நீ வந்து தங்கிய நெஞ்சில் 39.2

அப்படி இல்லை என்று தெரிந்தபோது கோபம்தான் வந்தது. அடக்க முடியாமல் வந்து கேண்டீனில் அமர்ந்திருந்தான். அந்தப் பக்கமாக அசோகன் போய்க்கொண்டிருந்தான்.

“எனக்கு ஜெர்மனுக்கு போகோணும்!” என்றான் நிரோஜன் சத்தமாக.

சட்டென்று நின்று யாரிடம் சொல்கிறான் என்று பார்த்தான் அசோகன்.

“என்ன பார்வை? ஏற்பாடு செய்ங்க! அதுவும் யமிக்குப் பக்கத்தில.”

என்னவோ மொத்த ஜெர்மனையும் அவன் கைக்குள் வைத்திருப்பது போலவும், இவன் சொன்னதும் வேலையையும் டிக்கெட்டையும் போட்டு, இந்தா போ என்று கொடுத்துவிடுவான் போலவும் இருந்த அவன் பேச்சில் அவனை நன்றாக முறைத்தான்.

“எனக்கு ஜெர்மன் ப்ராஜெக்ட் ஏதும் எடுத்துத் தாங்க!” என்றான் மறுபடியும் உத்தரவாக.

அந்தத் தொனி சீண்ட, “நான் உனக்கு மனேஜர்!” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.

“அது தெரியப்போய்த்தான் உங்களிட்ட வந்து கேக்கிறன்.”

“அதெல்லாம் தரேலாது போ!”

“அவ்வளவு பெரிய ஆளா நீங்க?” என்று கேட்டுக்கொண்டு எழுந்து அவனருகில் போனவன் உதிர்த்தது அத்தனையும் செம்மொழிகள்.

பயந்துபோனான் அசோகன். “டேய் டேய் உன்னை விட வயசில மூத்தவன் நான். ரெண்டு பிள்ளைக்கு அப்பா. என்னைப் போய்…” என்றவனை முடிக்க விடாமல்,

“நீங்க அப்பாவானா காணுமா? வெக்கமே இல்லாம சொல்லுறீங்க! நான் அப்பா ஆகிறேல்லையா? நான் குடும்பஸ்தன் ஆகிறேல்லையா? இப்பிடி ஒருத்தன்ர வாழ்க்கைய அழிச்சு நல்லாருப்பீங்களா? நாசமாத்தான் போவீங்க. வாழ்க்கைல உருப்படவே மாட்டீங்க. நீங்க மட்டும் தனியா போகேக்க லொறி மோதி, மலை உச்சில இருந்து விழுந்து, சாக மாட்டீங்க. குற்றுயிரும் குலையுயிருமா தப்புவீங்க. கைகால் எல்லாமே உடஞ்சு போகும். உயிர் மட்டும்தான் இருக்கும். சுகமாகி வந்த பிறகு திரும்பவும் அதே மலை உச்சில இருந்து விழுவீங்க. அப்பவும் உயிர் போகா…” என்றவனை மேலே பேச விடாமல் ஓடி வந்து அவன் வாயை இறுக்கி மூடினான் அசோகன்.

“சண்டாளா! நல்லாருப்பியாடா நீ? ரெண்டு பிள்ளைகளின்ர அப்பா எண்டு கூடப் பாக்காம…” என்றவன் கையைத் தன் வாயிலிருந்து எடுத்துவிட்டு, “ரெண்டு பிள்ளை பெத்தது எல்லாம் பெருமை? என்னை அவளிட்ட அனுப்புங்க. அதுக்குப் பிறகு நான் எத்தனை பிள்ளை பெருறன் எண்டு பாருங்க. வந்திட்டார் ரெண்டு பெத்ததை எல்லாம் பெருமையா சொல்லிக்கொண்டு!” என்று மல்லுக்கட்டினான் அவன்.
இதையெல்லாம் கோப்பி அருந்தியபடி பார்த்திருந்த நவீனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அதே நேரம் அவன் ஜெர்மன் போக முடிவு செய்துவிட்டது புரிந்துபோயிற்று.

“இவ்வளவு சொல்லியும் செய்றன் எண்டு ஒரு வார்த்தை சொல்ல மனமில்ல என்ன? உங்களுக்கெல்லாம்…” என்று ஆரம்பித்தவனைக் கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.

“என்னால முடிஞ்சதப் பாக்கிறன். வாயை மூடு!” என்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.

நவீனுக்குச் சிரித்து முடியவில்லை. “என்னடா அந்தாளைப் போட்டு இந்தப் பாடு படுத்திப்போட்டாய்?” என்று கேட்டான்.

“இல்லாட்டி அவரிட்ட ஒரு காரியம் ஆகுமா சொல்லு. நல்ல மாதிரிப் போய்க் கேட்டா பெரிய எடுப்பு எடுப்பார். அதான்…” என்று தானும் சிரித்தான் அவன்.

