“எனக்கு ஏதாவது நீயே செய்து தா!” என்றான் அவன்.
அவனை ஒருமுறை பார்த்துவிட்டுத் துள்ளி இறங்கியவள் வேகமாக அந்த ஷோர்ட்ஸை இழுத்துவிடவும் அவன் சிரித்தான். “நிரோ!” என்று அதட்டிவிட்டுப் போய் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து பார்த்தாள்.
அவள் இருந்த மனநிலைக்கு வீட்டில் என்னவெல்லாம் இருக்கின்றன என்கிற உணர்வே அவளுக்கில்லை.
அங்கிருந்த பரோட்டா ரொட்டிகளைக் கண்டுவிட்டு, அவற்றை எடுத்து வெளியே வைத்தாள்.
“நீங்களும் குளிச்சிட்டே சாப்பிடலாமே?” அங்கிருந்த மீன் டின்னையும் எடுத்தபடி சொன்னாள்.
“உடுப்பு?”
அவனை ஒருமுறை பார்த்துவிட்டு அறைக்குள் சென்று திரும்பியவள் கைகளில் அவனுக்கான உடைகள் இருந்தன.
அவற்றைக் கண்டுவிட்டுப் புருவங்களை உயர்த்தினான் அவன். “அது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வாங்கினது.” அவனைப் பாராமல் முணுமுணுத்தாள் அவள்.
அவனிடம் அசைவே இல்லை. என்ன செய்கிறான் என்று அவள் நிமிர்ந்து பார்க்க, அவ்வளவு நேரமாக இடுப்பில் கைகளை வைத்து, சின்ன முறுவலோடு அவளையே பார்த்திருந்தவன், தன் கைகளைச் சிறகுகளாக விரித்தான்.
ஒருகணம் அவனையே பார்த்த யாமினி, முகம் முழுக்கப் பரவிய சிரிப்புடன் ஓடி வந்து, அவன் கைகளுக்குள் அடங்கினாள்.
“நிறைய தவிச்சியாடா?” என்றான் உடைந்த குரலில்.
“வாழவே பிடிக்கேல்ல நிரோ.”
ஒன்றுமே சொல்லாமல் பெரிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டவன் அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். என்னவோ அவளை அப்படியே காலம் முழுக்கத் தன் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
“போய்க் குளிச்சிட்டு வாங்க. பசிக்கப் போகுது.” மெல்ல விலகியபடி சொன்னாள் அவள்.
“இது எல்லாம் எப்பவும் என்னோடயே இருக்கும் யமி. என்னவோ நீயே என்னோட இருக்கிற மாதிரி இருக்கும்.” என்றபடி, அவன் காற்சட்டைப் பைக்குள் இருந்து அவன் எடுத்தவை எல்லாம் அவள் திருப்பிக் கொடுத்த நகைகள்.
சட்டென்று அந்த நாளின் நினைவின் கனம் வந்து தாக்க, கலங்கிவிட்ட விழிகளோடு சிலைபோல் நின்றாள் யாமினி. அவள் கழுத்து, கைகளில் அவனே அவற்றை அணிவித்துவிட்டான். அப்போதுதான் அவள் மனத்தோடு சேர்ந்து உடலும் நிறைந்தது. அவள் முகம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு குளிக்க நடந்தான் அவன்.
அவன் குளித்துவிட்டு வந்தபோது காரசாரமான, தக்காளிப்பழம் போட்ட மீன் டின் கறியும் ரொட்டியும் தயாராக வைத்திருந்தாள். நிறைய நாள்களுக்குப் பிறகு ரசித்து உண்டனர்.
மகேஷ் வேலை மாற்றிக்கொண்டு போனது, அவன் திருமணம், அதற்கு அவன் சொல்லாமல் அவர்களிடமிருந்து விலகிவிட்டது என்று இந்த இடைப்பட்ட காலங்களில் நடந்தவற்றைச் சொல்லிக்கொண்டு வந்தவன் கொஞ்சம் தயங்கிவிட்டுத் திலினி காதலைச் சொன்னதையும் சொன்னான்.
ஒரு கணம் அதிர்ந்து அவனை முறைத்தாள் யாமினி. சட்டென்று சிரித்துவிட்டவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கையோடு சேர்த்து மேலே உயர்த்தி உடனேயே சரணடைந்தான்.
“இப்ப அவளுக்குக் கலியாணம் முடிஞ்சுது.”
