நீயில்லாது வாழ்வேதடி 2 – 2

“அப்ப, உங்களுக்கு…உங்களுக்கு பிடிச்சிருக்கா சித்தி?” கேட்டவளுக்கு, ரகு விவாகரத்துப் பெற்றவன் என்பதைச் கேட்கையில் சட்டென்று அதிர்ச்சியாக இருந்தது. ‘ரெண்டாம் தாரமாவா?’ மனம், அதே அதிர்வுடன் நினைத்துக் கொண்டது.
‘சித்திக்கு நல்ல விருப்பம் போல இருக்குதே!’ தொடர்ந்து எண்ணியவளுக்கு, சித்தியின் சந்தோசத்தை, “ரெண்டாம் தாரமெண்டா என்னால முடியாது!” எனக் கூறிக் குலைக்கும் துணிவு வரவில்லை.
பெரிதாக திருமணக் கனவுகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்றாலும், இரண்டாம் தாரமாக கட்ட வேண்டி வருமென கொஞ்சமும் எண்ணியிருக்கவில்லை, அவள். என்னதான் மனதில் குழம்பினாலும் இறுதியில், அநாதரவாகத் தனித்து நிற்கையில் தன்னை அரவணைத்து இவ்வளவுக்குப் பார்த்துக் கொண்டவரை, எந்தவிதத்திலும் கஷ்டப்படுத்த மனம் இடம் கொடாததால், “உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரி சித்தி! உங்கள விட வேற ஆர் எனக்கு நல்லதச் செய்வீனம்!” என்று சொல்லி நகர, அவள் கரம் பற்றி நிறுத்தினார், லக்ஷ்மி.
அவள் வதனம் வெளிப்படுத்திய குழப்பத்தில் மனதையும் படித்துவிட்டார்.
“இங்க பாரம்மா, இப்பிடியொரு குடும்பத்தில வாழ்க்கைப்பட, அந்தப் பிள்ளைக்குக் குடுத்து வைக்கேல்ல!” என்று தொடங்கி, ரகுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல சொல்ல, தன் மனக் குழப்பங்கள் நீங்கி விருப்பமாகவே கல்யாணத்திற்கு சம்மதித்தாள், சிந்து.
திருமணத்தின்பின் கொழும்பு சென்றவள், எட்டு மாதங்களின் பின் இப்போதுதான் லக்ஷ்மியின் சுகயீனம் காரணமாக மீண்டும் யாழ் வந்திருக்கிறாள். இடையில் சிலதடவைகள் லக்ஷ்மி கொழும்பு சென்று வந்திருந்தாலும், அவர்கள் எவ்வளவோ வேண்டிக்கேட்டும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளச் சம்மதிக்கவில்லை.

வீட்டினுள் சென்ற சிந்து, பயண அலுப்புத் தீர நன்றாகக் குளித்துவிட்டு, ‘சித்திக்குப் பகல் சாப்பாடு கொண்டு போக வேணுமே!’ நினைத்தவாறே சமையலைத் தொடங்கினாள்.
சமைத்து முடிய, காலையிலும் உண்ணாத காலி வயிறு அடம் பிடித்துக் கத்தவே, சாப்பிடுவோம் என்று தட்டில் பரிமாறிக்கொண்டு அமர்ந்தவளின் நினைவுகளோ, தன்னவனைக் குறிவைத்து கொழும்பை நோக்கி விரைந்தோடியது.
தினமும் மதிய உணவைத் தயாரித்து ‘ஹாட்பாக்’கில் கொடுத்து விடுவது இவள் வழக்கம். அப்படிக் கொடுப்பதை தவறாது எடுத்துச் செல்லும் அவள் கணவனோ, அவ்வுணவைப் பற்றி ஒத்த வார்த்தை கதைப்பதில்லை என்றாலும், இவள் சமையலை விரும்பியே உண்பான் என்பது ரகுவின் மனதுக்கு எப்படித் தெரியுமோ, அவ்வாறே அவன் மனைவிக்கும் தெரியும்.
