நீயில்லாது வாழ்வேதடி 11 – 1

அத்தியாயம் 11.

ஞாயிறுகளில், மகன்கள் மட்டும் கடைக்குச் செல்ல, வீட்டில் ஓய்வாக இருந்து கொள்வார், சோமசுந்தரம்.
இன்றும் அவ்வாறே, தமையனோடு கடைக்குப் போன ரமேஷ், சாப்பாட்டு நேரத்திற்குச் சிறிது முன்பாகவே வீடு வந்திருந்தான்.
வார இறுதியில் தமையன் குடும்பமும் இங்கு வந்துவிடுவதால், எப்போதும் அந்நாட்களை ஆவலோடு எதிர்பார்த்திருப்பவன், இன்றோ, தடுமாறும் மனதோடு நடமாடினான்.
“இந்தக்கிழம மாமாட்ட எப்பிடியும் உம்மட விசயத்தச் சொல்லிர வேணும்!” என்ற சிந்து, “இண்டைக்கு மத்தியானம் சொல்லுவம்.” எனக் கூறியிருந்தாள்.
அதற்குப் பின், மனதில் அமைதிதான் நிலைக்குமா?
கலக்கமும் தடுமாற்றமும் கொண்ட அவன் மனம், தந்தை முகம் பார்க்கவே மிகவும் தயங்கியது!
கடையிலிருந்து ரகுவும் வந்தவுடன், எல்லோரும் ஒன்றாக மதிய உணவிற்கென வந்தமர்ந்தனர்.
வெளிப்பார்வைக்கு எவ்வித சலனமுமின்றி உணவுண்பதில் முனைந்தான், ரகு!
லக்ஷ்மி, சிந்து , ரமேஷ் மூவருக்குமே, சுவையான உணவு தொண்டையால் இறங்க மாட்டேன் என அடம்பிடிக்க, பிசைந்து கொண்டிருந்தனர்.
தன்னையும் பார்வையால் அளந்துகொண்டு தந்தை , தாயுடனும் பேசியவாறே, சாதாரணமாக உண்ணும் கணவனைப் பார்த்த சிந்துவுக்கு, எரிச்சலாக இருந்தது.
‘மனிசர் இங்க பதை பதைச்சுக் கொண்டிருக்க, பார் விழுங்கிற வடிவ!’ மனதில் முணுமுணுத்தவாறே முறைத்தவளை, ஒற்றைப் புருவம் உயர்த்தி என்வென்று விசாரித்தான், அவள் கணவன்.
‘அட…இவருக்கு ஒண்ணுமே தெரியாதாம்! கொஞ்சம் பொறுத்து இங்க நடக்கப் போறதுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லயாம்!’ மனதில் கடுகடுத்தவளின் பார்வை, அவள் நினைவை அவனுக்கு தெளிவாக உணர்த்தியது.
‘ஆஹா, எனக்கு நல்ல மண்டகப்படி நடக்குதா? நடத்து நடத்து!’ உதட்டினுள் நகைத்தவாறே, பார்வையால், சொல்லாமல் சொன்னான் ரகு.
அதோடு நிறுத்தாமல், மனைவியை இலேசாக சீண்டிப் பார்க்கவும் முனைந்தான்.
“இண்டைக்கு ஆர் சமையல் அம்மா!” முன்னால் அமர்ந்திருந்த தாயிடம் வினவ, மகன் கேட்ட தொனியில் நகைத்தார் சாரதா.
“ஏன் தம்பி…ருசியாக இருக்குது தானே! இண்டைக்கு நாங்க வீட்டில சமைக்கேல்ல; ஹோட்டல் சாப்பாடு உனக்கு விருப்பமெண்டு சொன்னியாமே, அதனால, ஹோட்டலில் வாங்கினம்!” மனைவி இப்படிச் சொல்ல, “அட! பாவம் இந்தப்பிள்ள காலமேல இருந்து அடுப்படியில நிண்டு சமைக்க, பாராட்டு ஹோட்டல்காரனுக்கா?” குறுக்கிட்ட சோமசுந்தரம், “எல்லாம் என்ர மருமகள் சமையல் தான்!” மெச்சுதலாகத் தொடர்ந்தார்.
“உண்மையாகவா சிந்து!” அளவுக்கதிகமாக வியந்தான், ரகு.
