“:எழில் நீங்களா?? என்….ன…?” திகைப்பில் விழித்துக்கொண்டு கேட்டவளுக்கு, மனோ தான் புறப்படும் விஷயத்தை சொல்லி விட்டான் என்று புரிய, அவனில் ஆத்திரம் வந்தாலும், புறப்பட முதல் இவனைச் சந்தித்ததில் மனதில் நிச்சயம் ஒருவகை மகிழ்வு பரவத்தான் செய்தது.
தன்னையே முறைத்துக் கொண்டிருப்பவனை நெருங்கியவள் “வாழ்த்துக்கள் எழில், உங்களுக்கு கல்யாணமாமே! அதுவும் உங்க அத்தை பெண்ணை. என்னிடம் சொல்ல வேண்டும் என்றே தோன்றவில்லை இல்லையா?” கேட்கும் போது, இலேசாகத் திரண்ட கண்ணீரை இலாவகமாக உள்ளிழுத்து மறைத்துக் கொண்டாள்.
ஆனால், அவளையே பார்த்திருந்தவனில், இதுவரை இருந்த கடுமையை மேவி, அவன் உள்ளத்தில் அவள்பால் இருந்த காதலே காட்சி தந்தது.
“ஏஞ்சல், அப்போ என்னை விட்டு ஓடிவிட முடிவு செய்து விட்டாய் போல! அதுவும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல்.” கேட்டவனை, பதிலின்றிப் பார்த்தவள், மெல்ல தன் விழிகளை வெளிப்புறமாகத் திருப்பியவாறே கொஞ்சம் தள்ளி ஜன்னலோரமாகச் சென்று நின்று கொண்டாள் .
ஓரெட்டில் அவளிடம் வந்தவனோ, “சொல்லு ஏஞ்சல், நான் உன்னிடம் கல்யாணம் செய்து கொள்வோமா என்று கேட்டதற்கும் நீ இன்னமும் பதில் சொல்லவில்லை. இந்த அழகில் எனக்கு வாழ்த்துச் சொல்கின்றாய்.” சினத்துடன் சிரித்தான்.
“என் அத்தை பெண்ணை வீட்டில் பேசினார்கள் தான். இப்போ, உன்னைப் பற்றியும், உன்னை விரும்புவதையும் அவர்களிடம் சொல்லி விட்டேன்.” அவள் இதைக் கேட்டதும் நிச்சயம் மகிழ்வாள் என்ற நினைவில் சொல்ல, அவளோ சட்டென்று திகைப்புடன் பார்த்தவளின் விழிகளில் இப்போது நீர் மணிகள் உருண்டு வழிந்தது.
அவள் விழிநீரைக் கண்டதும் துடைக்க எழுந்த அவன் கரங்களைத் தடுத்து விட்டு, அடுத்த கணம் விழிநீரைச் சுண்டி விட்டவள், அவனையே ஒருகணம் தீர்க்கமாகப் பார்த்து விட்டு சொன்னவைகளைக் கேட்கக் கேட்க, நம்பவே முடியாமல் தள்ளாடி விட்டான் எழில்.
இப்படியும் இருக்கலாம் என்று ஒரு கணம் கூட கற்பனை செய்திராத செய்தியை அல்லவா அவள் வாய் நடுக்கத்துடன் உதிர்த்தது!
அதிர்ச்சி! அதைத் தொடர்ந்தெழுந்த சொல்ல முடியாத ஆத்திரம்! திக்பிரமை! இப்படி மாறி மாறி ஏற்பட்டது அவனுக்கு!
அப்படியே அருகில் இருந்த கதிரையில் தொப்பென்று அமர்ந்து கொண்டான் அவன்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பானோ, மனோ வந்து கதவைத் தட்டியதும், அசையாது அதிர்ந்திருப்பவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்று கதவைத் திறந்தவள் கமலாவை நாடிச் சென்று மறைந்தாள்.
திக்பிரமையில் இருந்த நண்பனை உலுப்பினான் மனோ.
அவனோ வாய் திறவாது வெறித்துக் கொண்டிருந்தவன், அப்படியே எழுந்து காரில் ஏறிச் சென்று விட்டான்.
