நித்திலப் பேரொளி-29

“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்”

ஓதுவார்கள் நால்வர் மாற்றி மாற்றி மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் நான்காவது பதிகமான “போற்றித் திருவகவல்” என்னும் நூலிலிருந்து இப்பாடலை சிவபெருமானே இறங்கி ஒரு குழந்தையாக உருவெடுக்க ஆசை கொள்வாரோ என்னும் விதமாகப் பாடிக் கொண்டிருந்தனர்.

நித்திலா கருவுற்ற இந்த நான்கு மாதத்தில் இன்றுதான் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான் ஆதேஷ்.

சூழ்நிலைக்குப் பொருந்தும் விதமாக இப்பாடலில், ஒரு உயிர் தாயின் கருவறையில் முட்டையாக உருக் கொள்வது முதல், பத்து மாதங்கள் வளர்ந்து குழந்தையாகப் பிறப்பது வரை ஒவ்வொரு மாதமும் எதிர்கொள்ளும் ஆபத்துகளையும், அவற்றிலிருந்து இறைவனின் அருளால் எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது என்பதையும், சுருங்கச் சொன்னால் கருவியல் அறிவியல் (எம்பிரியோலஜி) பற்றி மிகத் துல்லியமாக மாணிக்கவாசகர் விளக்கியுள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பே, இன்றைய நவீன மருத்துவ உலகில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மூலமாகக் கண்டறியும் கருவின் ஒவ்வொரு மாத வாரியான வளர்ச்சியை, மாணிக்கவாசகர் தனது ஞான திருஷ்டியால் கண்டு விளக்கி அதை ஆன்மீகத் தத்துவத்தோடு ஒப்பிட்டுப் பாடியிருப்பது தமிழர்களின் ஆழ்ந்த அறிவியல் சிந்தனைக்குச் சான்றாகும். இத்தனை துயரங்களையும் கடந்து மனிதனாகப் பிறந்த நாம், இறைவனின் அருளைப் போற்ற வேண்டும் என்பதே இப்பாடலின் மையக்கருத்தாகும்.

கண்மூடி அப்பாடலின் வரிகளை தன்னுள்ளே வரித்துக் கொண்டு நின்றாள் நித்திலா.

“அப்பா…இந்த பாடலே ஒரு அழகுன்னா…இப்டி மனமுருகப் பாடுறது பேரழகு இல்ல நிலா..” ஆதேஷ் மெய் சிலிர்க்கக் கூறினான்.

“ம்ம்ம்…ஜஸ்ட் மெல்ட் ஆகிட்டேன்….எனக்கு பேச குரலே வரல பாவா…” பெண்ணை பாடல் நகர்த்தி இருந்தது.

தரிசனம் முடிய மெதுவே மனைவியை அழைத்துக் கொண்டு விமானத்தைச் சுற்றினான் மன்னன். கோவிலின் வடக்குப் புறத்தில் சண்டிகேஷ்வர் சன்னதிக்குக் கூட்டிக் கொண்டு போனான்.

“நிலா..உன் கையைக் கொடேன்” என்றவன் சன்னதிக்கு முன்புறம் உள்ள விமானத்தின் கீழ்ச் சுவர்களில் எழுதப்பட்ட எண்ணற்ற கல்வெட்டுக்களில் ஒன்றில் வைத்தான்.

“ஹேய்…இதென்ன உடை …யா..ர்…ஸ்ரீ ராஜ…ராஜ தே…வ…ர்…வாவ்…” என எழுத்துக் கூட்டிப் படித்தாள்.

“எஸ்..உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்” என்றான் புன்னகையோடு.

“உனக்கு ஒன்னு தெரியுமா நிலா… சோழ வம்சத்தின் சாதனைகளையும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளையும் கல்வெட்டுகளிலும் செப்புத் தகடுகளிலும் பதிவு செய்த முதல் மன்னர் ராஜராஜ சோழன்தான்.

