நீயென் சொந்தமடி 17 – 1

அத்தியாயம் 17.

“அடடே..! கொஞ்ச நேரம் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டாமல் வைத்திரும்மா!” மகளிடம் சலித்துக் கொண்டவளின் வதனமோ, அதற்கு நேர்மாறாக கொஞ்சமும் சுணக்கத்தைக் காட்டாமல் அன்பில் கனிந்திருந்து.
மகளிற்கு தலைவார விடாமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டு அருகில் இருக்கும் கணவனை செல்லமாக முறைத்தவள், “உங்களைத் திருத்தவே முடியாது எழில். எத்தனை தரம் சொல்லி விட்டேன். முதல் பெண்பிள்ளைகள் தயாராகும் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை.
சஜனைப் பார்த்துக் கொள்ளுங்க என்று சொல்ல, அவனைத் தனியாக ஹாலில் விளையாட விட்டு விட்டு, இதென்ன எங்களைச் சுற்றிச் சுற்றி வாறீங்க?” சொல்லிக் கொண்டு வந்தவளைப் பார்த்துக் கண்சிமிட்டியவன்,
அவள் உயர்த்தி முடிந்திருந்த கொண்டையின் கீழாக, அவள் அணிந்திருந்த பார்ட்டி ஃப்ராக்கின் பின்புற அகன்ற கழுத்தினால் தெரிந்த மனைவியின் வெண்மையான முதுகில் தன் கைகளால் கோலம் போட்டு குறுகுறுபூட்டினான் .
“எழில்ல்ல், ஹேய்…சும்மா இருக்க மாட்டீங்க..” மகளுடன் சேர்ந்து தன்னிடம் குறும்பு செய்யும் கணவனை ஒருகையால் அப்பால் தள்ளி விட்டாள் ஏஞ்சல்.
“ஹைய்யோ! சனா பார் உன் அம்மாவை, அப்பாவி அப்பாவைத் தள்ளி விடுகிறாள். அவள் உனக்கு மேக்கப் போடுவது போல நான் அவளுக்கு போட்டு விடப் பார்த்தால் விடுகிறாள் இல்லை.” தன் செல்ல மகளிடம் கொஞ்சிக் கொண்டே,
“ஏஞ்சல், இந்தக் கொண்டை உனக்கு அழகாக இல்லையடா. தலைமயிரை விரித்து விட்டால் தான் உனக்கு அழகாக இருக்கும்.” என்று தான் சொன்ன பின்னரும், அவள் தன் விருப்பப்படியே அழகாகத் தூக்கி முடிந்திருந்த கொண்டையில் கை வைத்து அப்படியே கலைத்து விட்டான்.
சட்டென்று, கோபமேறிய விழிகளுடன் கணவனை முறைத்தாள் ஏஞ்சல்.
“எழில், உங்களுக்கு இப்போ என்னதான் பிரச்சனை? நேரமாகிவிட்டுது என்று நானே அவசரத்தில் இருக்கும் பொழுது இதென்ன விளையாட்டு?” கடிந்து கொண்டதும்,
“ஹைய்யோ சனா, உங்கம்மாவுக்கு கோபம் வருதாம், அப்பாவுக்கு பயம்ம்ம்ம்ம்மா இருக்கும்மா.” நடுங்குவது போல பாவனை செய்தவனை இப்போது விரிந்த முறுவலுடன் பார்க்க, அவர்களின் மகளோ இவர்களின் செல்லச் சீண்டல்களைப் பார்த்து இரசித்துக் கிண்கிணியாகச் சிரித்தாள்.
“உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றதும் நான் போட்டிருந்த கொண்டையை கலைத்து விடுவீங்களா? சரியான ஒரு அடம்..” கணவனைத் திட்டிக் கொண்டே மகளின் முடியை அழகாக ஃபிரெஞ் பின்னல் பின்னி முடித்து, மறக்காது அவள் கன்னம் இரண்டிலும் இரு கற்றை முடியை இழுத்து சுருளாக விட்டவள், மகளின் அலங்காரத்தை திருப்தியுடன் பார்த்திருக்க,
எழிலோ, பின்புறமிருந்து தோள்களில் வழிந்து தவழும் முடியுடன், தான் ஐந்து வருடங்களுக்கு முன் முதன் முதல் விமான நிலையத்தில் கண்டதை விட ஒரு படி இன்னமும் கவர்ச்சியும் மெருகும் ஏறிய தோற்றத்தில், அழகில் ஜொலித்த மனைவியையும் மூத்த மகளையும் இமைக்கவும் மறந்து பார்த்து நின்றான்.
‘என் வாழ்வின் வசந்தங்களான இரு ஏஞ்சல்கள்!’ அவன் மனம் முழுநிறைவுடன் சொல்லிக் கொண்டது.
உடல் முழுவதும் கருநீலத்திலும், தோள்புறத்திலும் கைகளிலும் கருநீல மெல்லிய லேசும், அதில் இருந்த சிறு சிறு பூக்களில் சின்னச் சின்ன முத்துக்களும் கற்களும் சேர்ந்து கோர்த்து செய்யப்பட்டிருந்த வேலைப்பாடுகளும், முன்புறமாக கழுத்தின் கீழிருந்து ஆரம்பித்து இடைவரை கொடிபோல கற்களாலும் முத்துக்களாலும் பூ அலங்காரமும், இடைக்குக் கீழ்பகுதி விரிந்து அழகாக பாதங்கள் வரை பரவி நிற்க, பொருத்தமான வைர நகைகள் கழுத்திலும் காதுகளிலும் கைகளிலும் கண்சிமிட்ட, ஒரே மாதிரி தாயாராகி நின்றனர் தாயும் மகளும்.
ஆறு வயதைத் தொடப் போகும் சாதனாவையும் ஏஞ்சலையும் பார்த்தால் பெரியக்காவும் குட்டித் தங்கை போலவும் தோற்றமளித்தனர்.
‘இவள் இந்தப் பிள்ளைகளின் தாயா?’ என்று பார்ப்போர் வியக்கும் வண்ணம் கொடியிடையுடன் அழகு தேவதையாக ஜொலித்த மனைவியை விட்டு பார்வையை அகற்ற முடியாது தடுமாறினான் எழில்.
மகளின் அலங்காரத்தில் திருப்தியுற்று, “சனா நீ ரெடி டா. இதோ அம்மா தலையை வாரிக்கொண்டு வருகிறேன். எல்லாம் உங்கப்பா செய்யும் வேலை. நீ போய் கீழே ஹாலில் தம்பியுடன் இரு. பார் அவனைத் தனியாக விட்டு விட்டு இவர் இங்கு வந்து நிற்கிறார்,” சொல்லிக் கொண்டே கணவனின் சத்தத்தைக் காணவில்லை என்று திரும்பிய ஏஞ்சல், அவன் பார்வையில் அப்படியே மயங்கி நின்றாள்.
கணத்தில் சுதாகரித்துக் கொண்டவள், “என்ன பார்வை பலமாக இருக்கு?!” என்றவாறே அவன் மூக்கைப் பிடித்து திருகினாள்.
அவனோ வாயிலால் வெளியேறி மறைந்த மகளைப் பார்த்துக் கொண்டே மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“ஹைய்யோ எழில் விடுங்க விடுங்க, நேரம் போய்ட்டுதப்பா..” அவள் கெஞ்சல்களை எப்போதும் போல அழகாக புறக்கணித்தது அவன் செய்கைகள் ஒவ்வொன்றும்.