‘அவ்வளவு வீராப்பாக வந்தவனை அப்படி என்ன சொல்லி திருப்பி அனுப்பி இருப்பாள்?! காதலிக்கிறேன் என்று சொன்னவன் அவள் செல்வதைப் பற்றி ஒன்றுமே சொல்லாது, பேயறைந்தது போலப் போனானே! என்னவாக இருக்கும்? நாளை முதல் வேலை அவனிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும்.’ எண்ணிக்கொண்ட மனோ, தன் வீடு நோக்கி காரைச் செலுத்தினான்.
****
மகன் திடீரென்று கூறிய செய்தியினைக் கேட்டு கலங்கிப் போயினர் ராஜசேகர் பரிமளா தம்பதியினர்.
ஆனால் அவனோ பேசிக் கொண்டிருக்கும் போதே போனவன் தான், அதன் பின்னர் வீடு வந்து சேரவே இல்லை.
நேரம் செல்லச் செல்ல மனதில் சூழ்ந்த கலக்கத்துடன் அவன் கைபேசிக்கு அழைத்துப் பார்த்தார் பரிமளா. ஆர்த்தி வேறு தன் பங்கிற்கு முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அவன் கைபேசி உயிர்ப்புடன் இருக்கவில்லை.
ராஜசேகரோ, ஒத்த வார்த்தை பேசாது விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். இதையெல்லாம் பார்த்து செய்வதறியாது தடுமாறினார் பரிமளா.
ஏஞ்சலை பற்றி அவன் மூலம் அறிந்து கொண்டதே மிகப் பெரிய அதிர்ச்சி என்றால், அதனைத் தொடர்ந்து, “நான் அவளைக் காதலிக்கிறேன்; கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன்.” என்று, மிகவும் சாதாரணமாக மகன் கூறியதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே கடினமாக இருந்தது.
ராஜசேகர், தங்கைக்காக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது, மிகவும் பழகியவர்கள் மூலம் வந்த வரனே வேணு.
தோற்றம், படிப்பு, நடத்தை என்று எதுவும் பிழை சொல்லும் அளவுக்கு இல்லாமல் இருந்த திருப்தியுடன், கல்யாண வீடொன்றில் வேணுவை ஏற்கனவே கண்டிருந்த ஸ்ரீமதிக்கும் அவரைப் பிடித்திருக்கின்றது என்ற ஒரே ஒரு காரணத்துக்காகவே அவரைத் தங்கைக்கு மாப்பிள்ளையாக்கினார் ராஜசேகர்.
மகனின் அனுமானத்தின் படியே, கோமதி வீட்டில் நடந்த காதல் விபரத்தை இவர்கள் அறிந்து தான் இருந்தார்கள். ஆனால் என்ன, அதை இவர்கள் அறிந்து கொண்ட போது காலம் கடந்திருந்தது.
‘அதுமட்டும் முன்பே தெரிந்திருந்ததால் என் தங்கையை அந்த வீட்டில் கட்டிக் கொடுக்க நான் என்ன வசதியில்லாமலா அலைந்து கொண்டிருந்தேன்?
அல்லது, இவன் நமக்குப் பொருத்தமில்லை என்று கண்டிப்புடன் மறுத்திருந்தால் என் தங்கைதான் எதிர்த்து நின்றிருப்பாளா?’ உள்ளத்தினுள் குமுறிய ராஜசேகருக்கு, கோமதியின் மீது கண் மண் தெரியாத ஆத்திரமும் வெறுப்பும் எழுந்தது.
அதேநேரம், ஏஞ்சலின் பிறப்பு இவர்கள் முற்றிலும் அறியாதது. இத்தனை வருடங்களில் மங்களா ஜுவல்லரியினரை இவர்கள் நட்புடன் அணுக முற்பட்ட போதெல்லா,ம் அவர்களின் குரோதமும் உதாசீனமும் இந்தளவுக்கு ஏன் என்று ராஜசேகரே நினைத்துப் பார்த்துள்ளார். இப்போதுதான் அதற்கான காரணம் தெளிவாக விளங்கியது அவருக்கு.
