நீயென் சொந்தமடி 16 – 1

அத்தியாயம் 16 .

மங்கலான மெழுகுவர்த்தி ஒளி, நாசியைத் தழுவிச் செல்லும் மெழுகின் மயக்கும் நறுமணம், கண்களிற்கும் நாவிற்றும் விருந்தான உணவு இவையனைத்துமே எப்போதும் பழக்கப்பட்ட மிகச் சாதாரண விடயமேயானாலும், இன்று அவற்றையே மிக மிக புதியதாய் உணர்ந்தாள் ஏஞ்சல்.
இந்த நிமிடம், இந்தச் சுழல், அது தந்த இதம் மிகவும் அற்புதமானதாக அவள் நினைவடுக்குகளில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டது.
இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்று தான்! முதல் முதலாக எனக்கே எனக்கானவன் என்ற உரிமையில் ஒரு ஆடவன் அருகிலிருக்க, தன் மனதிற்கினிய நண்பர்களான லூகாஸ் மற்றும் எமிலியுடன் அமர்ந்திருந்து அவர்கள் வீட்டில் இரவுணவை உண்டு கொண்டிருந்தாள் ஏஞ்சல் .
‘தன் தாய் வீடு சென்றுள்ள சோஃபியும் இருந்திருந்தால் இன்னமும் சந்தோஷமாக இருந்திருக்குமே!’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், அடிக்கடி தன் பக்கம் வந்து விலகும் எழிலின் பார்வையை உணர்ந்து, தன் விற்புருவம் உயர்த்தி என்னவென்று வினவினாள்.
அவனோ, ‘ஒன்றுமில்லை’ என்று தலையாட்டிக் கொண்டே லூகாஸுடன் அளவளாவியவாறு உணவருந்திக் கொண்டிருந்தான்.
இப்போது, இந்தக் கணம், ஒரு கனவா என்று மலைப்பாக இருந்தது ஏஞ்சலுக்கு!
எழில் தன்னருகில் உரிமையாக அமர்ந்திருப்பதை அவளால் இன்னமும் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
இன்று மாலை அவனைக் கண்டதிலிருந்து வேலையால் வந்த களைப்பையும் அறவே மறந்து, நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தவர்களை, “எட்டு மணிக்கு இன்னமும் அரை மணித்தியாலம் இருக்கு, டின்னரை மறந்து விட மாட்டீர்களே!” தொலைபேசியில் அழைத்து கேலி செய்தான் லூகாஸ்.
அதன் பின்னரே அவசரம் அவசரமாகக் குளித்து தயாராகிய ஏஞ்சல், எழிலையும் அழைத்துக் கொண்டு குறித்த நேரத்தில் இங்கு ஆஜர் ஆகியிருந்தாள்.
“அப்போ, நாளை காலையில் உன் மம்மி டாடி வருகிறார்கள் தானே ஏஞ்சல்.” தன்னிடம் கேட்ட லூகாஸுக்கு, “இல்லையே அவர்கள் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. நான் நாளை இவருடன் அங்கு போகலாம் என்றிருக்கிறேன்.”
“ஓஓ..அப்படியா?!” என்றவன் கள்ளச் சிரிப்பு சிரித்தான்.
“இங்க பார் லூகாஸ், இன்னமும் எனக்கு மறைத்து ஏதாவது திட்டம் போடுகிறீர்களா? இப்போ ஏன் இப்படிச் சிரிக்கிறாய்?” முறைத்துக் கொண்டாள் ஏஞ்சல்.
“அப்படியெல்லாம் இல்லை, சும்மா தான் கேட்டேன். சிரிப்பதற்கெல்லாம் காரணம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? எழில், நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.” அவனைத் துணைக்கழைத்தான் லூகாஸ்.
அவனோ தானும் மெல்லச் சிரித்தவன், “ஏஞ்சல் நேரம் பத்து மணியாகிவிட்டது போவோமா?” என்றதும்,
“எத்தனைக்கு அங்கு நிற்க வேண்டும்? பதினொன்றரைக்குத் தானே! இன்னமும் நேரமிருக்கு, நீங்க ஆறுதலாக போகலாம் எழில்” என்றான் லூகாஸ்.
