நீயில்லாது வாழ்வேதடி 5 – 2

‘நானும் தான் இவள ஒதுக்கினன்! ஆனா, அதை என்னால மனமாரச் செய்ய முடிஞ்சிதா?’ நெஞ்சம் கசக்க நினைத்துக்கொண்ட ரமேஷ், ”இந்து!” மென்மையாக அழைத்தான்.
“இப்ப என்னத்துக்கு என்னச் சந்திக்க வேணும் எண்டீங்க? அப்பிடி நாம தனியாகக்கதைக்க எண்டு ஏதாவது இருக்கா என்ன?” கேட்டவள் குரலிலிலும் கசப்பே வழிந்தது.
“அப்பிடி ஏதாவது இருக்கா இல்லையா எண்டு உமக்கே நல்லாத் தெரியும். நான் உம்மோட தனியாக் கதைக்காம வேற ஆரோட கதைக்கப் போறன்?” கனிந்தொலித்தது அவன் குரல்.
சட்டென்று கலங்கிய விழிகளை அப்பால் நகர்த்திக் கொண்டவளுக்கு, தன் நெஞ்சத்தில் திரண்ட துக்கப்பந்தை சமாளித்து, சீராக மூச்சுவிடவே மிகவும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.
அவளையே பார்த்திருந்தவன், சட்டென்று நெருங்கி அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான். அவன் கரம் தந்த அழுத்தத்தில் மளுக்கென்று உடைப்பெடுத்த விழிநீர் அவள் கன்னங்களைத் தழுவிச் சென்றது.
துடிக்கும் இதழும், நனைந்த விழிகளும், வேதனையில் கசங்கிய வதனமுமாக தடுமாறி நின்றவளைப் பார்த்து, துடித்துப் போனான், ரமேஷ்.
“ஸ்ஸ்.. இந்து பிளீஸ்!” என்றவாறே அவள் கண்ணீரை விரைந்து துடைத்தவன் கரங்களை மெல்லப் பற்றிக்கொண்டே, தன்னைச் சுற்றி நோக்கியவள் சற்று நகர்ந்து நின்று கொண்டாள்.
அவளையே சில கணங்கள் உற்றுப் பார்த்தவன் ஒரு முடிவோடு, “வாரும், அங்க இருந்து கதைப்பம்!” பற்றிய கரத்தை விடாது அருகிலிருந்த காஃபி ஷாப் முன்னிருந்த இருக்கைகள் நோக்கி நடந்தான்.
‘இல்ல, வேணாம், சரிவராது’ என ஒதுங்கியிருந்தாலும் மனதளவில் தன்னவன் என்று வரித்துக் கொண்டவனல்லவா இவன்!
‘ஓம் மனசாரக் காதலிச்சம்! இப்பத் தான் பிரிஞ்சிட்டமே, இத்தின மாசங்களில அவரோ நானோ எங்களுக்குள்ள இருந்த உறவைப் புதுப்பிக்க முனையவும் இல்ல, அதில் சாத்தியமும் இல்ல!’ என நினைத்து, மனதில் உறைந்திருந்த அவன் பிம்பத்தை இலகுவில் அழிக்க முடியாது, வேறு வாழ்வென்பதை கணமும் நினைக்க முடியாது தடுமாறி நிற்பவள் அல்லவா இவள்!
நீண்ட நாட்களின் பின்னரான அவன் அருகாமையை இரசித்தவாறே, அவனில் பதிந்த பார்வையை விலக்க மறந்து அவனோடு சேர்ந்து நடந்தாள் இந்து. அங்கு சென்றமர்ந்த பின்னும் சிறிது நேரம் இருவரும் கதைத்துக் கொள்ளவில்லை, மௌனமே நிலவியது. தலை குனிந்திருந்த இந்துவைப் பார்த்த ரமேஷ், ”வீட்டில எனக்குக் கலியாணம் பேசீனம் இந்து!” நேரடியாக விசயத்திற்கு வந்தான்.
இத்தனை நாட்களின் பின் அவனைச் சந்தித்ததில், தன்னைப்போலவே அவன் தன்நினைவில் இருப்பதை உணர்ந்து துக்கத்தை மீறிய மகிழ்வில் அமிழ்ந்திருந்தவள், அவன் வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து, அதிர்வோடு நோக்கினாள்.
மறுகணம் சுதாகரித்துக்கொண்டவளின் இதழ்களோ, ”ஓ அப்பிடியா?! சந்தோசமான விசயம் தானே!” முணுமுணுத்தன.