தான் நினைத்ததை முடித்து விட்டு மனைவியை கள்ளச் சிரிப்புடன் பார்த்தவனை செல்லமாக முறைத்தவள், “அடம் அடம்.. உங்களுக்கு எழில் என்று பெயர் வைத்ததை விட அடம் என்று வைத்திருக்க வேண்டும்.” சொன்னவளை மீண்டும் மென்மையாக அணைத்துக் கொண்டவன்,
அவள் கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டே, “ஆமாம் மேடம், அப்படி அடம் இருந்ததால் தான், நீ விசுக்கென்று வந்த பின்னும் பின்னால் வந்து உன்னைத் திருமணம் செய்து, ஐந்து வருடங்கள் குடும்பமும் நடத்தி அதற்குச் சான்றாக இரண்டு பிள்ளைகளும் பெற்றிருக்கிறேன்.” சொன்னவனை எல்லையில்லா அன்புடன் நோக்கிக் கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ஏஞ்சல்.
எப்போதும் கணவன் வாயால் இரண்டு பிள்ளைகள் பெற்றிருக்கிறேன் என்று வரும் போது அவள் அப்படியே கரைந்து போவாள்.
இவள், தான் அன்று இந்தியாவில் இருந்து வந்து எழிலின் நினைவில் குழம்பி நின்ற போது தான், தன் வாழ்கையில் ஒரு சந்தோஷத்துக்காகவும் பிடிப்புக்காகவும் சாதனாவை தத்தெடுக்க முடிவு செய்தாள். எங்கேயோ அநாதரவாக இருந்திருக்க வேண்டிய தன்னைத் தன் பெற்றோர் தத்தெடுத்து இப்படி பாராட்டிச் சீராட்டி வளர்த்ததைத் தானும் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு இந்தியாவில் இருந்த பொழுதே ஏற்பட்டிருந்தது.
அப்படி நினைத்துக் கொண்டதும், அவள் நினைவில் வந்தவள் சாதனா தான். அவளைத் தத்தெடுக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி இல்லத்துடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவளைத் தேடி வந்த எழில் திருமணத்துக்கும் நாள் குறித்து விட்டான்.
அப்பொழுது இவள் தன் விருப்பை எழிலிடம் பகிர்ந்து கொண்ட போது, சிறிதும் தயக்கமின்றி தலையாட்டிவிட்டான் அவன்.
இவர்கள் மணமுடித்த கையோடு, ஒரு வயது கடந்த குழந்தையாக அறியாத பருவத்தில் இவர்கள் மகளானாள் சாதனா. அன்றிலிருந்து, ஏஞ்சல் எப்படி அவளைத் தன் உயிராக நினைத்தாளோ, அதே மாதிரி எழிலும் மகளை அரவணைத்துக் கொண்டான்.
இரண்டு வயதாகும் சஜன் பிறந்த பின்னரும் கூட, “எங்கள் மூத்த மகள்.” என்ற ஸ்தானத்தை அழகாக பிடித்துக் கொண்டாள் சாதனா.
இவர்கள் திருமணத்துக்கு முழுமனதுடன் சம்மதம் சொல்லாத ராஜசேகரும் பரிமளாவும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் அடைந்து திருமணத்தை மிகவும் சிறப்பாகவே செய்து வைத்தனர் .
என்றாலும் இந்தியாவிற்கு வரமாட்டேன் என்ற முடிவில், மருமகள் கொஞ்சமும் இளகவில்லை என்பதில் அவர்களுக்கு மிகுந்த வருத்தம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
திருமணத்தின் பின்னர் இலண்டனிலும் ஃப்ரான்சிலும் உள்ள நகைக் கடைகளை முழுமையாக பொறுபேற்றுக் கொண்ட எழில், திருமணதின் பின் ஃப்ரான்சிலேயே தங்கி விட்டாலும், இடையிடையில் இந்தியா சென்று தந்தை தமயனுக்கும் தொழில் உதவிக் கொண்டு தான் இருக்கிறான்.
கடந்த நான்கு வருடங்களாக நகரை விட்டு கொஞ்சமாகத் தள்ளி ‘ஸ்டான்’ என்ற இடத்தில் புதிதாக நிலத்துடன் கூடிய வீடொன்றை வாங்கி குடிவந்திருந்தனர் எழில் குடும்பம்.
