அனைவரும் அப்படியே அசையாது கேட்டிருந்தனர். கோமதியின் மனதில் மிகவும் இலேசாக ஒட்டியிருந்த நம்பிக்கையும் ஆட்டம் கண்டு விட்டது. ஆனாலும் அவ்வளவு இலேசில் அவர் இதை விடுவதாக இல்லை. ‘என் செல்லப் பேத்தியின் கண்கள் கலங்குவதை என்னால் பார்க்க முடியுமா?’ தன்னையே கேட்டுக் கொண்டவருக்கு, ‘அந்தக் கழுதை என் பேத்தியா?’ ஏஞ்சலை நினைக்கவே அவருக்கு அருவருத்துப் போனது.
‘எப்படியும் எழில் ஸ்வேதா கல்யாணத்தை நடத்த வேண்டும். அதற்கு என்ன செயலாம்?’ யோசிக்கத் தொடங்கினார்.
அதுவரை வேணுவினதும் கோமதியினதும் நம்பிக்கைத் துரோகத்தில் மனம் கொதித்துப் போய் இருந்த பரிமளா, ராஜசேகருக்கு, அப்போது தான் மகனை இனி மாற்றுவதென்பது மிகக் கடினம் என்பதே புரிந்தது.
‘அதெப்படி பார்த்து இவ்வளவு சிறிது காலம் பழகி, கட்டினால் அவளைத்தான் என்று இவன் முடிவெடுத்து அதிலேயே தொங்குகிறானே!’ கோபத்துடன் வியந்து கொள்ள மட்டுமே அவர்களால் முடிந்தது. ஸ்வேதாவின் இடத்தில் அவ்வளவு இலகுவாக ஏஞ்சலைப் பொருத்திப் பார்க்க அவர்களால் முடியவில்லை.
தங்கை, அவள் பெண் இருவரையும் ‘நான் எப்படித் தேற்றப் போகிறேன்!’ வழி தெரியாது தடுமாறினார் ராஜசேகர்.
ஆரம்பத்தில் ஏஞ்சல் மீது ஏற்பட்ட கோபம் போய், அவள் வேண்டாம் என்று விட்டு விட்டுப் போன பின்னும் அவளைத் தொடர நினைக்கும் மகனில் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
அதேநேரம், எழிலின் குணம் நன்றாகத் தெரிந்திருந்ததால், தம் கோபத்தின் பெறுமதி பூச்சியம் என்பதும் புரிந்தே இருந்தது அவருக்கு.
****
வேணு வைத்தியசாலையில் இருந்ததை அவர் குணப்பட்டு வீடு வந்த பின்னரே அறிந்து கொண்ட ஸ்வேதா, அமெரிக்காவில் இருந்து உடனேயே புறப்பட்டு விட்டாள்.
வைத்தியசாலையில் இருந்த வேணுவை ராஜசேகர் சொன்னதின் படி தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்திருந்தான் ஆதி.
ஸ்ரீமதி, பேச்சைத் தவிர்த்து தன் மனதுள் அனைத்தையும் போட்டு புழுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பயந்து போன ராஜசேகர், “வேணு நன்றாக குணமடைந்த பின்னர் வீட்டுக்குப் போகலாம்.” என்று தங்கையிடம் சொல்லி தம் வீட்டில் தங்க வைத்திருந்தார்.
வேணு, என்றோ செய்தவை இன்று தெரிய வந்திருந்தாலும், அவர் தன் தங்கையின் கணவர் என்பதே ராஜசேகரின் எண்ணமாக இருந்தது.
அமெரிக்காவில் இருந்து வந்த ஸ்வேதாவையும், தன் மகளுடன் தங்கியிருந்த வேணுவின் தந்தையையும் விமான நிலையத்திலிருந்து எழிலே வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.
அவள் வீட்டினுள் நுழைகையில் ஆவலும் பாசமுமாக விரைந்து வந்த கோமதி பேத்தியைக் கட்டிப் பிடித்து, “வந்துவிட்டயா ஆச்சி!” என்றவாறே முகத்தை வருடியவரின் கையைத் தட்டி விட்டு விட்டு விலகியவள், அந்நியப் பார்வை பார்த்தவாறே தந்தை தங்கியிருந்த அறையை நோக்கி விரைந்தாள்.
அதைப் பார்த்த பரிமளா, “என்ன இவள் இப்படிச் செய்து விட்டுப் போகின்றாள்? அவளுக்கு பாட்டி என்றால் கொள்ளைப் பிரியமே!” கணவரிடம் சொல்லி வியந்தவர்,
“இங்கு நடந்தவைகள் அவளுக்கு தெரிந்திருக்குமோ?!” சந்தேகத்துடன் வினவ,
அங்கே வந்த எழில், “ம்ம்ம்…தெரியும்மா. அவளிடம் சொன்ன பின்னர் தானே நான் அத்தையிடம் கதைத்தேன். முதல் அவளிடம் கதைத்து ஏஞ்சல் பற்றி முழுவதும் சொல்லி நான் அவளைக் காதலிப்பதையும் சொல்லிவிட்டேன்.” தகவலாகச் சொல்லிச் சென்றவனை செயலற்றுப் பார்த்திருந்தனர் பெற்றோர்.