அன்றிலிருந்து அசோகனுக்கான கொடுமைகள் ஆரம்பித்திருந்தன. இவனுக்கு அவள் அடுத்த புது ப்ராஜெக்டுகள் எதிலும் சிக்க முதல் அங்கே போக வேண்டும். அதற்கென்று அசோகன் என்ன செய்வான்?

ஆனால், இவன் பார்க்கையில் அசோகன் பார்த்துவிட்டால் போதும். வசைபாடி அவனை அலமலந்து போக வைத்துவிடுவான்.

அன்று கோயிலுக்குப் போய்விட்டு மங்களமாக வந்தான் அசோகன்.

விறுவிறு என்று எழுந்துபோய், “சந்தோசமா இருக்கிறீங்க போல?” என்றான் நிரோஜன்.

ஆம் என்று சொல்லப் பயந்து அவனையே பார்த்தான் அசோகன்.

“நான் கேட்ட பயணத்துக்கு அரேஞ்ச் பண்ணியிருந்தா நானும் உங்களை மாதிரிச் சந்தோசமா இருந்திருப்பன். உங்களுக்குத்தான் கேடு கெட்ட மனமாச்சே. ஆனா ஒண்டு, இனி நீங்க சாப்பிடுற எதுவும் தொண்டைக்கால போகாது. கண், மூக்கு, காது வழியா வெளில வரும் பாருங்க. குடல் காஞ்சு, வயிறு வெடிச்சு நீங்க சாக…” என்றவனை இப்போதும் சொல்லி முடிக்க விடாமல் ஓடி வந்து வாயைப் பொத்தினான்.

“பேசாம போடா! உனக்குத்தான் பாத்துக்கொண்டிருக்கிறன்.” என்று சொல்லி அவனை அனுப்பி வைப்பதற்குள் அசோகனுக்குப் போதும் போதும் என்றாயிற்று.

*****

அன்று அவள் வாழும் ‘சீகன் – Siegen’ நகரில் நல்ல வெயில். ஊரில் வெயிலைக் கண்டால் வீட்டுக்குள் ஓடுவார்கள். இங்கே வெயிலைக் கண்டால் வீட்டுக்குள் இருக்கிறவர்கள் எல்லோரும் வெளியில் வந்துவிடுவார்கள். எதுவுமே அளவோடு கிடைத்தால்தான் அதற்கு மரியாதை போலும்.

அப்படி அருமை பெருமையாய்க் கிடைத்த அந்த வெயில் நாளில் வந்து, பூங்கா ஒன்றில் பேசாமல் அமர்ந்திருந்தாள் யாமினி.

உடற்பயிற்சி, ஜிம் என்று போய் பெருமளவில் தன்னைப் பழையபடி மீட்டிருந்தாலும் அவளின் நெஞ்சில் அச்சாகப் பதிந்துபோனவனின் நினைவுகளை மட்டும் அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை.

அவள் கேட்பது உறக்கத்தை. அவள் வெறுப்பது இறந்தகால நினைவுகளை. விசித்திரம் என்னவென்றால் இன்னுமே அவள் விரும்பும் தூக்கம் எங்கோ சென்றுவிட, மறக்க நினைக்கும் நினைவுகள் மொத்தமாய் அவள் இரவுகளை நரகமாக்கிவிடுகிறது.

பாறையை மோதும் அலைகளை விட மூர்க்கமாய் அவளுள் பழைய நினைவுகள் வந்து வந்து மோதின. அவள் இப்போதெல்லாம் யாருடனும் அதிகமாகப் பேசுவதிலை. யாரையும் எதற்கும் வற்புறுத்துவதில்லை. அவர்களுக்கு அது நன்மை பயக்குமென்றாலும் தெண்டித்து எதையும் செய்ய வைக்க நினைப்பதில்லை. அதற்கெல்லாம் அவளுக்குத் தைரியமில்லை.

அஜந்தாவிடம் சொன்னது போன்று தொடர்ந்து இங்கேயே இருக்க எண்ணி, வேலை வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்ததில் இருந்து அவளுக்குள்ளும் மறுபடியும் அலைப்புறுதல்.

அவள் செய்வது சரியா, இதுதான் அவள் முடிவா, மிகுதி இருக்கிற காலத்தை என்ன செய்யப்போகிறாள் என்று பல கேள்விகள்.

இப்போதே மூச்சு முட்ட ஆரம்பித்துவிட்ட இந்தத் தனிமையோடே வாழ்ந்துவிட முடியுமா என்ன? அங்கே ஒருவன் அவளுக்காகக் காத்திருக்கிறானே, அவன்? அன்று அவளை அணைத்துக்கொண்டு அழுது துடித்தானே. அதற்கு என்ன சொல்லப்போகிறாள்? சொன்ன சொல்லைக் காப்பாற்றுகிறவனாக இத்தனை நாள்களும் விலகியே நிற்கிறானே, அதற்கு அவள் பதில் என்ன?

திடீரென்று அவள் மீது நிழல் படிந்தது. திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தவள் மூச்சே நின்றுபோயிற்று. எதிரே அவன். அவளின் நிரோஜன்.

error: Alert: Content selection is disabled!!