சகாதேவன் ஆதேஷிடம் தனியே பேச வேண்டும் என்று சொல்ல, நித்திலா யோசனையோடு அறையிலிருந்து வெளியேறினாள்.
“கண்ணா, நம்ம டிரீட்மெண்ட் ஆரம்பிச்சு இப்போ ஆறு மாதங்கள் ஆகப் போகுது. நீ…உங்களுக்குள்ள ஏதாவது முன்னேற்றம் இருக்கா? ஐ மீன் அடுத்த கட்டம் நோக்கி முயற்சி செய்திருக்கீங்களா?” சகா இவனை ஆழ்ந்து நோக்கியபடி கேட்டார்.
பெரிய நிசப்தம் இவனில் சூழ்ந்து கொண்டது. எப்படி சொல்வான்? ஏற்கனவே நித்திலா அவளது நிலை நினைத்து வருத்திக் கொண்டிருக்க, கடந்த மூன்று மாதங்களாக, முக்கியமாக நயனா கருவுற்றதிலிருந்து, குடும்பத்தினரிடம் வெளியில் நேரடியாக இவர்களிடம் கேட்காவிட்டாலும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, அதை மறைமுகமாக அவர்கள் கோடிட்டு அவ்வப்போது காட்டவும் செய்கிறார்கள். இவையெல்லாம் நித்திலாவை ஒரு வித அழுத்தத்தில் தள்ளி இருக்கிறது. தன்னை கல்யாணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை மணந்திருந்தால் ஆதேஷும் கண்டிப்பாக குழந்தையை எதிர்நோக்கி இருந்திருப்பான் என இவள் கவலை கொள்ள ஆரம்பித்து இருந்தாள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் ஆதேஷுக்கு மனைவி வருந்துகிறாள், அதை தன்னிடம் மறைக்கிறாள் என்பதில் மிகுந்த வருத்தம் இருந்தது.
சூழ்நிலை கடைக்கோடிக்கு தள்ளும் பொழுது நம்மால் இயலாது என ஒதுக்கிய ஒன்றை, முயற்சி செய்து பார்த்தால் தான் என்ன என்ற எண்ணம் வரும். தன் நிலாவின் அலைப்புறுதல் இவனையும் உந்தித் தள்ள, இரு முறை அவளோடு வாழ்ந்து விட வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டான். விளைவு, பயம் போர்த்திய கண்களோடு நித்திலா இவனை எதிர்கொள்ள மனம் நொந்து போனான். மனைவி காதலாக, மையலாகப் பார்த்தால் முன்னேறலாம், அச்சம் வந்து ஆட்கொண்டால் என்ன செய்வான்?
அவளை தான் துன்புறுத்துகிறோமா என்பதில் வந்து நின்று அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டான். அதன் பிறகு நிலைமை மோசமானது தான் மிச்சம். உள்ளுக்குள்ளே ஒடுங்க ஆரம்பித்திருக்கிறாள் நித்திலா. குற்ற உணர்ச்சியால் சில நேரங்களில் இவன் முகம் பார்த்து பேசுவதைக் கூட தவிர்க்கிறாள். இவனோ தன் உணர்வுகளுக்கு பூட்டிட்டுக் கொண்டிருந்திருந்தாலும், இந்த முயற்சிக்குப் பிறகு உணர்வுகளில் போராட்டத்தை வேறு சமாளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.
“கண்ணா…ஆதேஷ்..” இவனின் கையைத் தொட்டு அழைத்தார் சகா.
நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் அத்தனை வலி நிறைந்து இருந்தது. பதிலில்லை ஆண்மகனிடம். பதில் சொல்ல விரும்பவில்லை.
“கஷ்டமா இருக்காடா கண்ணா” சக ஆண்மகனாக இவனின் உணர்வுகளைப் படிக்க முடியாதவரா மருத்துவர்? கேட்டார்.
