நீயில்லாது வாழ்வேதடி 6 – 2

‘நாங்க நினைக்கிறது நடக்குமா?’ அவள் மனம் கிடந்தது அல்லாடத் தொடங்கியது.
*****
அதிகாலையிலேயே சமையலில் அவசரம் அவசரமாக ஈடுபட்டிருந்தாள் சிந்து. தேநீர் அருந்தியபடி, அவளுக்குக் கையுதவிகளை செய்தவாறே அருகில் முக்காலியில் அமர்ந்திருந்தார், அவள் சித்தி!
ஆமாம்! சிந்து சித்தியையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் கடந்து விட்டது. விருப்பமின்றி, சிந்துவின் வற்புறுத்தலுக்காக வந்தவருக்கு, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கொழும்பு வாழ்க்கை பழகிவிட்டது.
வீட்டு வேலைகளில் உதவுவது, கடைகளுக்குப் போவது, மாலை நேரத்தில் கொஞ்சப் பிள்ளைகளிற்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என, அவர் பொழுது சந்தோசமாகக் கழிகிறது.
குத்தரிசியைக் கழுவி, பிரஷர் குக்கரில் வைத்தவள், லக்ஷ்மி கழுவி வைத்திருந்த பொன்னாங்காணிக் கீரையை மிகச் சிறிதாக அரிந்து ‘வறை’ தயாரித்தாள். மீன் குழம்புக்குக் கூட்டி அடுப்பில் வைக்கும் போது, “சிந்து!” மாடியிலிருந்து அவள் கணவன் அழைக்கும் குரல் கேட்டது.
”சித்தி…கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்க; நீங்க ஒண்டும் செய்ய வேணாம்; என்னெண்டு கேட்டுட்டு ஓடிவாறன்!” கூறியபடி, ஈரக்கையை அருகிலிருந்த துண்டினால் துடைத்தவாறே மாடியை நோக்கி ஓடினாள், சிந்து.
அலாரம் இல்லாமலேயே குக்கர் விஸில் சத்தத்தால் விழித்து விடும் ரகு, மனைவியை அழைத்து, கொஞ்ச நேரம் செல்லம் கொஞ்சி விட்டுத் தான் எழுவது வழக்கம். அதே போல் இன்றும் அழைத்தவன், மனைவியின் வருகைக்காக வாயிலை நோக்கியபடியே படுத்திருந்தான்.
வேகமாக உள்ளே ஓடி வந்தவள், ”இங்க பாருங்க,சமையல் வேலை அரைவாசிக்கு மேல இருக்கு; ப்ளீஸ் பா, பேசாமல் எழும்புங்கோ!” என்றபடி அவனருகில் வர, “எந்த நேரம் பார்த்தாலும் உமக்கு ஏதாவது வேலை; அவசரம் …அவசரம்; ம்ம்…இப்ப எல்லாம் என்னைக் கண்டு கொள்ளுறதே இல்ல!´´ அதிகாலையிலேயே சோககீதம் வாசித்தபடியே அவள் கரம்பற்றி இழுத்தவன், கட்டிலில் அருகில் விழுந்தவளிடம், ”சின்னப் பெடியன் ஆசையாக் கூப்பிட்டா வந்து அவனக் கவனிச்சிட்டுப் போய் சமையலைச் செய்யலாம் தானே?” என்றபடி வழமை போல அவளுடன் செல்லம் கொஞ்சத் தொடங்கினான்.
இப்பொழுதெல்லாம் ரகு மிகவும் மாறி விட்டான். இல்லையில்லை, சிந்து அவனை மாற்றி விட்டாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவி பின்னாலேயே வால் பிடித்துக்கொண்டு அலைவான் ரகு. அவன் பெற்றவர்களுக்கும், தம்பிக்குமே இவனைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் தான். நன்றாகக் கேலி கிண்டல்களுக்கும் அவனைப் பழக்கி விட்டாள், சிந்து.
