அத்தியாயம் 4
கைப்பேசியைக் காதுக்குக் கொடுத்து மிகுந்த தயக்கத்துடன், “ஹலோ” என்றாள் பல்லவி.
“பல்லவி, நான் ரூபா கதைக்கிறன். அண்ணி எண்டுதான் சொல்லோணும். ஆனா, என்னை விட அஞ்சு வயசு சின்ன பிள்ளை நீங்க. அதால பெயர் சொல்லிக் கூப்பிடுறன். உங்களுக்கு ஓகேதானே?” என்றாள் அவள் அந்தப் பக்கமிருந்து ரூபா.
“ஓமோம். நீங்க பெயர் சொல்லியே கூப்பிடுங்கோ.” அவளின் தன்மையான பேச்சு இவளைச் சற்றே ஆசுவாசப்படுத்தியது.
“சுகமா இருக்கிறீங்களா? சம்மந்தம் கலந்த நேரம் கதைச்சது. பிறகு கதைப்பம் எண்டா எங்க நேரமும் அமைய இல்ல. நாளும் பெருசா இருக்கேல்லைதானே. அம்மா வேற சும்மா சும்மா எடுத்து அந்தப் பிள்ளையத் தொந்தரவு செய்யாத எண்டு சொல்லிப்போட்டா. அதுதான் இப்ப கதைக்கிறன். நல்லபடியா கலியாணம் முடிஞ்சுதாம் எண்டு ரேகா சொன்னவள். நானும் தாலி கட்டேக்க வீடியோ கோல்ல பாத்தனான். எனக்கு அழுகையே வந்திட்டுது பல்லவி. அண்ணா கடைசிவரைக்கும் இப்பிடியே இருந்திடுவானோ, தனிச்சே போயிடுவானோ எண்டு பயமா இருந்தது. இப்பதான் நிம்மதியா இருக்கு.” இவளின் பதில் தேவையே இல்லை என்பதுபோல் சொல்லிக்கொண்டு போனாள் ரூபா.
“நன்றி அக்கா.”
“அக்கா இல்ல மச்சாள் எண்டு சொல்லுங்கோ.”
“சரி மச்சாள்.”
“எனக்கு உங்களோட நிறையக் கதைக்கோணும் மாதிரி இருந்தது. இப்ப சந்தோசத்தில ஒண்டும் நினைவுக்கு வருதில்ல பல்லவி.” என்று சிரித்தாள் ரூபா.
பல்லவிக்கு அதற்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. இருந்தாலும், உண்மையான சந்தோசத்தைச் சுமந்துவந்த அவளின் பேச்சு, இவளுக்கும் பிடித்திருந்தது.
அதில், “நீங்க எப்பிடி இருக்கிறீங்க மச்சாள்?” என்று, அவள் தாய்மை அடைந்திருப்பதை அறிந்திருந்தவள் வினவினாள்.
“நல்லாருக்கிறன் பல்லவி. குழந்தைகளும் ஆரோக்கியமா இருக்கினமாம் எண்டு டொக்டர் சொன்னவர். என்ன, குனிஞ்சு நிமிந்து வேல பாக்கேலாத அளவுக்கு வயிறு பெருசா இருக்கு. இன்னும் ஒரு மாதம்தானே. அம்மா வந்திட்டா எண்டா உதவியா இருக்கும். நாளைக்கு அங்க இருந்து வெளிக்கிட்டா எப்பிடியும் ஒரு ஆறு மாதத்துக்கு இஞ்சதான் நிப்பா. நீங்கதான் அண்ணாவையும் விதுரனையும் பாத்துக்கொள்ளோணும்.” என்றவள் இன்னும் என்னவோ சொல்லப் பிரியப்படுகிறாள் என்று, அவள் தயங்கி நிறுத்தியதில் புரிந்தது.
அவளே சொல்லட்டும் என்று பல்லவி அமைதி காத்தாள்.
“மற்றது பல்லவி… இப்ப இத நான் கதைக்கக் கூடாது. ஆனா அண்ணாக்காக, அண்ணா கடைசி வரைக்கும் உங்களோட சந்தோசமா வாழோணும் எண்டுறதுக்காக மட்டும்தான் சொல்லுறன். அதோட, உங்களுக்கும் அண்ணாவப் பற்றித் தெரியோணும்தானே. அம்மாக்குத் தெரிஞ்சா பேசுவா. அதுதான் எனக்கு உங்களோட தனியா கதைக்கோணும் எண்டு ரேகாட்ட சொல்லி, உங்களிட்ட குடுக்கச் சொன்னனான்.” என்று அவள் சொன்னபோதுதான், தன்னிடம் கைப்பேசியைத் தந்த கையோடு ரேகா தாயையும் தமையனையும் அழைத்துக்கொண்டு போனது ஏன் என்று புரிந்தது.
