நீயில்லாது வாழ்வேதடி 11 – 3

பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது.
‘இன்னும் எழும்பேல்லையே!’ என்ற பதற்றம் மாறாது இயன்றளவு வேகமாகக் காரை ஒட்டியவனின் மனமோ , கலங்கிய நிலையில் மனைவியின் கன்னம் தட்டி எழுப்பிக் கொண்டிருந்த தமையனையும், ஓய்ந்து போய் விழி மூடிக்கிடக்கும் துறுதுறு அண்ணியையும் பார்க்கையில், தன்னால் தான் இவ்வளவும் என்ற வேதனையில் அழுதது!
மகன்மார் மருமகளோடு போவதையே விழிநீரோடு பார்த்திருந்த சாரதா, கனத்த இதயச்சுமை தாங்காது அப்படியே வாயில்படியில் சாய்ந்து நின்றுகொண்டார்.
சற்றுமுன் கூட, இப்படியொரு புயல் வீசப் போகிறது என்பதை அவர் அனுமானிக்கவில்லையே!
‘ரமேஷ் எப்பிடி அந்தக் குடும்பத்தில?!’ என்பதையும் மீறி, ‘சிந்துக்கு ஒண்டுமே இருக்கக் கூடாது!’ தெய்வங்களை எல்லாம் துணைக்கழைத்தது, அவர் மனம்!
ஒரு போதும் குரல் உயர்த்திப் பேசியிராத மூத்தமகன், தாயிடம் சீறியதிலும் தன்னை முறைத்ததிலும் தளர்ந்து போனார், சோமசுந்தரம். மருமகள் தன் வார்த்தைகளால் காயப்பட்டுவிட்டாள் என்பது இப்போது அவருக்குப் புரிந்தது!
‘நான் என்ன வேணுமெண்டா சொன்னன்! அவள் எனக்கு மருமகளா? என்ர ராஜியும் அவளும் எனக்கு ஒண்டுதான்!’ சோமசுந்தரத்தின் மனக்கலக்கம் விழிகளில் மினுமினுத்தது!
‘என்ர மருமகள், என்னை அவமதிச்ச, அவள்ட புருசன தலைகுனிய வச்ச குடும்பத்துக்காக, ஒண்டுமே இல்ல எண்ட வகையில எப்பிடிக் கதைக்கலாம்!’ இப்போதும் அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லையே!
மகள் மயங்கியதில் ஆடிப் போயிருந்த லக்ஷ்மி, அவர்களோடு போக உன்னிய கால்களை மிகக் கஷ்டப்பட்டுப் பிடித்து வைத்திருந்தார். ஒத்த வார்த்தை பேச, மிக மிகத் தயங்கியது அவரது நா!
‘அவளக் கூட்டிக்கொண்டு போறது வேற ஆரும் இல்ல, அவள்ட புருசன்; அவர விட்டா வேற ஆர் அவளப் பார்த்துக் கொள்ளுவினம்! சிந்து பத்திரமா வந்து சேருவாள். அவளுக்கு ஒண்டுமே இல்ல!’ மனதில் உருப்போட்டுக் கொண்டார்.
‘இந்த விசயம் எண்டைக்கு காதில விழுந்திச்சோ, அண்டைக்குப் பிடிச்சது; இத்தின நாளும் ஒழுங்காச் சாப்பிட்டளா? பச்..எல்லாம் சேர்ந்து மயங்கிட்டாள்!’ மனதுள் புலம்பியவர்,
‘வேணாம் விட்டிரு எண்டால் கேட்டாளா?’ அரட்டியவாறே, இறுகிப் போயிருக்கும் சோமசுந்தரத்தையும், வாயில் படியில் தளர்ந்து நிற்கும் சாரதாவையும் பார்த்தவர், துணிவையெல்லாம் திரட்டி, மனதுள் ஒரு முடிவோடு சாரதாவை நோக்கி நகர்ந்தார்.
“அண்ணி, அவளுக்கு ஒண்டுமில்ல! கொஞ்ச நாட்களா தன்னையே அவள் கவனிக்கிறது இல்ல, அதுதான் காரணம். இப்ப வந்திருவீனம், நீங்க உள்ளே வாங்கோ!” என்ற லக்ஷ்மியை, மிகவும் சங்கடமாகப் பார்த்தார், சாரதா.