“ம்ம்… ஒவ்வொருநாளும் என்னை வச்சே உங்கட மருமகள் சமையல் பழகிட்டா அப்பா! அப்ப ருசியான சமையல் சமைகிறதில என்ன ஆச்சரியம்!” ரகு.
“உனக்கு சிந்து சொன்னதுதான் சரி; தொடர்ந்து நாலு மாசங்களுக்கு ஹோட்டல் சாப்பாடு சாப்பிட விட வேணும், இந்த வாய்க்கு அதுதான் சரி!” செல்லமாக முறைத்தாலும், மகனின் மாற்றத்தில், கலகலப்பில், நிறைவுடன் மலர்ந்தார், சாரதா.
இதுவரை, மனதில் கலவரத்தோடு உணவைப் பிசைந்து கொண்டிருந்த ரமேஷ், சிந்து, லக்ஷ்மி மூவருமே, ரகுவின் கேலிப்பேச்சிலும் சாரதாவின் கலகலப்பான பதிலிலும், சிறிதே சிறிதாக மீண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
“விடுங்க மாமி…அவர் எப்பவும் இப்பிடித்தான்!” என சிந்து ஆரம்பிக்க, “உண்மையாவே இண்டைக்கு எல்லாமே நல்ல ருசி சிந்து; நல்ல சந்தோசமாச் சமையல் செய்தீர் போல!” கண்சிமிட்டும் நேரத்தில் கண்ணடித்தான், அவள் கணவன்.
அவன் கேலி புரிந்த சிந்துவின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது!
அதைக் கவனித்தவன், “உண்மையாகவே சிந்து, வர வர நல்லாவே சமைக்கிறீர்!” என்றதும், அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் வேகமாகத் தலையாட்டினார், சோமசுந்தரம்.
“அவன் கிண்டல் அடிக்கிறானோ பாராட்டுறானோ அதை விடம்மா சிந்து! நான் சொல்லுறன், எல்லாமே நல்ல ருசியா இருக்கு! என்ர பிள்ள பார்த்துப் பார்த்து சமைச்சது நல்லா இருக்காம பிறகெப்படி இருக்கும்!” பாராட்டியவாறே , கேட்டு வாங்கிச் சாப்பிடவும் செய்தார்.
அவர் இப்படிச் சொன்னதும், “ இந்த மனிசன் இன்னும் கொஞ்ச நேரத்தில ஆடப் போற ருத்திர தாண்டவத்தில, இந்தச் சாப்பாடு எல்லாம் வெளிய வருதா இல்லையா எண்டு பார்! ” சிந்துவின் அருகிலமர்ந்து சாப்பிடுவதாக பெயர் பண்ணிக்கொண்டிருந்த லக்ஷ்மி, அவள் காதுக்கருகில் குனிந்து முணுமுணுத்தார்.
இப்படியே கலகலப்பாக மதிய உணவை முடித்தவர்கள் , ஹாலில் வந்து ஆறுதலாக அமர்ந்தனர் .
” சாப்பிட்டது கொஞ்சம் அசதியா இருக்கு; இலேசாத் தலையும் வலிக்குது; நான் கொஞ்ச நேரம் சாஞ்சிருந்திட்டு வாறன். ” எல்லோருக்கும் பொதுவாகச் சொன்ன லக்ஷ்மி, கவனமாக சிந்துவைப் பார்க்காது அவ்விடத்திலிருந்து எழுந்தார்.
” சரிதான் லக்ஷ்மி! போய் ஆறுதலாப் படுங்க. சொல்ல சொல்ல கேட்காம குசினியில நிண்டது தான் தலைவலி போல! ” சாரதா கூறியதும், விட்டால்போதும் என அவ்விடம் விட்டு நகர்ந்தார், லக்ஷ்மி.
அவர் செல்வதையே பார்த்திருந்த சிந்து, ‘ நடக்கிறது நடக்கட்டும், இனியும் மறைக்கிறது சரியில்ல; இவரும் இருக்கிறார் தானே, அப்பிடித் தவிக்க விட்டிருவாரா? ” நினைத்து, மனதைத் தேற்றியவள், ’’மாமா…உங்களிட்ட…ஒரு முக்கியமான விசயம்… சொல்ல வேணும்!” மிகவும் தயங்கியபடி ஆரம்பித்தாள்.