‘இண்டைக்கு என்ன சாப்பிடுவார்? மாமி செய்து கொடுத்து விடுவாவோ அல்லது, கடைச்சாப்பாடு தானோ?’ இப்படி, கணவனின் நினைவுகளுடனேயே உண்டு முடித்து, லக்ஷ்மிக்கான உணவையும், அவருக்குத் தேவைப்படும் சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு வைத்தியசாலையை நோக்கிப் புறப்பட்டாள்.
“அப்பப்பா…எட்டு மாதங்களாச்சு சைக்கில் ஓடி!’’ வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே வேகமாகச் சைக்கிளை மிதித்தாலும் அதைவிட வேகமாகத் தன் மணவாழ்வையும், மணாளனையும் நினைக்கத் தொடங்கியது, அவள் மனம்.
“முழுமனதுடன் தானே சம்மதம் சொல்லுற சிந்து? நிச்சயமா நான் உன்னக் கட்டாயப்படுத்த இல்லயம்மா! நல்ல சம்பந்தம் எண்டு தான் சொன்னன்!” மீண்டும் மீண்டும் கேட்டு, ஐயமறத் தெளிவாக்க விரும்பினார் லக்ஷ்மி.
“அய்யோ சித்தி, எனக்கு உண்மையாகவே சம்மதம். நீங்க செய்ய வேண்டியதை உங்கட விருப்பப்படியே பாருங்க!” மலர்வாகவே சொல்லி விட்டாள் இவள்.
“சிந்துவிற்கும் சம்மதம் அண்ணி, தம்பி என்ன சொல்லுறார்?” தாமதியாமல் சாரதாவைத் தொடர்பு கொண்டு வினவினார், லக்ஷ்மி. அதன்பின், சாரதா தன் கணவருடன் யாழ் வந்திருந்தார். “முக்கிய வேலையிருக்கிறதால ரகுவால வர முடியேல்ல!” என்ற சாரதா, திருமணத்துக்கு நாளைக் குறித்தவர், ‘‘புடவைகள், நகைகள கொழும்பிலயே வாங்கிக் கொள்ளலாம் லக்ஷ்மி, நீங்களும் எங்களோட வாங்களேன்; அப்பிடி இல்லையெண்டாலும் வசதிப்படேக்க ஒரு தரம் வந்து போங்க!’’ அன்பாக வரவேற்றார்.
‘‘அதுவும் சரிதான்! அடுத்த கிழமை வாக்கில் வரப் பார்க்கிறேன்!’’ என்ற லக்ஷ்மி, சொன்னவாறே சிந்துவையும் அழைத்துக்கொண்டு கொழும்பு சென்றிருந்தார். அப்படிச் சென்ற போதுதான் ரகுவை முதன் முதல் சந்தித்தாள் இவள். அதற்குமுன் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும், நேரில் பார்த்ததும் அவனை மிகவும் பிடித்து விட்டது அவளுக்கு! அவனும் பார்ப்பதற்கு முசுடு போல் இறுக்கமாக இருந்தாலும், கண்ணுக்கு நிறைவாக, களையாகத் தான் இருந்தான்.
‘இவருக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’ அவனிடமிருந்து நேரடியாக அறியும் ஆவல் இவள் உள்ளத்தில் தத்தளித்தது!
அவனோ, ஓர் கடைக்கண் பார்வையில் கூட அதை உணர்த்தவில்லை. அவன் மனதை அனுமானிக்க முடியாதிருக்கவே, ‘அட… பிடிக்காமல் ஆராவது கலியாணதுக்குச் சம்மதம் சொல்லுவினமோ?!’ என நினைத்து, தன் மனதை சமாதானம் செய்து கொண்டாலும் அவன் தன்னுடன் ஆவலாகக் கதைக்கவில்லையே என, அடிமனதில் ஏற்பட்ட இலேசான சுணக்கத்தை அவளால் போக்கவும் முடியவில்லை.
அவனுடன் கதைக்கும் ஆவல் எழுந்தாலும், பட்டுக்கத்தரித்தது போல நல விசரிப்புகளுடன் நிறுத்திக் கொண்டவனுடன் கதை வளர்க்க விரும்பாது, இவளும் அமைதியாகவே வந்து விட்டாள்.
