நீயென் சொந்தமடி 15 – 1

அத்தியாயம் 15.

பாரீஸ் வீதிக்களுக்கே உரிய வகையில் போக்குவரத்து நெரிசலில் நீந்தியவாறே மெல்ல மெல்ல வீடு நோக்கிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள் ஏஞ்சல்.
‘இது ஒரு தொல்லை! வழமையான நேரத்துக்கு புறப்படிருந்தால் இந்தளவுக்கு நெரிசல் இருந்திருக்காது.’ தன்னுள்ளே சலித்துக் கொண்டவள் மெல்ல காரினுள் இசையைத் தவழவிட்டாள்.
வங்கியில் மட்டும் தன் கவனமனைத்தையும் வேலையில் செலுத்தும் மிகவும் நல்ல பிள்ளையான அவள் மனமோ, காரினுள் தவழ்ந்த மெல்லிசைக்கு ஏற்ப தாள நயங்களுடன் பாவங்களை அள்ளி வீசி நாட்டியம் ஆடத் தொடங்கி, மெல்ல மெல்ல தன்னுள்ளே பொத்தி வைத்திருக்கும் சின்னச் சின்ன அழகிய நினைவுகளை தன் வதனத்தில் பாவங்களாக்கி பார்வைக்கு வைத்தது.
வீசும் வெப்பக்காற்று முகத்தில் அடிக்க, மென்மையாக கதைபேசிக் கொண்டே காரோட்டும் எழிலின் அருகிலிருந்து இந்தியாவில் கடற்கரைச் சாலை வழியே பயணித்தவை, அன்றைய அவள் மனநிலையில் சாதாரணமாகத் தெரிந்தது. இன்றோ, அந்த நினைவுகள் அவளுக்கு அலாதியான இதத்தை அள்ளித் தந்தது.
அவனுடன் மாயாஜாலில் உள்ள கடைகளில் ஏறியிறங்கிய போதும், ரெஸ்ட்டாரண்டுகளில் எதிர் எதிரே இருந்து சிற்றுண்டிகளைக் கொறித்த போதும், வாய் வார்த்தைகளின்றி பார்வையாலே அவன் தன்னுடன் கதை பேசிக் கொண்ட தருணங்கள் ஒவ்வொன்றையும் அப்போதிருந்த மனநிலையில் அசட்டையாக ஒதுக்கி வைத்தவள், இப்போதோ முகத்தில் மெல்லிய நாணத்தைப் பூசிக் கொண்டாள்.
“திறப்பு விழாவுக்கு இப்படியே போக முடியாது ஏஞ்சல்.” சொன்னவனை இவள் கேள்வியாகப் பார்க்க,
“ஜீன்சும் டாப்புமாகப் போகாமல் சேலை கட்டிக் கொண்டு போகலாம் ஏஞ்சல். உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.” எதிர்பார்ப்புடன் சொன்னவனை இவளோ சாதாரணமாகப் பார்த்து,
“அம்மாடியோவ்! சேலை! அதுவும் நான்? ஹா.ஹா..கமலம் ஆன்ட்டி எப்படித்தான் காலையில் இருந்து இரவு வரை இந்த வெயிலில் அதைச் சுற்றிக் கொண்டு திரிகிறாவோ!” தன் வியப்பால் மறுப்பைக் கூறிவிட்டாள்.
அவனோ அத்தோடு விடாமல் கடைசியில் அவளைச் சல்வார் போட வைத்துப் பார்த்து இரசித்ததை நினைத்தும், அன்று ‘சைட் அடிக்கிராரோ!’ என்று சந்தேகம் கொண்ட மனம் இன்றோ சில்லிட்டுப் போனது.
எல்லாவற்றையும் மீறி, முதல் முதல் அவனை விமான நிலையத்தில் சந்தித்த நிகழ்வுகளும், தாம் அடித்த அரட்டையும் அவனின் சின்னச் சின்ன கோபங்களும் போட்டி போட்டுக் கொண்டு நினைவில் எழ, அவள் மனமோ மெல்ல மெல்ல தொய்ந்து போனது.
இந்தியா போனதிலிருந்து அவள் மனநிலை அவ்வளவாக நல்ல நிலையில் இருக்கவில்லை என்றாலும், அதையறிந்து மிகவும் அனுசரணையாக நடந்து கொண்டவனை, தான் இறுதியில் ஒரேயடியாக மௌனிக்கச் செய்து விட்டு வந்து விட்டதை எண்ணும் பொழுது அவள் இதயம் வலியால் துடித்தது.
