நீயென் சொந்தமடி 17 – 4 ( இறுதி அத்தியாயம் )

செய்தியில் சொன்னதையும் மகளின் வார்த்தைகளையும் கேட்டிருந்த ராஜத்துக்கோ தகிக்கும் தணல் மேல் அமர்ந்திருப்பது போல் இருந்தது.
இத்தனை வருடங்களில் இப்படியான செய்திகள் பல பல அவர் செவிகளில் விழுந்திருகின்றன. அப்போதெல்லாம், ‘எந்தக் கயவன் இப்படியான நிலையில் அந்தப் பெண்ணை நிறுத்தி வைத்தானோ? முட்டாள் பெண். கடைசியில் பழியும் சுமையும் பாவமும் மட்டும் எப்போதுமே பெண்ணுக்கா?” என்று மனதில் வெகுண்டு அடங்குவார்.
ஆனால் இப்போது, தன் செல்ல மகளே இப்படிக் அருவருத்துக் கூறுகையில் அதைக் கேட்க மிகவும் கஷ்டமாக இருந்து அவருக்கு.
“ச்சே…என்ன பொம்பளைப் பிறப்போ!? எனக்கு மட்டும் சக்தி இருக்க வேண்டும்..” கடினமும் தீவிரமுமாகத் தொடங்கிய சுருதி,
“துடிதுடித்து கதறினாலும், உனக்கு இனிமேல் பிள்ளைப் பாக்கியமே இல்லை என்று சபித்து விடுவேன்பா. அதை நினைத்து நினைத்து, கதறிக் கதறி தங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டும் இந்த ஜென்மங்கள். அம்மா என்ற ஒருவார்த்தைக்காக ஏங்கி ஏங்கியே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும். ” வெறுப்புடன் சொன்னவள்,
“பெண்ணினத்துக்கே சாபக் கேடானவர்கள் இவர்கள்.” பொரிந்து தள்ளியவள், அதிர்வுடன் தன்னை நோக்கிய தாயிடம் திரும்பி, “நீங்க என்னம்மா சொல்லுறீங்க?” என்று கேட்க, ராஜமோ வார்த்தை மறந்து அப்படியே திக்பிரமையில் அமர்ந்திருந்தார்.
பலவருடங்களுக்கு முன்னர் முகமே பார்க்காது சுமையிறக்கிய சந்தோஷத்தில் தான் உதறித் தள்ளிய ஒரு உயிர், தன்னருகில் சுருதியின் உருவில் நின்று கொந்தளிப்பது போல அவருக்குத் தோன்றியது.
தன் செல்ல மகளின் வாயினால் வந்து விழுந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், தனக்கே தனக்காச் சொல்லப்பட்டதாக குறி தவறாமல் அவரைப் பதம் பார்த்து, அவரை அப்படியே குன்றிக் குறுக வைத்தது.
ஆனால் அப்போதும், தான் சுமையென உதறிய உயிரைப் பற்றிச் சிறிதேனும் அவர் மனதில் கவலை ஏற்படவில்லை.
மாறாக, ‘ஒருவேளை என் கடந்த காலம் பற்றி இவர்கள் அறிந்து கொள்ள நேரிட்டால்..இப்போ என் மகள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கெதிராக வந்து விழுமே!’ என்ற எண்ணம் வந்த மறுகணம், குப்பென்று அவர் உச்சியைத் தாக்கியது செந்தணலின் தகிப்பு!
தன்னுயிரைச் சுமக்கும் உடலின் பாரத்தை அவரால் சுமக்கவே முடியாமல் தள்ளாடியவர், உள்ளத்திலும் உடலிலும் நடந்த பிரளயத்தினுள் அகப்பட்டு தத்தளித்து, கொஞ்சம் கொஞ்சமாக அதனுள் மூழ்கிப் போனார்.
“ஹைய்யோம்மா என்ன செய்யுது? அப்ப்ப்பா..அம்மாவைப் பாருங்க..” கிறீச்சிட்ட சுருதி, வாய்கோணி உடலை முறுக்கிக் கொண்டு சரிந்த தாயை அணைத்துக் கொண்டு அலறினாள்.

