அத்தியாயம் 5.
வெம்மையின் வீச்சு கொஞ்சமே கொஞ்சமாக குறைந்து கொண்டு வரும் அந்திசாயும் பொழுது!
பெரியார் இல்லத்து வளாகமெங்கிலும் குழந்தைகளின் ஆர்ப்பரிப்புக் குரல் கேட்ட வண்ணமிருந்தது .
குழந்தைப் பருவம் மிக மிக அழகானது தான். ஆனாலும், அந்த அற்புத பருவத்தின் மொத்த சந்தோசங்களையும், அரவணைப்புகளையும் பல சின்னஞ் சிறு மொட்டுக்களால் அனுபவிக்க முடியாமல் போய் விடுகின்றதே!
அதற்கு காரணங்கள் என்று சொல்லி பலதுகள் போட்டி போட்டுக் கொண்டு கை தூக்கினாலும், குழந்தையின் வரவுக்கு காரணகர்த்தாக்களே அக்குழந்தையின் மலர்ச்சிக்கு தடையாக நிற்பதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.
பத்துமாதங்கள் சுமந்து பெற்றவளும், சுமக்க வைத்தவனும் ‘இல்லை’ என்ற முத்திரையுடன், கேட்காமலேயே பெற்றுக் கொண்ட ‘அனாதை’, ‘ஆதரவற்றோர்’ என்ற அடைமொழிகளுடன், தன்னைச் சுற்றி ஓடி விளையாடும் சிறார்களையும், சிறிது தள்ளி தம் வயதும் பிள்ளைகளுடன் அமைதியாக பேசிக் கொண்டிருக்கும் வளர்ந்த பிள்ளைகளையும் தொட்டுத் தொட்டு மீண்டன ஏஞ்சலின் விழிகள்.
அவள் மனமோ பிரளயமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதன் சாயல் அவள் அழகு விழிகளில் நன்றாகவே தெரிந்தது.
இயற்கையின் கோரத் தாண்டவத்தால், அசாதாரண நிலைகளினால் தான் உதிக்கக் காரணமானவர்களை இழப்பதென்பது தவிர்க்க முடியாதது. அதற்கு யார் தான் பதில் சொல்ல முடியும்? அப்படியான நிலைகளில் இருந்து சமயம் பார்த்து தப்பித்துக் கொள்ளத்தான் முடியுமா?? இல்லவே இல்லை என்றானால் அதை ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.
“என் பெற்றோர்கள் விபத்தில், கலவரத்தில், இயற்கையின் சீற்றத்தில் இறந்து விட்டார்கள். உற்றார் உறவுகளோ ஒதுக்கி விட்டார்கள்.” என்ற நிலையில் ஒரு குழந்தை இப்படியான இல்லமொன்றுக்கு வருமென்றால் அது வேறு கதை.
‘அதே நேரம்..’ நினைத்துக் கொண்டவளின் விழிகள் சட்டென்று அவள் மடி நோக்கித் தாவியது.
இதுவரை விழிகளில் தெரிந்த கடினம் மெல்ல மெல்ல விலக, அந்த இடத்தை வாஞ்சையும் கனிவும் மெல்ல மெல்ல நிறைத்துக் கொண்டது.
நான்கே நான்கு மாதங்கள் நிறைந்த அழகிய மஞ்சள் மொட்டு சாதனா.
‘இவள் வளர்ந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அசராத ஆசையில் பாரதி அம்மா இந்தப் பெயரை இவளுக்கு வைத்தாரோ?!’ மனம் முணுமுணுக்க, தன் பிஞ்சுக் கரங்களை வாயில் வைத்து சப்புக் கொட்டிக்கொண்டே மடியில் சொகுசாகக் கிடந்த அந்த அழகு மொட்டை இரசித்தாள்.
அடர்ந்த மரமொன்றின் கீழிருந்த மர பெஞ்ச்சொன்றில் அமர்ந்திருந்தாள் ஏஞ்சல். குழந்தையோ, தன் வட்ட விழிகளைச் சுழற்றி மெல்லிய காற்றில் அசையும் இலைகளை வெகுவாக இரசித்துக் கொண்டிருந்தாள்.
