நீயென் சொந்தமடி 7 – 2

தானும் அமர்த்தலாகப் புன்னகைத்தவன், “பரவாயில்லையே ஏஞ்சல், நல்ல தாராள மனம் உங்களுடையது. என்னையெல்லாம் உங்க பாய் ஃப்ரெண்ட் லிஸ்டில் சேர்த்து இருக்கிறீங்களே!” என்றவன் பில்லுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு வெளியில் வந்தான்.
காரில் ஏறியமர்ந்து ஓட்டத் தொடங்கியவனைப் பார்த்தவள், “நாம சந்தித்து பத்து நாட்கள் இருக்குமா எழில்?” சந்தேகம் கேட்டவளை சின்னச் சிரிப்புடன் திரும்பிப் பார்த்துவிட்டு சாலையில் கவனம் பதித்தான் அவன்.
“ஆனால், ஏதோ நிறைய நாட்கள் பழகியது போல ஒரு உணர்வு. உங்களுக்கு எப்படியோ தெரியாது எழில், எனக்கு மிகவும் நெருக்கமானவர்…” சொல்லி நிறுத்தியவள், அவன் முகம் பாராமல் முன்னால் நீண்டு செல்லும் பாதையையே பார்த்திருந்தாலும்,
அவள் வாயோ, “நீங்க தான் எழில்…” என்ற சொல்லை உதிர்த்தது.
அதைக் கேட்டதும் எழில் நெஞ்சம் நிறைந்து போனான். ‘எனக்கும் தான்டி. நீ மட்டும் தான் நெருங்கியவள். என்னுள் நீ இருக்கும் இடத்தில் இதுவரை யாரும் இருக்கவுமில்லை, இனியும் இருக்க முடியாது.’ மனதுள் சொல்லிக் கொண்டவன், அவளிடம் தன் நேசத்தை நேரில் சொல்லும் அந்த நொடியை நோக்கி ஒரே எட்டில் தாவிட ஆவல் கொண்டான்.
“அந்த திறப்பு விழாவுக்கு உங்க தங்கையுடன் போக ஒழுங்கு செய்ததற்கு ரொம்பவும் நன்றி எழில். நாளை திறப்பு விழா முடிய, இன்னமும் ஐந்து நாட்களில் நான் ஃப்ரான்ஸ் போய் விடுவேன். இனி இந்தப் பக்கம் வரவே மாட்டேன்.”
அவன் மனதினுள் அவளுடன் மிகவும் உரிமையாகப் பேசிக் கொண்டிருக்கையில், தொடர்ந்து சொன்னவளின் முகமோ இவ்வளவு நேரமும் இருந்த கலகலப்பைத் தொலைத்துக் கருமை படர்ந்திருந்தது. அவள் குரலில் ஒருவகை இறுக்கமும் பிடிவாதமும் கலந்திருந்ததை உணர முடிந்தது அவனால்.
‘இப்போது எதைக் கதைத்து இவளைத் தேற்றுவது?’ குழம்பிப் போனான் எழில். என்றாலும், அவளின் துக்கமும் இறுக்கமும் கண்டவனால் பேசாது இருக்க முடியவில்லை.
“அப்போ, எங்கள் வீட்டுக்கு எல்லாம் வரமாட்டீங்க, அப்படித் தானே!” கேலியாகக் கேட்டவன், “இதென்ன ஏஞ்சல், இப்படி ஒரேயடியாக இந்தியாவுடன் கோபிக்கலாமா சொல்லுங்க! நீங்க என்னமோ என்னையே கோபிப்பது போல இருக்கு..” சீண்டினான்.