“அம்மா அப்பா இலண்டன் வந்ததில் இருந்து ஒரே அலைச்சல் அண்ணா. அதுவும் கடைசி இரண்டு நாட்களாக நல்ல அலைச்சல் தான். என்றாலும் அம்மாவுக்கு பெரிதாகச் சொல்லக் கூடிய மாதிரி வருத்தங்கள் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் திடீரென்று ‘ஸ்ரோக்’…” அன்றைய நினைவிலும், இன்றும் தாய் பூரணமாகக் குணமடையவில்லையே என்ற ஆதங்கத்திலும் கண்கலங்கினாள் சுருதி.
“எவ்வளவோ மருத்துவம் பார்த்து விட்டோம்ண்ணா. திக்கித் திக்கிதான் கதைப்பார். அக்கா மலேசியாவில், நான் இலண்டனில்.” பெருமூச்சுடன் சொன்னவள், “அக்கா, தான் அம்மாவுடன் வந்திருக்கிறேன் என்றதற்கும் அம்மா ஒரேயடியாக மறுத்து விட்டார். இப்போதெல்லாம் நாங்க ஏதாவது கதைக்கச் சென்றாலே ஒரே கத்தி ஆர்ப்பாட்டம் செய்வார். ஏனோ எங்களைக் கண்டால் இப்போதெல்லாம் நிறையக் கோபப்படுறார்.” தாயின் நிலைகுறித்த வேதனை அவள் குரலில் அப்படியே வெளிப்பட்டது .
“அப்பாவும், நர்சும் தான் அவருக்கு உதவி…” சமாளித்துக் கொண்டு சொன்னவள், “விரைவாக குணமடைய வேண்டும், குணமடைந்தது விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்ணா..” என்றதும்,
“நிச்சயம் குணடைந்து விடுவார் சுருதி; கவலைப்படதே!” கனிவாகச் சொன்ன எழில் ஓரப் பார்வையால் மனைவியைப் பார்த்தான்.
ஏஞ்சலோ, சுருதி சொல்லச் சொல்ல மிகவும் அதிர்ந்து விட்டாள்.
அன்று ஒரே ஒருதரம், நகைக் கடையில் தான் கண்ட ராஜத்தின் கம்பீரமும் கர்வமுமான தோற்றம் அவள் மனக் கண்ணில் வலம் வந்து சென்றது.
‘கடவுள் என்றொருத்தர் இருந்தால், நிச்சயம் தண்டிப்பார் என்று, நான் சொல்லி இருக்கக் கூடாதோ! அவர் என்னை உதறியதால் நான் ஒன்றும் கெட்டு விடவில்லையே! மிக மிக நன்றாகத் தானே இருக்கிறேன். அவர் குணமடைந்து விடவேண்டும்.’ மனதில் எண்ணிக் கொண்டே விழிகளை இறுக மூடித் திறந்தாள்.
மனைவியைப் பார்த்த எழில், “ஏஞ்சல் இவனைக் கொஞ்சம் பிடியுங்க.” என்று மகனைக் கொடுத்தவன்,
“பிறகு…ஊரெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டீங்களா?” என்றதும் சுருதியின் முகம் கணத்தில் மாறியது.
“ஏன்ணா, நான் அப்படி என்ன தப்புச் செய்து விட்டேன். ஒருவருட இரண்டு வருட நட்பாண்ணா? அவள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தான் என்று நான் மனதைத் தேத்திக் கொள்ள! எப்படி அவளால் என்னை ஒரு காரணமும் சொல்லாமல் இப்படி ஒதுக்க முடிந்தது? அப்படி நான் என்ன தப்புச் செய்து விட்டேன்.” கேட்டவளின் கண்கள் கலங்கி இதோ அதோ என்று கண்ணீர் துருத்தி நின்றது.
சுருதியின் கணவன் சட்டென்று மனைவியின் கரத்தைப் பற்றிக் கொண்டவன், “ஸ்ஸ்…சுருதி இதென்ன!?” கடிந்து கொள்ளும் குரலில் சொல்ல, “இல்லங்க..உங்களுக்குத் தெரியாது, எங்க இரண்டு குடும்பவும் சிரித்துப் பழகி நாங்கள் காணவில்லை. அது ஏன் என்று கூட நாங்க ஆராய முனையவில்லை. காரணம், அது தெரிய வந்தால் நாங்கள் பிரிந்து விடுவோமா என்ற கலக்கம் தான்.” சொன்னவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது .
‘இப்போது நடந்ததும் அதுதான்.’ மனதுள் சொல்லிக் கொண்ட ஏஞ்சல் கணவனைப் பார்க்க, அவனோ தவிப்பாக சுருதியை ஏறிட்டவன், “ஹைய்யோ சுருதி! அவள் உன்னை ஒதுக்கவெல்லாம் இல்லையம்மா. அவளும் படிப்பு, வேலை, கல்யாணம் என்று பிஸியாகி விட்டாள்; அதுதான் கதைக்கவில்லை போல.” சமாளிக்கப் பார்த்தான்.
“போங்கண்ணா, சின்னப் பிள்ளையைச் சமாதானம் செய்வது போல எனக்குச் சொல்லுறீங்க. நாங்க மட்டும் அப்போ அதையெல்லாம் செய்யாமலா இருக்கிறோம்!?” சிடுசிடுத்தவள்,
“அவளுக்கு எவ்வளவு மெயில் போட்டேன், ஒன்றுக்கும் பதில் இல்லை. நான் அவள் மேல் கொலைவெறியில இருக்கிறேன்.” என்றவள்,
“காலேஜில் திடீரென்று என்னை ஒதுக்கத் தொடங்கினாள். கேட்டதற்கு உப்புச் சப்பில்லாத சாட்டுக்கள் சொன்னாள். காலேஜ் முடிந்ததும் நானும் அக்கா கல்யாணம், பிறகு அக்காவுடன் மலேசியாவுக்கு என்று சென்று விட்டு வந்து பார்த்தால், இவள் அமெரிக்கா போய்விட்டாள். அதன் பிறகு எத்தனை வருடம்ணா ஒரு தொடர்பும் இல்லை.” தான் நிற்கும் இடத்தை மறந்து படபடத்தாள் சுருதி.
“சுருதி இது ரோட்டு.” அவள் கணவன் மீண்டும் சொல்லவும் அவள் விடுவதாக இல்லை. “எனக்கு அவள் டெலிபோன் நம்பர் தாங்கண்ணா, எடுத்து நாலு வார்த்தை கேட்டு விட்டு பேசாமல் விட.” என்றவளை செய்வதறியாது பார்த்து நின்றான் எழில்.
எந்த சந்தர்ப்பத்திலும் தன்னைப் பற்றி ராஜமோ அவர் குடும்பத்தில் எவருமோ அறிந்து கொள்வதில் ஏஞ்சலுக்கு துளியும் சம்மதமில்லை.
‘வேண்டாம் என்று தூக்கிப் போட்ட என்னைப் பற்றி அவர்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ளத் தேவையில்லை.’ இதுதான் அவள் எண்ணம் என்று நன்றாக அறிந்திருந்த எழில், அதையும் மீறி ஏஞ்சல் பற்றி அவர்கள் அறிய நேரிட்டால் அதற்கு நாங்கள் எதுவுமே செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டவன், இப்போ சுருதியை எப்படிச் சமாதானம் செய்வது என்று திகைத்து நின்றான்.
“சுருதி..” ஏஞ்சல் அழைத்தும், கண்களில் திரண்ட கண்ணீரை கஷ்டப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டே அவளை நோக்கினாள் சுருதி.
“ஆர்த்தி இப்போது கன்சீவ் ஆகி இருக்கிறாள், ஆறுமாதங்கள்..” சொன்னதும் தோழியைப் பற்றிக் கேட்ட சந்தோஷச் செய்தியால் அவள் மனதில் ஏற்பட்ட மகிழ்வு குப்பென்று முகத்தில் தெரிந்தது.
“அப்படியா அக்கா ரொம்பவும் சந்தோஷம்; என் வாழ்த்தையும் சொல்லிடுங்க.” என்றவள், “நான் அவளுடன் கதைக்க முடியாதா?” ஏக்கமாக வந்தது அவள் குரல் .