“ம்ப்ஸ்…ரொம்ப கஷ்டப்படுறா மாமா. இன்பேக்ட் இந்த கவுன்சிலிங் கூட நிறுத்திடலாம்ன்னு நேற்று சொன்னேன். ஒத்துக்கல நிலா. நீங்க சொல்ற முயற்சி எல்லாம் செஞ்சேன் தான், காதல் இல்லாமல், பயத்தோட என்னைப் பார்த்தால் என்னால் முடியாது மாமா. எனக்கு இது வேண்டாம், பிடிக்கல, அவளை இப்டி எல்லாம் விஷப்பரீட்சை செஞ்சு பார்க்க நான் விரும்பல. எனக்கு இந்த வாழ்க்கையே திருப்தியா இருக்கு மாமா. நான் அவளோட சந்தோஷமா தான் இருக்கேன். அவளுக்கு ஆசை இருந்தால் ஒரு குழந்தை தத்து எடுத்துக்கலாம் இல்லையா. தாம்பத்திய வாழ்க்கை எப்டி இருக்கும்ன்னு தெரிந்தால் தானே நான் எதையாவது மிஸ் பண்ணிட்டேன்னு வருத்தப்படணும். அதனால் எனக்கு உண்மையில் வருத்தமில்லை மாமா. பட் நிலா எனக்கென்னமோ தீமை செய்துட்டதா நினைக்கிறா, அவள் என் கூட தான மாமா இருக்கா? போதாதா இது?” யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது மருகிக் கொண்டிருந்தவன் எல்லாவற்றையும் கொட்டினான்.
‘ஐயா பெருவுடையானே, இந்த பிள்ளைகளுக்கு ஒரு வழி காட்டுயா’ மனதில் வேண்டிக் கொண்டார்.
“கண்ணா, என்னை நம்பு, நித்திலாவிடம் இப்போ நிறைய மாற்றங்கள் இருக்கு, ஜஸ்ட் ஒரு முறை அவளை அணுகி இது சாத்தியம் ஆகிட்டா, அப்புறம் நார்மல் வாழ்க்கைக்கு வந்துடுவீங்க. அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவளை பின்னோக்கி இழுக்கும். ஒன்னு புரிஞ்சுக்கோ, ஆண்களை கண்டாலே விலகி ஓடின பொண்ணு இன்னைக்கு உன் கைப்பிடிக்குள் பாதுகாப்பாக இருக்கிறதா சொல்றான்னா, அது உன் வெற்றி என்று நான் சொல்வேன். உன் அன்பு, காதல், பரிவு எல்லாம் அவளை உன்னை நம்ப வச்சிருக்கு. உன்னை மட்டும் தான் நம்ப வச்சிருக்கு. நடக்கும் டா கண்ணா, உன் பிள்ளை என்னை தாத்தான்னு கூப்பிடும் நாள் ரொம்ப தூரம் இல்லை” என்று நம்பிக்கை அளித்தவர், சில வழிமுறைகளை இவனுக்கு சொல்லிக் கொடுத்தார்.
இவன் மனதிலும் ஒரு நம்பிக்கையின் நுனி வேர் பிடிக்க ஆரம்பித்து இருந்தது.
அதன் பிறகு நித்திலாவை அழைத்தார் சகா. அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவரை அழைத்தவர், சில மருத்துவ குறிப்புகள் எடுத்துத் தர பணித்தார்.
அந்த நர்ஸ் பின் இருபதுகளில் இருந்தாள். சில நபர்களை நாம் பார்க்கும் போது அவர்களிடம் நம்மை அறியாது பேசத் தோன்றும், அத்தகைய ஒரு வசீகரம் அவர்கள் பேச்சில் இருக்கும். அப்படி ஒருத்தி தான் அந்த நர்ஸ். அத்தனை கலகலப்பு, அவள் இந்த அறைக்குள் வந்து சென்ற பத்து நிமிடத்தில்.
“அம்மா நித்திலா, இப்போ வந்துட்டுப் போன பொண்ணு இருக்காளே, அவள் ஒரு கேங் ரேப் விக்டிம், அவளோட பதினெட்டு வயசுல ஒரு சுற்றுலா போன இடத்தில் நாலு பேர் இதை செய்துட்டாங்க. நான் தான் ட்ரீட்மென்ட் கொடுத்தேன். ஆறு வருஷம் ஆச்சு பழைய நிலைக்கு அவள் வர. அதுக்கு பிறகு அவளை காதலித்த அவள் அத்தை பையனை கல்யாணம் பண்ணி இப்போ இரண்டு குழந்தை இருக்கு. என் மேல் நிறைய பிரியம் அவளுக்கு, படிப்பு முடிச்சுட்டு இங்கயே வேலைக்கு வந்துட்டா. மனசு இருந்தால் வாழ்க்கையில் முடியாதது ஒண்ணுமில்லம்மா”
கணவனை ஏறிட்டுப் பார்த்தால், ஒரு புன்னகை அவனில்; ஆமோதிப்பாய் தலையாட்டினான்.
அன்றைய மாலை நேர சிற்றுண்டிக் கடையை நித்திலா பார்த்துக் கொண்டிருக்க, இளம் பெண்கள் சிலர் வந்து தங்களுக்குத் தேவையானதை கேட்டு அங்கேயே நின்று உண்டு கொண்டிருந்தனர்.
