பாலியல் வன்முறைச் சம்பவங்கள் சட்ட அமலாக்கத்துறையிடம் குறைவாகவே புகாரளிக்கப்படுவதால், பாலியல் தாக்குதலை அளவிடுவது எப்போதுமே ஒரு சவாலான காரியமாக நம் அரசுக்கு உள்ளது.
இந்த வழக்குகளில் மிக முக்கிய கோணம் ஒன்றும் இருக்கிறது, இந்தியாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக இழிவை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த துரதிர்ஷ்ட சம்பவத்திற்கு அவர்களே காரணம் என்று நம் சமூக அமைப்பு முறை அடிக்கடி குற்றம் சாட்டுவதால், நீதிக்கான அவர்களின் போராட்டமும் எளிதாக இருப்பதில்லை.
காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் விரோதமான சூழல்களை எதிர்கொள்வதாகவும், தங்கள் வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு அடிக்கடி வற்புறுத்தப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இருப்பினும், ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், நீதி என்னும் நிலையை எட்ட பல ஆண்டுகள் ஆகலாம். குறிப்பாக, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒவ்வொரு ஆண்டும் தீர்க்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை விடப் புதிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவை பெரும் தேக்கநிலையை எதிர்கொள்கின்றன. இது பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையில் மிகுந்த மன உளைச்சலைச் சேர்க்கிறது. இதனால், அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்தக் குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது குற்றவாளியின் குடும்பத்தினரிடமிருந்தோ வரும் அழுத்தத்திற்கு அடிபணிந்து விடுகிறார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவின் தேசிய குற்றப் பதிவேடுகள் பணியகத்தின் அறிக்கையின்படி 2024-ல் விசாரணைக்கு வந்த மொத்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2,06,777, அவற்றில் கடந்த ஆண்டுகளில் இருந்து நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,82,163, அதில் 2024 ஆம் ஆண்டில் விசாரணைக்கு அனுப்பப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 24,614, இதில் தண்டனை பெற்ற வழக்குகள் வெறும் 5,032. குற்ற நிரூபணம் செய்து தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் விகிதம் என்பது வெறும் 24.4% சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.
இன்னும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு பெண்ணோ அல்லது பெண் குழந்தையோ வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று அறிக்கைகள் சொல்கின்றன.
ஆதேஷும் நித்திலாவும் நிறைய ஆலோசித்து, கலந்து பேசி முடிவெடுத்த பின் மருத்துவ உளவியலாளர் சகாதேவன் முன் அமர்ந்திருந்தார்கள்.
“சொல்லுடா மருமகனே, என்ன இந்தப் பக்கம் உன் காத்து அடிக்குது” மருத்துவர் சகா கேட்க
“ம்ம்ம்… இந்த ஹாஸ்பிடல்ல ஏலத்திற்கு விடுறதா அழைப்பு வந்துச்சு, அது தான் வந்திருக்கேன்” என்றான் இடக்காக ஆதேஷ்.
“நான் நல்லா இருக்கிறது என்னைக்குடா உனக்கு பிடிச்சிருக்கு, துரோகி” நொடித்தார் சகா.
“ஹாஹாஹா.. பச்ச புள்ள கிட்ட லவ் லெட்டர் கொடுத்து விடும் போது, யாருக்குன்னு சரியா சொல்லி அனுப்பனும், அதை விட்டுட்டு அவள்ட கொடுன்னா, யாருன்னு நான் கண்டேன்?” என்றான் சிரித்துக் கொண்டே.
தன் நாற்காலியில் இருந்து விரைந்து எழுந்து ஓடி வந்த சகா, இவன் வாயைப் பொத்தி, “டேய் குடும்பத்தில் கும்மியடிச்சுடாதடா, உன் அத்தை என்னை டின் கட்டிடுவா” என்றார்.
“ஹாஹாஹா….. காமெடி மாமா உங்க கூட” அத்தனை சிரிப்பு இவனுக்கு.
திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டவர், “ஆமா காமெடி ஆக்கினதே நீதானே” என்றவர்.