ஆனால் கேட்டுக் கொண்டிருந்த கோமதியோ பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கி விட்டார்.
அவரை ஆறுதல் படுத்த எவருமே முன் வரவில்லை. மாடியில் பின்புறமாக இருந்த அறையில் ஸ்ரீமதியும் வேணுவும் இருந்ததால் அவர்களுக்கு கீழே நடந்தவை எதுவும் கேட்கவில்லை.
சிறிது நேரத்தின் பின், பரிமளா சொன்ன ஆறுதல்கள் எதையும் காதுகளில் வாங்கிக் கொள்ளாதவர்,
அப்போது தான் வந்திருந்த கணவனையும் அழைத்துக் கொண்டு, “இந்த வீட்டில் இனி ஒருவாய்த் தண்ணி குடித்தாலே அது எனக்கு விஷம். இனி உங்களுக்கும் எனக்கும் ஓட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம். அந்த கேடு கேட்டவளை நடு வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டாடுங்க. அதனால் உங்க தங்கை குடும்ப மானம் கப்பல் ஏறுமே…அதைப் பார்த்து இரசியுங்க” என்றவர், அதே வேகத்தில் கிளம்பிச் சென்று விட்டார்.
அறைக்குள் சென்ற ஸ்வேதா, அங்கே சோர்ந்து போய்ப் படுத்திருந்த தந்தையையும், இறுகிப் போய் உணர்ச்சிகளற்று நின்றிருந்த தாயையும் பார்த்ததும், துக்கம் பொத்துக் கொண்டு வந்தாலும், அதை மிகவும் சாமர்த்தியமாக சமாளித்துக் கொண்டாள்.
சிறுவயதில் இருந்தே கஷ்டத்தையும் சோகத்தையும் கண்டவளில்லை இவள். இல்லையென்பதை கேட்டதுமில்லை. ஆசையுடன் எதிர்பார்க்கப்பட்டது மறுக்கப்பட்டதுமில்லை.
முதல் முதலாக, ‘என் அத்தானைக் கட்டப் போகின்றேன், அவருடன் காலம் முழுவதும் வாழப் போகின்றேன்.’ என்று நினைத்திருந்தவள், அந்த நினைவு சட்டென்று மொத்தமாக அழிக்கப்பட்டதில், தன் மனதின் எதிரொலி அத்தானிடம் இல்லவே இல்லை என்றாகிப் போனதில் உள்ளத்தில் துடித்துத் தான் போனாள்.
அவளுக்கு சிறு வயதிலிருந்தே எழில் அத்தானை மிகவும் பிடிக்கும். அதனால் தான் கல்யாணப் பேச்சு வரவும் உடனேயே சம்மதித்திருந்தாள். அதுவும் அத்தானுக்கு அவ்வளவாக விருப்பமில்லை என்பதும் தெரிந்தே.
‘அதையெல்லாம் கல்யாணம் முடிந்த பின்னர் விருப்பாக மாற்றிக் கொள்ளலாம்.’ இப்படி நினைத்தே பேசாமல் இருந்தவள், இப்படி கல்யாணமே நின்றுவிடும் என்று நினைக்கவேயில்லை.
தன் மாமானார் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். தன் தாய் கண்கலங்குவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர் ஆச்சே அவர். அதனால் படிப்பு முடிந்த கையோடு நடக்கவிருந்த திருமணத்தை ஆவலாகவே எதிர்நோக்கியிருந்தாள்.
அப்படியிருக்கையில் சில நாட்களுக்கு முன் எழில் அழைக்க, “ஹாய் அத்தான், என்ன நேரம் கேட்ட நேரத்தில்..” கேட்டவளுக்கு, அவன் சுற்றி வளைக்காமல் சொன்ன விடயங்கள் எதுவுமே முதலில் கொஞ்சமும் புரியவில்லை.
அவன் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னதையும் மீறி, அந்தப் பெண் தன் தந்தைக்குப் பிறந்தவள் என்பதே அவளை முற்றாக அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
அவளால் ஏஞ்சல் பற்றிய விடயத்தை கற்பனையில் கூடப் பார்க்க முடியவில்லை.
