நீயென் சொந்தமடி 9 – 1

அத்தியாயம் 9.

“ஓவி, இப்போது அப்படி என்ன நடந்தது விட்டது என்று இப்படி அவசரம் அவசரமாகப் புறப்படுகிறாய்? இன்னமும் எண்ணிச் சில நாட்கள் தானே இருக்கு, நின்று விட்டுப் போகலாமே!” சலித்துக் கொண்டான் மனோ.
“ப்ளீஸ் மனோ, நீங்கள் கொஞ்சம் வெளியில் இருக்கிறீங்களா?” சலிப்புடன் சீறினாள் அவள்.
“மனோ…ஒருதரம் வந்து விட்டுப் போ!” அதே நேரம் தாயின் அழைப்பும் வரவே,
“எதையாவது செய் ஓவி. நான் இனி ஏன் என்றும் கேட்க மாட்டேன். நீ சும்மா சும்மா வாய் வார்த்தையாகத் தான் என்னை உன் நண்பன் என்பாய், ஆனால், என்றைக்காவது மனம் திறந்து கதைத்திருக்கிறாயா?” வருத்தத்துடன் சொன்னவன் வெளியேற,
“ஆமாம், நீங்கள் மட்டும் என் விடயத்தை மற்றவர்களுக்கு ஏலம் போடுவீர்கள் என்ன? இது தான் ஒரு நண்பன் செய்யும் வேலையா?” மீண்டும் சீறினாள் அவள்.
“நான் என்ன…ஏலம் போட்டேன்..” வாயிலருகில் நின்று திரும்பிப் பார்த்துத் தடுமாறியவனை உறுத்து விழித்தாள் அவள்.
“என்னைப் பற்றி ஏன் உங்க நண்பருடன் கதைத்தீர்கள் மனோ. முதல் அவர் யார் என்னைப் பற்றி ஆராய, எத்தனை நாட்களாகப் பழக்கம்?” வெறுப்புடன் சொல்லிக் கொண்டவள், கோபத்துடன் கையிலிருந்த பொருளைத் தன் பயணப் பையினுள் திணித்தாள்.
“எல்லோரும் நல்ல நண்பர்கள். நீங்க என்னைப் பற்றி அவரிடம் சொல்லுங்க. அவர் தான் கல்யாணம் செய்யப் போவதை மறைத்து விட்டு என்னிடம்..” சொல்லிக் கொண்டு வந்தவள், தன் இதழ் நடுக்கத்தை பற்களால் அழுத்திப் பிடித்துத் தன்னைக் கட்டுப்படுத்த வெகுவாக முயன்றாள்.
வெளிப்பார்வைக்கு சீறிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் என்றும் இல்லாதவாறு மிகவும் நொந்து உடைந்து போனாள் அவள்.
‘நான் இம்முறை இந்தியா வந்ததே பெரிய பிழை!’ என்று நினைத்துக் கொண்டவள், ‘இனி இந்த ஜென்மத்துக்கும் இந்தப் பக்கம் வருவதில்லை!’ வெறுப்புடனும் கசப்புடனும் உறுதியே எடுத்துக் கொண்டாள்.
“ஹைய்யோ ஏஞ்சல்! எத்தனை தரம் சொல்கிறேன், அதெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். வீட்டில் பெரியவர்கள் தங்கள் விருப்பத்தின் படி பேசி வைத்துள்ள கல்யாணம். அதுவும் வாய்ப் பேச்சளவில் தான் நிற்கின்றது. நிச்சயம் அப்படி இப்படி எந்தவொரு சடங்குகளும் நடக்கவில்லை.” பொறுமையாக விளங்க வைக்க முயன்றான்.
“அதை எப்படி பிரச்னை இல்லாது தீர்ப்பதென்று அவனுக்குத் தெரியும்மா. சொன்னால் கேள், அவன் உன்னை மிகவும் விரும்புகிறான்.” தொடர்ந்து சொன்னவனை, நெருப்புப் பார்வையால் சுட்டாள் அவள்.
“இனியொருதரம் இப்படி அபத்தமாகப் பேசாதீங்க மனோ. பெரியவர்கள் பேசியதென்றால்…உங்க நண்பரின் விருப்பமில்லாமலா? முதல் இங்கே அதிகமாக இப்படித் தானே திருமணங்கள் நடக்கின்றன!?” சீறினாள்.