வார நாட்களில் மட்டும் தான் அவர்கள் இங்கிருப்பது. வெள்ளி இரவு மூவருமாக ரகுவின் பெற்றோர் வீட்டுப் போய்விடுவர். இங்கும் மூன்று பேர் மட்டுமே இருந்தாலும், வீட்டில் இருக்கும் போது கலகலப்புக்குக் குறைவிருக்காது.
இரண்டு மாதங்களாக, கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தற்காலிகமாக வேலைக்குப் போகின்றாள் இவள். அதனால் தான் காலையில் இத்தனை அவசரம்.
கணவனை ஒருவாறு சமாளிக்கிற விதத்தில் சமாளித்து, எழுப்பி, குளியல் அறைக்குள் தள்ளியவள், சமையலறைக்கு விரைந்தாள். அங்கே, சமையலை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார், லக்ஷ்மி.
”இதென்ன சித்தி! போதும்…போதும், நீங்க இங்கால வாங்க; மிச்சத்த நான் செய்யிறன்!” என்றாள் பதறியபடியே.
”நான் சும்மா தானே இருக்கிறன் மா! இதையெல்லாம் செய்ய மாட்டனா? பெரிய வேலை பார்! நீ தான் விடுற இல்லை.” என்றபடி வெளியே சென்ற லக்ஷ்மியின் மனம், நிம்மதியாலும் பெருமையாலும் நிறைந்திருந்தது.
”பெற்றவர்கள் இல்லாத பிள்ளை, நான் வளர்த்த வளர்ப்பும் பிழையாக இல்ல!” என்று மனதில் நினைத்தவாறே மேலே சென்றார் அவர்.
சித்தியை சமாளித்து வெளியே அனுப்பியவள், மிகுதி வேலைகளைச் செய்து சமையல் அறையை ஒழுங்கு படுத்திவிட்டு கணவனுக்கான தேநீருடன் வெளியே வர , ரகுவும் கீழே வந்தான்.
தேநீரைக் குடித்த ரகுவும் சிந்தும், ஒருத்தரை ஒருத்தர் வம்பிழுத்தபடியே வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி, சிந்து பாடசாலை பஸ்சிலும் ரகு தன் காரிலுமாக வேலைக்குக் கிளம்பிச் சென்றனர்.
பாடசாலையில், இடைவேளையின் போது ஆசிரியர் ஓய்வறையிலிருந்து சக ஆசிரியருடன் உரையாடிக்கொண்டிருந்த சிந்து, கைபேசியில் அழைப்பு வரவே எடுத்துப் பார்த்தாள்.
அவளின் மைத்துனன் அழைத்திருந்தான். ‘ரமேஷ் ஏன் இப்பக் கூப்பிடுறார்?’ என்று எண்ணியவாறே, அவன் அழைப்பை ஏற்று கதைக்கத் தொடங்கினாள். அடுத்த சில நிமிடங்களில், யோசனையில் ஆழ்ந்த முகத்துடன், தலைமை ஆசிரியரிடம் சென்று ஒருமணி நேரம் முன்னதாக வீடு செல்ல அனுமதி கோரினாள். தலைமை ஆசிரியரும் ஒத்துக்கொள்ளவே, அடுத்த பாடவேளைகளை முடித்தவள், பாடசாலை விடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அங்கிருந்து கிளம்பி, காலி முகத்திடலில் உள்ள ‘கார்னிவேல்’ ஐஸ் கிரீம் கடைக்கு ஆட்டோவில் சென்றாள்.
ஆட்டோவில் செல்லும் போதே, ‘ஏன் காரணம் சொல்லாமல் அவசரமெண்டு வரச் சொல்லுறார்?!’ யோசித்தவள், ‘ரமேஷ் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளுற ஆளும் இல்ல, காரணமில்லாமல் சந்திக்க வேணும் எண்டு சொல்லவும் மாட்டார். குரல் கூட வித்தியாசமா இருந்திச்சே! என்ன எண்டாலும் வீட்டில கதைக்கலாமே!’ மனம் குழம்பியவாவாறே ‘கார்னிவேலை’ வந்தடைந்தவள், ஆட்டோவுக்குப் பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.