“தெரியும்.” என்றாள் அப்போதும் முறைப்புடன்.
அதன் பிறகு இருவருக்குள்ளும் பெரிய பேச்சுகள் இல்லை. ஒருவரின் அண்மையை மற்றவர் அனுபவித்தபடி, தொலைக்காட்சியைப் போட்டுக்கொண்டு சோஃபாவில் முடங்கினர்.
அவளின் விரல்கள் அவன் கரத்தைத் தேடின. அவளின் தலை அவன் தோளில் சாய்ந்திருந்தது. அவ்வப்போது அவன் தருகிற இறுகிய அணைப்புகளும், உச்சி மீது பாதிக்கிற முத்தங்களும் அவளைச் சொர்க்க சுகத்தில் ஆழ்த்தின.
பேசாமல் இருந்தாலும் ஒருவர் மற்றவரைத் தொட்டபடியே இருந்தார்கள். அந்தத் தொடுதல்தான் நீ இன்னும் என்னோடு இருக்கிறாய் என்று அவர்களின் ஆழ்மனதிற்கு மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது.
இரவானது. அவனை அவன் வீட்டுக்குப் போகச் சொல்ல அவளுக்கு மனமே இல்லை. அவனுக்கும் போகும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.
படுக்கும் நேரம் வந்ததும், தயங்கியபடியே எழுந்து, “தலையணியும் போர்வையும் கொண்டு வந்து தரட்டா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
அவளைப் பார்த்துப் புன்னகைத்து, “கொண்டு வா!” என்றான்.
அவற்றைக் கொண்டுவந்து தந்துவிட்டுப் போக முயன்றவளின் கரத்தைப் பற்றித் தன்னிடம் கொண்டுவந்து மடியில் அமர்த்திக்கொண்டான் நிரோஜன்.
யாமினி படபடத்துப்போனாள். இத்தனை நாள் பிரிவு மீறக்கூடாத எல்லைகளை மீற வைத்துவிடுமோ என்று மிகவுமே பயந்தாள். அந்தளவில் அவளும் திடமாய் இல்லை. அவன் தொட்டாலே கரைந்துவிடும் நிலையிலிருந்தாள்.
அவன் முகம் பார்க்க முடியாமல், அவனது தோள்களைப் பற்றிக்கொண்டு தடுமாறியவளின் தாடையைப் பற்றி, மெல்ல நிமிர்த்தித் தன்னைப் பார்க்க வைத்தான்.
இருவர் பார்வைகளும் கலந்தன. வார்த்தைகள் அற்ற அந்த மௌனத்தில், கண்கள் என்னென்னவோ ஆத்மார்த்தமாகவும் ஆழமாகவும் அன்பாகவும் பேசிக்கொண்டன.
மெல்ல அவள் விழிகளில் தன் உதடுகளைப் பதித்தவன், அப்படியே முகம் முழுவதும் முத்தமிட்டான். மூக்கின் நுனி, கன்னங்கள் என்று விரும்பி வந்தவன், அவளை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, அவளது இதழ்களையும் தன் இதழ்களால் அணைத்துக்கொண்டான்.
யாமினியால் அவனிடமிருந்து விலகவே முடியவில்லை. முற்றிலும் அவனுக்கு இசைந்து நின்றாள். அந்த முத்தம் அவளுக்குள் இதுவரை அறியாத ஒரு புதிய தவிப்பை உருவாக்கியது. தன்னை முற்றிலும் மறந்து, அவனுக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும் பேரானந்த மயக்கம் அவளை ஆட்கொண்டது. உலகமே மறந்து அந்த நிமிடத்தில் அவனோடு லயித்திருந்தாள்.
மெல்ல அவளை விடுவித்தவன், லேசான நடுக்கத்துடன் அவளது கன்னம் தட்டி, “போ! போய்ப் படு!” என்றான் கரகரத்தக் குரலில். அந்த வார்த்தைகளுக்குப் பின்னால், அவளை விட்டுப் பிரிய மனமில்லாத தவிப்பும், தன் கட்டுப்பாட்டை மீறிவிடக் கூடாது என்கிற ஒரு பெரும் போராட்டமும் ஒளிந்திருந்தன.
யாமினி அப்போதும் அந்தப் போதையின் நீட்சியில் இருந்து மீளவில்லை. கால்கள் தள்ளாட, பதுமை போல் சென்று கட்டிலில் சென்று விழுந்தாள்.