இந்தக் கல்வெட்டுகள் ‘வரலாற்று உண்மைகள்’ என்று பொருள்படும் மெய்க்கீர்த்தி என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்படுகின்றன. கோயில் சுவர்களில் இந்தத் தகவல்களைப் பொறிப்பதன் நோக்கம், வருங்கால சந்ததியினருக்கு முப்பாட்டன் வாழ்ந்த வரலாற்று அறிவை உருவாக்குவதுதான். குறுக்கமாகச் சொல்லணும்னா…டேய் ஜென்சி இந்தக் கோவில் ஆயிரமாயிரம் வருஷம் இருக்கும், ஆனா இதைக் கட்டிய என்னையும் என் குழுவையும் மறந்துடுவீங்க டா அப்டின்னு தலையில் அடித்துச் சொல்ற மாதிரி பொறிச்சு வைச்சுருக்காங்க” கணவன் விளக்கினான்.

உற்றுப் பார்த்தாள் நித்திலா, “நிலா இந்தக் கல்வெட்டுல நாலு பகுதிகள் இருக்கு. முதல்ல இந்தா இருக்கு பாரு ‘ஸ்வஸ்திஸ்ரீ’ (நன்மை உண்டாகட்டும் என்பது அதன் பொருள்) அப்டின்னு கிரந்த எழுத்துக்களில், இது பிள்ளையார் சுழி மாதிரியான ஒரு மங்கலச் சொல், அடுத்து மெய்க்கீர்த்தி, மன்னர்கள் போரில் பெற்ற வெற்றி பற்றிய உண்மையான தகவல்கள் இதில் இருக்கும், ராஜராஜனுடைய மெய்க்கீர்த்தி எப்போதும் திருமகள் போல அப்டின்னுதான் ஆரம்பிக்கும். மூன்றாவது ஆண்டுக் குறிப்பு, இதில் இந்தக் கல்வெட்டு எந்த வருடம் பொறிக்கப்பட்டதுன்னு என்ற தகவல்கள் இருக்கும். நாலாவது கொடைச் செய்தி..இந்தக் கோவில் கட்ட என்னென்ன கொடை, யார் யார் கொடுத்தாங்க இந்த மாதிரியான தகவல்கள் இதில் இருக்கும்” என்றான்.

“இது தமிழா…அப்படித்தான் தெரியுது..ஆனா வித்தியாசம் இருக்கே” நித்திலா சந்தேகத்தோடு இவனை நோக்க,

புன்னகைத்தவன், “இது பழமையான தமிழ் எழுத்துக்கள்தான். இவர் காலத்தில் கிரந்த எழுத்துக்களும், பழமையான தமிழ் எழுத்துக்களும் பயன்படுத்தி இருக்காங்க. இந்தப் பழமையான தமிழ் எழுத்துக்களில், குறில் நெடில் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்காது. துணைக்கால் அப்புறம் ர ஒரே மாதிரி இருக்கும். புள்ளி, கோமா மாதிரி எந்தக் குறியீடுகளும் இருக்காது” என விளக்கினான்.

“எத்தனை முறை இந்தக் கோவிலுக்கு வந்திருக்கேன்…இப்டி நான் எதையும் கவனிச்சுப் பார்த்ததில்லை” பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள் பெண்.

“நீ மட்டும் இல்ல நிலா, நம் நாட்டில் நிறைய பேர் இப்டித்தான் இருக்காங்க. வெளிநாட்டில் இப்டி ஒரு பொக்கிஷம் இருந்தா..அழகா அதன் வரலாறு, என்ன மாதிரிப் பொருட்களை வைத்துக் காட்டினாங்க, எல்லோரோட பங்கு என்ன..இப்டி விலாவாரியா எழுதி வச்சு பார்ப்பவர்களுக்கு விஷயத்தைப் புரிய வச்சுடுவாங்க. இதை நம் அரசுதான் முன்னெடுத்துச் செய்யணும். இது ஒரு கலை பண்பாட்டுத் தளம் மட்டுமில்ல, சோழ வரலாறு சொல்லும் ஒரு புத்தகம்…இல்லல்ல ஒரு நூலகம்ன்னே சொல்லலாம்” தனது ஆதங்கத்தை வெளியிட்டான் ஆதேஷ்.

