அத்தியாயம் 1
கொழும்பு புறக்கோட்டையிலுள்ள தம் கடையிலிருந்து புறப்பட்டு, தெஹிவளையிலுள்ள தாய் வீட்டில் இரவுணவை முடித்துவிட்டு, அடுத்த தெருவிலுள்ள தம் வீடு திரும்பிய ரகுவை, வெறுமை முகத்திலடித்தால் போல் வரவேற்றது.
வேலை முடிந்து களைத்து வரும்போது, ஆவலாகக் காத்திருந்து வாயிலைத் திறக்கும் மனைவி இன்றில்லாதது, அவன் மனதுக்கு எதுவோ போலிருந்தது.
‘எவ்வளவுதான் கோவமிருந்தாலும் இப்பிடியா ஒருத்தி சொல்லாமல் கொள்ளாமல் வெளிக்கிட்டுப் போவாள்?’
மனதில் திட்டிக்கொண்டவனால், என்னதான் முயன்றும் இதழில் படர்ந்துவிட்ட சிறு முறுவலையும் அடக்க முடியவில்லை.
‘‘ராட்சசி! என்ன மாதிரி என்னப் போட்டு ஆட்டி வைக்கிறா!’’ வாய்விட்டே சொன்னவன், இந்த எட்டு மாதத் திருமண வாழ்வில் இப்படியொருமுறை கூட அவளுடன் வெளிப்படையாகக் கதைத்ததில்லை.
ஏன், அப்படிக் கதைக்க வேண்டுமென்று நினைத்து முயன்றதுமில்லை!
அவள் சமைக்கும் உணவை நிறைவாகவே சுவைத்து உண்பான்; அவள் செய்யும் உதவிகளையெல்லாம் விரும்பத்தோடு ஏற்றும் கொள்வான்; இருந்த போதும், அவள் மனம் சந்தோசம் கொள்ளும் வகையில், ‘நல்லாயிருக்கு’ என, ஒற்றை வார்த்தை உதிர்க்க முடிவதில்லை; அவளவுக்கு ஏன், ‘உன் மட்டில் எனக்கான அக்கறையில் நான் மகிழ்கின்றேன்’ என, ஒரு பார்வையிலேனும் சரி உணர்த்தவும் முயல்வதில்லை. பாராட்டுதலாக ஒரு பார்வை சிந்தினால், அவள் தன் தலையிலேறி அமர்ந்து அழிச்சாட்டியம் பண்ணிவிடுவாளோ என்ற கணக்கில் அதைக்கூட இதுவரை செய்ததில்லை.
உணவு பரிமாறும் போதே, ‘‘இண்டையான் சமையல் எப்பிடி இருக்கு? ருசியா இருக்கா?’’ என, விடாது கேட்டால் மட்டும், ஒரு தலையசைப்பைப் பெருந்தன்மையாய் அள்ளி வழங்கிவிட்டுத் தொடர்ந்து சாப்பிடுவதில் முனைவான்.
பூர்வீகம் வேலணையாக இருந்தாலும், நீண்ட நாட்களாகவே கொழும்பில் வசித்து வருகின்றார்கள், சோமசுந்தரம் சாரதா தம்பதியினர். சோமசுந்தரத்தின் தந்தை காலத்திலிருந்தே புடவை வியாபாரம் தான் இவர்களின் தொழில். யாழ்ப்பாணத்திலிருந்த தன் கடையை உயிர் நண்பனான நாதனிடம் ஒப்படைத்து விட்டு, பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போதே கொழும்புக்குக் குடிபெயர்ந்திருந்தார், சோமசுந்தரம். அங்கே, புதிய செட்டித்தெருவில் ஒரு புடவைக்கடையைத் தொடக்கியவர், இன்று, தம் மூத்தமகனால் அது மூன்றாகி நிற்பதைப் பார்க்கையில், பெருமையால் உள்ளம் நிறைந்து தான் போவார்.
மூத்தமகன் ரகு, படிப்பை முடித்து விட்டுத் தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டான். அதுவரை, தனியாளாக வியாபாரத்தைக் கவனித்து வந்த சோமசுந்தரத்துக்கு மகனின் வருகை மிகவும் உற்சாகமூட்டியது. அவனும் தந்தையின் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்காமல் வியாபாரத்தை மிகவும் திறமையாகவே நடத்தி வருகிறான். இவர்களின் அடுத்த மகள் ராஜி, வீட்டின் ஒரே பெண் வாரிசு; திருமணம் முடித்துக் கனடாவில் வசித்து வருகிறாள். வீட்டின் கடைக்குட்டி ரமேஷ், பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் இறுதி வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறான்.
