அவளோ முதலில் பார்வையில் ஆச்சரியத்தைக் காட்டியவள், நன்றாக இவன் புறமாகத் திரும்பி கூர்மையாகப் பார்த்தவாறே, ‘‘என் பெயர்..அதுவும் ஏஞ்சல் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ கண்களைச் சுருக்கி அவள் கேட்ட விதம் ஏதோ குற்றவாளியை விசாரிப்பது போலிருந்தது.
‘பார்க்க என்னமா பதுமை போல இருக்கிறாள். பேசும் போது..’ நினைக்கத் தொடங்கியவன் அவள் கண்களில் கூர்மையைக் கண்டு,
‘‘அது..அதுதானே எப்படித் தெரியும்..?’’ அவளிடமே திருப்பிக் கேட்க, இப்போது அவள் முகம் கொஞ்ச நஞ்சம் இருந்த இளக்கத்தையும் துடைத்திருந்தது.
‘‘ஏஞ்சல் என்று உங்க பெயரைச் சொல்லிக் கதைப்பது அவ்வளவு பெரிய குற்றமா? ம்ம்…எனக்கு மட்டும் இல்லை, உங்களுக்கு முன்னால், பின்னால், இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று சுற்றி நின்ற எல்லோருக்கும் தான் உங்கள் பெயர் தெரிந்திருக்குமே!’’ அவளுக்கு நேர்மாறாக, இவன் முகம் முறுவலில் நனைந்திருந்தது.
தான் கேட்டதற்கு நேராக பதில் சொல்லாது தன்னை வம்பிழுப்பது போல கதைப்பவனை வெளிப்படையாகவே முறைத்தன ஏஞ்சலின் அழகு விழிகள்.
தன் பேச்சை அவள் கொஞ்சமும் ரசிக்கவில்லை என்பதை அவள் பாவனையில் இருந்தே நன்றாகப் புரிந்து கொண்டான் எழில். ஆனாலும் அவன் உள்ளம் தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்பிருந்து தன் கட்டுப்பாட்டையும் இயல்பையும் மீறி நடக்க நினைக்கின்றதே! அவனும் தான் என்ன செய்வான்?!
‘‘இப்போ ஏன் இப்படிப் பார்க்கிறீங்க ஏஞ்சல்? அதுதான் உங்க கணவரும் மகளுமாக ஏஞ்சல் ஏஞ்சல் என்று மூச்சுக்கு முன்னூறு தடவைகள் சொல்லிக் கொண்டிருந்தார்களே…!” சொன்னவன் சட்டென்று,
“ஹைய்யோ ஏஞ்சல், நீங்க கதைத்துக் கொண்டதில் இந்தப் பெயர்கள் மட்டும் தான் புரிந்தது. மிகுதி நீங்க கதைத்த வேகத்தில் அவ்வளவாக விளங்கவில்லை. நானும் கொஞ்சம் தூரமாகத் தான் நின்றேன். இதை நீங்க நம்பித்தான் ஆக வேண்டும்.” என்றவன்,
“காதில் விழுந்தது அப்படியே உள்ளுக்குள் போய் நினைவில் நின்றது என் தப்பா?’’ அவன் சொன்ன பாவனையிலும், லூகாஸை இவள் கணவன் என்று சொன்னதிலும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் தொடங்கினாள் ஏஞ்சல்.
அவளின் நகைப்பொலியில் அருகில் நின்ற விமானப் பணிப்பெண்ணும் மற்றைய இருக்கைகளில் இருந்தவர்களும் ஒருதரம் எட்டிப் பார்த்தது போலவே எழிலும் வியப்புடன் பார்த்தவன், அந்தச் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கினான்.
கண்ட அந்த நொடியிலிருந்து இவள் தன்னை ஆட்டி வைப்பதை ஒருவிதமான இயலாமையுடன் உணர்ந்து கொண்டவன், உண்மையிலேயே உள்ளுக்குள் ஒருவித வெறுமையுடன் நீண்ட பெருமூச்சை வெளியேற்றினான்.
தனக்கு பேசி வைத்துள்ள ஸ்வேதாவைப் பார்த்தால் கூட இவனுக்கு இப்படியெல்லாம் ஒரு நெருக்கமான உணர்வு இதுவரை தோன்றவில்லை.
பெரியவர்கள் விருப்பம், அவர்கள் பார்த்த பெண், அதுவும் தன் செல்ல அத்தையின் மகள், என்றளவில் தான் அவன் எண்ணமாக இருந்தது.