தொடர்ந்து, “வாழ்த்துகள்!” இப்போது இயலாமையுடன் வெளிவந்தது வார்த்தை. சற்றுமுன் உவகையை ஆசையோடு போர்த்த முனைந்த அவள் மனமோ, அதை உதறி, விரக்தியில் குப்புற விழுந்தது! தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவனை நோக்கிய அவள் விழிகள், சிறிது சிறிதாகக் கோபத்தைப் பூசிக் கொண்டன.
‘அப்ப, என்னில உள்ள நேசத்தில் சந்திக்க வரேல்லையா? பார், எனக்குக் கலியாணம் ஆகப் போகுது எண்டு சொல்லிக் காட்டவா வரச் சொன்னவர்! இவர் என்ர ரமேஷ் தானா? என்ர அக்கா செய்த பிழைக்குத் தண்டனைய வாழ்நாள் முழுசுக்கும் எனக்குத் தர முடிவெடுத்திட்டாரா?’ மனதில், ஆற்றாமையோடு அரற்றினாள்.
அவனோ, ”ஓம் ஓம்! உங்கட வாழ்த்துக்காகத் தான் இத இப்ப வந்து சொல்லிக் கொண்டிருக்கிறன்!” எரிச்சலை அடக்க மறந்து சீறினான்.
“வேணாம் விலகிருவம் எண்டு சொன்னதன் படி என்னை மறந்திட்டு, வேற வாழ்க்கைய அமைச்சுக் கொள்ளத் தயாராகிட்டீர் போல இருக்கே! அப்பிடியா? இது தெரியாமல் நான் தான் முட்டாள் மாதிரி உம்மத் தேடி வந்தனா?” கேட்டவனின் குரலோடு போட்டி போட்டுக்கொண்டு கோபத்தில் ஜொலித்தன விழிகள்.
“என்ன! வேற வாழ்க்கையா? நானா? இது என்ன புதுக்கத?!” அவளும் பதிலுக்குச் சீறினாள்.
“இப்ப எனக்கு வாழ்த்துச் சொன்னீரே அதுக்கு என்ன அர்த்தம்? நான் வேற ஒருவாழ்க்கையைத் தேடினா, உமக்கு அதில ஒன்றுமில்ல என்றது தானே!” என்றவன், சட்டென்று அமைதியானான். அவளும் மௌனியாகி, அருகே போவோர் வருவோரை வெறித்துக் கொண்டிருந்தாள்.
“இங்க பாரும் இந்து, இவ்வளவு நாட்களா ஒருவர் ஒருவரோட கதைக்காமல் இருந்தாச்சு! நீரோ நானோ வேற ஒரு வாழ்க்கைய அமைச்சுக் கொள்ளப் போறதில்ல என்றது நமக்கு நல்லாவே தெரியும்!” தொடர்ந்தவன் குரல் ஒரு தீர்மானத்தோடு வெளிவந்தது.
சட்டென்று அவனைப் பார்த்தவள் விழிகள் மீண்டும் கசிந்தன!
“நம்மட விசயத்த வீட்டில சொல்லுற நேரம் வந்திட்டு இந்து. இனியும் என்னால பொறுத்திருக்க முடியாது! இதனால என்ன பிரச்சனை வந்தாலும் அதையும் எதிர்நோக்கத்தான் வேணும்.” அவளையே கூர்மையாகப் பார்த்து, தீர்மானமாகச் சொன்னான்.
அவளோ, தளம்பி வெளியேறத் துடித்த விழிநீரை, உள்ளிழுக்கப் பிரயத்தனம் செய்தவாறே அவனை ஏறிட்டாள். ”நான்…நான்…” திக்கியவள், “நம்மட விசயத்த ரெண்டு மாசங்களுக்கு முதலே வீட்டில சொல்லிட்டன். அப்பா எனக்குக் கலியாணம் பேசப் போறதாச் சொன்னோன்ன சொல்லிட்டன்!” என்றவளை, சற்றுமுன் தான் அவளைக் கடிந்து கொண்டதை நினைத்தவாறே நேசமுடன் நோக்கியவன், “அப்ப, உம்மட வீட்டில என்ன சொன்னவே?” கேட்டவன் குரல் அவனையும் மீறி இறுகியே வந்தது.
“அம்மாவோ அப்பாவோ இதப் பற்றி ஒரு வார்த்தை கூட இதுவரைக்கும் கதைக்கேல்ல தெரியுமா?” என்றவள், இருக்கும் இடம் மறந்து விம்மினாள்.