“என்னம்மா புது மருமகளே ஒன்னும் புரியலையா? அதை ஏன் கேக்குற, வசுந்தரா எனக்கு ஒன்று விட்ட மாமா மகள், பாலா போன மனசு விரும்பித் தொலைச்சிடுச்சு. அப்போ இந்தா இருக்கானே உன் புருஷன் அவனுக்கு ஐந்து வயது, வசுந்தரா கூட எப்போதும் ஒட்டிட்டு அலைவான். சரி படத்தில் பார்க்கிற மாதிரி ஒட்டிட்டு இருக்குற இந்த குட்டிக்கிட்ட கொடுத்துவிடுவோம்ன்னு ஒரு காதல் கடிதம் எழுதினேன். பெரிசா ஒண்ணுமில்லை, சும்மா நாலு வரி, இவன் நேரா கொண்டுபோய் பாட்டிகிட்ட கொடுக்க, குடும்பத்தில் பிரச்சனையாக, கடைசியில் வசுந்தரா நான் அவளுக்கு அண்ணா மாதிரின்னு சொல்லி ஆட்டத்தை கலைச்சுட்டா.. ஹம்… காதல் துரோகிமா இவன்” பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.
“ஹாஹாஹா…” கலகலத்து சிரித்தாள் பெண்.
“உங்க கடிதத்தில் பிழை இருந்திருக்கும் மாமா” இவனில் நக்கல் நர்த்தனம் கட்டியது.
“டேய், உனக்கும் எனக்கும் பேச்சில்லை. நீ சொல்லுமா என்ன விஷயம்?” என்றவுடன் அது வரை இருந்த இனிமை காணாமல் போக தலை குனிந்து கொண்டாள் பெண்.
மனைவியின் வேதனையை நிறைய பார்த்த ஆதேஷ், “மாமா, நிலா கவுன்சிலிங்க்கு வந்திருக்கா, வீட்டில் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது” எனத் தயங்கியவன், அவளுக்கு நடந்தது, இருவருக்குள் இதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் இருப்பது என அனைத்தையும் சொல்லியவன் மனதளவில் உயிர் மரித்திருந்தான்.
அனைத்தையும் அமைதியாகக் கேட்ட சகாதேவன், “கண்ணா நீ கொஞ்சம் வெளியில் இருடா, நான் நித்திலாட்ட பேசணும்” என்க.
இளையவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்தவன் அறையை விட்டு வெளியேறினான்.
“அம்மா நித்திலா, இது நடக்கக் கூடாது தான்… நடந்திடுச்சு, ஆனா அதிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நீ கண்டிப்பா கடந்து வந்துட முடியும். உனக்கு அழகான மனசுள்ள மனுஷன் கிடைச்சிருக்கான், உன் வாழ்க்கை ரொம்ப அழகா மாறும். இந்த படவா ராஸ்கலைப் படுத்த இரண்டு பிள்ளையாவது நீ பெத்துக் குடுக்கணும்.
இந்த சிகிச்சை உனக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்கும். அதாவது, யாரும் உன்னை எடை போடுவாங்கன்னு அச்சமின்றி நீ உன் கதையைப் பகிர்ந்து கொள்ள இது சரியான இடம். உன்னுடைய அனுபவங்களையும் உணர்வுகளையும் பற்றி மனம் விட்டுப் பேசினால், அந்த அதிர்ச்சியில் இருந்து நீ சீக்கிரம் முழுமையாக மீண்டு வந்துடுவ.
ஒரு சிகிச்சை தரக் கூடிய மனநல ஆய்வாளர் வெறுமனே உன் பேச்சைக் கேட்பதற்காக மட்டும் இருப்பதில்லை. நீ இது பற்றிப் பேசும் போது உனக்கு ஏற்படும் அதிர்ச்சியின் அறிகுறிகள் தோன்றினால் அதை சமாளிக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளை உனக்குக் கற்றுத் தருவோம். நீ உன் அப்பா மாதிரி நினைச்சுக்கோ, எல்லாம் ஈஸியா இருக்கும் ஓகே?” என்றவர் இன்னும் சில முதற்கட்ட சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி நித்திலா ஆய்வு செய்த பிறகு இவள் முகத்தில் தெளிவு வந்தது, பிறகு ஆதேஷை அழைத்தார்.
“கண்ணா, நம்ம நித்திலாவுக்கு பழைய நினைவுகளை அதிகமாகத் தூண்டும் மாதிரியான சிகிச்சை நான் கொடுக்கப் போவதில்லை, ஸோ நீயும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு.
