நீ வந்து தங்கிய நெஞ்சில் 21.2

“மரியாதையா போயிடு! என்னை மிருகமாக்காத! இந்த நிமிசம் உன்ர முகம் பாக்கக் கூட வெறுப்பா இருக்கு!”

யாமினியால் அசையக்கூட முடியவில்லை. கண்களில் பூச்சி பறந்தது. அறை விழுந்த கன்னத்துக் கழுத்தோர நரம்புகள் எல்லாம் இழுத்து வலித்தது. கண்ணீர் வரவேயில்லை. அவ்வளவில் அதிர்ச்சி. அவளை நிரோஜன் அறைந்தான் என்பதை நம்ப மாட்டாதவளாக அறை விழுந்த கன்னத்தைக் கையால் தாங்கியபடி அவனையே பார்த்து நின்றாள்.

இவர்கள் பேசுவது கேட்காதபோதும், வேறு யாராவது வருகிறார்களா என்று கவனித்தபடி தூரத்தில்தான் இவன் நண்பர்கள் நின்றிருந்தார்கள்.

இவன் அவளை அறைந்ததைக் கண்டதும் ஓடி வந்த நவீன், “டேய் என்னடா இது?” என்று அவர்களுக்கு நடுவில் வந்து நின்றான்.

“போகச் சொல்லடா அவளை!” கண் முகமெல்லாம் சிவந்து கொதிக்க உறுமினான் நிரோஜன்.

எத்தனை முறை அவள் அறைக்குப் போயிருப்பான்? ஒரு நாள் கூட எல்லை மீறியது இல்லை. அவனைப் போய்… “இனி அவள் எனக்கு முன்னால வரவே கூடாது. போகச் சொல்லு.” வெறி வந்தவன் போல் நின்றான் அவன்.

“டேய் நிரோ?”

“போகச் சொல்றா அவளை!”

“நீங்களாவது போங்கம்மா.”

முடிய வேண்டுமே. அந்தளவில் அதிர்ச்சி அவளுக்கு. அவள் தந்தை கூட அடித்ததில்லை. அன்று அவன் கையை ஓங்கியதையே மறக்க முடியாமல் மருகிக்கொண்டிருக்கையில் இன்று அறைந்தேவிட்டானே.

“போங்க யாமினி. எங்க வந்து என்ன செய்துகொண்டிருக்கிறீங்க ரெண்டு பேரும்? வேற ஆரும் பாத்தா என்ன நினைப்பினம் சொல்லுங்க? என்ன எண்டாலும் கொழும்புக்கு வந்தபிறகு ஆறுதலா கதைங்க. இப்ப போங்கம்மா.” அவன்தான் கொதித்துக்கொண்டு நிற்கிறான் என்றால் இந்தப் பெண்ணாவது ஒதுங்கிப் போகலாமே என்றிருந்தது நவீனுக்கு.

கலங்கிவிட்ட விழிகளோடு அவனை ஒருமுறை பார்த்துவிட்டு நடந்தவளுக்கு அப்போதுதான் தான் ஏன் வந்தோம் என்பதே நினைவில் வந்தது.

“அத்தான் உங்க எல்லாரோடயும் கதைக்கோணும் எண்டவர். அதச் சொல்லத்தான் வந்தனான்.” இயல்பாக அவர்களை எல்லாம் அறிமுகம் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இப்போது அவளுக்கே இல்லை. ஆனால் அங்கே திவாகர் காத்திருக்கிறானே.

நவீனுக்கும் இந்த நிலைமையில் இது தேவையா என்றுதான் ஓடிற்று. எல்லாவற்றையும் விட அவளை அங்கிருந்து அனுப்புவதே பிரதானமாகப் பட, “ஒரு ஐஞ்சு நிமிசத்தில வாறம் போங்க.” என்று அனுப்பிவைத்தான்.