“நான் அந்தக் கருத்தில் சொல்லவில்லையே எழில்..” என்றவளை இடைமறித்து ,
“நான், மனோ எல்லோரும் இங்கு தானே இருக்கிறோம். பிறகெப்படி இனி இங்கு வரமாட்டேன் என்று சொல்லுவீங்க? கொஞ்சம் முதல் தானே நான் உங்களுக்கு நெருக்கமானவன் என்று சொன்னீங்க. இப்போ இப்படிச் சொன்னால் மட்டும் நான் விட்டு விடுவேன் என்றா நினைக்கிறீங்க?” ஒருவித சவாலாகக் கேட்டவன்,
“உங்களை இங்கே பிடித்து வைக்கும் வழி எனக்குத் தெரியும் ஏஞ்சல்.” சொன்னவனைச் சட்டென்று திரும்பிப் பார்த்தவள் பின்னர் மெல்லிய புன்னகையுடன்,
“நீங்க தான் அங்கு வருவீங்களே!” மெல்லிய குரலில் சொன்னவள்,
“உங்கள் வீட்டுக்கும் வர வேண்டும் தான் எழில். எனக்கும் உங்க அப்பா அம்மாவைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கு.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே கைபேசியில் வந்த அழைப்பைப் பார்த்து,
“டாடி எடுக்கிறார்” என்றவாறே அழைப்பை ஏற்றுத் தங்கள் மொழியில் கதைக்கத் தொடங்கினாள்.
****
தன் அண்ணா வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தனர் எழில், ஆர்த்தி மற்றும் ஆதி அவன் மனைவி நால்வரும் .
ஆதியின் பிள்ளைகள் தம் தாய் வழித் தாத்தா பாட்டியுடன் அருகிலிருக்கும் பூங்காவிற்குச் சென்றிருந்ததால், இவர்களால் தனித்திருந்து பேச வசதியாக இருந்து .
தம்பி சொன்னதைக் கேட்டு ஆத்திரத்தில் முகம் சிவக்க அவனைப் பார்த்து முறைத்தான் ஆதி.
“இதென்ன எழில் திடீரென்று இப்படிச் சொல்கின்றாய்? இதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டாடா? எவ்வளவு பொறுப்பானவன் நீ. அப்படியிருக்க இப்போது வந்து இப்படிச் சொல்கின்றாயே! பெரியவர்கள் முடிவு செய்து வைத்திருக்கும் திருமணத்தை நிறுத்தக் காரணம் என்ன? முதல் அதைச் சொல்லு பார்ப்போம்.” சீறினான்.
“இன்னும் ஆறு மாதத்தில் படிப்பு முடித்து அமெரிக்காவில் இருந்து ஸ்வேதா திரும்பி வர உங்கள் இருவருக்கும் திருமணம் எழில். இப்போது போய்…சே..என்னடா?? முதல் அத்தை இதைக் கேட்டால் எவ்வளவு வருத்தப் படுவார் தெரியுமா? அதைப் பார்த்துக் கொண்டு அப்பா தான் சும்மா இருப்பாராடா? இப்போ என்னடா பிரச்சனை உனக்கு? அம்மாவும் நீ ஃப்ரான்ஸ் போய் வந்ததிலிருந்து ஆளே சரியில்லை என்று சொன்னார்.” கூர்மையாகக் கேட்ட தமையனை சாதாரணமாகவே ஏறிட்டான் எழில்.
இயல்பாக இருப்பவனைப் பார்த்துச் சீறினாலும், ஆதியின் உள்மனம் தம்பியில் உள்ள நம்பிக்கையில், காரணமின்றி அவன் எதுவும் செய்வதில்லை என்பதால், ‘காரணம் என்னவாக இருக்கும்?’ என்றே அறிந்து கொள்ளத் துடித்தது.
“அது வேறொன்றும் இல்லையண்ணா…”. சொல்லி நிறுத்தியவன் இப்போது மிகவும் சங்கடத்துடன் அருகிலிருக்கும் தங்கையைப் ஏறிட்டான். நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன் என்று பட்டென்று சொல்லத்தான் நினைத்தான். ஆனால் தங்கையின் முன்னால் அவனால் அப்படிச் சொல்ல முடியவில்லை.