ஆனால் இந்த இருபத்தி ஒன்பது வருடங்களில் இவளைப் போல ஒருத்தியால் அவன் பாதிப்புறவில்லை. தன்னை மறந்து உள்ளம் தடுமாறவில்லை.
நாம் மிகவும் விரும்பியதெல்லாம் நமக்கே நமக்கென்று உரிமை கொண்டாட முடியுமா என்ன? பார்த்த அந்த நிமிடம் கண்களும் மனமும் இதமாவதுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
அற்புதமான இயற்கையை ரசிக்க முடியும், எனக்கே எனக்கு மட்டும் என்று உரிமை கொண்டாட முடியுமா?
‘அப்படித் தான் இவளும். மாற்றான் தேசத்து மல்லிகை..சே…சே..மல்லிகை ஃப்ரான்சில் இருக்கா என்ன? ம்ம்ம்..லில்லி.. மெல்லிய ரோஸ் வண்ணத்து லில்லி மலர் இவள்!’ நினைத்துக் கொண்டே வந்தவன் தன் நினைவு போகும் பாதையை நினைத்து திடுக்கிடலுடன் தன் தலையைக் குலுக்கிக் கொண்டான்.
சிரித்துக் கொண்டே அவன் முகபாவனையைப் பார்த்திருந்தவள், ‘‘சரி..என் ஹஸ்பண்ட் சொல்லி என் பெயரைத் தெரிந்து நினைவு வைத்து இருக்கிறீங்களே…உங்க பெயரை…’’ அவள் முடிக்க முன்னர், ‘‘எழில்… எழிலரசன்’’ அவசரமாக இடையிட்டான் இவன்.
‘‘ஏ..ழிழ்…ஏழிழ..ஸசன்..’’ அவள் பெயரை அழகாக சொல்வதாக நினைத்து அவன் முகத்தை கோண வைத்தாள்.
‘‘இல்லை நீங்க எ..ழி..ல்..எழில்..அப்படிச் சொல்லுங்க. இல்லையோ உங்களுக்கு எப்படித் தோணுதோ அப்படிக் கூப்பிடுங்க..’’ சொல்லி விட்டு லேசான குறும்பு எட்டிப் பார்க்க அவளை சுவாரஸ்சியமாகப் பார்த்தான் அவன்.
‘‘இல்ல இல்ல…கொஞ்சம் பழகப் பழக அது தானாக வந்து விடும். மனோஜ் பெயரும் அப்படித் தான், நான் அவனை மனோ என்பேன். என் ஃப்ரெண்ட் சென்னையில் இருக்கிறான்.’’ என்றவள் இவன் நெற்றி சுருங்கியதைக் கவனிக்காமல்,
‘‘சரி உங்களைப் பற்றிச் சொல்லுங்க ஏழில்…எ..ழி..ல்’’ என்றவளிடம்,
“ஆங்..சரியாகச் சொல்லி விட்டீர்களே!” பாராட்டியவன் ,
‘‘நீங்க ஃப்ரான்ஸ்தானா இல்லையென்றால்…’’ கேட்டவனை புன்னகையுடன் பார்த்தவள், ‘‘ஆமாம்..’’ என்றாள்.
அதே வேகத்தில், ‘‘உங்களைப் பற்றிச் சொல்லுங்க. சென்னையில் எங்கிருக்கு உங்க வீடு? நான் இரண்டு கிழமைகள் அங்கே நிற்பேன்..’’ ஆவலாகக் கேட்டாள்.
“நாங்க சென்னையில் எம் ஆர் சி நகரில் இருக்கின்றோம் ஏஞ்சல். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி அவர்கள் மகள்கள், இன்னும் என் தங்கை இப்போது தான் பி எஸ் சி கடைசி வருடம் படிக்கிறாள்; இப்படிப் பெரிய குடும்பம் எங்களது. அண்ணா குடும்பம் அருகில் தனியாக இருக்கின்றார்கள். தாத்தா பாட்டி ஊரில் பாதி நாட்கள், எங்கள் வீட்டில் பாதி நாட்கள் என்று இருப்பார்கள் .’’ கடகடவென்று ஒப்பித்தவன்,
‘‘நீங்க சென்னையில் எங்கு போக வேண்டும்?’’ அறியும் ஆவல் அவன் வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிந்தது.
பொதுவாகவே கலகலப்பான சுபாவம் கொண்டவள் ஏஞ்சல். சக பயணி, சில மணித்துளிகளை ஒன்றாகக் கழிக்கப் போகிறோம் என்று இவனுடன் கதைக்கத் தொடங்கியிருந்தவளுக்கு, நேரம் செல்லச் செல்ல அவனுடன் வார்த்தையாடுவதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டது.
