அன்றிலிருந்து இன்று வரை அந்த இல்லத்திலேயே வேலை செய்து வந்தவர். அங்கேயே அருகில் ஒரு சிறு வீட்டில் வசித்து வந்தார்.
இப்போது மனோ படித்து முடித்து உழைக்கத் தொடங்கியதும், இருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்புக்களையும் போட்டு இந்த வீட்டை வாங்கி தாயும் மகனுமாக குடி வந்திருந்தனர்.
இல்லத்தில் நீண்ட நாட்களாக வேலை செய்து வருவதால், இல்லத் தலைவி சமீப காலமாக தளர்வடைந்த போதெல்லாம் இவரே எல்லாவற்றையும் பொறுப்பாக நிர்வகித்து வருகின்றார்.
‘‘ஒவிம்மா ஒவிம்மா…’’ அழைத்துக் கொண்டே அறையைத் தட்டி உள்ளே வந்தவர், ‘‘சாப்பிட வாம்மா..’’ அன்பும் கருணையும் கலந்து ஒலித்தது அவர் குரல்.
‘‘மனோ வந்தாயிற்றா ஆன்ட்டி. சேர்ந்தே சாப்பிடலாம்.’’ கணனியில் ஆழ்ந்திருந்தவள், நிறுத்தி வைத்து விட்டு எழுந்து வந்தாள்.
“இப்போ தான்மா வந்தான். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வாக இரு; நான்கு மணி போல மருத்துவமனைக்குப் போகலாம்.” என்றவாறே, உணவு உண்ண அமர்ந்தவர்கள், மனோவும் வந்து சேர்ந்து கொள்ளவே பேசிக் கொண்டே மதிய உணவை முடித்து எழுந்தனர்.
சாப்பாடு முடிந்ததும் வரவேற்பறையில் அமர்ந்திருந்து கமலத்துடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள், “ஓவி, இல்லம் வரை போயிட்டு வருகிறேன்மா. நான்கு மணிபோல மனோவும் நீயுமாக ஹாஸ்பிட்டளுக்கு வாங்க; நானும் வருகிறேன்.” என்று சொல்லி அவர் விடைபெற, தலையாட்டிக் கொண்டே எழுந்தவள் தனக்கென ஒதுக்கியிருந்த அறைக்குள் வந்தாள்.
அறையில் போடப்பட்டிருந்த கட்டிலைப் பார்த்ததும் பயணத்தில் சோர்ந்திருந்த உடலோ ‘கொஞ்ச நேரம் சாய்ந்து கொள்ளேன்.’ என்று சொன்னாலும், மனமோ ‘ஓடிச் சென்று வந்த வேலையைப் பார்.’ என்று அவசரப்படுத்தியது.
“உப்ப்ப்..” நெடிய மூச்சொன்றை வெளியேற்றியவள், ‘நான்கு மணி வரை பொறுத்திருக்க வேண்டும். அப்போதும் பாரதி அம்மா நான் கேட்டதைச் சொல்வாரோ, இல்லை இந்த முறையும் அதையும் இதையும் சொல்லி என்னை ஏமாற்றி விடுவாரோ!’ நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் ஊஞ்சல் கட்டி ஆடத் தொடங்கியது அவளுள்ளம்.
மனம் ஒருவித பரபரப்பில் துடித்துக் கொண்டிருக்க செய்வதறியாது நின்றவள், பின்னர் மடிக்கணணியை உயிர்ப்பித்தவாறே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
மாலையில் சொன்னபடியே நான்கு மணிக்குத் தயாராகி, வெளியில் சென்று வந்த மனோவுடன் சேர்ந்தமர்ந்து காஃப்பியை அருந்தி விட்டு, இருவருமாக இல்லத்து தலைவியைக் காண வைத்தியசாலைக்குப் புறப்பட்டனர்.
வைத்தியசாலையை வந்தடைந்தவர்கள், அப்போது தான் வந்திறங்கிய கமலத்துடன் சேர்ந்து தலைவி அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றனர்.
அறையைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த மூவரையும் எதிர்பார்த்தே காத்திருந்ததால், மெல்லிய புன்னகையுடன் வரவேற்றார் பாரதி அம்மா.
அறுபதின் இறுதியில், சிலகாலமாக நோயின் அரவணைப்பு அதிகமாகியிருப்பதை காட்டும் தோற்றத்துடன், விழிகளில் கருணை வழிய கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவர்,
“வாடாம்மா வா. எப்படி இருக்கின்றாய்? பயணம் எல்லாம் எப்படி இருந்தது?” ஓவியாவை நோக்கி கை நீட்டியவர் ஆதுரமாகக் கேட்க, பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டவள், “நான் நல்லா இருக்கிறேன்மா. பயணமும் நன்றாக இருந்தது. இதென்ன நீங்க இங்க வந்து இருக்கிறீர்கள்!” தழுதழுத்தாள்.
“என்னடா செய்வது, அப்பப்போ இந்த அறையும் என்னைப் பார்க்க விரும்புகின்றதே!” ஆயாசமாகச் சொன்னவர் ,
“இன்றைக்கு நீ லீவா மனோ?” என்றவர், “பிள்ளை ஊருக்குப் போகும் வரை உன் பொறுப்பு. பத்திரமாகப் பார்த்து அனுப்ப வேண்டியது உன் வேலையய்யா.” என்றதும், “இதையெல்லாம் சொல்ல வேண்டுமா அம்மா? நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் அவன் பணிவுடன்.