“ஸ்வேதா வீட்டிலிருந்து அவளை உனக்குச் செய்யக் கேட்கிறார்கள் எழில். எங்களுக்கும் சம்மதம், உனக்கும் சம்மதமா?” சம்மதம் சொல்வாய் என்ற மொத்த நம்பிக்கையையும் முகம் பிரதிபலிக்க தந்தை தன்னிடம் கேட்ட பொழுது, அவனால் சட்டென்று மறுத்துக் கூற முடியவில்லை. கூறுவதற்கான காரணங்களும் இருக்கவில்லை என்றே சொல்லலாம்.
ஆனால், பின்னர் ஸ்வேதாவின் தந்தை வழிப் பாட்டி கோமதியின் பேச்சுக்களில் எரிச்சல் பட்டு, “இந்தக் கல்யாணம் நடக்க வேண்டுமா அம்மா? அவர்களுக்கு குறி நம்ம பணம் தான்.” என்று தாயிடம் சீறி இருந்தாலும், கல்யாணத்தை நிறுத்தி தன் செல்ல அத்தையைக் கலங்க வைக்க அவன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை.
ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாதே! தெரிந்தோ தெரியாமலோ ஏஞ்சல் அவன் மனதில் முழுமையாக நிறைந்து போனாளே!
ஒருவேளை அந்த மனம் முழுமையாக ஸ்வேதாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இந்தச் சிக்கல் வந்திருக்காது தான். ஆனால் அப்படி நடக்காமல் போனதன் காரணம் தான் அவனுக்கே புரியவில்லை.
அவனைப் பொறுத்த வரையில் திருமணம் பேசிய பின்னரும், தான் பார்க்கப் பிறந்து வளர்ந்த தன் அத்தை பெண்ணாகவே ஸ்வேதா தெரிந்தாள். அதற்கு மேல் அவன் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை.
அவளும் இவர்களுக்குத் திருமணப் பேச்சு ஆரம்பிக்கும் போதே அமெரிக்காவில் இருந்ததாலோ என்னவோ, பிரத்தியேகமாக இவர்கள் தங்களுக்குள் பொழுதைக் கழிக்கும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை. அங்கும் இங்குமாக வேலைகளில் அலைந்து திரிபவன் இடைக்கிடை அலைபேசியில் பேசிக் கொண்டாலும், எப்போதும் போலவே நலவிசாரிப்புக்களும், பெரியவனாக அறிவுரைக்களுமாகவே அது முடிவடையும்.
அதனால், தான் ஸ்வேதாவின் விடயத்தில் பாதகம் எதுவும் இழைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டவனால், தன்னையும் தன் செயலையும் தன்னுள் தெளிவாக நியாயப்படுத்திக் கொண்டவனால், தன் தங்கையின் எதிரில் தன் காதலைச் சட்டென்று சொல்ல முடியவில்லை. மிகவும் சங்கடப்பட்டவன் இறுதியில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு,
“நீங்க முதல் இதைப் பாருங்க..” என்று சொல்லி தன் கைபேசியில் இருந்த ஏஞ்சலின் புகைப்படத்தைக் காட்டினான்.
ஆதி கைபேசியை வாங்கிக் கொள்ள, ஆர்த்தியும் அவன் மனைவியுமாக எழுந்து சென்று அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்ததும்,
“யாருண்ணா இவங்க? எவ்வளவு அழகாக…” சொல்லிக் கொண்டு வந்தவள் சட்டென்று நிமிர்ந்து எழிலைப் பார்த்து,
“இவங்களைப் பார்த்தால்…நம்ம கோமதிப் பாட்டி போல இல்லையா?” கூவினாள் ஆர்த்தி.
ஆதியும் அவன் மனைவியுமே அதே திகைப்புடன் எழிலை ஏறிட்டனர் .
கைபேசியை திரும்ப வாங்கிக் கொண்டே, ஃப்ரான்ஸ் விமான நிலையத்தில் வைத்து ஏஞ்சலைக் கண்டதில் தொடங்கி இன்று வரை நடந்தவை அனைத்தையும் சொன்னவன், தனது துப்பறியும் நண்பன் மூலம் கிடைத்த தகவல்களையும் சொல்லச் சொல்ல, கேட்டிருந்த மூவருமோ விக்கித்துப் போயினர்.
