“உங்கட மருமகளுக்கு இப்ப என்ன கோவமாம்? தன்னடச் சொல்லேல்ல எண்டோ?” என்று கேட்டவர், பதிலை எதிர்பாராது, “குமார் எவ்வளவு நல்ல மனிசன்! அப்பிடிப்பட்டவரோட, சரி…கோவதாவம் வந்தா இப்பிடியா எடுத்தோம் கவிழ்த்தோம் எண்டு ஒரேயடியா அறுத்துக் கொள்ளுறது? அதும் இத்தின வருடங்களுக்கு! இந்த மங்கை என்ன மாதிரியான பொம்பள? சரியான அடங்காப்பிடாரி போல இருக்கே!” என்று சொல்லி முடிக்க முதல், “இஞ்ச பாருங்க பாட்டி, வேணாம் சொல்லிட்டன்!” சீறலுடன் வெளிப்பட்டாள், மகிழ்.
“மகிழ்! என்னம்மா நீங்க? இவ்வளவு நேரமா இந்த அறைக்கயா இருந்தீங்க? காணேல்ல எண்டு பதபதச்சுப் போய் நாங்க தேடிக் கொண்டிருக்க, ஒரு வார்த்த கதையாமல் இருந்தீங்களாம்மா?” மருமகளைக் கண்ட நிம்மதியோடு கண்டித்தார், ரத்னா.
“அவ்வளவு கொழுப்பு உங்கட மருமகளுக்கு! எல்லாரும் தலேல தூக்கி வச்சு, செல்லங்கொஞ்சிக் கெடுத்து வச்சிருக்கிறீங்களே!” விடாது கடிந்து கொண்டார், பர்வதம்.
“இஞ்ச பாருங்க பாட்டி, இவ்வளவு நாள்களும் நீங்க எதைச் சொன்னாலும் அமைதியாப் போறனான். அப்பிடி எப்பயும் இருக்க மாட்டன் சரியோ. அத வடிவா நினைவில வச்சிருங்க. என்ர அம்மா பற்றியெல்லாம் நீங்க கதைக்கத் தேவேல்லை. அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல!” கழுத்து நரம்புகள் புடைக்கச் சீறினாள்.
“ஓம் ஓம், விடிஞ்சா பொழுதுபட்டா உன்ர கொம்மா பத்திக் கதைக்கிறதுதான் என்ர வேல பார்! ஏதோ நல்ல புருசன் வாச்சும் வாழத்தெரியாத முட்டாள் எண்டு உண்மையச் சொன்னன், அவ்வளவும்தான்!” சலித்துக்கொண்ட பர்வதம் அத்தோடு நிறுத்தவில்லை.நேற்று முளைச்ச காளான் எனக்குக் கதை சொல்லுறதோ என்று, மனத்துள் வெகுண்டு போனார். உக்கிரமாக அவளை பார்த்தார்.
“இஞ்ச பார், சுமியோ கௌசியோ இதுவரைக்கும் எனக்கு முன்னுக்கு நிண்டு சின்னதாக் கூட குரல் உயர்த்திக் கதைச்சதில்ல. அந்தளவு மரியாத தெரிஞ்ச பிள்ளைகள். நீ… பார்…” அவள் தன் முன் நின்ற நிலையை மேலிருந்து கீழாக அளந்தார்.
“இந்தக் கத்துக் கத்துற. அதும் உன்ர மாமியும் நிக்கேக்க. கொஞ்சமும் பெரிய மனிசர மதிக்கத் தெரியாம வளந்திருக்கிற. அது எப்பிடி வரும்? அப்பா இல்லாமல் தாந்தோன்றியா வளந்தா இப்பிடித்தான் இருக்கும். உள்ளதச் சொன்னால் உனக்குக் கோபம் வேற வருது!” அவர் உதிர்த்த சொல்லம்புகள் பாய்ந்து வந்து தப்பாமல் குத்த, சுருண்டு விழாது எதிர்த்து நின்றாள், மகிழ். இதுவரை, பர்வதத்தின் பேச்சைப் பெரிது பண்ணாது விலகிப் போனவள், இன்றிருந்த மன அழுத்தத்துடன், அவர் தன் தாயைக் குறைசொன்னதும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டாள்.