“இவ்வளவு நேரத்துக்குப் பிறகு எங்கு போகப் போகிறோம் எழில்?” தொடங்கிய ஏஞ்சலை வாயில் கை வைத்து இடை நிறுத்தியவன், “அதை கேட்கவே கூடாது… சஸ்ஸ்ஸ்பென்ஸ்.” சிறுவர்களிற்கு சொல்வது போல சொன்ன அவன் பாவனையில் புன்னகைத்துக் கொண்டவள்,
“இவனுக்குத் தெரியுது, எனக்குச் சொல்ல மாட்டீங்க! அப்படி என்ன பெரிய சஸ்பென்ஸ்?” கேட்டுக் கொண்டே விடை பெற்று எழுந்தாள்.
****
முதன் முதலாக ஏஞ்சலை எங்கு சந்தித்தானோ அதே விமான நிலையம்.
அன்று தற்செயலாக விழிகளில் விழுந்தவளை விரட்டி விரட்டிப் பின் தொடர்ந்திருந்தான் எழில். அதுவும் மனதில் பல கலவையான உணர்வுகளுடன்.
இன்றோ, மனம் முழுமையும் மகிழ்வால் நிறைந்திருக்க, மிகவும் உரிமையுடன் அவள் கரத்தை தன் கரத்தினுள் அடக்கிக் கொண்டே, சற்று நேரத்தில் வந்திறங்கப் போகின்றவர்களை வரவேற்கும் ஆவலுடன், அவர்களை ஏஞ்சல் எப்படி வரவேற்பாள் என்ற ஒரு ஆர்வமும் கலந்திருக்க காத்திருக்கின்றான் எழில்.
கடந்த இரு மாதங்களுக்குள் தன் வாழ்க்கையில் நடந்த திடீர்த் திருப்பங்களை வியப்புடன் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது அவன் மனம்.
“விமானம் பத்து நிமிடம் லேட்..” சொன்னவனை நூறாவது முறையாக முறைத்தாள் ஏஞ்சல். “சொல்லுங்க எழில், யார் வருவது உங்க அம்மா அப்பாவா?”
ஒரு கையால் பெரிய பூங்கொத்தை அணைத்துப் பிடித்தபடி தன்னுடன் ஒட்டிக் கொண்டு நிற்பவளை சிலகணங்கள் பார்த்திருந்தவன், அவள் கையிலுள்ள மலர்களைத் தோற்கடிக்கும் வகையில் ஜொலிக்கும் அவள் வதனத்தை விட்டு அகல மறுத்த விழிகளால் அவளை வருடிக் கொண்டே, “இன்னும் கொஞ்ச நேரத்தில் நீயே நேரில் காணப் போகின்றாய்..” சொன்ன பதிலையே சொல்ல சட்டென்று அவனை விட்டு விலகினாள் அவள்.
“நீங்களும் உங்க சஸ்பென்ஸும்.” முறைத்துக் கொண்டவள், அதன் பின் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினாள். அவள் மனம் எழிலின் பெற்றோர்களை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றது.
விமானம் வந்திறங்கி பயணிகள் வெளியில் வரத் தொடங்கியிருந்தனர். எழில் மிகுந்த பரபரப்புடன் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்க, இவளும் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு மனதில் சிறு தவிப்பும் பரபரப்புமாகவே நின்றிருந்தாள்.
அப்போது முன்னால் வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைப் பார்த்த எழில், “ஸ்வேதா..” என அழைத்துக் கொண்டே கை காட்ட அவளும் இவர்களை நோக்கி வந்தாள்.
“ஸ்வேதாவா எழில்!? இவளா ஸ்வேதா?” கேட்டவளின் பார்வை கூர்மையாக வருபவளை அளவிட்டது.
எழில் அவளைப் பற்றி சொன்னவைகள் ஒவ்வொன்றும் நினைவில் தவழ, வைத்த கண் வாங்காது அவளையே பார்த்துக் கொண்டு நின்றாள் ஏஞ்சல்.
பார்க்கப் பார்க்க தனக்கும் அவளுக்கும் இடையில் உருவத்தில் கூட ஒற்றுமைகள் இருப்பதை ஆச்சரியத்துடன் கண்டு கொண்டவள், ‘இதைப் பற்றி எழில் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே!’ நினைத்துக் கொண்டே அவளைப் பார்த்திருந்தாள்.