“எழில் அண்ணா! என்ன படக் கதையா சொல்லுறீங்க?” வாய் திறந்தாள் ஆர்த்தி.
“ஆமாம் எழில், இதையெல்லாம் கொஞ்சமும் நம்ப முடியவில்லையே! இதைக் கேட்டால் வேணு சித்தப்பா வீட்டில் எல்லோரும் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? முதல் இந்தப் பெண்ணின் உருவம் ஒத்துப் போவதை வைத்து…” சங்கடமாக இழுத்தாள் ஆதியின் மனைவி.
ஆதியோ, பேச்சற்றுப் போய் அமர்ந்திருந்தான்.
“அண்ணா நீங்க என்ன நினைக்கிறீங்க?” கேட்ட தம்பியை இப்போது இன்னும் கோபத்துடன் பார்த்தவன்,
“ஏன் எழில், இதெல்லாம் என்னடா? இவ்வளவு பெரிய விடயத்தை இலகுவாக இத்தனை நாட்கள் சொல்லாமல் வைத்திருந்து சொல்கின்றாய். முதல் அப்பாவிடம் சொல்லியிருக்க வேண்டாமாடா?”
கடுகடுத்த தமயனிடம் மறுப்பாகத் தலையசைத்தவன், “இல்லையண்ணா… எனக்கென்னமோ இது பற்றி அப்பா அம்மாவுக்கும் தெரிந்திருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கு. அதனால் தான் சுருதி வீட்டினருக்கும் நம்ம வீட்டினருக்கும் இடையில் வெறுப்போ என்று நினைக்கத் தோன்றுதண்ணா.” யோசனையாகச் சொன்ன தம்பியின் கூற்று உண்மையாக இருக்குமோ என்று குழம்பத் தொடங்கினான் ஆதி.
“இப்போது என்னடா செய்வது?” தன்னையே கேட்ட தமையனைப் பார்த்தவன் ,
“இதெல்லாம் என் ஊகங்களுடன் நான் சேகரித்த தகவல்களும் தானே அண்ணா. ஏஞ்சல் இப்போது மனோ வீட்டில் தான் இருக்கிறாள். அவள் அந்த திறப்பு விழாவுக்கு ஆர்த்தியுடன் போக வேண்டும் என்று சொல்லிக் கேட்டாள். நாம் நினைப்பது சரியென்றால், ஏஞ்சலுக்கு அந்த இல்லத்து அம்மா சொன்ன தகவல்களின் படி தான் அவள் அங்கு போக இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.” சொல்லி நிறுத்தியவன்,
தங்கையைப் பார்த்து, “ஆர்த்தி, நீ நன்றாகக் கவனித்துப் பார். ஏஞ்சலின் பாவனைகளை வைத்தே அந்த வீட்டில் அவளுக்கு வேண்டியவர் நாம் நினைக்கும் நபரா என்பதை நாம் உறுதியாகத் தெரிந்து கொள்ளலாம். பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்போம்.” என்றவன் ,
“அதுவரை வீட்டில் சொல்லத் தேவையில்லை அண்ணா. கொஞ்சம் பொறுத்திருப்போம். இப்போதே சொல்லி வீணாகப் பிரச்சனைகள் ஏன்? ஏஞ்சல் அவள் பெற்றோர்களைத் தேடுவதே ஒருதரம் பார்ப்பதற்காக மட்டும் தான்ணா. அதனால் நாம் ஒவ்வொரு விடயத்தையும் கவனமாகவே செய்ய வேண்டும். அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக் கூடாது” சொல்லி நகர்ந்தான் எழில் .
கேட்டிருந்த மற்றவர்கள் ஏஞ்சல் பற்றி அறிந்து கொண்ட அதிர்ச்சியில், அவன் சற்று முன்னர் ஸ்வேதாவுடனான திருமணம் வேண்டாம் என்றதை அப்படியே மறந்து தான் விட்டார்கள்.

error: Alert: Content selection is disabled!!