இஎம்டிஆர் தெரபின்னு சொல்லுவோம், அதாவது கண் இயக்க தேய்மானம் மற்றும் மறு செயலாக்க சிகிச்சைன்னு இதைச் சொல்லுவோம். இதில் இவளுக்கு முற்றிலும் வேறு வேலைகள் கொடுத்து நினைவாற்றலுக்கு அதிக சுமையை ஏற்படுத்த வேண்டும், இதனால் இவளுக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு அதன் தீவிர உணர்ச்சித் தாக்கத்தைப் படிப்படியாக இழக்கும். இது ஏழு கட்டமாக செய்யணும், ஸோ நித்திலா எப்படி ரெஸ்பான்ஸ் செய்றா அதைப் பொருத்து சிகிச்சையின் நாட்கள் இருக்கும், ஓகேவா?” என்றார் சகா.
“மாமா, அது… அவளுக்கு கஷ்டம் ஏதும் இருக்காதே? ஐ மீன், ரொம்ப அவள் கஷ்டப்படுவது மாதிரியான சிகிச்சைன்னா வேண்டாம்” என்றான்.
புன்னகைத்தவர் சிகிச்சையின் வழிமுறைகள் பற்றி மேலோட்டமாக விளக்கியதும் தம்பதியருக்கு ஒரு தைரியம் வந்தது.
இருவரும் மன நிம்மதியோடு வீடு திரும்பினார்கள்.
சமையல் கூடத்திலிருந்து எடுத்து வந்த இரவுக்கான உணவுகளை நித்திலா சூடுபடுத்திக் கொண்டிருக்க, பின்னோடு வந்து அணைத்துக் கொண்டு அவள் தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டான் கணவன், “தேனே… இப்படி உன்னைக் கட்டிக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு குறுந்தொகைப் பாடல் தான்டி ஞாபகம் வருது” என்றான் இவளில் தொலைந்தவனாக.
“என்னவாம்…” சிணுங்கினாள் பெண்.
“மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியிற்
சூருடை அடுக்கத் தாரங் கடுப்ப
வேனி லானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்குவெயிற் பொதிந்த தாமரை
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே” என்றவன்
“இதோட பொருள் என்ன தெரியுமா? தலைவி சந்தனத்தைப் போல வேனிற்காலத்தில் குளிர்ச்சியை உடையவளாகவும், பனிக்காலத்தில் தாமரை மலர் போல வெப்பம் உடையவளாகவும் இருப்பதால் எப்பொழுதும் தழுவுவதற்கு இனிமையானவள்” என்றான் குழைந்து போய்.
பெண் தனது வலது கை விரல்கள் கொண்டு இவன் கன்னம் வருடியவள், “அது என்ன தாமரை போல் வெப்பம்?”
“ம்ம் என்ன ஒரு அழகான பாடல் தெரியுமா இது, அந்த காலத்திலேயே ஒரு அறிவியல் உண்மையைச் சொல்லி இருக்காங்க, இந்த தெர்மோஜெனிக் பிளான்ட் (வெப்ப உற்பத்தி தாவரம்) கேள்விப்பட்டிருக்கயா? தாமரை அந்த வகை மலர்கள் தான். இந்த மலர்கள் வெளியில் தட்பவெப்பம் எவ்வளவு இருந்தாலும், தன் இதழ்களுக்குள் முப்பது முதல் முப்பது ஐந்து டிகிரி வரை வெப்பத்தை வச்சுக்கும், இதனால் மகரந்த சேர்க்கை செய்ய வரும் பூச்சிகளை ஈஸியா கவர்ந்திழுக்கும். தன்னோட வெப்பத்தால் பூச்சிகளை மயக்கிடும்ன்னு வச்சுக்கோயேன். இந்த தாமரை பற்றிய ஆராய்ச்சியை இப்போ இரண்டாயிரத்து இருபத்தைந்தில் தான் அமெரிக்காவில் கண்டுபிடிச்சாங்க, பட் நம்ம முப்பாட்டன் எப்போவே பாடிட்டான் பாரு” என்றான் பெருமிதமாக.
“ஹாஹாஹா, உங்க எப்படி சுத்தினாலும் உங்க முப்பாட்டன் புகழ் பாடணும் உங்களுக்கு” என்றாள் மனைவி.
“பின்ன, பாட்டன் பெருமையை நாம தானடி பாடணும்” என்றவன்
“தேனே… இப்போ நீ தாமரை போல தான்டி இருக்க… எனக்கு அமுதமும் வேணும்.. மலரின் இதழ் அமுதம்…” என்றவன் அமுதம் அருந்தினான் உடலும் மனமும் இனிக்க.