“ஆமா..நம் குடும்பம் சேரர் வழித்தோன்றல்கள்தானே அப்போ எப்டி இங்க தஞ்சாவூரில் இருக்கீங்க?” நெடுநாளைய ஐயத்தை கணவனிடம் கேட்க,

“ஹாஹா..இது எல்லோருக்கும் இருக்கிறதுதான்… முதலாம் ஆதித்த சோழன் கேள்விப்பட்டிருக்கயா? தஞ்சையைச் சோழத் தலைநகர் ஆக்கின விஜயாலய சோழனின் மகன். தன் தந்தையைப் போல் மற்ற வம்சத்தோடு போர் புரியாமல், நட்பாக இருந்தார், அவர் சேரர்களுடன் நட்புறவைப் பேணி வந்தார் அப்டின்னு வரலாறு சொல்லு. அப்போ சில சேர வம்சத்தினர் இந்தப் பக்கம் வந்திருக்கலாம்..

இல்லன்னா…தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக மாறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தொடக்க கால சேரர்கள் வன்னிப் போரின்போது தஞ்சாவூர் பகுதிக்குள் நுழைந்தனர் அப்டின்னும் ஒரு வரலாறு இருக்கு. சரியான தகவல் தெரியல…பட் எனக்கு முப்பாட்டன் எல்லாருமேதான்…” சிரித்தான்.

முப்பாட்டன் ராஜராஜன் புகழ் கீர்த்தி பாடிய பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்.

தம்பதிகள் வீடு திரும்ப வழக்கத்திற்கு மாறாக ஒரு மயான அமைதி ஆட்கொண்டிருந்தது.

உணவு கூடத்தில் அனைவரையும் எதிர்பார்த்துச் சென்ற ஆதேஷும் நித்திலாவும் அப்படி இல்லாது குடும்பம் மொத்தமும் உள் வரவேற்பறையில் கூடி இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருக்க, என்ன நடந்தது என்னும் யோசனையோடு முன்னேறினான்.

தாத்தா கைகளைக் கட்டிக் கொண்டு தலையைக் குனிந்து அமர்ந்திருந்தார்.

மெதுவாகச் சென்று இவன் அவரின் எதிரே நின்று, “என்னாச்சு தாத்தா..? ஏன் சாப்பிடாம எல்லாரும் இங்க இருக்கீங்க?” அனைவரையும் ஒரு பார்வையில் சுற்றி வந்தவன் தாத்தாவின் மீது பார்வையை நிறுத்தினான்.

“ஜான்வி..பெரியண்ணியை கூட்டிட்டு ரூமுக்குப் போ” என்றார் மூத்த சேரமான்.

நித்திலா இடத்தை விட்டு அகன்ற பின்பு, “எவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சுருக்க நீ…பெரியவன் பெரியவன்னு கூப்பிட்டதுக்கு பெரிய மனுஷனா நீயே முடிவு எடுப்பையா?” ஆற்றாமைக் குரலில் வசுந்தரா கேட்க,

“என்னத்தே…என்ன முடிவெடுத்தேன்? புரியற மாதிரி சொல்லு..” இவன் கண்கள் சுருக்கி அவரைப் பார்க்க,

“அது…” என்றவர் சட்டென மௌனியானார்.

“பெரியவனே…சொல்லி இருக்கலாம்தானே…அம்மாட்ட சொன்னா என்ன பிரயோஜனம், தனியாகவே சாமாளிக்கலாமுன்னு என்னை விட்டுட்ட தானே” கண்கள் குளம் கட்ட தாய் கேட்டார்.

“ஐயோ..யாராவது புரியற மாதிரி பேசறீங்களா..என்ன ஆச்சு இப்போ…” கோபக் குரலில் இவன் கத்த,

“தம்பி…நித்திலாவுக்கு ட்ரீட்மென்ட் எடுத்தது…அது வந்து சகா அண்ணன்

கண்கள் ரத்தம் என சிவந்து கிடந்தது. மனைவியின் ரகசியம் இப்படி அனைவருக்கும் முன் அம்பலமாக்கப்படும் என இவன் நினைத்திருக்கவில்லை.

அனைவரும் இவன் முகத்தையே பார்க்க, ஒரு பெருமூச்சை எடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “என்ன பிரச்சனை உங்களுக்கெல்லாம்? அவளை எவனோ ஒரு ஈனப்பிறவி கொடுமை செஞ்சு சிதைச்சதா? இல்லை நான் அவளைக் கல்யாணம் பண்ணதா? என்ன தெரியணும்? இல்ல நான் என்ன சொல்லணும்? என்ன சொல்லணுன்னு எதிர்பார்க்கிறீங்க? நடுவீட்டில் நின்னு என் மனைவியை வன்கொடுமை செய்துட்டாங்க, அவள் மன சிதைவினால் பாதிக்கப்பட்டிருந்தா அப்பிடின்னு சொல்லணுமா…என்ன சொல்லணும் நான்…” பெரும் குரலில் கத்தினான்.