அப்படித் தனியாக அவளிடம் சொல்ல என்ன இருக்கிறது? காரணமறியாக் கலக்கம் மனத்தைச் சூழ, “சொல்லுங்கோ மச்சாள். நான் தனியாத்தான் நிக்கிறன்.” என்றாள்.
“அது பல்லவி… உங்களை நோகடிக்கோணும் எண்டு இத நான் கதைக்கேல்ல. சொல்லோணும் எண்டுறதுக்காக மட்டும்தான் சொல்லுறன். குறையா நினைக்காதீங்கோ சரியா.” என்றுவிட்டு,
“அண்ணாக்குப் பொம்பிள பாக்கேக்க நிறையச் சம்மந்தம் வந்தது. அதுல உங்கடதான் தொண்ணூறு விகிதம் பொருந்தினது. அதோட, அம்மா இல்லாத பிள்ளை உங்களுக்கு, அம்மா இல்லாம நிக்கிற விதுக்குட்டின்ர நிலம நல்லா விளங்கும் எண்டுதான், அண்ணாவை விட உங்களுக்கு எட்டு வயசு குறைவு எண்டாலும் உங்களையே முடிவு செய்தனாங்க. ஆனா… உங்களைப் பற்றி விசாரிக்கேக்க உங்கட அப்பாவப் பற்றியும் கேள்விப்பட்டனாங்க. அவரை மாதிரி… அவர் உங்கட அம்மாக்கு… அது உங்கட அம்மாக்கு நடந்த மாதிரி… உங்களுக்கு விளங்குதுதானே நான் என்ன சொல்ல வாறன் எண்டு? நீங்க அப்பிடி இல்ல, உங்கட அப்பாவோட கதைக்கிறது கூட இல்லையாம் எண்டு தெரியும். எங்களுக்கு உங்களில நம்பிக்கை இருக்கு. எண்டாலும் சொல்லோணும்தானே.” என்றவள் பேச்சில் விக்கித்து நின்றுவிட்டாள் பல்லவி.
அதையறியாது, “அப்பிடி ஒண்டும் நடந்திடக் கூடாது பல்லவி. எங்கட அண்ணா பாவம். அப்பாவும் இல்ல. பெருசா படிக்கவும் இல்ல. சின்ன வயசில இருந்தே தோட்டத்தில நிண்டுதான் எங்களை எல்லாம் கரையேத்தினவன். இடையில அண்ணியும் போய்ட்டா. இப்ப திரும்ப உங்களை அவனுக்குக் கட்டி வச்சிருக்கிறோம். நீங்களும் அவனுமா சேர்ந்து சந்தோசமா வாழோணும். அவ்வளவுதான் எங்களுக்கு வேணும்.” தான் சொல்ல நினைத்தவற்றை எல்லாம் நல்ல முறையில் சொல்லிவிட்ட திருப்தியோடு அவள் தன் பேச்சை முடிக்க, சில்லுச் சில்லாய் நொருங்கிப் போயிருந்தாள் பல்லவி.
இவ்வளவு நேரமாக மனத்தின் அத்தனை போராட்டங்களையும் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றை இறுக்கமாகப் பற்றியபடி கடந்து வந்தவள், ‘நீ உன் அப்பனைப்போல் இருந்துவிடாதே’ என்ற வார்த்தைகளில் மீண்டும் அதலபாதாளத்தில் சென்று விழுந்திருந்தாள். மிகவும் பலத்த அடி. உடல், உள்ளம், உயிர் அத்தனையும் காயப்பட்டுப் போயிற்று.
“பல்லவி?” அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவும் ரூபா கலங்கிப்போனாள். இதை அவள் பேசியிருக்கக் கூடாதுதான். ஆனால், அண்ணாவின் வாழ்வில் இன்னொரு பிசகு நடந்துவிடக்கூடாது என்கிற பயம், மனம் முரண்டியதையும் மீறிச் சொல்ல வைத்திருந்தது. இப்போதோ, இந்த விடயம் பிரச்சனையில் முடிந்துவிடுமோ என்று பயந்தாள்.
“பல்லவி.” என்று திரும்பவும் அழைத்தாள்.