இயல்பிலேயே கொஞ்சம் இறுக்கமான சுபாவம் கொண்டவன் தான் ரகு. கலகலப்புக்கும் அவனுக்கும் நெருங்கிய நட்பென்று ஒருபோதும் இருந்ததில்லை எனலாம். அத்தோடு, வீட்டின் மூத்தவனாகப் பொறுப்புக்களும் அவனைச் சார்ந்தேயிருக்க, எப்பொழுதுமே வேலை, வீடு என்று அலைந்து திரிவான். அப்படியிருந்தவன், தன் முதல் திருமண முறிவுக்குப் பின் இன்னமும் இறுகிப்போய் விட்டான்.
பெற்றோர் எத்தனையோ இடங்களில் பெண் பார்த்து, சாதகம் பார்த்து, அங்குமிங்கும் விசாரித்து, மிகவும் ஆசையோடு தம்வீட்டு மருமகளாக முடிவு செய்யப்பட்டவள் தான், ரகுவிற்கு முதலில் பதிவுத்திருமணம் செய்திருந்த நீரஜா.
அவளது குணநலன்கள், குடும்ப விபரங்கள், சாதகப்பொருத்தம் என்பவற்றை உன்னிப்பாகப் பார்த்து, தமக்கு மிகவும் பொருத்தமான சம்பந்தம் என மனம் நிறைந்த சோமசுந்தரதுக்கு, தாம் தேர்வு செய்திருந்த பெண்ணின் மனதைப் புரிய முடியாமல் போய் விட்டதே!
அவளோ, ஏற்கனவே ஒருத்தனை உயிராகக் காதலித்துக் கொண்டிருந்தாள். அப்படிக் காதலிக்கத் தெரிந்தவளுக்கும் அதைத் தன் பெற்றவர்களிடம் சொல்லுமளவுக்குத் துணிவு வரவில்லை. தான் காதலித்தவன் வேற்றுச்சாதி என்பதால் நிச்சயம் பெற்றவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என முடிவெடுத்தவள், அதை அவர்களிடமிருந்து மறைத்தே விட்டாள். அப்படி, காதலை மறைத்தாளேயொழிய, தன் காதலை அவள் மறக்கவில்லை! மறக்க நினைக்கவுமில்லை!
அவளின் இச்செய்கையால், தாம் பெற்ற பெண்ணின் மனதை அறியாமலேயே பெரிய குடும்பத்தில் சம்பந்தம் கூடி வந்ததில் மகிழ்ந்திருந்தார்கள், நீரஜாவின் பெற்றோர். ரகு, தமக்கு மாப்பிள்ளையாக வரப்போவதில் மிகவும் மனநிறைவுடன் இருந்தார்கள், அவர்கள்.
எல்லோரது மகிழ்ச்சியையும் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக, எந்தவிதத்திலும் தன்னுடன் சம்பந்தப்பட்டிராத ஒரு மனிதனுக்குத் தான் எந்தளவில் தலைகுனிவை ஏற்படுத்தப் போகின்றோமெனச் சிறிதும் யோசியாது, யாரைப் பற்றியும் கவலைப்படாது, ‘என்ர காதல் மட்டுமே வாழ வேணும்! ஒருபோதும் யாருக்காகவும் என்ர காதலை விட்டுக் கொடுக்க முடியவே முடியாது!’ என, நீரஜா எடுத்த முடிவு, திருமணத்திற்கு ஒருமாதமளவு இருக்கையில் அவளைத் தன் காதலனுடன் செல்ல வைத்தது.
இதில், ரகுவின் பிழையென்று எதுவுமே இல்லாவிடினும் அவனால் இந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒருத்தி, உன்னை நான் திருமணம் செய்கின்றேன் என்று சம்மதம் சொல்லி, பதிவுத்திருமணமும் நடந்து, திருமணநாள் அருகில் நெருங்குகையில் காதலனுடன் ஓடிப் போனால் ஊரறிய அவளைத் திருமணம் செய்யவிருந்தவன் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வான்? ரகுவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது! அதைவிட, அவனுள்ளமோ ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.
‘கடைசில, இப்பிடி ஏமாந்து போனமே! வியாபாரத்த இவ்வளவு திறம்பட நடத்திற நாங்கள், வாழ்க்கைத் தெரிவில இப்பிடிக் கோட்டை விட்டுட்டமே!’ என, நினைத்து நினைத்தே மிகவும் வெறுத்துப் போனான். தன்னில், தன் நிலையில் மிகவும் நம்பிக்கை கொண்டவனை இச்சம்பவம் அப்படியே அடித்து நொறுக்கிப் போட்டு விட்டது.
‘என்ன நினச்சுப் பதிவுத்திருமணம் செய்திருப்பாள்? கேனயன் அகப்பட்டிட்டான், ஒரு சாக்குக்குச் செய்திட்டு மெல்லக் கழன்று கொள்ளுவம் எண்டா நினைச்சுக் கொண்டாள்!?’ மனக்குமுறலில் வெந்து போனான்.