அவை எல்லாம் சேர்ந்து செலவின்றியே அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன.
பிறந்து சில மணிநேரக் குழந்தையாக குப்பைத் தொட்டியில் கண்டெடுத்தார்களாம் இவளை. கமலம்மா தந்த தகவல் இது.
‘இந்த குப்பைத் தொட்டிகள் தான் எவ்வளவு வரம் பெற்றவை! குழந்தைப் பாக்கியம் கேட்காமலேயே கிடைக்கப் பெறுகின்றனவே!’ எண்ணியவள் நெஞ்சில் வெறுப்புப் பரவியது.
“யார் உன்னைப் பெற்றவள்? நீ உருவாகக் காரணமானவன் யார்?” வாய் விட்டே முணுமுணுத்துக் கொண்டாள் ஏஞ்சல்.
பத்து மாதங்கள் பொறுத்திருந்து பெற்றவளுக்கு உன்னைக் கண்டதும் குப்பையாகத் தெரிந்த மாயம் தான் என்ன??
ஆங்காரமாக நினைத்துக் கொண்டாள்.
நேற்று மாலை இல்லத்து தலைவியுடன் கதைத்து விட்டு உணர்ச்சி துடைத்த முகத்துடன் வெளியே வந்தவளை, கமலமோ மனோவோ எதுவுமே கேட்கவில்லை.
அவள் இங்கு வந்த காரணம் என்னவென்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அதை அறிந்து கொண்டாளா என்று அவளிடம் கேட்டு அவள் சொந்த விடயத்தில் தலையிட அவர்கள் துணியவில்லை. அதற்கு அவளும் அவ்வளவாக விரும்ப மாட்டாள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்ததால், அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தனர்.
இரவுணவைக் கொறித்து விட்டு மௌனமாக மொட்டை மாடியில் தஞ்சமடைந்த ஏஞ்சல், இரவு வெகு நேரமாகியும் கீழே இறங்கி வரவில்லை என்றதும், அப்படியே விட மனம் வராமல் மெல்ல மாடி ஏறினார் கமலம்.
கருமையில் சின்னஞ் சிறு வெள்ளிப் பொட்டுக்கள் போட்ட ஆடையில் வான்மகள் மனதை அள்ளும் அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அதை இரசிக்கும் மனநிலை தான் ஏஞ்சலிடம் துளியும் இருக்கவில்லை.
இயற்றையின் பெரும் இரசிகையான அவள் விழிகளோ, இன்று இலக்கின்றி இருளை வெறித்துக் கொண்டிருந்தன.
மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்தமர்ந்து முழங்கால்களை வளைத்துப் பிடித்தவாறே அவள் இருந்த தோற்றம் பார்த்த கலங்கிப் போன கமலம், அமைதியாக தானும் அவள் அருகில் சென்றமர்ந்தார்.
உள்ளக் கொதிப்புடன், தன் மனசாட்சியுடன் மனதில் தர்க்கம் நடத்திக் கொண்டிருந்தவள் சட்டென்று கலைந்து, மின்னும் கண்களுடன் அவரைப் பார்த்து, “வாங்க ஆன்ட்டி, சிலுசிலுவென்று காற்று வர நன்றாக இருக்கு. அதுதான் அப்படியே இருந்து விட்டேன்.” சட்டென்று அழகாகச் சமாளித்தாள்.
இந்த சில வருட பழகத்தில் சிறு பெண் என்றாலும் அவள் மனதிடம் பற்றி அறிந்திருந்தவர், “ஆமாடா, நானும் முடிந்த பொழுது இப்படித் தான் வந்து அமர்ந்து விடுவேன்.” என்றவர், “அம்மா அப்பா எடுத்தார்களா ஓவி? எப்போது ஃப்ரான்ஸ் திரும்புகின்றார்கள்?” என்று இயல்பாகவே பேச்சை ஆரம்பித்தார்.