‘ச்சே! என்ன மாதிரி ஏமாந்திருக்கிறேன்? அதுவும் ஒருமுறை ஏமாந்தது போதாதா? நான் என்ன அந்தளவுக்கு இளிச்சவாயனா?’ என்று நினைத்துக் கொண்டவர்,
‘அவன் சொன்னால் மட்டும் போதுமா? நான் ஒரு போதும் கண்ட பெண்ணையும் திருமணம் செய்ய என் மகனை அனுமதிக்க மாட்டேன். எல்லாவற்றையும் விட, என் தங்கை பெண்ணின் மனம் கோண அனுமதிக்கவே முடியாது.’ உறுதியாகவே நினைத்துக் கொண்டார்.
கணவரின் மனக் கொதிப்பை ஒத்ததாகவே பரிமளாவின் மனவோட்டமும் இருந்தது. அதேநேரம், அவசரமாக வெளியேறிய தன் செல்ல மகனைக் காணவில்லையே என்பதும், அவன் முகம் சுமந்திருந்த கலக்கமும் நினைவில் வர, தாயாய் துடித்துப் போனார் அவர்.
மூத்தமகன் ஆதியை அழைத்து விபரத்தைச் சொன்னதும், சிறிது நேரத்தில் அவன் வந்து விட்டான்.
“எழில் என்னிடம் சொல்லும் போது நம்பவே கடினமாக இருந்ததும்மா. ஆனால், அந்தப் பெண் அதுதான் ஏஞ்சல், அவளின் ஃபோட்டோவைப் பார்த்தாலே சந்தேகம் இல்லாமல் நம்பி விடுவீர்கள். அந்தளவுக்கு உருவ ஒற்றுமை..” சொல்லிக் கொண்டு வர,
நடப்பதைப் பார்த்துக் கலங்கிக் கொண்டிருந்த ஆர்த்தியும், “ஆமாம் அம்மா. கொஞ்ச நேரம் தான் அவவுடன் இருந்தேன். பார்க்கவே தெரியுதம்மா, மிகவும் நல்ல பெண்; அதோடு சரியான பாவம்.” படபடத்த மகளையும் மகனையும் திரும்பிப் பார்த்த ராஜசேகர் சினத்துடன் முறைத்தார்.
“ஆமாம், சின்னவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இத்தனை பெரிய விடயத்தை மறைத்திருக்கிறீர்களே! ” முறைப்பைத் தொடர்ந்து உறுமினார் .
“அப்படியில்லையப்பா..எழில் தான்..” தடுமாறிய மகனைக் கையமர்த்தியவர்,
“அப்போ, அவன் காதல் விடயமும் உனக்கு முன்னரே தெரியுமா?” குரலில் கூர்மையும் விழிகளில் கடுமையுமாகக் கேட்டார்.
“இல்லை….அப்படி ஒன்றும் அவன் சொல்ல..” சொல்லிக் கொண்டு வந்த ஆதி நிறுத்தி, தந்தையையும் தாயையும் கவலையாகப் பார்த்தவன்,
“காதலிக்கிறேன் என்று என்னிடம் சொல்லவில்லை. ஆனால்… ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னான். கேட்டதும் அவனுக்கு புத்திமதி சொன்னேன். பிறகு ஏஞ்சல் விடயத்தைத் தெரிந்து கொண்டதும், கல்யாணத்தை அவன் மறுத்ததை நான் பெரிதாக எடுக்கவில்லை; நினைவிலேயே இருக்கவில்லை.” உள்ளிறங்கிய குரலில் சொன்ன ஆதிக்குமே தம்பியின் திடீர்க் காதல் அதிர்ச்சியையே கொடுத்தது.
“வளர்ந்து, தொழில்களைக் கட்டி ஆளுபவர்களின் பேச்சு, செயல்கள் மாதிரியா இருக்கு உங்கள் வேலைகள்?” மகனிடம் சீறியவர்,
“முதல் அவன் இப்போது எங்கே என்று பாருங்க; வீட்டுக்கு வரச் சொல்லுங்க. அந்தப் பெண் எங்கிருக்கிறாள்?” படபடத்தார்.
“மனோ அண்ணாப்பா.. அண்ணாவின் ஃப்ரெண்ட், பெரியார் ஆச்சிரமத்தில்..” என்ற மகளிடம், ‘தெரியும்’ என்பதாய் தலையாட்டியவர், “அப்போ… அவர்களுக்கும் இந்த விடயமெல்லாம் தெரிந்திருக்குமா?” என்றவர் முகம் அவமானத்தால் சிவந்தது.

