாள். இந்தப் பாடல்களை ரசிக்க மதம் சார்ந்த நம்பிக்கை தேவையில்லை என நினைத்துக் கொண்டாள். அத்தனை ரம்மியத் துகள்கள் தூவி காற்றில் அலைந்து திரிந்தது இசை.

நமச்சிவாயம் வந்து இருவருக்கும் பிரசாதம் தர, வாங்கிக் கொண்டவர்கள் பிரகாரம் வழியைக் கடந்து வெளியே வந்து விமானத்தின் கோபுரத்தைப் பார்க்க, “நிலா, இந்த விமானத்தை தட்சிண மேருன்னுதான் சோழர்கள் அழைத்திருக்காங்க. ஐ மீன், அப்படித்தான் இங்க உள்ள கல்வெட்டுகள் சொல்லுது” என்றான்.

இவள் புரியாது பார்க்க, “அங்க பாரு, சிவனும் பார்வதியும் மேரு மலையில் அமர்ந்திருப்பது போல் இருக்காங்க, இல்லையா?” என கோபுரத்தின் உச்சியைக் காட்டினான்.

ஆம் என இவள் தலையசைக்க, “நிலாவும் ஆதேஷும் வனக்குடிலில் இருக்கிற மாதிரி” என்றான் புன்னகைத்து.

இவளிலும் புன்னகை அரும்பியது. “நிலா, இந்த மாதிரி நிறைய கோவில்களில் நம் முப்பாட்டன்கள் வாழ்ந்த வரலாறுகள் இருக்கு. அதெல்லாம் நம்முடைய பொக்கிஷங்கள் தெரியுமா? இந்த விமானச் சுவர்கள் முழுக்க கல்வெட்டுக்கள்தான் இருக்கு. இந்தக் கோபுரத்தில் அழகான கதைகள் சொல்லும் சிற்பங்கள் இருக்கு. ஆனா இது எத்தனை பேருக்குத் தெரியும்? போர் அடிக்கறானா ரொம்ப?” இவன் மனைவியை நோக்கி குனிந்து கேட்க.

“இல்ல, சொல்லுங்க. இதெல்லாம் கேட்க எனக்கும் பிடிக்கும் . அப்பா இருக்கும்போது சிலது சொல்லி இருக்காங்க, பட் இவ்ளோ விளக்கமா சொன்னதில்லை” என கண்களில் ஆர்வம் மிகப் பெண் கோபுரத்தைப் பார்த்தாள்.

“இப்போ எல்லாம் சொன்னா நேரம் ஆயிடும். எல்லாரும் சாப்பாட்டுக்கு காத்துட்டு இருப்பாங்க. விக்ரமன் என் தோளில் வேதாளம் மாதிரி தொங்கிடுவார்” என இவன் சிரிக்க.

அவன் கையைக் கிள்ளினாள் பெண். “வசும்மா சொல்ற மாதிரி வாய் உங்களுக்கு. அப்பாவை இப்டி சொல்வாங்களா?”

“ஹாஹாஹா” சிரித்தவன் இவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்.

தஞ்சை பெருவுடையார் கோவில் மாதிரி ஒன்றைக் கட்டுவதற்கு எத்தனை சிரமங்களைத் தாண்டி செய்திருப்பார்கள் நம் முன்னோர்கள். இதை மதம் சார்ந்த வழிபாட்டுத்தலமாகப் பார்க்காமல், நம் பண்டைய கட்டிடக் கலையின் பேரதிசயமாகப் பார்க்க வேண்டும். இத்தகைய அரிய பொக்கிஷங்களின் சுவர்களில் எழுதி அல்லது கீறல்கள் போட்டு சேதம் விளைவிக்கும் நம் பழக்கங்கள் நமது அறியாமையின் உச்சம் என்பதை நாம் உணரவேண்டும். இன்னும் பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் நம் பாரம்பரியங்கள் பார் முழுவதும் போற்றிப் புகழப்பட இத்தகைய வரலாற்று முத்திரைகள் மிக முக்கியம்.

 

error: Alert: Content selection is disabled!!