“கதைத்தார்கள் ஆன்ட்டி.” என்றவள்,
“ஏன் ஆன்ட்டி, பெற்றெடுத்த பிள்ளையை குப்பையாகத் தூக்கிப் போடுகின்றவர்களை என்ன செய்யலாம்?’’ திடுதிப்பென்று கேட்டதும் திடுக்கிட்டுப் போனவர், தன்னையே பார்த்திருக்கும் அவளை மௌனமாக ஏறிட்டார்.
பின்னர் சிறிது நிதானித்து, “இந்த விடயத்தை பொத்தாம் பொதுவாக கதைக்க முடியாது ஓவியா.” என்றவர்,
“அப்படித் தூக்கிப் போடுகின்றார்கள் தான். அப்படிப் போடுபவர்கள் சூழ்நிலை, அவர்கள் செயலை நியாயப்படுத்த பல காரணங்கள் இருக்கலாம்மா…” சொல்லிக் கொண்டு வர,
“என்ன ஆன்ட்டி, நீங்களே இப்படிச் சொல்றீங்க?” அவரிடமிருந்து இத்தகையை பதிலை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
இப்படியான குழந்தைகளை பாராட்டி சீராட்டி வளர்த்து வரும் கமலமோ மீண்டும் மௌனம் காத்தார்.
“ஓவி, ஒரு பகுதியினர் பல நேரங்களில் தம்மையறியாமல் அறிவீனத்தால் குழந்தையைச் சுமந்து, தங்களதும் தம்மைச் சார்ந்தவர்களினதும் மீதி நாட்களின் நிம்மதிக்காக, மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தைகளைப் பிரிகிறார்கள்.” மௌனம் கலைத்தவரை மீண்டும் இடையிட்டு நிறுத்தினாள் ஓவி.
“மீதி நாட்களின் நிம்மதி? என்ன ஆன்ட்டி சொல்லுறீங்க? யாருக்கு நிம்மதி? அந்த ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? இல்லையில்லை; இப்படியான சந்தர்ப்பங்களில் ஆண்கள் தானே முதல் கைகழுவி விடுவார்கள். அப்போ சுமந்த பெண்ணுக்கா? ஹா..ஹா…” கசப்புடன் பெரிதாகச் சிரித்தவள்,
“அப்போ அந்தக் குழந்தைக்கு அந்த நிம்மதி வேண்டாமா?? அதை நிராகரித்து குழந்தையின் சார்பாக முடிவெடுக்க இவர்கள் யார் ஆன்ட்டி? இவர்கள் யார்??” கடினப்பட்ட குரலில் கேட்டவளை ஆதுரமாகப் பார்த்தார் கமலம்.
“அப்படிப்பட்ட நேரங்களில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கும்டா.”
“இல்லை ஆன்ட்டி, இல்லவே இல்லை. என்னதான் சொல்லுங்க, இதை என்னால் ஏற்க முடியாது. படிப்பறிவில்லாத பாமரப் பெண்களுக்கு இப்படி நடந்தால், அவள் வீட்டினர் மானம் அவமானம் என்று கதைத்து குழந்தைகளை அழிப்பதும் தூக்கிப் போடுவதும் பெரும்பாலும் நடப்பதை கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், எல்லாம் தெரிந்தவர்கள் இப்படி ஒரு நிலையில் மான அவமானம் பற்றி கதைத்து குழந்தைகளை இலகுவாக கைகழுவுகின்றார்களே, அவர்களை எந்த வகையில் சேர்ப்பது ஆன்ட்டி?” மூச்சு விடாமல் ஆவேசமாகக் கேட்டவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாது தடுமாறினார் கமலம்.