‘‘நான் அண்ணா நகர்.’’ அவள் சொல்ல, இவன் நெற்றி சுருக்கியவன்,
‘‘அங்கு ஹோட்டலில் தங்கப் போறீங்களா? ஏதாவது வேலை விடயமாக வாறீங்களா?’’ என்றதும் மறுப்பாகத் தலையசைத்தாள் அவள்.
‘‘இதற்கு முன் நான்கு முறைகள் சென்னை வந்திருக்கிறேன் எழி..ல். முன்னெல்லாம் வரும் போது ஹோட்டலில் தான் நிற்போம். அப்போது டாடி மம்மி கூடவே வந்தார்கள். இப்போது நான் வருவது என் சொந்த விடயமாக. அதுவும் கமலம் ஆன்ட்டி என்னை ஹோட்டலில் தங்க விட மாட்டார். மனோ..நோ..வே. நான் அவர்களுடன் தான் தங்கப் போகிறேன்.’’ என்றவளுக்கு இவன் போட்ட ‘‘ஓ’’ வும் அது வந்த தொனியும் முறுவலை விரிவாக்கியது.
‘‘அண்ணா நகர் ‘பெரியார் ஆச்சிரமம்’ தெரிந்திருக்குமே, அந்த ஆச்சிரமத் தலைவியை எனக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு உடல் நலமில்லை என்று பார்ப்பதற்காகத் தான் போகிறேன்.’’ அவள் தொடர்ந்து சொல்ல இவனோ நிமிர்ந்து அமர்ந்தான்.
‘அதெப்படி ஃப்ரான்ஸுக்கும் பெரியார் ஆச்சிரமத்துக்கும் தொடர்பு? அப்படியென்றால் மனோ..கமலம் ஆன்ட்டி..’ இவன் உள்ளம் கேள்வி கேட்க விழிகள் அதையே அவளிடமும் வினவியதோ?
மெலிதாக புன்னகைத்தவள், ‘‘நாங்க நிறைய வருடங்களாக அந்த ஆச்சிரமத்துக்கு ஹெல்ப் பண்ணிக் கொண்டிருக்கின்றோம். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அப்படிப் போன இடத்தில் அங்கு பொறுப்பாளராக இருக்கும் கமலம்மா..’’ இவள் சொல்ல,
‘‘நீங்க மனோ என்றது மனோஜ்குமாரா? விரிவுரையாளனாக இருக்கிறானா?’’ இடைமறித்துக் கேட்க இவளோ ஆச்சரியப்பட்டவள்,
‘‘ஆமாம் எ..ழில், அவர் தான். ஏன் உங்களுக்கு அவரைத் தெரியுமா..? கொஞ்சம் இருங்க என்னிடம் ஃபோட்டோ இருக்கு..’’ சொல்லிக் கொண்டே கைபேசியை தட்டி, ‘‘இவர்கள் தான்..’’ அவள் காட்டிய படத்தில் இவளின் இருபக்கமும் கமலம்மாவும் அவர் மகன் மனோ என்கின்ற இவன் நண்பனும் நின்றிருந்தனர்.
‘‘அட…சும்மா கதைக்கப் போய் இவ்வளவு நெருங்கி விட்டோமே ஏஞ்சல்.’’ அவன் சொன்ன குரலில் சட்டென்று அவனை ஏறிட்டவள், கணத்தில் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
‘‘மனோ என் நண்பன் ஏஞ்சல். ஒன்றாகப் படிக்கவில்லை, ஆனால் ஒரே கல்லூரி. இருவருமே பாஸ்கட் போல் டீமில் ஒன்றாக இருந்தோம். இப்போ கொஞ்ச நாட்களாக ஃபோனில் பேசுவதோடு சரி, நேரில் பெரிதாகச் சந்தித்துக் கொள்வதில்லை. நானும் கொஞ்சம் பிஸி.’’ என்றதும் அவளுமே ஆச்சரியப்பட்டவள், இப்படியே அங்கும் இங்குமாக பல கதைகளை அளவளாவத் தொடங்கினர் .
இந்தியா வந்திறங்கும் வரை அவர்களுக்குள் பொதுவாக கதைப்பதற்கு எவ்வளவோ விடயங்கள் இருந்தன.
விமானம் ஏறிய பொழுது தயங்கித் தயங்கி அவளைப் பார்த்தவன் வந்திறங்கும் போதோ அவளது நண்பனாக வந்திறங்கினான்.