வேகமாக எழிலை நோக்கி வந்த ஸ்வேதா, அருகில் நிற்கும் ஏஞ்சலை கண்டதும் சட்டென்று அவள் நடை தடைப்பட்டது. அடுத்த கணம் “அக்க்க்கா..” என்ற கூவலுடன் பாய்ந்து வந்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
வாழ்கையில் ஒருமுறையும் அறிமுகம் அற்றவள், அதிலும் தனக்குப் பேசியிருந்தவனைக் காதலித்தவள், தனக்கு முன்னே தன் தந்தைக்குப் பிறந்து குடும்பத்தில் இன்றைய கசப்பு நிலை உருவாகக் காரணமானவள், இவை எல்லாவற்றையும் மீறி ஸ்வேதாவுக்கு அவள் தன் அக்கா என்பதே நினைவில் வந்து நின்றது.
ஆனால், தன்னைச் கட்டிக் கொண்டவளின் உடல் அழுகையில் குலுங்குவதை உணர்ந்த பின்னும், ஏஞ்சல் அப்படியே தான் நின்றிருந்தாள்.
ஏஞ்சலுக்கு அவளை அத்தனை சுலமாக ஏற்க முடியவில்லை.
அதே நேரம் அவளில் எந்தவித வெறுப்பும் உருவாகவில்லை. அவள் மேல் ஒருவகையில் பரிதாப உணர்வே எழுந்தது. தான் ஏதோ ஒருவகையில் அவள் துன்பத்துக்கு காரணமாகி விட்டவள் என்பதே அவள் மனதின் முன்னணியில் நின்றது.
ஸ்வேதா பாய்ந்து அணைத்த வேகத்தில் கசங்கப் பார்த்த பூங்கொத்தை பிடித்திருக்கத் தடுமாறியவளிடமிருந்து எழில் அதை வாங்கிக் கொள்ள, “இதோ பார் ஸ்வேதா..” சொல்லிக் கொண்டே அவளைத் தன்னை விட்டு பிரித்து நிறுத்தி ஏறேடுத்தாள் ஏஞ்சல்.
“வெரி ஸாரி..ரியல்லி வெரி ஸாரி.. உன் அத்தானை நான்…” சொல்லத் தொடங்கியவளை திரும்பவும் இறுக அணைத்துக் கொண்டாள் ஸ்வேதா.
“போங்கக்கா.. அவர் ஒன்றும் என் அத்தான் இல்லை என் அக்காவின் அத்தான்.” ..சொன்னவள் ஏஞ்சலின் முகத்தை கைகளில் ஏந்தியவாறே, “நீங்க தான் எங்களை மன்னிக்க வேண்டும். உங்களை இவ்வளவு காலமாக பிரிந்திருந்ததற்கு. என் அக்காவை எனக்குத் தேடித் தந்ததற்குப் பரிசாகத் தான் உங்களையே அத்தானுக்கு கட்டிக் கொடுக்க முடிவு செய்தேன்.” கண்ணீருடன் சொன்னவள் மீண்டும் அவளைக் கட்டிக் கொண்டாள்.
ஸ்வேதாவின் பின்னால் வந்த வேணுவும் ஸ்ரீமதியும் எழிலின் அண்ணா அண்ணியும் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டே எழிலின் அருகில் வந்து நின்று கொண்டனர்.
ஏஞ்சலையும் தன் மாமியாருடனான அவளின் உருவ ஒற்றுமையையும் வியந்து போய்ப் பார்த்துக் கொண்டு நின்றார் ஸ்ரீமதி.
அன்று இவர்கள் பங்களூர் சென்ற பின்னர், அடுத்தடுத்து வந்த நாட்களில் அனைவரும் காதைப் பொத்திக் கொண்டு, ‘வீட்டை விட்டு எங்காவது ஓட மாட்டோமா!’ என்று நினைக்கும் அளவிற்கு, ஏஞ்சலைப் போட்டு வறுதெடுத்து அரைத்து மாவாட்டினார் கோமதி. வாய்க்கு வந்த படி சபித்தார். பழி சொன்னார். தன் குடும்பத்தையே குலைக்க வந்த கோடரிக் காம்பு என்று திட்டினார்.

error: Alert: Content selection is disabled!!