‘என் ஆசைத் தந்தையா இப்படி?! காதலிப்பதுவும் சில பல சந்தர்ப்பங்களில் அவை கேள்விக் குறியதாவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. காதலில் இருந்து தப்புவது பலவேளைகளில் கடினம் என்பது போலவே, அதைக் கல்யாணம் வரை கொண்டு செல்வதும் கடினம் தானோ என்னவோ?’ உள்ளம் துவள நினைத்துக் கொண்டவள்,
‘குழந்தை உருவாகும் வரை நெருங்கிப் பழகிவிட்டு, பின் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, முன்னர் நடந்தவைகளை இருட்டடிப்புச் செய்து விட்டு மனைவியுடன் மிகவும் அன்னியோன்யமாக, இத்தனை வருடங்கள் வாழ்வதென்பது எப்படி?!’
தந்தையின் இந்தச் செயல் புரியாது மிகவும் கோபம் கொண்டாள்.
கணவனே எல்லாம் என்றிருந்த தன் தாய்க்கு, தந்தை பெரும் அநீதி செய்துவிட்டதற்காக தன்னுள்ளே குமுறினாள் அவள் .
ஸ்வேதா போலவே அவள் அத்தை, வேணுவின் தந்தை எல்லோருக்கும் இது அதிர்ச்சியே!
அவர்கள் முன்னால் எத்தனை எத்தனையோ ‘எப்படி முடிந்தது’ க்கள் வரிசை கட்டி நின்ற போது தான், தந்தை சுகயீனமுற்றது தெரிய வரவே சட்டென்று புறப்பட்டு விட்டாள் ஸ்வேதா.
இந்த சில நாட்களில் திரும்பத் திரும்ப கதைத்த எழில், குற்ற உணர்வு மேலிட சொன்ன சமாதான வார்த்தைகளை அமைதியாகக் கேட்டிருந்தவளுக்கு, பொறுமையாக யோசித்துப் பார்கையில் அவன் பக்கத்து நியாயத்தை ஏற்க முடிந்தது .
“எனக்கே தெரியாமல் அவளை நான் விரும்பி விட்டேன் ஸ்வேதா. உன்னை கண்கலங்க வைக்கவோ, வருத்தப்பட வைக்கவோ நான் ஒருகணமும் நினைக்கவில்லை. என்னிலையைப் புரிந்து கொள்வாயா?” எப்போதுமே கம்பீரமாக, மிகவும் இலாவகமாக முடிவுகள் எடுக்கும் தன் அத்தானின் இறங்கிய குரலில் வந்த கெஞ்சல், அவள் மனதை மிகவும் அசைத்தே விட்டது.
எல்லாவற்றையும் விட, எழிலின் செய்கை மனதில் ஏற்படுத்திய வலிக்கு, அவன் காதலிப்பதாகச் சொன்ன பெண்ணின் நினைவுகள் மெல்ல மெல்ல இதமான ஒத்தடமாக மாறி போனதை, அவளே மிகவும் வியப்புடன் உணர்ந்து கொண்டாள்.
‘வேறு யாரோ ஒருத்தியை அத்தான் காதலித்தேன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது. ஆனால், இவள்….’ மனமும் கண்களும் சேர்ந்து கலங்க நினைத்துக் கொண்டவள்,
“இவள் என் அக்கா இல்லையா? அதுவும், பார்த்தேயிராத என்னை மனம் நோகச் செய்யக் கூடாது என்றாளாமே! ‘ஒருத்தியை கல்யாணம் பேசி வைத்திருக்கும் போது, இன்னொருத்தியை எப்படிக் காதலிப்பாய்?’ என்று கேட்டாளாமே!” வாய்விட்டே முணுமுணுத்துக் கொண்டாள்.
எழில், நடந்தவைகள் ஒன்றையும் விடாது அவளிடம் சொல்லி இருந்ததில், குழப்பங்களும் கோபங்களும் இருந்த இடத்தில் ஒரு தெளிவான முடிவை எடுத்து, உறுதியான மனநிலையில் தான் இப்போது இங்கே வந்திறங்கியிருக்கிறாள் ஸ்வேதா.
பெற்றோரை சிலகணங்கள் உற்று நோக்கியவள், “என்னப்பா இது? இப்படியா எல்லோரையும் பயப்படுத்துவீங்க?” அவரருகில் சென்றமர்ந்து கொண்டவள், சட்டென்று அப்பால் நகரப் போன தாயின் கரங்களை எட்டி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“ஏம்மா, எத்தனை மாதங்களிற்குப் பிறகு உங்க செல்ல மகள் வந்திருக்கிறாள்! எப்படி இருக்கிறாய் என்று ஒருவார்த்தை கேட்காது எங்கே ஓடுறீங்க?” எப்போதும் போல கலகலப்பாக கதைக்கத் தொடங்க,
மகளுக்கு இங்கு நடந்தவைகள் தெரியாதோ என்று நினைத்த ஸ்ரீமதியும் வேணுவும், மிகவும் முயன்று சாதாரணமாகவே கதைக்கத் தொடங்கினர்.