“அப்படிப்பட்டவர்களுக்கு முதலிலேயே அந்த மான அவமானங்கள் பற்றித் தெரியாதா? சொல்லுங்க ஆன்ட்டி? அதை விட கணவனும் மனைவியும் ஒவ்வொரு பக்கமாக போக எத்தனை குழந்தைகள் ஆதரவற்று அங்கும் இங்குமாக அலைகின்றார்கள்.” தன்னிடம் நீதி கேட்கும் பாவனையில் பேசியவளை அமைதிப்படுத்தும் வழி தெரியாது குழம்பிய கமலம், ‘பாரதி அக்கா இவளிடம் ஏதோ சொல்லி இருகிறார்.’ என நினைத்துக் கொண்டவர் ,
‘இந்தப் பிள்ளைக்கு என்ன இல்லை. எல்லாமே கொட்டிக் கிடக்கும் போது இந்த சஞ்சலம் இப்போது தேவையா?’ மனதில் அங்கலாய்த்துக் கொண்டார்.
அவளுக்கு பதில் சொல்ல முயன்றவரை மீண்டும் இடைவெட்டியது ஓவியின் சீறல் குரல்.
“படித்து சொகுசாக பகட்டாக வாழ்பவர்களும், இப்படிச் செய்கின்றார்களே ஆன்ட்டி. தங்கள் கணநேரத் தடுமாற்றத்துக்கும் சந்தோஷத்துக்கும் இன்னொரு உயிரை ஆயுள் முழுமைக்கும் தலை குனிய வைக்க இவர்கள் யார் ஆன்ட்டி? இப்படிப் பிறக்கும் குழந்தைகளில் எத்தனை பேருக்கு அமைதியான வாழ்க்கை அமைகின்றது சொல்லுங்க பார்ப்போம்.” இப்போது அவள் கண்கள் நீரில் பளபளத்தது.
“பிறகு தாங்கள் செய்தவற்றையெல்லாம் மறந்து குடும்பம் பிள்ளைகள் என்று வாழ்கின்றார்களே! அதுவும் தான் எப்படி முடிகிறது? என்ன ஜன்மங்களோ!” வெறுப்புடன் வார்த்தைகளை உமிழ்ந்தாள்.
“அப்படியும் ஒரேயடியாகச் சொல்லி விட முடியாதம்மா. நீ இப்போது வெறுப்பில் கதைக்கின்றாய் போல இருக்கு. நம்பிக்கை தான் வாழ்க்கை. அந்த நம்பிக்கையால் ஏமாந்து போகும் பெண்கள்.”
“யார் என்ன காரணம் சொன்னாலும் இதற்கு மன்னிப்பு இல்லை ஆன்ட்டி. அப்படி நம்பிக்கையால் ஏமாந்து போனால், அதில் அவர்களுக்கும் தானே பங்குண்டு! பிறகேன் குழந்தையை மட்டும் தூக்கிப் போடுகின்றார்கள்? செய்வதெல்லாம் செய்து விட்டு ஆண்கள் பெண்களுக்கு எதிராகவும், பெண்கள் ஆண்களுக்கு எதிராகவும் கொடி பிடிக்கின்றார்களே. இடையில் நசுங்கும் சின்னஞ் சிறு உயிர்கள் பற்றி யாருக்குமே அக்கறையில்லை.” சொல்லிக் கொண்டு வந்தவள் சட்டென்று நிறுத்தி நிதானித்தாள்.
“சாரி ஆன்ட்டி, ஏதோ கோபத்தில் உங்களுடன் இப்படிக் கதைத்து விட்டேன். என் மன உளைச்சலை உங்கள் மீது கொட்டி விட்டேன் இல்லையா? சாரி ஆன்ட்டி” என்றவாறே எழுந்தவள், “குட்நைட் ஆன்ட்டி” சொல்லிக்கொண்டே விருட்டென்று கீழே சென்று மறைந்தாள்.
அவள் தாயுடன் கதைத்த அத்தனையையும் மாடிப் படியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மனோ, அங்கே நின்ற தன்னைக் கூட கவனிக்காது விருட்டென்று விரைந்து செல்லும் ஓவியையே கவலையாகப் பார்த்தவன் தாயை நாடிச் சென்றான்.
முகத்தில் கடினத்துடன், விழிகள் மடியில் கிடந்த குழந்தையில் நிலைக்க அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தமர்ந்தான் மனோ.