*****

அங்கிருந்து பார்க்கையிலே திரும்பவும் சண்டை பிடிக்கிறார்கள் என்று நண்பர்களுக்கு மிக நன்றாகப் புரிந்தது.

“என்னடா இது, எப்ப பார் சண்டை சண்டை சண்டை.” என்று சலித்தான் மகேஷ்.

மித்ரனுக்கும் அதேதான். முந்தைய நிரோஜனாக இருந்திருக்க இந்தத் திருமண விழாவில் ஒரு கலக்குக் கலக்கியிருப்பான். ஆடல் பாடல் மட்டுமல்லாது வந்திருக்கும் அனைவருக்கும் ஏற்றாற்போல் நிகழ்ச்சிகளை நடத்தி, அனைவரையும் உற்சாகம் குன்றாமல் வைத்திருந்திருப்பான்.

இப்போதானால் இவர்களுடன் சேராமல் அவன் இறுக்கத்துடன் தனியாக அமர்ந்துகொள்ள, அவன் இல்லாமல் எதையும் கொண்டாடும் மனநிலையற்று இவர்களும் சும்மா இருக்கிறார்கள்.

நவீனுக்கும் இந்தக் கணத்தில் நிரோஜனுக்கு இந்தக் காதல் தேவைதானா என்றுதான் தோன்றிற்று. இத்தனை நாள்களும் அவர்களுக்குள் இருக்கும் பணப் பிரச்சனை பற்றி இவர்களிடம் அவன் வாய் விட்டதில்லை. ஆனால் இன்று முடியவில்லை.

“மச்சான்ஸ், இத வெளில விட்டுடாதீங்க. உங்க எல்லாருக்கும் தெரியும் எண்டு நிரோக்குக் கூடக் காட்டிக்கொள்ளாதீங்க. ஆனா இனி அவன்ர காசில நாங்க எந்தச் சிலவும் செய்ய வேண்டாம். அது யாமினிக்குப் பிடிக்கிறேல்ல போல. வீணா சிலவளிக்காத எண்டு அவனோட சண்டையாம். மகேஷ், அவனிட்ட வாங்கின காசை திருப்பிக் குடு மச்சான். எனக்கு லோன் எடுத்துத் தந்தவன். என்ர பெயர்ல ஓடுற லோன் இன்னும் ரெண்டு மாதம் இருக்கு. பிறகு திரும்ப எடுத்து அவன்ர காசை குடுக்கப் போறன்.” என்று சொன்னான்.

கேட்டிருந்த எல்லோர் முகமும் மாறிப்போயிற்று. “டேய் என்னடா? அவன்தானே எண்டு அக்கறை இல்லாம இருக்கிறமே தவிர வாங்கின காசை திருப்பிக் குடுக்காம இருப்பமாடா?” என்றான் மகேஷ் உடனேயே.

தன்னிடம் அண்ணா அண்ணா என்று இனிமையாகப் பேசுகிற பெண், தனக்குப் பின்னால் இப்படி எல்லாம் நடக்கிறாளா என்கிற அதிர்ச்சி அவனுக்கு. அந்தக் கணத்தில் அவனுக்கு யாமினியைப் பிடிக்காமல் போயிற்று.

“என்ன மச்சான் இது, நாங்க என்ன அவனோட காசுக்காகவா பழகிறம்?” ஆற்றாமையுடன் கேட்டான் மித்ரன்.

“அது எங்களுக்குத் தெரியும். ஏன் அவனுக்கும் தெரியும். தெரியப்போய்த்தான் அவள் சொன்னதைக் கேக்காம அவளோட சண்டை பிடிச்சிருக்கிறான்.” என்றான் நவீன்.

“இவள் ஏனடா எங்களுக்கு நடுவில வாறாள்?” எரிச்சலுடன் கேட்டான் மகேஷ்.

“அவள் அவன்ர எதிர்கால மனுசி.”