“உங்க நண்பனைப் போல கற்பனையில் கோட்டை கட்டி வாழும் ஆள் நான் இல்லை. அதை அவரிடம் சொல்லி வையுங்க.” என்றவாறே ‘சர்ர்..’ என்று தன் பயணப் பையை இழுத்து ஓரமாக வைத்தவள், அப்போது அவர்களைத் தேடி வந்த கமலம்மாவைப் பார்த்ததும் மெல்லத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“தம்பி உன்னை எத்தனை தரம் கூப்பிடுவது?” அவரும் தன பங்குக்குச் சிடுசிடுத்தவர்,
“என்னம்மா இப்பவே தயாராகி விட்டாய் போல இருக்கு.” என்றவர், “இந்தாம்மா, பாரதி அக்கா எதுவோ கதைக்க வேண்டுமாம்!” கைபேசியைக் கொடுக்க, வாங்கிக் கொண்டு அப்பால் நகர்ந்தாள் ஓவி.

கடற்கரையில் இருந்து எழிலுடன் வீடு வந்தவள் மௌனமாக இறங்கி மனோ வீட்டை நோக்கிப் படியேற, அவள் ஏதாவது பேசமாட்டாளா என்று எதிர்பார்த்துக் கொண்டே காரைச் செலுத்திக் கொண்டு வந்தவன், அவள் அமைதியாக இறங்கிச் செல்வதைப் பார்த்திருந்து விட்டு, கூம்பிய முகத்துடன் காரைக் கிளப்பினான்.
தனக்கு அவள் பிறப்பைப் பற்றித் தெரியும் என்றதும், அவள் தன் சொந்தம் என்றதும் அவளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டவன், ‘சரி இன்றைக்கு அமைதியாக இருக்கட்டும், நாளை வந்து பார்ப்போம்.’ என எண்ணியவாறே, தங்கள் நகைக் கடையை நோக்கிச் சென்றான்.
என்னதான் என்றாலும் தன்னிடம் அவள் மனம் திறந்து பேசியதும், தன்னில் ஆறுதல் தேட முனைந்ததும், தன் காதலுக்கான அவளது சாதகமான எதிரொலியென்றே நினைத்துக் கொண்டது அவன் மனம்.
அந்த உணர்வே ஒருவகை நிம்மதியை அவன் மனதில் உருவாக்கியது .
ஏஞ்சலோ, விறுவிறுவென்று திரும்பியும் பாராது மேலே வந்தவள், திறந்திருந்த வாயிலால் நுழையப் போகும் போது, உள்ளேயிருந்து மனோவும் அவன் தாயாரும் கதைத்துக் கொண்டிருந்தது செவியில் விழ, அதில் தன் பெயரும் எழில் பெயரும் வரவே, அப்படியே வாயிலருகில் அவள் நடை நிதானப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் கதைத்தவற்றைக் கேட்டு, தட்டுத் தடுமாறி புரிந்து கொண்டவளோ, உள்ளம் தகிக்க கோபத்தின் உச்சத்துக்கே சென்று விட்டாள்.
ஒன்றுக்கு மேல் ஒன்றாக காலையிலிருந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
‘பாரதி அம்மா சொன்னது போல, அன்று அவர் வாயிலிருந்து அறிந்தது போதும் என்று உடனேயே இங்கிருந்து புறப்பட்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதோ?! அவர் அவ்வளவு சொன்ன பின்னும் அந்த திறப்பு விழாவுக்கு நான் போக எண்ணியது ஏன்? பாசமா?? அல்லது பற்றா?’ தன்னையே வெறுப்புடன் கேட்டுக் கொண்டாள்.
‘நிச்சயம் பாசமோ பற்றோ இல்லை. அது எப்படி என்னுள் வரும்? ஏதோ ஒரு ஊந்துதல். அதுவும் கூட அந்த அழைப்பிதழைக் கண்டதால் வந்ததாகவும் இருக்கலாம்.’ நினைத்துக் கொண்டவள்,
“நான் இங்கு வராமல் இருந்திருந்தால்…” வெறுப்புடன் முணுமுணுத்துக் கொண்டாள்.