அங்கே, ஒரு மேசையில் ரமேஷ் அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டு, முறுவலுடன் அவனிருக்குமிடம் சென்றவள், ”என்ன விசயம் ரமேஷ்? அதும் அண்ணாவுக்குத் தெரியாமல்!” நேரடியாகக் கேட்க, கணம் தடுமாறினான் ரமேஷ். தன் அண்ணியின் முகத்தைப் பார்க்கவே மிகவும் சங்கடம் கொண்டான், அவன்.
‘நான் இத எப்பிடிச் சொல்லி முடிப்பன்! அண்ணி உதவுவாவா?’ என, ஆயிரமாம் முறையாக மனதில் புலம்பியவன், தயக்கத்துடனே சிந்துவைப் பார்த்து, ”சொறி அண்ணி, இந்த வேகாத வெயிலில உங்கள வர வச்சிட்டன். ஆனா, எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல அதான்; கோவிக்காதீங்க அண்ணி.” என்றான் கெஞ்சலாக.
‘பெடியன் நசுங்கிறதப் பார்த்தா விசயம் பெரிசு போல இருக்கே!’ என நினைத்த சிந்துவும், “இதில என்ன இருக்கு ரமேஷ், நான் என்ன நடந்தா வந்தன்?” முறுவலித்தவாறே கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்து கொண்டாள்.
“ம்ம்…சொல்லுங்க, என்ன விசயம்?” மீண்டும் வினவவும் செய்தாள்.
“சொல்லுறன் அண்ணி; அதுக்கு முதல் ஐஸ் குடிப்பமா?” என்றவன், அவள் பதிலுக்குக் காத்திராது எழுந்து சென்று, ஐஸ்கிரீம் ஓடர் பண்ணியவாறே கைபேசியில் இந்துவை அழைத்தான்.
அவள் அழைப்பை ஏற்றவுடன், ”இந்து…அண்ணியும் வந்திட்டா, நீர் வரேல்லையா?” அவசரமும் அந்தரமுமாகக் கேட்டான்.
”இந்தா பஸ்ஸால இறங்கி அங்க தான் வந்து கொண்டிருக்கிறன்! ” என்ற இந்துவின் பதிலில் அமைதியானவன், அவளுக்கும் சேர்த்தே ஐஸ்கிரீமை வாங்கினான்.
தன்முன் மூன்று ஐஸ்கிரீம் கப்களுடன் வந்தமர்ந்தவனை கேள்வியாய் நோக்கினாள் சிந்து.
”என்ன ரமேஷ் இது, ஆருக்கு ரெண்டு ஐஸ்!?” ஆச்சரியமா க வினவிக் கொண்டிருக்கையில், அருகில் வந்த நின்ற இந்து, ”சொறி ரமேஷ், பஸ் வர கொஞ்சம் லேட்டாவிட்டது!” அவனிடம் மெல்லிய குரலில் கூறியவள், ஆராய்ச்சியும் ஆர்வமுமுமாகத் தன்னை நோக்கிய சிந்துவிடம், ”ஹாய்!” என முறுவலித்தாள்.
பதற்றமும் அதை மறைக்கும் மென்முறுவலுமாக, வேர்த்து விறு விறுக்க வந்து நின்ற அவ்வழகிய இளம் பெண்ணைக் கண்ட சிந்து, தடுமாற்றத்தோடு இருக்கும் ரமேஷையும் அவளையும் மாறி மாறி ஆச்சரியம் ததும்பப் பார்த்தவளுக்கு மெலிதாக விசயம் விளங்கியது.
ஆனாலும் அவ்விடயத்தின் தீவிரம் தெரியாததால், “ஹாய், நான் ரமேஷ்ட அண்ணி சிந்து; உட்காருங்க.” முறுவலோடு தன்னருகில் இருந்த இருக்கையைக் காட்டி உபசரித்தாள்.

error: Alert: Content selection is disabled!!