பர்வதத்தை நெருங்கியவளைக் கரம் பற்றித் தடுத்தார், ரத்னா. “மகிழ், குஞ்சு, இஞ்ச பாரன.” முகத்தைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தார்.
“வார்த்தைக்கு வார்த்த கதைக்காதேயும் பிள்ள. உதய் உங்களத் தேடி எங்க எல்லாம் அலையிறாரோ? வாங்க , கோல் பண்ணிச் சொல்லுவம்.” அவளை, அவர்கள் அறைப்பக்கம் நடத்திச் செல்ல முனைந்தார். அவளோ, “என்ன விடுங்க மாமி…” ஒரே உதறலில் ரத்னா கரத்திலிருந்து விடுவித்துக் கொண்டவள், “ஓம், நான் தாந்தோன்றியா வளந்தவள் தான்! அதுக்கு இப்ப என்ன எண்டுறன் ?” பர்வதத்தை உறுத்து விழித்தபடி கேட்டிருந்தாள்.
“ஒண்ணுமே இல்ல தாயே! ஒண்ணுமே இல்ல. நீ எப்பிடி வேணும் எண்டாலும் இரு, போ! இந்த வீட்டில பிரச்சின வாற மாதிரி நடக்காத! இது கட்டுக்கோப்பான குடும்பம். பார், என்ர பேரன் இப்ப எங்க எண்டு இல்லாமல் அலைஞ்சு திரியிறான். இது அவனுக்குத் தேவையா சொல்லு பாப்பம். இதுக்குத்தான் எங்கட வீட்டுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட எண்டு சொன்னனான். இவே கேக்கேல்ல!” அதட்டலாகச் சொல்லிவிட்டு, மருமகளை முறைத்துக்கொண்டே, கீழே இறங்கப் போனவரை, தன் பேச்சால் நிறுத்தினாள், மகிழ்.
“நான் ஒண்டும் இந்த வீட்டுக்கு வந்தே ஆகோணும் எண்டு ஒண்ணும் தவம் கிடக்கேல்ல. இப்ப என்ன, நான் இந்த வீட்டுக்குச் சரிபட்டு வரமாட்டன் எண்டா ஒண்ணும் பிரச்சினை இல்ல, நான் இலங்கைக்கே போறன். எனக்கு அதில எந்தச் சிரமமும் இல்ல. ஆறுமாதமாக இவ்வளவு பெரிய விசயத்த மறைச்சுப் பழகினனீங்க இன்னும் எதை எதை மறைச்சு வச்சிருக்கிறீங்களோ ஆருக்குத் தெரியும்! இது சரியான நல்ல பழக்கவழக்கம் இல்லையா?” சிலிர்த்துக் கொண்டவளை, ஆற்றாமையுடன் ஏறிட்ட ரத்னாவுக்கு, கோபம் கூட வந்தது.
“மகிழ், என்னம்மா கதை இது! முதல் நீங்க உள்ள போங்க!” என்று, கண்டிப்பாக சொன்னவரையும் முறைத்தாள் அவர் மருமகள்.
“நீங்க சொன்னோன்ன கேட்டிட்டுத்தான் மற்ற வேலை பாப்பாள். உங்களுக்கும் ஒரு அற்ப ஆசைதான்!” என்று எள்ளலாகச் சொன்ன பர்வதம், “என்ர குஞ்சனுக்கு என்ன மாதிரி அருமையான பொம்பிளையாப் பாத்துக் கட்டி வச்சிருக்கலாம். இப்பிடி ஒரு வாய்க்காரிய கட்டி வச்சு, அவன்ட வாழ்க்கையில நிம்மதியா மகிழ்ச்சியோ இல்லாமல் செய்திட்டீங்களே!” புலம்பலாகச் சொல்லிக்கொண்டே நகர,
“அதான் சொன்னனே! நான் போயிருரன், உங்கட பேரனுக்கு நீங்க ஆசைப்படுற மாதிரி ஒரு பொம்பளையாப் பாத்துக் கலியாணம் செய்து நிம்மதியா வாழ வையுங்க!” வெடுக்கென்று சொன்னவள் மனம் கொதித்துக் கொண்டிருக்கே! இப்பவே வெளிக்கிட்டிரு மகிழ் என்று வேறு கூச்சலிட்டுக்கொண்டது ஆவேசம்.