‘என்னைப் பார்க்கேக்க எல்லாம் மனசுக்க நல்லா சிரிச்சிருப்பாளே! இன்னும் ‘எத்தின நாட்கள் நான் இருக்கப் போறன், அதுக்குப்பிறகு உன்ர முகம் எப்படியிருக்கும்?’ என்று நினைச்சிருப்பாளே! ச்சே…’ வாய் விட்டு யாரிடமும் சொல்ல முடியாமல் மனதில் குமுறலுடன் குன்றினான், ரகு.
எக்காரணங்களாலும் சமாதானங்களாலும் அவன் மனதில் வாங்கிய அடிக்கு மருந்திட முடியவில்லை.
இச்சம்பவம் நடந்து முழுதாக இரு வருடங்கள், வீட்டினர் திருமணப்பேச்சை எடுக்கும் போதெல்லாம் எரிந்து விழுந்தான். அசட்டையாகப் பார்த்து, ஒரே சொல்லில் மறுத்துச் சென்றான். அதுவும் தான் எத்தனைக்கு? இறுதியாக, தாயின் கண்ணீரின் முன்னால் தோற்றுத் தளர்ந்தான்! விளைவு? மீண்டும் தாய் பார்த்த பெண்ணையே மணக்கத் தலையாட்டினான், அதுவும் அரை மனமாகவே தான்!
அன்றைய நாளின் அலுப்பு அகல, குளித்துவிட்டு படுக்கையில் சாய்ந்தான், ரகு.
திருமணத்தின் பின் முதல் முதல் மனைவியின்றித் தனிமையில் இருக்கும் இந்நேரம், அவள் அருகிலிருக்கும் போதெழாத அவள் பற்றிய நினைவுகள் மீண்டும் மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு அவனுள் உலாப்போகத் தொடங்கின. அவற்றை ஒரேயடியாக உதறித் தள்ளிவிட்டு அதிலிருந்து மீள முடியாதவனாக, மீள விரும்பாதவனாக அந்நினைவுகளில் ஆழ்ந்தான், அவன்.
“இதுதான் சிந்துவின்ர ஃபோட்டோ, நல்ல வடிப்பாப் பார் தம்பி; இதில இருக்கிறத விட நேரில நல்ல களையாவும் கலகலப்பாவும் இருக்கிறா!” மகன் கல்யாணத்திற்குச் சம்மதித்து விட்டானே என்கின்ற மகிழ்வு அவன் தாய்க்கு. அவனுக்கு அப்படியா என்ன?
மலர்வோடு அவர் நீட்டிய புகைப்படத்தைப் பார்க்கவில்லை, அவன்.
“அங்க மேசையில வையுங்கம்மா, பிறகு பாக்கிறன்!” எவ்வித உணர்வுமின்றிச் சொன்னவன், “ஆக, பொம்பளையும் பாத்து வச்சிட்டுத்தான் என்னட்ட சம்மதம் கேட்கிறீங்களா?” தாயை முறைத்தான்.
“ராசா! அப்பிடி எல்லாம் இல்லையடா; போன இடத்தில பார்த்தோன்ன எனக்குப் பிடிச்சிருச்சி! உங்கள் எல்லாருக்கும் பிடிச்சா தானே! ஏன்யா?” உள்ளே போன குரலில் கேட்ட தாயைப் பார்த்தவன், “சும்மாதான் சொன்னன் மா! உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரிதான்!” என்றிருந்தான்.
அப்படி அசட்டையாகவே சொல்லிச் சென்றவனிற்கு, சிந்துவின் புகைப்படத்தைப் பார்க்கும் ஆவல் சிறிதும் வரவில்லை. மாறாக, ‘ஒருத்தி நடிச்சு நடிச்சு என்ர தலையில மிளகாய் அரைச்சிட்டுப் போய்ட்டாள்; இப்ப இன்னொருத்தியா!?’ என்றே எண்ணத் தோன்றிற்று!
மகனின் சம்மதம் கிடைத்ததும் துரிதமாகச் செயல்பட்டார் சாரதா.
“பெண் பார்க்கப் போறம் டா! நீயும் தயாரா இரு! பிறகு கடைசி நேரம் வேலயச் சாட்டுச் சொல்லக்கூடாது!”
மகிழ்வில் பறந்து திரிபவர் போகின்ற போக்கில் சொல்லிச் செல்ல, அவனோ, ஒரேயடியாக மறுத்து விட்டான்.
“எனக்கு முக்கிய வேல இருக்கம்மா! அங்க எல்லாம் வர ஏலாது! நீங்களும் அப்பாவும் போய்ட்டு வாங்க!”