‘‘என்ன மாதிரி அருமையான மரியாதை தெரிஞ்ச பிள்ளை! தேவையில்லாத அலட்டல்கள் இல்ல! இந்தக் காலத்தில் ஒண்டுமே தெரியேல்லையெண்டாலும் என்ன மாதிரி அலட்டிக் கொள்ளுவினம்! ஆனால், மாப்பிள்ளை அப்பிடியெல்லாம் இல்ல! நீ கொடுத்து வச்சனி ராசாத்தி!’’ இவளின் கன்னம் வருடி, தன் மகிழ்வை வெளிப்படுத்தினார் லக்ஷ்மி.
அதன் பின்னரும், தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான் என அவளுள்ளத்தில் எழுந்த ஆவலையும், ‘‘இந்த வேலைகளுக்கெல்லாம் நாங்க ஆட்களில்லை!’’ என்ற கணக்கில் அழித்து விட்டான் ரகு.
‘ஆங்! சரிதான் போய்யா! கலியாணம் முடிஞ்ச கையோட வாய்விட்டுச் சிரிக்கவும், மூச்சுவிடாமல் கதைக்கவும் சொல்லித் தரேல்ல எண்டா நான் சிந்து இல்லையாக்கும்!’ என, தன்னுள் சபதமே எடுத்துக் கொண்டாள் சிந்து, அது மிகவும் இலகுவான காரியம் என்றெண்ணி!
அதற்கு முதற்படியாக, திருமணத்திலும் வரவேற்பிலும் கணவனின் அமைதியைப் பார்த்துவிட்டு அவனைப் பேசவைக்கும் முயற்சியில் இறங்கினாள்.
இயல்பிலேயே மிகவும் துடுக்குத்தனமும், வாயாடியுமானவள் என்பதால், ‘‘அட… நானே கலியாணப்பொம்பள இந்தக் கதை கதைக்கிறன், நீங்க ஏன் இப்பிடி அமைதியா இருக்கிறீங்க?’’ அவனைப் பார்த்து முணுமுணுக்க, விழிகளில் வந்து போன அதிர்ச்சியுடன் மௌனம் கலையாது சிக்கனமாக ஒரு முறுவலை அள்ளிக்கொடுத்தான், மாப்பிள்ளை ரகு.
அன்றிலிருந்து, அவன் முகம் திருப்பல்களையும் முறைப்பையும் அசட்டையாகத் தள்ளி, எவ்வளவோ முயன்றும் அவள் அடைந்தது என்னவோ தோல்விதான்! ஆம்! இந்த எட்டு மாதங்களில், தான் மேற்கொண்ட சபதத்தில் ஒரு சிறுபடி முன்னேற முடியவில்லை அவளால்! அவன் மௌனம் சாதிக்கச் சாதிக்க, இவள் பேச்சு வளர்ந்து கொண்டே போனது தான் மிச்சம்! பல வேளைகளில் மிகவும் நெருங்கி வருவது போலிருந்தாலும், அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை அறிந்துகொள்ள மிகவும் கஷ்டப்பட்டுப் போவாள் இவள்.
சிந்து என்பவள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். தன்னுடன் வாழ்நாள் முழுதும் பங்கெடுத்துக் கொள்ளப் போகிறவனும் அப்படியே இருக்காவிடினும், கொஞ்சமே கொஞ்சமென்றாலும் திறந்த மனமாய் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தாள் அவள்.
அது தப்பா? அவள் எதிர்பார்ப்புக்கு நடந்தது தான் என்ன?
கடந்தவைகளின் நினைவுகளோடு சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவள், ‘‘முசுடு முசுடு! எப்பப்பாரு உம்மெண்டு முகத்தத் தூக்கி வச்சுக்கொண்டு, உம்மணாம் மூஞ்சி! அப்பிடி இருக்கேக்க தான் பெரிய அழகன் எண்ட நினைப்போ?! கண்ணாடியே பார்க்காதா இந்த மனிசன்!’’ வாய்விட்டே திட்டிக்கொண்டாள்.