“லக்ஷ்மி..” அவர் கரங்களைப் பற்றிக்கொண்ட சாரதாவால் கதைக்க முடியவில்லை.
“அண்ணி, என்ன இது? முதல் கண்ணைத் துடையுங்கோ! வாங்க..” அழைத்துச் சென்று, சோமசுந்தரத்துக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அவரை இருத்தி, தானும் அமர்ந்து கொண்டபின், சோமசுந்தரத்தை பார்த்தவர், ”சுந்தரம் அண்ணன்…” மெல்ல ஆரம்பித்தார்.
‘சிந்து, இங்க கதைக்க முதல் இவரோடும் ரகுவோடும் நிச்சயம் கதைச்சிருப்பாள்!’ இப்போது புரிந்து கொண்டார் சோமசுந்தரம். லக்ஷ்மியில் உள்ள மரியாதையில், ‘என்ன சொல்லப் போகிறார்!’ அறிந்து கொள்ளும் நோக்குடன் அவரை ஏறிட்டார்.
“இந்த விசயத்த உங்கட இளையமகன் சொல்லி சிந்து என்னட்ட சொன்னதும், நானும் இப்பிடித்தான் கோவப்பட்டன்! நான் கோவப்பட்டது இருக்கட்டும், உங்கட மகன் ரகு..” சொல்லி நிறுத்தியவருக்கு, மகளும் மருமகனும் சண்டைபிடித்துக் கொண்ட நாட்களின் நினைவில் இப்போதும் முகம் கலங்கிப் போனது!
“என்னட்டச் சொன்னோன்ன, உனக்கு ஏன் மா இந்த வேண்டாத வேல; முதல் இது எல்லாம் ஒருக்காலும் சரியே வாராது எண்டுதான் சொன்னன். நம்மட ரமேஷ் தம்பியில சரியான கோவமும் வந்திச்சு! ஆனா, நீங்க அந்த வீட்டில சம்பந்தம் பேச முதலே, பலமாதங்கள் முதலே, அவே ரெண்டு பேரும் விரும்பத் தொடங்கி இருக்கினம்.”
இதைக் கேட்ட சோமசுந்தரம் தம்பதிகளின் அதிர்வு வெளிப்படையாகவே தெரிந்தது! சோமசுந்தரத்தின் மனதில் ஏதோ ஒருவகையில் நிம்மதி உணர்வு! “என்ன! அதுக்கு முதலே பழக்கமா?” என்றவர், ‘அப்பா…என்ர மகன் நம்மள அவமதிச்சவர் வீட்டில பழக நினைக்கேல்ல!’ மனதில் முணுமுணுத்துக் கொண்டார்.
“ஓம், ரெண்டு பேரும் கம்பசில் ஒண்டாப் படிச்சவேயாம்!” என்று ஆரம்பிக்க, “ம்ம் அது தெரியும்.” என்றார், சோமசுந்தரம்.
“பிறகு, ரெண்டு குடும்பங்களுக்கும் இடையில மனஸ்தாபம் எண்டோன்ன, பேச்சுவார்த்தை இல்லாமல் இனித் தொடர்பே வேணாம் எண்டுதான் இருந்தவேயாம்; இப்ப அவரவருக்கு வேற கலியாணம் பேசேக்கத்தான் அது ஒருக்காலும் முடியாது எண்டு விளங்கிச்சாம். இதை நேரடியா உங்களிட்டச் சொல்லப் பயந்து சிந்துட்ட சொல்லியிருக்கினம்.” என்று நடந்ததைச் சொன்னவர், முகம் கன்றினாலும், அவர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து தைரியம் வரப்பெற்றவராக,
“இத்தின நாட்களும், நம்மக் கஷ்டப்படுத்தக் கூடாது எண்டு தங்கட விருப்பத்த மனசில வச்சு, தம்மைத் தாமே கஷ்டப்படுத்திக்கொண்டு, ஒருத்தர் ஒருத்தரைப் பார்க்காமல் இருந்தவே தானே? அப்பிடி, குடும்பத்துக்காக எண்டு யோசிச்சுப் பிரிஞ்சிருந்தவேய நாம சேர்த்து வைக்கிறதில பிழை என்ன இருக்கு! நாங்க சேர முடியேல்லையோ வேற வாழ்க்கையும் வேணாம் எண்டு உறுதியாச் சொல்லேக்க, நம்மட கோபதாபங்கள விடுறதில என்ன இருக்கு! இதுதான் சிந்துட வாதம். பொறுமையா யோசிச்சுப் பார்த்தா இதில பிழை காணவும் முடியேல்ல!” என்றவர்,
“சிந்து இதைச் சொன்னோன்ன, அவே ரெண்டு பேருக்கும் பெரிய சண்டையே நடந்தது அண்ணன். நான்…நான்..உண்மையாவே பயந்து போயிட்டன்! எதிலோ தொடங்கி எங்கயே கதை வளர்ந்து..” என்றவர், கலங்கிய கண்களைத் துடைத்துக்கொள்ள, “இவ்வளவு நடந்திருக்கு, எங்களுக்குத் தெரியேல்லையே!” ஆதங்கப்பட்டார் சாரதா.