“பின்ன, நீ போனா உன்ர அப்பன்காரன் மாதிரி கொட்டாவி விட்டுக்கொண்டு என்ர பேரன் திரிவான் எண்டா நினைச்சுக் கொண்ட ? குமார் ஒரு விசரன். நல்ல பொம்பளையாப் பாத்துக் கலியாணத்தக் கட்டிட்டுப் பிள்ளைகுட்டி எண்டு வாழ்ந்திருந்தா, இப்ப நீயும் உன்ர கொம்மாவுமா ஏங்கி ஏங்கி வயிறெரிஞ்சு போயிருப்பீங்க !” என்றவருக்கு, மகிழ் பதில் சொல்ல முதல், “பாட்டிஈஈஈஈ …” என்று உறுமியவாறு நாலெட்டில் மாடிக்கு வந்துவிட்டிருந்தான், உதய்.
கணவனைக் கண்டதும், எல்லோர் மீதிருந்த ஆத்திரமும் கோபமும் அவன் மீது குவிய, பார்வையில் நெருப்பையும் வெறுப்பையும் கலந்து கக்கினாள், மகிழ்.
“என்னடா பாட்டி? உன்ர பெஞ்சாதி கொஞ்சமும் மரியாத இல்லாமல் நிற்க வச்சுக் கேள்வி கேக்கிறாள். அவள்ட காதப் பொத்தி ரெண்டு இழு இழுக்காம என்ன முறைக்கிற?” என்றவர், “இப்ப ஏன் அவாவ முறைக்கிற?” உதய், தன் தாயைப் பார்த்து முறைக்க, அதற்கும் கேள்வி கேட்டவரின் அருகில் நெருங்கினான்,பேரன்.
“வேணாம் பாட்டி, நீங்க என்ன கதைக்கிறீங்க எண்டு உங்களுக்கே விளங்கேல்ல. அதால, இந்த விசயத்தில நீங்க ஒண்டுமே கதைக்க வேணாம் சரியா? அமைதியா உங்கட வேலையை மட்டும் பாருங்க!” இழுத்துவைத்த பொறுமையுடன் சொன்னவனை என்றுமில்லாதவாறு முறைத்தார், பர்வதம்.
“ஓமடா ஓம். இதும் சொல்லுவ , இன்னும் சொல்லுவ. உன்ர மனிசி என்ன கூத்து ஆடினாலும், இங்க ஆரும் வாயத் திறக்கக்கூடாது அப்பிடித்தானே?” மல்லுக்கு நின்றார், பெரியவர். அவருக்கு அவ்வளவு கோபம். மகிழ் முன்னால் வைத்துத் தன்னையல்லவா கண்டிக்க வருகிறான், பேரன். இனி அவள் அவரை மதிப்பாளா என்ன?
“உதய் போதும், இனி ஒரு வார்த்தை கதைக்க வேணாம் ராசன். தயவு செய்து இதோட விட்டிரு. மகிழக் கூட்டிக்கொண்டு உள்ளே போங்க குஞ்சன் !” கண்டிப்புடன் தாய் சொன்னதும், “இத உங்களிட்ட இருந்து கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல பாட்டி. உங்களுக்கு இவவப் பிடிக்கேல்ல எண்டா, அதின்ர அர்த்தம்…என்னப் பிடிக்கேல்ல எண்டுறது மட்டும் தான்.” கோபத்தோடு சொன்னவன், மனைவியையும் இழுத்துக்கொண்டு விருட்டென்று தம் அறைக்குள் புகுந்து கதவை ஒரே அடியில் சாத்தியிருந்தான்.