வந்து இத்தனை நாட்களில் மனோவும் கமலமும் அப்பப்போ எடுத்துக் கதைத்துக் கொண்டனர். அதுவும், முக்கியமாக இவள் இப்போது செய்ய நினைத்திருக்கும் விடயம் பற்றிக் கதைப்பதற்காகவே அவர்களுடன் பலமுறை இவளே தொடர்பு கொள்ள வேண்டியும் இருந்தது.
அதோடு, இது அவர்களை அறிமுகம் ஆனதில் இருந்து வழமையாக நடப்பது தான்.
ஆனால் எழில்??
ஒரு முறை கூட இவளுடன் பேச நினைக்கவில்லை. போய்ச் சேர்த்தாயா என்று கூட விசாரிக்கவில்லை. இவளும் அழைக்க நினைக்கவில்லை தான்.
‘அவன் அழைத்திருந்தால் மட்டும் நீ சாதாரணமாக அவனுடன் கதைத்திருப்பாயா?’ என்றால், அதற்கும் அவளுக்கு சரியான பதில் தெரியவில்லை.
எத்தனையோ தடவைகள் தொண்டை வரை வரும் கேள்வி, “மனோ, அவர் எப்படி இருக்கிறார்?” என்பது. ஆனால் அதை கேட்கத் துணியவில்லை அவள்.
என்னதான் அவனை விட்டு ஒதுங்கி, அவன் நேசத்தை மறுத்து வந்தாலும் அவனையே அவள் மனதால் சுற்றிச் சுற்றி வந்தாள்.
‘லா சப்பலில்’ உள்ள அவர்கள் நகைக்கடை இருக்கும் வழியால் சில தடவைகள் சென்று வந்தவள், சிலவேளை வந்திருப்பானோ என்ற ஐயத்தில் உள்ளே போய் நோட்டம் விட்டு விட்டு ஒரு ஜோடிக் காதணிகளை வாங்கிக் கொண்டு வந்தாள்.
இப்படித் தன்னையே தன்னால் விளங்கிக் கொள்ள முடியாது தவித்தாள் ஏஞ்சல்.
யாரிடமும் நெருங்கித் தன் மனதைத் திறக்காதவள் அன்று கடற்கரையில் வைத்து அவனுடன் தன் மனதைப் பகிர்ந்து கொண்டதையும், அதன் பின்னர் அவனில் ஆறுதல் தேடியதையும் நினைத்துக் கொண்டவளின் செவிகளுள், “ஐ லவ் யூ…ஏஞ்சல். நாம கல்யாணம் செய்து கொள்வோமா?” என்ற எழிலின் கம்பீரக் குரல் ரீங்காரமிட்டது.
அதைச் சலனமென்றும் மயக்கமென்றும் தான் கேலி செய்து அவன் அன்பைக் கொச்சைப் படுத்தி விட்டதாக நினைத்து தன் மீதே கோபம் கொண்டாள் ஏஞ்சல்.
‘என்றாலும் அவர் உள்ள நிலையை விளங்கிக் கொண்டார் போல! இப்போது அவர் நினைவுகளில் நான் இருக்கிறேனோ என்னவோ!’ மிகவும் சலித்துக் கொண்டவள், நிதர்சனத்தை ஏற்கும் பக்குவத்தை தன்னுள் உருவாக்க ஆசை கொண்டாள். ஆனால், அது அவளால் முடியாமல் இருந்தது.
“பீப்…பீப்ப்ப்..” காதைப் பிளந்த ஹாரன் ஒலியில் திடுகிட்டவள், கண்ணாடாடியால் பின்புறக் கார்க்காரனை முறைத்தாள்.
அவனோ, முன்புறம் கைகாட்டி “போ” என்றான்.
அப்போது தான் முன்னால் நின்ற கார்கள் சென்று விட்ட பின்னரும், தான் அப்படியே நிற்பதை உணர்ந்து கொண்டவள், மீண்டும் ஒரு பார்வையில் பின் கார்க்காரனிடம் தலையாட்டி சமாதானம் சொல்லிக்கொண்டே காரைக் கிளப்பினாள்.