“சுந்தரம் அண்ணன் போலத்தான் ரகுவும் கோபப்பட்டார்; உங்கட மருமகளோ, அப்படியெண்டா அந்தக் கலியாணம் நடக்கேல்லயே எண்ட கவலை இன்னும் உங்கட மனசில இருக்குது போல எண்டு கேட்டுட்டாள்.” என்றதும், “இதென்ன விசர்த்தனமான கத லக்ஷ்மி! சிந்துவா அப்பிடிக் கேட்டா!” குரலிறுக வினவினார் சோமசுந்தரம்.
“ம்ம்… ஏன் அப்பிடியெல்லாம் கதைக்கிற எண்டு நான் கோவப்பட்ட போது உங்கட மருமகள் ஒரு வார்த்தை சொன்னாள், அதில இருந்தே அவள்ட மனநிலை என்ன எண்டு தெளிவாக்கிட்டாள்.” என்றவர்,
“இந்துட தமக்க இப்பிடிப் போகப் போய் தானே எனக்கு ரகு கிடைச்சார்; அந்த நேரத்தில அது கஷ்டமாக இருந்தாலும் இப்ப நாங்க எல்லாரும் நல்ல சந்தோசமாத் தானே இருக்கிறம் என்றாள்!” என்றவரை, வார்த்தைகளின்றிப் பார்த்திருந்தார் சோமசுந்தரம்.
சாரதாவோ, “என்ர மருமகள் சொன்னதில என்ன பிழை; அவள் அப்பிடிப் போனதில இங்கு ஆருமே கெட்டுப் போகேல்ல!” வழிந்த விழிநீரை துடைத்துக்கொண்டே சொன்னார்.
“ம்ம்..அதேதான் அண்ணி, நடந்த விசயத்தில பாதிப்பில்ல எண்டா அந்தக் கோவத்தப் பிடிச்சுது வச்சு, வாழவேண்டிய ரெண்டு பிள்ளைகளை பிரிக்க வேணுமா எண்டதுதான் சிந்துட வாதம். தன்னைக் கலியாணம் செய்ததில உண்மையான சந்தோசம் இருந்தா அந்த நீரஜாவை நினைச்சுக் கோபமே வராது எண்டு சொல்லுறாள், சிந்து.
அதுமட்டுமா! இந்த விசயத்தைக் கேட்டா அப்பா சரியாக் கோவப்படுவார்; அதனால, இந்த விசயத்தில நான் ஒத்த வார்த்தை கதைக்கவோ, உதவிக்கு வரவோ மாட்டன் என்றார் ரகு. அதுக்கு உங்கட மருமகள் என்ன சொன்னாள் தெரியுமா?” இருவரையும் ஆழ்ந்து நோக்கியவர்,
“என்ர மாமா பற்றி எனக்குத் தெரியும்; அவர் ஒருநாளும் கோவப்படவே மாட்டார்! அந்த நீரஜா போனதால தானே அவர்ட மருமகளாக எனக்குச் சந்தர்ப்பம் கிடைச்சு! அப்பிடித்தான் மாமா யோசிப்பார் என்றாள்.” என, லக்ஷ்மி சொல்லச் சொல்ல, அப்படியே இறுகிப் போனார் சோமசுந்தரம்.

error: Alert: Content selection is disabled!!