“ஹேய் அங்க பாருடி, ஆள் செம ஹேண்ட்ஸம் இல்ல, இவருதான் இந்த குடிலோட உரிமையாளராம். நேற்று செங்கின் பண்ணும் போது ரொம்ப தன்மையா பொறுமையா பேசினார். ஐ திங் ஐம் இன் லவ் வித் ஹிம். இங்க இருந்து போறதுக்குள்ள நான் சொல்லிடப் போறேன்” என்றாள் ஒரு பெண், பத்தடி தூரத்தில் நின்று தோட்டக்காரருடன் பேசிக் கொண்டிருந்த ஆதேஷைப் பார்த்து.
“ஹலோ மேடம், அவர் ஆல்ரெடி கால் கட்டு போட்டவர், அவர் பொண்டாட்டிக்கு தெரிஞ்சது உன்னைக் கிழிச்சு தொங்க விட்டுடப் போறாங்க” அடுத்தவள் நக்கலாக சிரிக்க,
“ஷ்ஷு என்னடி இப்படி சொல்ற, நான் அவர் கூட டூயட் எல்லாம் பாடிட்டேன் தெரியுமா” என சொல்லிக் கொண்டு நகர்ந்து போனார்கள்.
பின்னே நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நித்திலா பொங்கிப் பொசுங்கினாள்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் பணியாளர் ஒருவரை அழைத்து பொறுப்பை கொடுத்து விட்டு கணவனைத் தேடிச் சென்றாள்.
அவனது அறையில் ஏதோ வேலையில் ஆதேஷ் ஆழ்ந்திருக்க, உள்ளே நுழைந்தவள் முறைத்துக் கொண்டு நின்றாள்.
அரவம் கேட்டு விழி உயர்த்தி பார்த்தவன், “என்ன நிலா, இந்த நேரத்தில் இந்த பக்கம் வந்திருக்கு?’ என்றான் புருவம் உயர்த்தி.
“ம்ம், எல்லாம் காரியமாத்தான், இனி நீங்க செக்கிங் பண்றவங்ககிட்ட சிரிச்சு பேசக் கூடாது. இல்லல்ல, தன்மையா பேசக் கூடாது. தேவைக்கு மட்டும் பேசினால் போதும்” என்றாள் மூக்கு விடைக்க.
“என்னடி ஆச்சு, தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் எதோ உளறிட்டு இருக்க” இவன் புரியாமல் பார்த்தான்.
“ஆமாம்மா, நான் பேசினால் உளறல் மாதிரித்தான் இருக்கும்” என நொடித்தாள்.
என்னாச்சு இவளுக்கு என யோசனையானவன், எழுந்து வந்து மனைவியை இழுத்து கட்டிக் கொண்டு, “என்னாச்சு நிலாக்கு, ரொம்ப சூடா இருக்கு?” அவள் நெற்றியில் முட்டினான்.
“உங்க கூட பேச்சில்லை எனக்கு, நீங்க ஏன் அந்த பொண்ணுங்க கிட்ட சிரிச்சு தன்மையா பேசுறீங்க? அவள் உங்களை லவ் பண்றாளாம், என் முன்னேவே சொல்றா. எல்லாம் உங்களால” பொரிந்தாள் மனைவி.
“ஹாஹாஹா….பொண்ணு எப்டி, என் நிலாவை விட அழகா இருப்பாளா? ப்ரோபோசலை அக்சப்ட் பண்ணலாமா?” என்றான் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி.
“கொன்னுடுவேன் கொன்னு. இப்டி எல்லாம் நெனப்பிருக்கா. இனி செங்கின் பண்ணாலும் சரி, செக்கவுட் பண்ணாலும் சரி, பொண்ணுங்க வந்தா சிரிக்க கூடாது. மீறி சிரிச்சீங்க பார்த்துக்கங்க” சீறினாள்.
“ஹாஹாஹா…அப்போ கடுகடுன்னு முகத்தை வச்சுட்டு எப்டிடி பேச முடியும்?” இவனுக்கு அத்தனை ஆனந்த பூரிப்பு.
“ஏன் இல்ல, ஏன்னு கேட்கிறேன். சிரிக்காமல் பேச முடியாதா? எனக்கு பிடிக்கல பாவா. நான் மட்டும் தான் சொல்லணும், நீங்க ஹேண்ட்ஸமா இல்லையான்னு. வேற யாரும் சொல்லக் கூடாது” சிணுங்கினாள்.
“சரி சொல்லுடி தேனே, உன் பாவா ஹேண்ட்ஸமா இல்லையா?” புருவம் உயர்த்தி மனைவியைப் பார்த்தான்.
கணவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள், அத்தனை தீட்சண்யம் பொருந்திய முக அமைப்புடையவனை, அரசன் போல் தோற்றமுடையவனை, கண்ணிமைக்காது பார்த்தாள் பாவை. உணர்வுகளால் உந்தப்பட்டு எட்டி அவன் அதரத்தில் முத்தமிட்டாள்.
ஆச்சர்யக் குறிக்குள் அகப்பட்டுக் கொண்டான் சேரமான். இவள் தொடங்கியதை தனதாக்கிக் கொண்டான்.
அதன் பிறகு அன்றைய நாள் முழுவதும் கணவனின் பார்வையில் இவள் படும் போதெல்லாம் ஒரு வித்தியாசம் கண்டாள், அதை மனதில் ஆராதிக்கவும் செய்தாள்.
மாலை ஆறரை போல் வந்து இவளிடம் கிளம்பலாமா என்க, “நான் அம்மா கூட இன்னைக்கு தங்கவா” என்றாள். இவனில் ஒரு புன்சிரிப்பு; சரி எனக் கிளம்பிவிட்டான்.
இரவு பத்து மணி வாக்கில் ஆதேஷை அழைத்தாள் பெண். “சொல்லுடி தேனே, தூங்கலையா இன்னும். இந்நேரம் உன் குறட்டை குடிலை கலக்கி இருக்கணுமே” காணொளியில் சீண்டினான்.
“உங்க கூட நான் பேசுறதா இல்லை” முறுக்கினாள் இவள், முகத்தை திருப்பிக் கொண்டு.
“ஏனாம்..” மனைவியின் முகத்திருப்பல் இவனில் கவிதை படித்தது.
“நான் அம்மாகூட இருக்கேன்னு சொன்னா உடனே சரின்னு விட்டுட்டு போய்டுவீங்களா?” உதடுகள் துடித்தது.
“ஆஹாங்..சொல்லு கேட்போம்” சிரிப்பு இவனில்.
“ம்ப்ஸ் தூக்கம் வரல பாவா….” சிணுங்கினாள்.
“ஏனாம், கட்டிக்காமல் கண் துஞ்சலையா?” கண்ணடித்தான், பேரின்பம் இவனில்; மனைவி தன்னை தேடுகிறாள் என்று கண்டுகொண்டு.
“சரி வா இங்க” இவன் பின்புறம் திரை மங்கலாக்கப்பட்டிருந்தது.
“அவ்வ்ளோ தூரம் இந்த ராத்திரியில் எப்டி வர நான்”
“அப்போ போடி தூங்கு” வைத்துவிட்டான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டின் அழைப்பு மணி அடித்தது. தேவகி இந்த நேரத்தில் யாரும்மா என்று எழுந்து சென்று பார்க்க, கைகளை கால்சராயில் நுழைத்தபடி ஆதேஷ், “ஐயா வாங்க உள்ளே” மருமகனை அழைக்க
“இல்லம்மா, நிலா எங்கே? அரைமணி நேரம் முன்னே வீட்டுக்கு வரேன்னு சொன்னா, தூங்கிட்டாளா?” என்றான் கள்ளன்
பிறகு மகளைக் கடிந்து கொண்ட தேவகி இவனோடு அனுப்பி வைத்தார்.
தங்களுக்கான பயன்பாட்டில் இருக்கும் வீட்டுக்குள் வர இவளை அள்ளிக் கட்டி தூக்கிச் சுற்றினான்
“அச்சோ.. அப்போ வீட்டுக்கு போகலையா? பிராடு.. பொய்.. எப்போ பார் ஏமாத்து வேலை பண்றது” கணவனின் தோளில் அடித்தாள்
நித்திலாவை கீழே இறக்கியவன், “நல்ல நியாயமாக இருக்கே, இவளா வந்து முத்தம் தருவாளாம், நான் விட்டுட்டு தனியா போய் தூங்கணுமாம்… முடியாது முடியாது..”
சட்டென இவளிடம் ஒரு வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது, முகத்தை இவன் நெஞ்சில் வைத்து தேய்த்தவள், “பாவா…. ஏலம் போட்ட டீ குடிக்கலாமா…” என்றாள்
“ஹாஹாஹா… நல்ல நேரம் பார்த்தடி, டீ குடிக்க வா…” அழைத்துக் கொண்டு போனவன் இரண்டு டீ தயாரித்துக் கொண்டு வந்தான்.
ஒரு கோப்பையை வாங்கியவள் வாசம் பிடித்து ரசிக்க, அவளின் ரசனை கோப்பை தாண்டி வழிந்து இவனிடம் நிறைய அவளையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் சேரமான்.