எழில் இவள் பிறப்பு பற்றி தனக்குத் தெரியும் என்று கூறியதும், அதிலும் அவன் உறவென்றதும் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தாள் என்றால், இப்போது எழிலுக்கு ஏற்கனவே அவன் மாமாவின் பெண்ணைத் திருமணம் பேசி இருக்கிறார்கள் என்பது மாதிரி அவர்கள் பேச்சில் இருந்து விளங்கிக் கொண்டவளுக்கு, சட்டென்று, ஒருவகை ஏமாற்றம் நெஞ்சை ஊடுருவி, தீராத வலியைத் தந்தது.
“என்ன மனோ சொல்கின்றாய்?! எழில் ஓவியை விரும்புகின்றானா?” இதெல்லாம் எப்படிச் சரி வரும்! அந்தப் பிள்ளை வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளை;சரி அதை விடு. முதல், எழிலுக்குத் தான் அவன் மாமா பெண்ணை கல்யாணம் பேசி இருப்பதாகச் சொன்னாயே! பிறகு இதெப்படி?!” ஆச்சரியமும் குழப்பமுமாகக் கேட்ட தாயிடம்,
“அதெல்லாம் எழில் பார்த்துக் கொள்வான்மா. அவன் அத்தைக்கு இவன் என்றால் கொள்ளைப் பிரியம், இவனுக்கும் தான். ஆனால் ஸ்வேதாவை திருமணம் பேசியதில் இவனுக்கு அப்போதிருந்தே பெரிதாக விருப்பம் இல்லையம்மா.” என்ற மனோ,
“இதென்ன தம்பி உன் கதை!? விருப்பம் இல்லையென்றால் எழில் ஏன் சம்மதம் சொன்னான்?” என்ற தாயாரிடம்,
“அந்த கோமதிப் பாட்டிக்கு காசு பணத்தில் தானே எந்த நேரமும் கண். தன் ஒரே பேத்தியை இவனுக்கு கட்டிக் கொடுத்தால், இவன் பங்கு சொத்தும் சேரும் என்று கணக்குப் போட்டு வேணு மாமாவை ஏற்றி விட்டுத்தான் இந்தக் கல்யாணமே பேசினார்கள். இது இவனுக்குத் தெரிந்ததில் இருந்து வேண்டா வெறுப்பாகத்தான் திரிந்தான்மா. அத்தையின் முகத்துக்காக மறுக்க முடியாமல் குழம்பினான். ஆனால் இப்போதோ ஸ்வேதாவைச் செய்ய முடியாது என்று ஆதி அண்ணாவிடம் சொல்லி விட்டானாம். இனி என்ன?” என்றவன் ,
“அவன் ஓவியை லவ் பண்ணுறான்மா. அதுவும் வந்ததில் இருந்தே. ஆரம்பத்திலிருந்து நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், ஆனால் அவன் தீவிரமாக இருக்கிறான். ஓவி இங்கு வளரவில்லை என்றால் என்ன? அவள் அவன் சொந்தமம்மா..” சொல்லிக் கொண்டே திரும்பியவன் வாயிலில் நின்ற ஏஞ்சலைக் கண்டு அதிர்ந்து போய் இருக்கையை விட்டெழுந்தான்.
அவர்கள் கதைத்தவற்றைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ஏஞ்சலுக்கு அவர்கள் தமிழும் ஆங்கிலமும் கலந்து கதைத்ததால் முழுவதும் விளங்கவில்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக சாராம்சமாக விளங்கத்தான் செய்தது. அதுவும், இந்தியா வந்து போகத் தொடங்கிய இந்த சிலவருடங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழை படித்து வருகிறாளே!
ஆனாலும், மனோவும் தாயும் கதைத்ததைக் கேட்டதும் சுறுசுறுவென்று எழுந்த கோபத்தை பொறுமையாக விலக்கிப் பார்க்கையில், தான் விளங்கிக் கொண்டதில் கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படவில்லை அவளுக்கு.
சற்று முன், “நாம் கல்யாணம் செய்து கொள்வோமா?” என்று கேட்டவனின் கண்களில் வழிந்த நேசத்தை நினைத்துக் கொண்டவள், ‘அப்படியெல்லாம் இருக்காது. நான் அரையும் குறையுமாக விளங்கிக் கொண்டு, என்னை நானே ஏன் வருத்திக் கொள்வான்? அப்படி ஒருத்தியைத் திருமணம் செய்ய இருப்பவர் என்னிடம் தன் விருப்பத்தைச் சொல்வாரா?’ என்று தன்னைத்தான் சமாதானம் செய்து கொண்டாலும்,

error: Alert: Content selection is disabled!!