“அது… உங்கட அண்ணா வாறார். நான்… நான் பிறகு கதைக்கிறன்.” என்றவள் அவளின் பதிலை எதிர்பாராமல் பட்டென்று கைப்பேசியை அணைத்தாள். விழிகளை இறுக்கி மூடித் தன்னைச் சமாளிக்க முயன்றாள். முடியவே இல்லை. உயிர் விண்டு விண்டு வலித்தது. நீரினுள் எறிந்த பந்தாய் நெஞ்சின் அடியாழத்தில் புதைக்க முனைந்தவை எல்லாம் படக்கென்று மேல் எழுந்தன.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வருவது அவள் வீட்டில் வழமைதான். அதுவும் குடி, பொறுப்பில்லை, சம்பளக் காசை முழுவதுமாகக் கொண்டுவந்து தருவதில்லை என்று அம்மா அப்பாவைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். பாடசாலையில் அவள் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சண்டைகளின் அளவு கூடிப்போயிற்று. ஏன் என்று கேட்டபோதெல்லாம் அம்மா சரியாகப் பதில் சொன்னதில்லை. சில நேரங்களில் அவளின் முன்னேயே அப்பாவைத் திட்டித் தீர்ப்பதைக் கேட்டிருக்கிறாள்.
“என்னம்மா இது, எப்ப பாத்தாலும் அப்பாவோட சண்டை பிடிச்சுக்கொண்டு இருக்கிறீங்க.” என்று அவளே சினந்திருக்கிறாள்.
இதைப் பற்றி அப்பாவிடம் கதைத்தாலோ, “உன்ர அம்மாக்கு வேற என்னம்மா வேல? எப்ப பாத்தாலும் என்னோட சண்டை பிடிக்கிறதுதானே. நீ அதையெல்லாம் யோசிக்காம படி.” என்று அவளின் தலையைத் தடவிக் கனிவுடன் சொல்லிவிட்டுப் போவார் அவர்.
ஒரு நாள் அவள் வீடு வந்தபோது அப்பா இல்லை. ஆனால், அம்மாவின் முகம், உடல் எங்கும் அடிவாங்கிய அடையாளங்கள். இவள் பயந்து என்ன என்று கேட்டபோது, “உன்ர அப்பன நம்பி ஏமாந்துட்டனே… இல்ல இல்ல எண்டு சொன்னான். கடைசில…” என்றவர் விம்மி வெடித்து அழவும் பயந்துபோனாள்.
“அப்பா எங்கயம்மா? என்ன நடந்தது?” என்று இவள் அழுதுகொண்டு கேட்டபோது, “அவனை என்னத்துக்குக் கேக்கிறாய்? இனி உனக்கு அப்பன் எண்டு ஒருத்தன் இல்லவே இல்ல.” என்று ஆவேசம் வந்தவர் போன்று கத்தியவர், “அவனை நம்பி உன்னப் பெத்திட்டேனே.” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
ஒன்றுமே விளங்கவில்லை அவளுக்கு. அன்னையின் அருகிலேயே ஒன்றிக்கொண்டாள். மனம் அப்பாவைத் தேடியது. அடுத்த இரண்டு நாட்களுக்கு அவளை அவர் பள்ளிக்கூடம் அனுப்பவில்லை, அப்பாவும் வரவில்லை. இப்படி, வீட்டிலேயே முடங்கி இருப்பது பிடிக்காமல் மூன்றாவது நாள் காலையிலேயே எழுந்து, ‘பள்ளிக்கூடம் போகவா அம்மா’ என்று கேட்க வந்தவள் பார்த்தது, தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த அன்னையையே.
ஒருகணம் திகைத்து நின்றவள் அடுத்தகணம் பயந்து அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்துவிட்டாள். கைகால்கள் எல்லாம் ஒவ்வொரு பக்கமாய் இழுத்தன. அவள் கதறிய கதறலில் ஊரே கூடியது. அதன்பிறகு நடந்தவை எதுவும் அவள் நினைவிலேயே இல்லை. அழுது, துடித்து, கதறி என்று அனைத்தும் முடிந்தபோதும் அப்பாவை அவள் காணவே இல்லை.
அதன் பிறகுதான் அரசல் புரசலாக அவள் காதுக்கு அனைத்தும் எட்ட ஆரம்பித்தன. அப்பாவுக்கு அந்த ஊரிலேயே இருக்கும் கணவனை இழந்த இன்னொருத்தியோடு தொடர்பாம். அம்மா கையும் களவுமாக அவளின் வீட்டில் வைத்து இருவரையும் பிடித்திருக்கிறார். இப்போது இருவருமே ஊரைவிட்டு ஓடிவிட்டனராம் என்று பல செய்திகள். நம்பவே முடியாமல் திகைத்துப் போனாள் பல்லவி. என்னவோ நடுச்சந்தியில் ஆடைவிலகி நின்றுவிட்டது போன்று கூசிப்போனாள்.