‘‘அட! வாயத் திறந்து சிரிக்கிறது இருக்கட்டும்; ஒரு வார்த்தையோட இன்னொண்டைச் சேர்த்துக் கதைச்சா, அவர்ட வாயில சேர்த்து வச்சிருக்கிற சொத்தெல்லாம் வெளிய கொட்டிருமாக்கும்!’’ என, மிக மிக அன்பாகத் தன் கணவனை போற்றிக்கொண்டே சைக்கிளை இறுக்கி மிதித்தாள்.
திருமணமான நாளிலிருந்து, எந்நேரமும் சண்டைகளும் வாக்குவாதங்களும் தான்! அதற்கெல்லாம் முக்கிய காரணமே, கணவனைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றாலும் முடியாமல் அவள் அடையும் ஏமாற்றம் தான். அந்நேரங்களில், அவளுள்ளே சுறுசுறுவென எழும் கோப அலைகள், வார்த்தைகளைச் சிதற விடச் சிறிதும் தயங்குவதில்லை. அவனோ, காது கேளாதவன் போல் அமைதியாக இருப்பவன், பத்துக்கு ஒன்று என்ற கணக்கில் சரி வார்த்தைகளால் சுளீரென திருப்பி அடித்து விடுவான்.
‘அப்ப, என்ர மனம் அவரை ஏற்கேல்லையா? நேசிக்கேல்லையா?’ என, தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள், அந்த வேகத்திலேயே, ‘ஏற்காமலா அவரோட வாழுறன்? நான் அவர மனமார விரும்பிறன்!’’ பதிலையும் சொல்லிக்கொண்டாள்.
‘ஆனால், என்ர அன்பையும் நேசத்தையும் அவர் புரிஞ்சு கொள்ளவும் இல்ல, புரிய முயலுறதும் இல்ல! என்னில கொஞ்சம் சரி நேசமிருந்தா, என்னைப் பார்த்து அப்படிக் கேட்க ஏலுமா இருந்திருக்குமா?’ இப்படி மனதில் வாக்குவாதம் நடத்தியபடியே வைத்தியசாலையை வந்தடைந்திருந்தாள் அவள்.
எதையுமே வெளிப்படையாகக் கதைத்துப் பழகுபவளால், கணவனின் மௌனத்தின் முன்னால் தன்னியல்பாக இருக்க முடியவில்லை. இதனால் பலவேளைகளில் மிகவும் தடுமாறிப் போவாள் இவள்.
வெவ்வேறு சுழலில் வளர்ந்த இருவரும், எவ்வித அறிமுகமோ பழக்கமோ இல்லாமல் ஒன்றிணைந்து வாழ்க்கையைத் தொடங்குகையில், அதைச் சுமுகமாகக் கொண்டு செல்ல நிச்சயம் ஒருவர் ஒருவரை அறிதல் அவசியமாகின்றதே! இல்லையெனில், அம்மணவாழ்வு தான் இரசிக்குமா?
ஆனால் இங்கோ, தம் மணவாழ்வின் ஆரம்பமே, ஒட்டுதல் இல்லாமல் அப்படியும் இப்படியுமாக மேலோட்டமானதாக காணப்படுவதில், தன் கணவனுக்கு எதுவும் பாதிப்பிருப்பதாகத் தெரியவில்லை இவளுக்கு!
இவளும் பல தடவைகள், ‘‘ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாத நேசத்துக்கு ஆயுள்தான் எவ்வளவு?’’ தனக்குத்தானே கேட்டுப் பார்த்துக் கொள்கிறாள்.
‘இப்பிடியே போனா இந்த மணவாழ்வு நிலைக்குமா? நீடிக்குமா?’ என்ற எண்ணமும் இவள் மனதை அலைகழிக்கத் தொடங்கியுள்ளது.
அந்தளவிற்கு கணவனின் அலட்சியம் அவளைப் பாதித்துள்ளது.

error: Alert: Content selection is disabled!!