“சரி அக்கா, நீங்க கதையுங்க; நாங்க கொஞ்ச நேரத்தில் வருகிறோம்.” தன் மனம் உணர்ந்து தனிமை கொடுத்து விலகிச் செல்லும் கமலத்தை அன்புடன் பார்த்துத் தலையாட்டியவர், தன்னருகில் ஓவியாவை இருத்தி, அவள் முகத்தையே சில கணங்கள் உற்றுப் பார்த்திருந்தார்.
பின், “அம்மா அப்பா எல்லோரும் சுகமாக இருக்கிறார்களாம்மா?’’ அவளுடன் நலம் விசாரித்துக் கதைக்கத் தொடங்கியவர்,
“இப்பவெல்லாம் அடிக்கடி முடியாமல் போகுதம்மா. இத்தனை காலமாக என்னால் இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்கு உதவியாகவே என் வாழ்க்கையைக் கழித்து விட்டேன். எனக்குத் தெரிந்து யாரையும் துன்புறுத்தியதில்லை. யார் கஷ்டத்துக்கும் காரணமாக இருந்ததில்லை. ஆனால்…” சொல்லி நிறுத்தி, தன்னையே பார்த்திருக்கும் கள்ளம் கபடமற்ற, மாசு மருவற்ற முகத்தையே பார்த்தவரின் கண்கள் இலேசாகக் கலங்கின.
‘இந்தப் பிஞ்சு உள்ளத்தை நான் சொல்லப் போகும் செய்தி எந்தளவுக்கு தாக்கும்?! தெரியாது என்று இருக்கும் போது உள்ள நிலைக்கும், அதே தெரிய வரும் போது உள்ள நிலைக்கும் நிச்சயம் வேறுபாடு இல்லாமல் இருக்குமா?!
ஆனால்…விடு என்றால் விடாமல் பிடித்து தொங்குவதும் இவள் தானே! இல்லையென்றால் இப்போது இந்தப் பேச்சுக்கே அவசியம் வந்திருக்காதே! நானும் மறந்த ஒன்றை கிளரத் தேவையில்லை. நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதெல்லாம் நினைவில் இருக்கப் போவதே இல்லை என்று தெரிந்தும், அதைப் பற்றிக் கதைக்க வேண்டியிருக்கின்றதே!’ இயலாமையுடன் நினைத்துக் கொண்டவர் ,
“என்னால் முடிந்த வரை இல்லை என்று சொல்லாமல் எல்லோருக்கும் உதவி தான்மா செய்துள்ளேன். அப்படியிருந்தும் கடைசிக் காலத்தில் மனதில் ஒரு அலைப்புறுதல். அதுவும், கெஞ்சி மன்றாடிக் கேட்டும் உன்னிடம் நான் உண்மையைச் சொல்லவேயில்லை என்பது என் நெஞ்சை என்னவோ செய்கின்றது ராஜாத்தி. நீயும், ‘வேண்டாம் விடு; பிரயோசனம் இல்லை.’ என்றால் கேட்கிறாயா சொல்லு?” சலிப்பாக வந்தது அவர் குரல்.
கதைக்கத் தொடங்கியவரை விழியகல பார்த்திருந்தவள், மெல்ல அவரின் வாடிச் சுருங்கியிருந்த கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.
“என்னம்மா இப்படிச் சொல்கிறீர்கள்? நான் வேறு எதற்குக் கேட்கிறேன், இதை அறிந்து கொள்ளும் தகுதி கூடவா எனக்கு இல்லை? வேறு எந்த காரணமும் உண்மையாவே இல்லையம்மா. உண்மை தெரிந்தால் எனக்குள் ஒரு நிம்மதி வரும். அவ்வளவும் தான்மா. அதுவும் உங்களுக்குத் தெரியும் என்பதால் தானே கேட்கிறேன், இல்லையென்றால் என்னால் தான் என்ன செய்து விட முடியும்?” குரலில் கசப்பு நன்றாகவே தெரிந்ததில் வாடிப் போனார் பாரதி.
‘எப்படி வாழ வேண்டிய பிள்ளை! இன்றும் இளவரசி போலத்தான் இருக்கிறாள். செல்வத்துக்கும் பாசத்துக்கும் குறைவில்லாமல் தான் வாழ்கிறாள். ஆனால், அதையும் கடந்து நிம்மதி அவள் மனதில் இல்லையே!. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் அததற்கு கிடைக்கும் மரியாதையே வேறல்லவா!’ மனதில் நினைத்துக் கொண்டவர், அவள் வேண்டுவதை சொல்லிவிட முடிவு செய்தார்.
இல்லையென்றால், அதுவே தன்னை வேதனைப்படுத்தி கடைசிக் காலத்தில் தன் மனநிம்மதியைப் பறித்து விடும் என்று நன்கு உணர்ந்திருந்தார் அவர்.
‘அதோடு, “அது தெரிந்தால் தான், நான் சந்தோசமாக குடும்பம் கல்யாணம் பற்றியே சிந்திப்பேன்.” என்பவளிடம் அதை மறைத்து என்ன பயன்?’ என, நினைத்துக் கொண்டவர் தீர்மானமாக அவளைப் பார்த்தார்.
“நீ கேட்பதை நான் தாராளமாகச் சொல்கின்றேன் ஓவி. ஆனால் அதை தெரிந்து கொண்ட நீ, விரும்பியதை அறிந்து கொண்ட சந்தோசத்துடன் திரும்பிச் சென்று விட வேண்டும். என்ன அப்படிச் செய்வாயா?” கட்டாயம் செய்வாய் என்ற நம்பிக்கையுடன் கேட்டவர், அவள் தலையாட்டலையும் பெற்றுக்கொண்டே, இந்த சில வருடங்களாக அவரிடம் விடாமல் நச்சரித்துக் கேட்கும் கேள்விகான விடையில் தனக்குத் தெரிந்ததைச் சொல்லத் தொடங்கினார்.