மருமகள் தீவிர முகபாவத்துடன் இப்படிக் கூறியதும், ‘என்னவா இருக்கும்?’ நினைத்த சோமசுந்தரம், அங்கிருந்தவர்களின் முகத்தில் தன் பார்வையைப் பதித்தார்.
இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தான், மூத்த மகன் ரகு!
‘கொஞ்சம் முதல் இருந்த கலகலப்பு, இப்ப நிச்சயம் அவனிட்ட இல்ல!’ அவர் மனம் கணக்கிட்டது!
பதற்றத்தை பளிச்செனக் காட்டியவாறே, அவஸ்த்தையாக அமர்ந்திருந்தான், இளையமகன் ரமேஷ்!
‘சாப்பிடேக்கையும் இவன் வழமைய விட அமைதியா இருந்தானோ!?’ இலேசான சந்தேகம் அவர் மனதில்!
மருமகள் அப்படி என்னதான் சொல்லப் போகிறாள் என அறியும் ஆவலோடு, சாதாரணமாக அமர்ந்திருந்தார், மனைவி சாரதா!
இளையமகனின் முற்றிலும் புதிய பதற்றம், அவர் பார்வையைக் கூர்மையாக்கி, சிந்தனையைத் தட்டி விட்டது!
இறுதியாக மருமகளை ஆராய்ந்தவர், அவள் மனதின் தடுமாற்றத்தை நன்றாகவே புரிந்து கொண்டார்.
‘என்னவாக இருக்கும்!’ என்கின்ற கூர்மையுடன், “சொல்லம்மா, என்ன விசயம்? முஸ்தீபு கொஞ்சம் பலமா இருக்கே!” என்றவர், மருமகள் தவிப்போடு தன் கணவனைப் பார்ப்பதைப் பார்த்துவிட்டு, “அட..என்னட்டச் சொல்ல என்ன தயக்கம் சிந்து! முதல், சொல்ல வந்தாச்சுத் தானே? பட்டெண்டு சொல்லிரம்மா!” மருமகளை ஊக்கினார்.
அவர் அப்படிக் கூறிய பின்னும், தலையைக் குனிந்தபடி மௌனம் காத்தாள் சிந்து. ஏனோ அவள் விழிகள் கலங்கத் தொடங்கி விட்டன! விரல்களை ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்து, தன்னைத் தான் நிலைப்படுத்த முயன்றாள்.
ஒருவாறு மனதின் தயக்கத்தை மென்று விழுங்கிக்கொண்டு மெல்ல நிமிர்ந்தவள், தன் மாமா மாமியைப் பார்த்து, ” அது வந்து மாமா…நம்ம …நம்மட …ரமேஷ்…” சற்று நிதானித்து, பக்கவாட்டில் அமர்ந்திருந்த கணவனை மீண்டும் ஒருமுறை பார்த்தாள்.
அவள் இறுகி அமர்ந்திருந்த விதமே, அவன் சொன்ன சொல்லில் பிடியாக இருப்பதை உணர்த்த, ”அது வந்து மாமா … ரமேஷ்…ஒரு பிள்ளைய விரும்புறாராம்! அதுதான் என்னட்ட…” தட்டுத்தடுமாறிச் சொல்கையில், ” என்னம்மா சொல்லுற!? ” என சாரதாவும், ‘’என்னது!? ” என சோமசுந்தரமும் குரல் எழுப்பினர்!
இவர்கள் காதலை எதிர்ப்பார்களா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தம் பிள்ளைகள் மூன்று பேரிலும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர் சோமசுந்தரம் தம்பதியினர். இதுவரை, அந்நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் மூன்று பேருமே நடந்தது கொள்ளவில்லை.
‘அப்பிடியிருக்க, இதென்ன புதுசா! அதும் இவனுக்கு ஒரு இடத்தில பொம்பள பார்த்திருக்கேக்க!’ குழம்பினார் சோமசுந்தரம்.
”என்னம்மா சொல்லுற! லவ்வா? ஆர? இவன்ட முழியே சரியில்ல எண்டு நினைச்சன்! ஆரும் சிங்களப்பிள்ளய விரும்புறானா? இல்ல…” கோபமாக இரைந்தபடி ரமேஷை முறைத்தார், சோமசுந்தரம்.

error: Alert: Content selection is disabled!!