விழுக்கென தன் இருக்கையில் இருந்து எழுந்த விக்ரமன் இவனை நோக்கி வர, ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என வசந்தாவும் வசுந்தராவும் ஓடி வந்து இவனைச் சூழ்ந்து கொண்டு நிற்க, மெதுவாக நடந்து வந்த விக்ரமன் இருவரையும் விலகிவிட்டு, “பெரியவனே…வாழ்க்கையில் முதல் முறையா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க சாமி” என்றவர் மகனை இறுக்கிக் கட்டிக் கொண்டார்.

தனியாகவே நித்திலாவின் கஷ்டங்களைத் தன் மனதில் தாங்கி அழுந்திப் போயிருந்த ஆதேஷ் தந்தையைக் கட்டிக் கொண்டு ஓவென கதறி அழுதான்.

ஆதேஷை அழைத்து வந்து தாத்தாவின் இருக்கைக்குப் பக்கத்தில் அமர வைத்த விக்ரமன், “கண்ணா…ராஜா…அதுதான் கடந்து வந்துட்டீங்களே, பின்ன ஏன் இந்த அழகை? வசந்தா பிள்ளைக்கு குடிக்கக் கொடு” என்று மனைவியைப் பணித்தார்.

“பெரியவனே…கேள்விப்பட்டதும் எப்டி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல..சாரி…யோசிக்காம கேட்டுட்டேன். பாவம் புள்ள என்ன கஷ்டப்பட்டாளோ…மனசு திக் திக்குன்னு இருக்கு. முன்னமே தெரிஞ்சிருந்தா குழந்தை பற்றியெல்லாம் உங்ககிட்ட கேட்டிருக்க மாட்டேன். மட்டி நான்” இவன் அருகில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டார் வசுந்தரா.

அத்தையின் கையைப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டவன், “தெரியும்தே…நீங்க எல்லாம் சப்போர்ட்தான் பண்ணுவீங்க..பட் அவள் பிரைவஸின்னு ஒன்னு இருக்கே..அவளுக்குக் கஷ்டமா இருக்கும் இல்லையா. அதுதான் வேண்டாம்ன்னு முடிவெடுத்தேன். பட் தாத்தாக்கு சொல்லித்தான் செஞ்சேன்”

“சரி வேற பேசுங்க…வாங்க சாப்பிடப் போகலாம்..” என அழைத்துக் கொண்டு விக்ரமன் மற்றும் ஏனையோர் நகர,

இவன் அருகில் வந்த நயனா கண்ணீர் உடைப்பெடுக்கத் தன் அத்தானைக் கட்டிக் கொண்டாள்.

“ஹேய் வாலு நீ ஆரம்பிக்காத இப்போ..வாங்க தாத்தாக்கு பசிக்கும்…முக்கியமா என் நிலா வயிற்றில் உள்ள குட்டிக்குப் பசிக்கும்” என்றவன் பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான்.

பெண்கள் சூழ்ந்து கொண்டு நித்திலாவைக் கட்டிக் கொள்ள, பெண் கட்டுப்பாடற்று அழுதாள். ஆதேஷ் மனைவியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான், ‘இவளின் வருத்தத்தை என்றாவது என்னால் போக்க இயலுமா…’ மனதில் வலி வலுத்தது.

சம்மட்டி கொண்டு யாரோ அடிப்பது போல் உணர்ந்த பாட்டி ஆணையிட்டார், “விடுங்க அவளை.. பசிக்கும் பிள்ளைக்கு.. மருமக பொண்ணே.. நீ உட்காருமா. வள்ளி, அவளுக்கு முதல்ல கொடு”

“வசந்தா, என் மருமக என்ன மெனு போட்டிருக்கா இன்னைக்கு… வை எனக்கு…” என்ற விக்ரமனின் குரல் தான் அது, பிறகு அங்கு கேட்டது.

error: Alert: Content selection is disabled!!