இப்படியே மனதின் ஆட்டத்துக்கு கடிவாளம் போட முடியாமல் தடுமாறியவாறே வந்து, காரை நிறுத்தி விட்டு லிஃப்டில் ஏறி தங்கள் தளத்துக்கு வந்தவள், மிகவும் களைப்புடன் கதவைத் திறந்து உள்ளே வந்து கதவைச் சாத்தி விட்டுத் திரும்பியவள், கண்முன் தெரிந்த காட்சியில் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டாள்.
உள்ளங்கால்களில் இருந்து உச்சம் தலைவரை கிறுகிறுக்க அப்படியே தொய்ந்து சரியப் பார்த்தவளை, ஓரெட்டில் வந்து தாங்கிக் கொண்டான் எழில்.
“ஹேய் ஏஞ்சல், என்ன என்னைப் பார்த்தால் அந்தளவுக்கு பயங்கரமாகவா இருக்கு? பார்த்ததும் மயங்கி விழுகின்றாய்!” கேலியும் குறும்புமாக உரைத்தவனையே பார்த்திருந்தவளுக்கு தான் ஏதோ கனவில் மிதப்பது போலவே இருந்தது.
மெல்லத் தன் விழிகளை இறுக மூடித் திறந்தவள், தன் இடக்கையில் பிடித்திருந்த கைப்பையை நழுவ விட்டுக் கொண்டே, “எ..ழில்..நீங்..களா?? எப்படி உள்ளே..” ஏதேதோ கேட்க நினைத்தவள் வார்த்தைகளைத் தேடினாள்.
வெளிப்புறத்தில் சில்லிட்ட குளிரில் இருந்து வந்தவள், அவன் நெஞ்சத்து கதகதப்பை உணர்ந்து கொண்ட பின்னரும், கண்களில் பட்டதை அவள் மனம் ஏற்க மறுத்தது.
‘இவ்வளவு நேரமும் அவன் நினைவுகளுடன் பயணித்ததன் பிரமையோ இது!’ என்றெண்ணிக் கொண்டே, தன் வலக் கரத்தால் மெல்ல அவன் கன்னத்தைத் தடவிப் பார்த்தவள். அடுத்த கணம் அவனின் இறுகிய அணைப்புக்குள் இருந்தாள்.
எலும்புகள் நொருங்கிடுமோ என்றளவுக்கு அவளை இறுக்கி அணைத்திருந்தவன், “நான் தான் ஏஞ்சல்…நானே தான். அப்படியே விட்டு விடுவேன் என்று நினைத்துக் கொண்டாயா? சலனமாம் மயக்கமாம். என்னவெல்லாம் சொல்லி விட்டாய்!” கேட்டவன், அவளைப் பிரிந்திருந்த தன் மொத்த ஏக்கத்தையும் ஒரே நிமிடத்தில் போக்கிட நினைத்தான்.
அவனை நினைத்து உருகித் தவித்தவளும், அவன் நேசத்தின் வெளிப்பாட்டில் தன்னை மறந்தாள்.
“எழில்..” சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல பழைய ஏஞ்சல் மீண்டிருக்க, சிணுங்களாக உரைத்தவளை தள்ளி நிறுத்தி முறைத்தான் அவன்.
“இதெல்லாம் சரி வராது என்று என்னையும் என் காதலையும் தூக்கிப் போட்டு விட்டு இங்கு வந்து, வேலையும் வீடுமாக சந்தோஷமாக இருக்கிறாய் என்ன?” இப்போது வருத்தமும் கோபமும் வெளிப்பட்டது அவன் குரலில்.
அவளோ சட்டென்று அவனை இறுகக் கட்டிக் கொண்டவள் அப்படியே விசும்பத் தொடங்கினாள்.
அழுகையையும் கண்ணீரையும் பலவீனத்தில் அடையாளமாக நினைக்கும் தான், அவன் முன்னால் இரண்டாம் முறையாக மிகவும் பலவீனப்பட்டு நிற்பதை அவள் உள்ளம் உணர்ந்து கொண்டது.
இதுவரை படரக் கொழுகொம்பின்றித் தவித்து, வாடி வதங்கி ஏக்கத்துடன் நின்ற கொடி, வலுவான, தனக்கே தனக்கென கொழுகொம்பைக் கண்டதும் ஆனந்தமாகப் படர்வதைப் போலவே அவளுள்ளமும், பொங்கும் உவகையுடன் அவனில் படர்ந்து கொண்டது.

error: Alert: Content selection is disabled!!