‘ஒருவேளை நண்பிகளுடன் பழகுவதை அவள் கணவர் விரும்பவில்லையோ!’ சட்டென்று மனதில் சிறு சந்தேகம் தோன்றியது.
‘ச்சா..ச்சா.. அவள் தான் காலேஜ் கடைசி நாட்களிலேயே என்னிடம் முகம் திருப்பத் தொடங்கி விட்டாளே!’ கணத்தில் நினைத்துக் கொண்டவள் எதுவோ சொல்லத் தொடங்கிய ஏஞ்சலிடம் கவனத்தைச் செலுத்தினாள்.
அவளருகில் நகர்ந்து அவள் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்ட ஏஞ்சல், “இங்க பாரும்மா, நான் ஆர்த்தியின் நம்பர் தருகிறேன். அதற்கு முன் உன் நம்பர் தா, நான் அவளை எடுக்கச் சொல்கிறேன்.” என்றவள்,
“அவள் உண்மையிலேயே உன்னை ஒதுக்கவெல்லாம் இல்லையம்மா, புது இடம், படிப்பு, வேலை, பிறகு கல்யாணம், கணவன் வீடு என்று கொஞ்சம் கொஞ்சம் பிஸி; அவ்வளவும் தான்.” சமாதானம் செய்தாள்.
அப்போதும் நம்ப முடியாமல் குழம்பினாலும், தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக் கொள்ளத் தவறவில்லை சுருதி.
“அப்போ நீங்க இங்குதானா இருக்கிறீங்க?” எழிலை கேட்டவள், அவன் ‘ஆமாம்’ என்று தலையசைத்தும், “அப்படியென்றால் என்னை உங்க வீட்டுக்கு எல்லாம் அழைக்க மாட்டீங்களா அக்கா?” இப்போது ஏஞ்சலிடம் வினவினாள்.
அதைக் கேட்டதும் சட்டென்று தடுமாறினாள் ஏஞ்சல்.
பிறகு கணவனைப் பார்த்துக் கொண்டே மெல்லச் சிரித்தவள், “தாராளமாக வரலாம் சுருதி, உங்களுக்கு எப்போ ஃப்ரீ என்று சொல்லுங்க, வீட்டுக்கு லஞ்சுக்கு வாங்க.” என்று சொல்லி இருபகுதிக்கும் பொருத்தமான நாளில் அவர்களை வீட்டு வரும் படி அழைப்பு விடுத்த பின்னரே சுருதியின் முகம் கொஞ்சமாகத் தெளிந்தது.
அதுவரை தங்கள் குடும்பங்களிடையே நிலவிய காரணம் தெரியாத பனிப் போரினால் தான், தங்கள் நட்பு மரித்துப் போனது என்றே நினைத்திருந்தவளுக்கு, இப்போது மனதில் சிறு ஆறுதல் ஏற்பட்டது.
சுருதியின் முகத்தில் இலேசாகப் படர்ந்த மகிழ்ச்சியை உணர்ந்து கொண்ட ஏஞ்சலுக்கு அவள் மீது இரக்கம் ஏற்பட்டது.
பெரியவர்கள் செய்யும் செயல்கள் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சிறியவர்களை தாக்குவதை நினைத்துக் கொண்டவளுக்கு, யாரை எப்படி குறைப்படுவது என்றே தெரியவில்லை.
வந்து சிலநிமிடங்களில் பல உணர்வுகளைக் காட்டி விட்டு, இப்போது மகிழ்வுடன் கையசைத்து விடைபெற்ற சுருதிக்கும் அவள் கணவனுக்கும், கையசைத்து விடைகொடுத்த ஏஞ்சலும் எழிலும், மௌனமாக ஸ்வேதா சென்ற கடையை நோக்கி நகர்ந்தனர் .
ஆனால், உள்ளங்கையளவு உலகில், நாம் விலகி விலகிச் சென்றாலும் சில பல விடயங்கள் நம்மை உரசிச் செல்வதை தவிர்க்க முடியாதென்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகப் புரியத் தொடங்கியது.
*சுபம்*

error: Alert: Content selection is disabled!!