‘இது தெரிஞ்ச விசயம் தானே!’ என்ற வகையில் அவளை நோக்கினாலும், “முதல் அழுறத நிப்பாட்டும்!” என்றான், அவசரமாக!
”எப்படி… எதக் கதைக்கிறது எண்டு உங்கட வீட்டில யோசிச்சிருப்பீனம் இந்து! முகம் கொடுத்துக் கதைக்கிற மாதிரி நிலையிலா நம்மட ரெண்டு குடும்பங்களும் இருக்கு! எல்லாம் உம்மட அக்..” இறுக்கத்தோடு சொல்லிக்கொண்டு வந்தவன், அவள் முகம் கன்றுவதைப் பார்த்துப் பேச்சை நிறுத்தினான்.
அதைக் கேட்டவளும் அமைதியாக இருக்கவில்லை.
”ப்ளீஸ் ரமேஷ், நாம நம்மட விசயம் பற்றி மட்டும் கதைப்பம். மறக்க முயன்றும் முடியாமல் தவிக்கிற விசயத்தத் திரும்ப திரும்பக் கதைக்கிறதால ஒரு பிரயோசனமும் இல்ல!?” கவலை தோய்ந்த குரலிலும் உறுதியாகச் சொன்னாள்.
என்னதான் சகோதரி செய்த விடயத்தால் இரு குடும்பங்களும் பிரிந்து, அவர்கள் காதல் கேள்விக்குறியாக நின்றாலும், சகோதரி எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டுமெனவே மனமார விரும்பினாள், இவள்.
”அவளைத் திட்டுறதாலோ, துற்றுறதாலோ நன்மை ஏதாவது நடக்கவா போகுது!?” தன்னை முறைத்தவனைப் பார்த்துத் தொடர்ந்துரைத்தவள் குரலில் கசப்பே வழிந்தது.
”பார், இவ்வளவுக்கும் பிறகும் உமக்கு அக்கா பாசம்!?” கோபத்தை அடக்காமல் உறுமினான், ரமேஷ்.
அதற்குப் பதில் சொல்லாது அவனையே பார்த்திருந்தவள், ”இப்ப என்ன செய்யப் போறீங்க?” என்றாள், மெல்லிய குரலில்.
”அதுதான் எனக்கு விளங்கேல்ல!” என்றவாறே அருகில் போவோர் வருவோரை வெறித்துக் கொண்டிருந்தவன், “ஆனா, வீட்டில சொல்லுறது எண்ட முடிவுக்கு வந்திட்டன்! இதச் சொல்லத்தான் உம்மச் சந்திக்க நினைச்சன். ”
இத்தனை நாட்களுக்குப் பிறகு அவளை நேரில் பார்த்து இரு வார்த்தைகள் பேசும் ஆவலில் தான் வந்ததை மறைத்து அவன் சொன்னதும், இந்துவின் இதழ்களில் சிறு முறுவல் ஒன்று நெளிந்து மறைந்தது!
“ம்ம்…நீங்க யோசிச்சு என்ன செய்யலாம் எண்டு கோல் பண்ணிச் சொல்லுங்க.” என்றவள், ‘நீங்க கதைச்சி சமாதானம் ஆகி, சேர்ந்தே வீட்டாக்கள சமாதானம் செய்து கலியாணம் செய்வம் எண்டு முடிவெடுத்து இருந்தா…இந்த ரதி உங்களுக்காக மேல நிக்கிறாள் எண்டத மறந்திராதீங்க’என்று தோழி அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்து முறுவலித்தாள்.
அடுத்த சில நிமிடங்களில், ‘கதைச்சிட்டம் வா…’ என்று, சிநேகிதியிடம் இருந்து வந்த பதில் குறுஞ்செய்திக்குக் கீழே வந்த ரதி, “அப்பப்பா சேர்ந்து போராடத் தயாராகியாச்சோ! அது என்னைப்போல புத்தியுள்ள மனுசருக்கு அழகு!” என்றபடி, “முதல் ஒரு ஐஸ் குடிப்பம் வாங்க…” அவர்களோடு சேர்ந்து நடந்தபடி, இருவரையும் வழமை போல கடி கடியென்று கடிக்க, நீண்ட நாட்களின் பின்னர் கலகலப்போடு சிறுபொழுதைச் செலவிட்டுவிட்டு, “மீண்டும் சந்திப்போம்!” எனக் கூறிப் பிரிந்தனர்.

error: Alert: Content selection is disabled!!