“அதுக்கு எங்களுக்கு நடுவில வருவாளா? இப்பவே இவ்வளவு கதைக்கிறவள் நாளைக்குக் கலியாணம் நடந்த பிறகு எங்களை வெட்டி விட்டாலும் விட்டுடுவாள் மச்சான்.”

“டேய் லூசு மாதிரிக் கதைக்காத! நிரோ அப்பிடி எல்லாம் செய்ய மாட்டான்.”

“அவன் செய்ய மாட்டான். இப்பிடி எப்ப பாத்தாலும் சண்டை பிடிச்சிப்போட்டு அவன் ஒரு மாதிரி இருக்கிறதைப் பாத்திட்டு நாங்களே விலகிப் போயிடுவம் மச்சான்.” என்றதும் நவீனுக்கு மனமெல்லாம் பாரமாகிப் போயிற்று.

இதை அவனும் யோசித்திருக்கிறான். என்னவோ நிரோஜனை விட்டு விலகிச் செல்வதை நினைக்கவே முடியவில்லை. அதை நண்பர்களிடம் காட்டிக்கொள்ளாமல், “ஒரு பக்கம் பாத்தா யாமினி சொல்லுறது சரிதான். இவ்வளவு காலமும் இதைப் பற்றி யோசிக்காம இருந்திட்டம். அது ஓகே. இனி ஆளாளுக்கு கலியாணம் குடும்பம் எண்டு போகோணும். அதால சேமிப்பு எண்டுறது அவனுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் தேவை. எல்லாரும் பியூச்சர போகஸ் பண்ணுவம்.” என்று எடுத்துச் சொன்னான்.

“என்னவோ போடா! எனக்கு நடக்கிற ஒண்டும் பிடிக்கேல்ல!” என்றுவிட்டு முகம் திருப்பிக்கொண்டு போனான் மித்ரன்.

அப்போதுதான் என்ன செய்கிறார்கள் என்று நவீன் இவர்களைப் பார்த்தான். சரியாக அந்த நேரம் நிரோஜன் அவளை அறைவதைக் கண்டுவிட்டு ஓடி வந்திருந்தான்.

அவள் போனதும், “லூசாடா நீ? கை நீட்டுறது எல்லாம் பெரிய பிழை மச்சான். பிடிக்காட்டி விலகி வரோணும். அத விட்டுட்டு என்னடா நீ?” என்று நண்பனை அதட்டினான்.

ஒன்றும் சொல்லாமல் கண்மண் தெரியாத கோபத்தில் கண் முகமெல்லாம் சிவந்து கொதிக்க நின்றிருந்தான் நிரோஜன். அவள் அப்படிச் சொன்னதை ஒரு வித அவமானமாய் உணர்ந்தான். என்னவோ அவன் அதற்கு அலைந்ததுபோல், பேசத் தைரியமற்று முத்தம் கொடுத்து அவளை சமாளித்ததுபோல்— மேலே யோசிக்க முடியாமல் விழிகளை இறுக்கி மூடித் திறந்தான்.

இதற்குள் மற்றவர்களும் ஓடி வந்திருந்தனர்.

இதையெல்லாம் கவனித்திருந்த திலினிக்கு யாமினியைப் பிடிக்காமலேயே போய்விட்டது. நிரோஜன் என்கிறவன் எப்போதும் சிரித்த முகத்துடன், தன்னைச் சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பவன்.

யாமினி மீது அவன் வைத்திருந்த ஆழ்ந்த நேசத்தைக் கண்டு, அந்தக் காதலைக் கூட ஆசையாகப் பார்த்தவள் அவள்.

ஆனால் அதே காதல், அவனை மெல்ல மெல்ல மாற்றி, அவன் இயல்பையே இழக்கச் செய்து, அவனை அவனாக இருக்க விடாமல் செய்வதைக் கண்டபோது, இத்தனைக்கும் காரணமாக இருந்த யாமினி மீது கோபம் உண்டாயிற்று.

error: Alert: Content selection is disabled!!