“”இங்க பாருங்க எழில், இன்னமும் ஒருமணிநேரம் தான் இருக்கு, நீங்க தயவு செய்து கீழே போய் இருங்க. நான் இதோ ஐந்து நிமிடத்தில் வருகிறேன்.” சொல்லிக் கொண்டே எழிலைப் பிடித்து தள்ளிக் கொண்டு வந்து அறை வாயிலால் வெளியில் விட்டவளை, குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டே,
“சரி சரி விரைவாக வா. வழியில் ட்ரஃபிக்காகவும் இருக்கும். பிறகு அந்தக் காட்டான் லூகாஸ் முறைக்கும்.” இறங்கி, ஹாலிலிருந்து கொஞ்சி விளையாடும் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே அவர்களருகில் வந்தனை, தொலைபேசி அழைப்பு அதன் புறம் நகர்த்தியது.
அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் ஆவலும் முறுவலுமாக அழைப்பை ஏற்று, “சொல்லுடா மச்சான், குழந்தை பிறந்து விட்டதா?” கேட்டவன், மறுபுறம் சொல்லப்பட்ட செய்தியில் மகிழ்ந்து,
“வாழ்த்துக்கள்டா….வாழ்த்துக்கள். நோர்மல் டெலிவரி தானே, கமலம் ஆன்ட்டி ஆதீஷுடன் வீட்டிலா..?” என்று தொடர்ந்து தன் நண்பன் மனோவுடன் கதைத்தவன் ,
“ஏஞ்சலா?! அதையேன் மச்சான் கேட்கிறாய்! அவளின் ஃப்ரெண்ட் லூகாஸுக்கும் எமிலிக்கும் இன்று தான் திருமணம்டா. ஆமாம்…இதோ இப்போது புறப்படப் போகிறோம். அதற்காக ஒரு கிழமைக்கு முதல் வெளிக்கிடத் தொடங்கிய ஏஞ்சல், இன்னமும் வெளிக்கிட்டு முடியவில்லையடா…” சொல்லிக் கொண்டு வந்தவன் முதுகில் ‘தொம்’ என்று ஒரு குத்து விழுந்தது.
“ஆஆஆ..” சொல்லிக் கொண்டே திரும்பியவன், பின்னால் நின்ற மனைவியைப் பார்த்து கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, மறுகையால் அவள் புறப்பட்டு வந்திருந்ததைப் பார்த்து ‘பிரமாதம்’ என்று இரசனையாகச் சொன்னவன், “அதுவாடா மனோ! ஐந்து வருடமாக அடி வாங்கி வாங்கி மரத்துப் போன முதுகில் கொசு அடிக்கிறாள் உன் ஃப்ரெண்ட்.” என்றவனிடம் இருந்து தொலைபேசியைப் பறித்தாள் ஏஞ்சல்.
“மனோ, ஆண் குழந்தைதானா? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ம்ம்ம்…. அவருக்கு இப்போதெல்லாம் கொழுப்பு நன்றாக கூடி விட்டுது; அதுதான் காரணம்.” சொல்லிக் கொண்டே கணவனை முறைக்க முயன்றவள்,
“அதை விடுங்க மனோ, அனு எப்படி இருகிறாள்? பக்கத்திலா இருக்கிறாள்?” கேட்டு மனோவின் மனைவி அனுகீதாவுடன் கதைத்தவள்,
“வீட்டுக்கு வந்ததும் ஸ்கைப்பில் கதைப்போம் அனு. கமலம் ஆன்ட்டி குட்டிப் பையன் எல்லோரையும் அன்பாகக் கேட்டதாகச் சொல்லு.” என்றவள்,
“ஹேய் மறந்து போனேன் பெரிய மனுஷன் ஆதீஷ் வந்து பார்த்தானா? என்ன செய்தான்?” என்று மனோவின் மூன்று வயது மூத்த மகன் தன் தம்பியைப் பார்த்ததும் என்ன செய்தான் என்று வினவியவள், “பாய் அனு, பிறகு கதைப்போம்.” என்று சொல்லி வைத்துவிட்டு,

error: Alert: Content selection is disabled!!